Friday, June 22, 2007

கோவில் பிரசாதம் - சிறுகதை

வெளியே மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. மழை அதிகம் பிடிக்கும் முன் வீட்டிற்கு செல்ல வேண்டுமே என்று நினனத்துக் கொண்டே அலுவலகத்தை விட்டு கிளம்பும் போதுதான் எங்கள் அலுவலகம் இருக்கும் தெருவில் உள்ள பெருமாள் கோவிலின் திருவிழாவின் ஆரம்ப நாள் இன்று என்பது ஞாபகம் வந்தது. மெதுவாக தூறலில் சுகமாக நனைந்து கொண்டே கோவிலை அடைந்த பொழுதுதான் கவனித்தேன். மூன்று வரிசைகள், இலவச தரிசனம், 30 ரூபாய் மற்றும் வி.ஐ.பி தரிசன வரிசைகள்.. இத்தனைக்கும் இது அவ்வளவு பெரிய கோவில் இல்லை. ஆறு வருடங்களுக்கு முன், முச்சந்தியில் இருக்கிறது என்பதற்காக தானம் கொடுக்கப்பட்ட அரை கிரவுண்டில் சிறிய அளவில் கட்டப்பட்ட இந்தக் கோவிலில், இந்தப் பகுதியில் இருக்கும் நடிகர் எதோ தனிப்பட்ட விசயத்துக்காக வேண்டி அது நடந்து விட, அப்பொழுதிருந்து இந்த கோவிலுக்கு மவுசு அதிகமானது. அவரால் அருகில் இருந்த காலி மனைகளும் வாங்கப்பட்டு இந்தப் பகுதியின் திருப்பதியாக இக்கோவில் விரிவுபடுத்தப்பட்டது.

அன்று கடவுள்கள் விசுவரூபம் எடுத்தனவோ இல்லியோ இன்று கோவில்கள் எடுக்கின்றன.

சீக்கிரம் தரிசனம் முடித்து விட்டு மழைக்கு முன் கிளம்ப வேண்டும் என்று, இலவச வரிசையில் நிற்காமல் 30 ரூபாய் வரிசையில் நான் நிற்பதைப் பார்த்த அந்த கோவிலின் நிர்வாகிகளில் ஒருவர் ஓடி வந்து,

"என்ன சார், நீங்க இந்த வரிசையிலே வாங்க" என வி.ஐ.பி கதவைத் திறந்து விட்டார்.

அலுவலகங்களில் மேலதிகரிகளுக்கு காரியதரிசியாக இருப்பதில் இது போல லாபங்களும் உண்டு.பல இடங்களில் அதிகாரிகளை விட நம்மை அடையாளம் கண்டு கொள்வார்கள். ஆனால்
வி.ஐ.பி வரிசையில் உள்ளே சென்ற பிறகு தான் தெரிந்தது,அங்கு 30 ரூபாய் வரிசையில் உள்ளவர்களை விட ஏகப்பட்ட வி.ஐ.பிக்கள் என்று.

தரிசனம் முடிந்ததும்,

"வெளியே பிரசாதம் வாங்கி போங்க சார், " என வி.ஐ.பிக்களை அடையாளம் கண்டு கொள்ளும் அந்த நிர்வாகி சொல்ல, வெளிப்புறம் வந்து பிரசாதம் கொடுக்கும் இடத்தில், என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் மோகன், வரிசையில் நின்று கொண்டிருந்தான்.

இவன் எப்படி இங்க!!!?? மோகன் புதிதாய் அலுவலகத்தில் சேர்ந்து இருப்பவன். கலகலப்பானவன். வேலையிலயும் கெட்டிக்காரன். என்னைப் பொருத்தவரை எனக்கு இவனிடம் பிடிக்காத விசயம், இவன் அலுவலகத்தில் சாமியாவது பூதமாவது எகத்தாளமா விதண்டாவதம் பேசிட்டு இருப்பான். யாரவது கோவில் பிரசதம்னு கொடுத்தா, அதில சாப்பிடுற மாதிரி எதாவது இருந்த அதை மட்டும் எடுத்துக் கிட்டு ஸ்வீட் சூப்பர்னு சொல்லுவான்.

இதனாலேயெ அவனைப் பார்த்தாலே நான் விலகிப் போய்விடுவது உண்டு. இருந்தும் போன மாசம் நான் பழனி போனப்ப, ஸ்வீட் வாங்கிட்டு வாங்கன்னு 200 ருபாய் கொடுத்து, நான் பழனி போனதும் மறக்காம வாங்கிட்டு வந்திடுங்க என்று போன் பண்ணி ஞாபகப் படுத்திக்கிட்டு இருந்தான்.


"என்ன மோகன் ஸ்வீட் வாங்க வந்திங்களா?!!"

என்னை அந்த இடத்தில் சற்றும் எதிர்பாராத அவன், சுதாரித்துக் கொண்டு,

"என்ன சார், பண்றது சிட்டில பெஸ்ட் ஸ்வீட் கடையிலேந்து வாங்கி கொண்டுப் போய் என் அம்மா அப்பாகிட்ட கொடுக்கிறப்ப அவங்க முகத்துல கிடைக்கிற சந்தோசத்தை விட இந்த பிரசாதத்தைக் கொண்டு போய் கொடுக்கிறப்ப அதிகமா இருக்கு, அதனாலதான் இங்க வாங்க நிற்கிறேன்,என்னோட விருப்பு வெறுப்புகளுக்காக அவர்களின் நம்பிக்கையை அலட்சியப் படுத்த விரும்பல சார்.. இன்னும் அவர்கள் வாழப் போகும் கொஞ்ச காலத்துக்கு அவர்கள் விருப்பங்களுக்கு மதிப்புக் கொடுக்கலாமேன்னுதான்"

என்னை அறியாமல் அவன் தோளைத் தட்டி பாராட்டி விட்டு

"இந்த பொங்கலோட, இதையும் கொடு, இன்னும் ரொம்ப சந்தோசப் படுவாங்க" என குங்குமத்தையும் துளசியையும் அவனிடம் கொடுத்தேன்.

