Friday, June 29, 2007

பார்த்த ஞாபகம் இல்லியோ - வலைத் தொடர்கதையின் நிறைவுப்பகுதி

இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப்பட்டு,இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்களால் தொடரப்பட்ட இந்த வித்தியாசமான தொடரின் இறுதிப்பகுதியை எழுத மாசிலா என்னை அழைத்துள்ளார்.

எல்லா அத்தியாயங்களையும் படித்துவிட்டு இறுதிப்பகுதியையும் படித்துவிட்டு அபிப்ராயங்களை சொல்லவும்.

சிந்தாநதி’யின் ஞாபகம் -1
வெட்டிப்பயல்’ன் ஞாபகம் -2
CVR’ன் ஞாபகம் 3
ஜி’யின் ஞாபகம் - 4
இம்சை அரசியின் ஞாபகம் - 5
வைகை ராமின் ஞாபகம் - 6
தேவின் ஞாபகம் - 7
ஜி. ராவின் ஞாபகம் - 8
சிரில் அலெக்ஸின் ஞாபகம் - 9
சேவியர் ஞாபகம் - 10
மாசிலாவின் ஞாபகம் 11-


முன் கதைச் சுருக்கம்

ரோட்டோரத்தில் வரும் போகும் பேருந்துகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் பொன்னுச்சாமி. பத்து வருடங்களுக்கு முன்னர் ஓடிப்போன மகளைப் பற்றி ஒரு செய்தி. அதான் வந்திருக்கிறார். காவேரி அவர் மகள். பள்ளிக்கூடத்தில் உடன் படித்தவன் வினோத். நல்ல பையன். ஒரு நாள் காதல் என்று உளற…நட்பு மறைகிறது. பட்டினம் போகிறாள் காவேரி. பொறியியல் படிக்க. அங்கு நண்பர்களாகிறார்கள் உமாவும் வசந்தும். வசந்தின் மீது ஒரு வித நட்பு கலந்த காதலில் இருக்கிறாள் காவேரி. உமா யாரையோ காதலிப்பதாகவும் அறிமுகப் படுத்த விரும்புவதாகம் உமாவை அழைத்துச் செல்கிறாள். அது பழைய வினோத். அப்பொழுது பூக்கொத்தோடு காவேரியிடம் தன்னுடைய காதலைச் சொல்கிறான் வசந்த்.
கதை மீண்டும் காத்திருக்கும் பொன்னுசாமிக்கு திரும்புகிறது. அவரை வினோத் சந்திக்கிறான். காவேரியும் அவர் பேத்தியும் இருக்குமிடத்தொற்கு கூட்டிச் செல்வதாக அவரை காரில் அழத்துச் செல்கிறான் வினோத்.

கதை மீண்டும் பழைய இடத்திற்கு வருகிறது. தன்னை நோக்கி வரும் வினோதைப் பார்த்து அதிர்கிறாள் காவேரி. எதிர்பாராத விதமாய் அப்போது நிகழும் விபத்தில் காவேரிக்கு செலக்டிவ் அமினீஷியா !

வினோத் மட்டுமே காவேரியின் நினைவில் !!!ஆனால் வசந்தின் உருவத்தில், மீண்டும் நிகழ்காலத்திற்கு வரும் சென்ற அத்தியாயத்தில், தன்னுடைய இந்த நிலைமைக்கு வசந்த்தின் திட்டமிட்ட சதிதான் என உமாவிடம் புலம்புகிறான்.

இனி பார்த்த ஞாபகம் இல்லியோ தொடரின் - நிறைவுப்பகுதி

-------------------

காவேரியைவிட வினோத்தே மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதை நன்றாக புரிந்துகொண்டாள் உமா.

