"என்னங்க வர்ற வர்ற கார்த்தியோட நடவடிக்கைகள் எல்லாம் மாறிக்கிட்டே இருக்கு, ஒன்னும் சரியில்லை... அவன் படிக்கிற புக் எல்லாம் புரட்சிகள் பத்தின புக்ஸ், ரூம்ல செகுவெரா, பெரியார் படங்கள் தான் மாட்டி வச்சு இருக்கான், பூஜை, சாமி, பக்தி பத்தி எல்லாம் கேலி பேசுறான், இதைப் பத்தி எல்லாம் கேட்க மாட்டிங்களா!!"
"ஏன் இப்படி காலங்கார்த்தாலேயே புலம்புற, நமீதா படங்கள் ஒட்டி வச்சிருந்தா கேட்கலாம், இதைப் பத்தி எல்லாம் கேட்கக் கூடாது, நானும் அவன் வயசுல அப்படித்தான் இருந்தேன்,, கொஞ்ச நாள்ல தானா சரியா ஆயிடுவான்.. இதுக்கெல்லாம் வொரிப்படாதே"
அம்மாவின் என்னைப் பற்றிய புலம்பல் அப்பா அலுவலகம் போனப்பிறகும் வரை தொடர்ந்தது.
"கார்த்தி, குளிச்சிட்டியா!!, வெங்கடாஜலபதி கோயில் திருவிழா நாளைக்கு ஆரம்பிக்குது... அதுக்கு இந்த 2000 ரூபாய போய் கொடுக்கனும்... நல்ல நேரத்துல போய் கொடுத்துட்டு வந்துடு.. "
ஈஎஸ்பிஎன் ல பழைய கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நான், எரிச்சலுடன்
"ஏன்ம்மா இப்படி படுத்துற, நான் ஜீன்ஸ் வாங்க காசு கேட்டப்ப தரமாட்டேன்னு சொன்ன, ஏற்கனவே பணக்கார சாமியா இருக்கிற இந்த கடவுளுக்கு எதுக்கு இந்த காசு, டேபிள்ல வை, ஹைலைட்ஸ் முடிஞ்ச பிறகு போய் கொடுக்கிறேன்"
"எல்லாம் உனக்காக வேண்டிக்கிட்டது தாண்டா... நல்ல நேரத்துல கொடுத்துட்டா, ரொம்ப விசேசம்.."
வேண்டுமென்றே அம்மா சொன்ன நேரம் முடிஞ்ச பிறகு, பணத்தை எடுத்துக் கொண்டு கோயில் நிர்வாகியிடம் கொடுத்து திரும்புகையில், போகும் போது இல்லாத ஒரு கம்பம் கோயில் திருவிழா பந்தலுக்காக நடுரோட்டில் நட்டு வைக்கப்பட்டிருந்தது. அதன் மேல் இடிக்கக் கூடாதே என்று வண்டியை இடதுபுறம் ஒடிக்க, பேலன்ஸ் தவறி, கீழே நான் விழுந்து, என் மேல் வண்டி விழுந்து , எனக்கு காலில் சரியான அடி, கைகளிலும் ரத்தம் வரும் அளவுக்கு சிராய்ப்புகள்...
கை கால்களில் காயங்களுடன் வீட்டுக்கு வந்தபோது அம்மா மிகவும் பதறிப் போனார்,
அம்மாவை சமாதானப்படுத்தி விட்டு, ரகசியமாய் காலண்டரில் நான் விழுந்த நேரத்தைப் பார்த்தேன்.. எமகண்டம் எனப் போட்டிருந்தது.
அம்மாவின் முகம் வாடிப் போய் இருந்தது, நான் மதியம் சாப்பிட்டு, தூங்கப் போனேன். அம்மா சாப்பிடாமல், எனக்காக ஏதோ ஸ்லோகம் சொல்லிக்கொண்டிருந்தது தூக்கத்திலும் மெலிதாய் கேட்டுக் கொண்டிருந்தது.
ஆழ்ந்த மதிய தூக்கத்தில் ஒரு கனவு, வெங்கடாஜலபதி வருகிறார்,கடவுள் வெங்கடாஜலபதி தான். நடுரோட்டில் வைத்திருந்த அந்த கம்பத்தை பிடுங்கி எறிகிறார். கோவில் உண்டியல் பணத்தை தூக்கி வீசுகிறார். அப்படியே விசுவரூபம் எடுக்கிறார். அவரின் முன்னே சின்ன புள்ளியைப் போல நான்.
"என்ன பயந்துட்டியா கார்த்தி.. நல்ல நேரத்துல என்னை வந்து பார்க்கததுனால தான் உனக்கு அடி பட்டுச்சுன்னு நினைக்கிறியா!!! "
"......."
"சரியோ தப்போ அம்மா பேச்சை கேட்காத நீ எப்படி பெரிய புரட்சியவாதிகளோட வார்த்தைகளை உள்வாங்கிக்கப் போற!! ... உன் கவலை பக்தி என்கிற பேர்ல எனக்கு 2000 ரூபாய் கொடுப்பதில் இல்லை.. உனக்கு ஜீன்ஸ் கிடைக்கலியேங்கிற வருத்தம்.. நல்ல ஹைலைட்ஸ் பார்க்கும் போது தொந்தரவா இருக்கே!! அப்படிங்கிற எரிச்சல்.. "
"..........."