அலுவலகம் வந்து வண்டியை எடுத்துக் கொண்டு, போகும் வழியில் வட இந்திய கோவில்களுக்கு அழைத்துச் செல்லும் டிராவல்ஸில் என் அப்பா அம்மா பெயரை முன் பதிவு செய்து வீடு வந்தேன். இதுக்காகத்தான் இரண்டு பேரும் கடைசி ஒரு வருசமா என்னிடம் இந்த திருத்தலதரிசனம் போகனும்னு கெஞ்சிக்கிட்டு இருந்தார்கள்.

மறுநாள் அலுவலகத்தில் , மோகன் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான்

"கடவுள் தன்னைப் போல மனிதனைப் படைத்தார்னு சொல்லுவாங்க, ஆக்சுவலா அப்படி இல்லை, மனிதன் தான் தன்னைப் போல கடவுளைப் படைத்தான்"

மோகன் பேசி காதில் விழுந்த வார்த்தைகள் எதுவும் எனக்கு எரிச்சல் தரவில்லை.

15 பின்னூட்டங்கள்/Comments:

said...

//"என்ன சார், பண்றது சிட்டில பெஸ்ட் ஸ்வீட் கடையிலேந்து வாங்கி கொண்டுப் போய் என் அம்மா அப்பாகிட்ட கொடுக்கிறப்ப அவங்க முகத்துல கிடைக்கிற சந்தோசத்தை விட இந்த பிரசாதத்தைக் கொண்டு போய் கொடுக்கிறப்ப அதிகமா இருக்கு, அதனாலதான் இங்க வாங்க நிற்கிறேன்,என்னோட விருப்பு வெறுப்புகளுக்காக அவர்களின் நம்பிக்கையை அலட்சியப் படுத்த விரும்பல சார்.. இன்னும் அவர்கள் வாழப் போகும் கொஞ்ச காலத்துக்கு அவர்கள் விருப்பங்களுக்கு மதிப்புக் கொடுக்கலாமேன்னுதான்" ///

கலக்கிட்டீங்க வினையூக்கி. நல்ல கருத்து. நல்ல கதை.

said...

மிக நிறைவான கதை!
இவ்வாரப் பூங்காவை அலங்கரிக்கக்கூடும்...

said...

//////////////////////
அன்று கடவுள்கள் விசுவரூபம் எடுத்தனவோ இல்லியோ இன்று கோவில்கள் எடுக்கின்றன.
//////////////////////

அட. . .

said...

என்னதான் இருந்தாலும், ஜெனீ இல்லாத ஒரு கதையை என்னால ஏத்துக்க முடியலை.......

Anonymous said...

hey, all your stories have some thing to think about. gr8 job
navin

said...

வினையூக்கியாரே,

தங்களின் "வெங்கடாசலபதி கோவில்" மற்றும் இந்த "கோவில் பிரசாதம்".. இரண்டிலும் இழையோடும் கருத்து அருமை..

ஒரே கருத்து , வெவ்வேறு கோணங்களில் கதைகளாக சொல்லப்பட்ட்டிருக்கும் விதம் மிக அருமை..

இதுல வீ எம் தொடர்ச்சினு கை வைக்க விரும்பவில்லை ..ஆகவே.. தங்களின் அடுத்த 1 நிமிட் கதைக்கு வெயிட்டிங்.. (நிச்சயமாக ஜெனி இருக்கனும் .. இல்லைனா நந்தா டென்ஷன் ஆகிடுவாரு சொல்லிட்டேன் :) )

வீ எம்

said...

நந்தா நன்றி... அடுத்த கதையிலே உங்க பேவரைட் ஜெனி இருப்பாங்க....

said...

சிவஞானம்ஜி உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி..

said...

வெங்கட்ராமன் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி

said...

நவீன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

said...

வீ.எம் அடுத்த வாரத்தில் தங்களுக்காகவே ஒரு நிமிடக்கதைகளை தயார் செய்கின்றேன்... நீங்க அதை ஒன்னரை நிமிடக்கதையாக மாற்றிடுங்க.. உற்சாகம் அளிக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

said...

Super கதை அண்ணா!
நல்ல கருத்து!

[
பி.கு.: நல்ல வேளை, எங்கயாவது, கோயிலிலிருந்து அலுவலகம் சென்ற கார்த்திக்கு அதிர்ச்சி காத்திருந்ததது! அன்று அதிகாலையிலேயே மோகன் இறந்துவிட்டாராம். அப்போ, கார்த்தி கோயிலில் பார்த்தது????????? அப்படின்னு கதையை முடிக்காமலிருந்ததற்கு ரொம்ப நன்றி!
:)
]

said...

கடவுள் தன்னைப் போல மனிதனைப் படைத்தார்னு சொல்லுவாங்க, ஆக்சுவலா அப்படி இல்லை, மனிதன் தான் தன்னைப் போல கடவுளைப் படைத்தான்"

---i am loving it...:-)

said...

நன்றி ஞானேஷ் அண்ணே!!

Anonymous said...

good one senior