வினோத்தின் மேல் திணிக்கப்பட்ட தியாகம் அவனை இத்தனைக் காலம் மனதிற்குள் குமுறலாகவே இருந்து இன்று வார்த்தைகளில் விசமாக தெளிக்கிறது. கல்லூரியில் காவேரிக்கு ஏற்பட்ட அந்த விபத்துக்குப் பிறகு எவ்வளவு விசயங்கள் நடந்து விட்டன. கதை மீண்டும் கடந்த காலத்திற்கு செல்கிறது.
--------
கடந்தகாலம்

அடுத்த ஆறு மாதத்தில் டாக்டர் மாயனின் ட்ரீட்மெண்டினாலும், உமா, வினோத், வசந்த் அரவணைப்பினாலும் காவேரி மீண்டும் ஜீவநதியானாள். படிப்பு என்ற சுழலுக்குள் சிக்கிக் கொண்ட பின்னர் இளம்பிராய ஈர்ப்புகள் மெதுவாக மறையத் தொடங்விடுகின்றன.
காவேரிக்கு வினோத்தின் மேல் அதீத பிரியம் இருக்கு என்பதை உணர்ந்த உமா, வினோத்தை விட்டு மெல்ல விலக ஆரம்பித்தாள். வினோத் வேறு கல்லூரி என்பதால் இது மிகவும் சுலபமானது. ஆனால் வசந்த்தும் வினோத்தும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

திரைப்படங்களில் காட்டுவது போல அவர்களுக்கு கல்லூரி வாழ்க்கை அவ்வளவு சுலபமாக அமையவில்லல. ஒவ்வொரு ஆய்வக அப்சர்வேஷன்களில் கையெழுத்து வாங்க புரபெஷர்களுடன் போராட வேண்டி இருந்தது. படுத்தால் அசைன்மெண்ட் கனவுகள், எழுந்தால் ரெகார்டுகள். இப்படியே கல்லூரி இறுதியாண்டும் வந்தது.

கல்லூரியில் முதல் வருடங்களில் ஏற்படும் ஈர்ப்புகளைவிட இறுதியாண்டுகளில் வரும் ஈர்ப்புகளுக்கு பலம் அதிகம்.
ஒரு நல்ல நாளில் காவேரி
"நேசித்தேன் நேசிக்கின்றேன் நேசிப்பேன்
உன்னையும் .. இல்லை இல்லை உன்னை மட்டும்" என தன் கவிதையாய் காதலை வசந்திடம் சொல்ல "காத்திருந்தேன் காத்திருக்கிறேன் காத்திருப்பேன் உன் நேசத்திற்காக" என்று அவள் காதலை அங்கீகரித்தான்.

காவேரியும் நன்றாகப் படித்தாள். முதல் செமஸ்டரில் எடுத்த அதே மதிப்பெண்களை அடுத்து வந்த செமஸ்டர் தேர்வுகளிலும் எடுத்து இருந்ததால் கல்லூரி கேம்பஸ் இண்டர்வியூ வில் வேலையும் கிடைத்தது.வசந்துக்கும் அதே கம்பெனியில் வேலை.. உமா மேற்படிப்பு படிக்க ஸ்காட்லேண்டு சென்றாள். வினோத் கோரக்பூர் ஐஐடியில் சேர்ந்தான்.

காவேரிக்கு வேலை கிடைத்த சந்தோசத்தில் காவேரியின் தந்தை, ஊருக்கே கிடா வெட்டி விருந்தளித்தார். அவருடைய சந்தோசம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
பெங்களூரில் வசந்தும், காவேரியும் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள் என்பதை உமாவின் கடிதம் மூலம் தெரிந்து கொண்டார். கொஞ்ச நாள் பித்துப் பிடித்தவர் போல இருந்தவர், பிரிவு துயரகரமானது ... ஆனால் எஞ்சியுள்ள வாழ்க்கை அதைவிட துன்பகரமானது அல்லவோ.. என்றாவது ஒரு நாள் காவேரி வருவாள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தார்.

கல்யாணம் முடிந்த அடுத்த ஆண்டு வசந்தும் காவேரியும் அமெரிக்கா சென்றனர். ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது... செல்லமாக ஜெனி என பெயரிட்டனர். 4 ஆண்டுகள் சந்தோசமாக போய் கொண்டிருந்த போதுதான் காவேரியின் வாழ்க்கையில் ஒரு புயல் மையம் கொண்டது. வசந்த் ஒரு நாள் வினோத்தையும் வீட்டிற்கு அழைத்து வந்தான்.
வினோத் வேலை நிமிர்த்தமாக கடந்த வாரம்தான் வந்ததாகச் சொன்னான். அதன் பிறகு வினோத் வார இறுதிநாட்களில் வசந்தின் வீட்டிற்கு வருவது வழக்கமானது.
வசந்த், காவேரிக்கு ஷாப்பிங் எங்கேயாவது போகவெண்டுமென்றால் கூட வினோத்தை அழைத்து செல்ல சொன்னான்.