"வீம்புக்காக எதுவும் செய்யாதே!! மற்றவர்களின் நம்பிக்கையை அவமதிக்கனும்னு எதுவும் பண்ணாதே!! அதுக்குத்தான் ஒரு சின்ன தண்டனை உனக்கு... உன்னைப் போல எனக்கும் நல்ல நேரம் கெட்ட நேரம் , பூஜை, பரிகாரம் எதிலேயும் நம்பிக்கை கிடையாது... நீ படிக்கும் கொள்கைகள் புரிதலுக்காக.. உன் புரிதல் எல்லோராலும் அதே மாதிரி புரிந்துகொள்ளப்படனும்னு நினைக்காதே"
அப்பா வந்து எழுப்ப, கனவு கலைந்து எழுந்தேன்... மணி மாலை 7.20
"என்ன கார்த்தி, ரொம்ப அடிபட்டுடுச்சா!!" காலை தடவியபடி பரிவுடன் கேட்டார் அப்பா..
"இல்லைப்பா... சிராய்ப்புகள் தான்.. ஆயின்மெண்ட் வச்சு இருக்கேன்.. இப்போ ஓகே!!"
"சரி வா சாப்பிடலாம்"
சாப்பிட்ட பிறகு எனது புரொபசர் பெருமாளை தொலைபேசியில் அழைத்தேன். இவர் தான் எனக்கு பெரியாரிலிருந்து செகுவேரா வரை அறிமுகப்படுத்தியவர். ஜனரஞ்சக வாசிப்புகளிலிருந்து என்னை மீட்டெடுத்தவர்.
அவரிடம் காலையில் நடந்த எமகண்டம் விசயத்தை சொன்னேன்....
கிட்டத்தட்ட மதியம் என் கனவில் வந்தது போல அமைந்திருந்தது அவரின் விளக்கங்கள்.. தொலைபேசியை வைத்த பிறகு தான் எனக்கு இன்னொரு விசயமும் புரிந்தது.. அவரின் பாதிப்புகள் என்னுள் நிறைய இருக்கின்றன என்று... கனவில் கடவுள் வெங்கடாஜலபதி புரொபசரின் குரலில் தான் பேசினார்.
-----------
மறுநாள், காலையில் புரொபசரின் வீட்டுக்குப் போகலாம் என்று தயாராகி வீட்டை விட்டு வெளியே வர எத்தனித்த போது
அப்பா தொலைபேசியில்,
"சின்ன அடிதான்.. இருந்தாலும் பயமாயிருக்கு.. எதாவது கண்டமா இருக்கலாம்"
".............."
"சரிண்ணே, அந்த பூஜையே பண்ணிடலாம்.. பரவாயில்லை, அடுத்த வாரம் நான் குடும்பத்தோட வர்றேன்.கார்த்திக்கும் லீவுதான்"
குலதெய்வத்திற்கு ஏதோ பரிகார பூஜை பத்தி அப்பா பேசுகிறார்,
மனதிற்குள் சிரித்துக் கொண்டே, வெளியே வந்தேன்..
கார்த்தி என யாரோக்கூப்பிட, எங்க வீட்டு அடுத்த போர்ஷனில் குடியிருக்கும் சதாசிவம் அங்கிள்,
"கார்த்தி, போஸ்ட் ஆபிஸ் வழியாப் போறியா"
"ஆமாம் அங்கிள்"
"இதை ரெஜிஸ்டர் போஸ்ட் பண்ணிடுறியா....11 மணிக்குள்ள நல்ல நேரம் முடிஞ்சுடும்.. அதுக்கு முன்ன பண்ணுடுறியா.. ரம்யாவோட யூபிஎஸ்சி அப்ளிகேசன்...பிளீஸ்"
"ஸ்யூர் அங்கிள்"
அந்த கவரை வாங்கும் போது, சதாசிவம் அங்கிள்
"வெங்கடாஜலபதி கோயில் வழியாகப் போகாதே!! நேத்து நைட் அடிச்ச காத்துல ரோட்டுல போட்டு வச்சிருந்த கீத்து பந்தல் சாஞ்சிருச்சு.... "
"சரி அங்கிள், நான் கணபதி ஸ்டோர்ஸ் வழியாத்தான் போகப்போறேன்" என்றேன்..
நேத்து வெங்கடாஜலபதி கோயில் பந்தல் கம்பத்தில் விழுந்து அடிபட்டது இன்னும் மறக்கவில்லை..
அந்த அப்ளிகேஷனை நல்ல நேரத்திற்குள் அனுப்பிவிட்டு, எனது புரொபசர் வீட்டுக்குப் போயிட்டு வரும் வழியில் வெங்கடாஜலபதி கோயில் வழியா வந்தேன்... இரும்புக் குழாயகள் தகர சீட்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன.
அங்கு அதை மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்த கோயில் நிர்வாகியிடம் விசாரித்த போது,
"நேத்து நைட் அடிச்ச காத்துல கீத்துப் பந்தல் கீழே சாஞ்சுடுச்சு,, அதனால இரும்பு சீட் போட்டு பந்தல், மேடை போடலாம்னு முடிவு பண்ணிட்டோம்."
அந்த தெருவின் இரு முடிவுகளிலும் ஒன்றுக்கு இரண்டாக தெருவை மறைத்து இரும்புக் கம்பத்தை ஊன்றி பந்தல் போடும் வேலையை ஆரம்பித்துக் கொண்டிருந்தனர்.
ஆடுகள் தங்களை ஆடுகள் என உணரும்போது அவை தானாகவே மந்தையை விட்டு வெளியேறும்... நீ உணர்ந்து விட்டாய் அது போதும். உன் சந்ததியினருக்கு உணர்த்து, இவர்கள் மாற்ற முடியாதவர்கள்.. இவர்களைப் பற்றிய கவலையை விடு.
புரபெசரின் வார்த்தைகள், மீண்டும் நினைவுக்கு வந்தது... தெருவில் நட்டு வைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளுக்கிடையில் வண்டியை எச்சரிக்கையாக ஓட்டி அவ்விடத்தைக் கடந்தேன்.