வசந்தின் பேச்சில், நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. திடிரென்று ஒரு நாள் காவேரியிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று கேட்டான். காரணம், நடத்தை சரியில்லை.

மனரீதியாக செத்துப் போன காவேரியை, சட்டப்பூர்வமான சடங்குகள் முடிந்தவுடன், வினோத்தே அவளது குழந்தையுடன் ஏற்றுக்கொண்டான். ஆரம்பத்தில் இந்த தியாகம் உவகையாக இருந்த போதிலும், நாட்கள் போகப் போக இயல்பான வாழ்க்கை தனக்கு அமையவில்லையே என்ற வருத்தம் அவனை வாட்ட ஆரம்பித்தது. அவளை எங்கு வெளியே அழைத்து சென்றாலும் அவளுடைய அன்பிரடிக்டபிள் மனநிலையினால் தர்மசங்கடமான சூழலுக்கு ஆளாக வேண்டியிருந்தது. அவளை வீட்டிலேயே வைத்திருந்தான்.

இதனிடையில் வசந்தை, அவனது வெள்ளைக்காரி மனைவியுடன் பார்த்தபோது திட்டமிட்டு ஏமாற்றுபவனுக்கு வாழ்க்கை எவ்வளவு சுலபமாக அமைகிறது., தனக்கு மட்டும் ஏன் கடினப்பாதை அமைந்தது என்ற எண்ணம் அடிக்கடி மேலோங்கியது. வாழ்க்கையை மேலும் கடினமாக்க அவனது கம்பெனி அவனை முக்கியமான பணிக்காக ஆஸ்திரேலியா இரண்டு வருடங்கள் செல்ல பணித்தது. சரி, காவேரியையும் ஜெனியையும் மாமனார் பொன்னுசாமியின் பொறுப்பில் விட்டுவிடுவோம் என்று அமெரிக்கவிலிருந்து அவர்களை அழைத்துக் கொண்டு இந்தியா வந்தான்.
--------
நிகழ்காலம்
"மாமா, வீடு வந்திருச்சு"

வாசலில் சின்ன வயது காவேரியே விளையாடிக் கொண்டிருந்தது போல் அவருக்கு ஒரு பிரமை,

"மாமா என்ன பார்க்கிறிங்க, அது உங்க பேத்தி ஜெனி.."

பொன்னுசாமி ஓடி போய் பேத்தியை வாரி அணைத்துக் கொண்டார்.

வீட்டினுள் காவேரி கண்களில் மிரட்சியுடன் உட்கார்ந்திருந்தாள்.
அவளுக்கு தன் அப்பா வந்திருக்கிறார் என்று புரிகிறது.. அவரின் காலைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் போல தோனுகிறது... ஆனால் இது எதுவுமே அவள் செய்யவில்லல... அப்படியே இருந்தாள்..

வினோத் நடந்த அனைத்து விசயங்களையும் சொன்னான். தான் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பி வரும் வரை இதே வீட்டில் இருந்து காவேரியையும் ஜெனிக்குட்டியையும் கவனித்துக் கொள்ளுமாறுக் கேட்டுக் கொண்டான்.

"இல்லை, மாப்ளே, நான் கிராமத்துக்கே கூட்டிட்டுப் போறேன், பக்கத்து டவுன்ல ஜெனி பாப்பவ படிக்க வச்சுடுறேன், அங்க ஒரு இங்கிலிசு மீடியம் ஸ்கூல் இருக்கு"

---------
எதிர்காலம்

"தாத்தா!! நான் தான் +2 ல ஸ்கூல் ஃப்ர்ஸ்ட்..தமிழ்ல மார்க்கு கம்மி ஆயிடுச்சு, இல்லாட்டி ஸ்டேட் ரேங்க் கிடைச்சு இருக்கும் " என்று சொல்லியவண்ணம் ஜெனி தாத்தா பொன்னுசாமியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்...

இதே சூழல் அவருக்கு சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் பார்த்த ஞாபகம்,காவேரி 10ஆம் கிளாஸ் பண்ணப் போ இருந்த சூழல் மீண்டும் வந்தது போல் உணர்வு அவருக்கு.

"கடவுளே, இவளை கரைசேர்க்கும் வரை எனக்கு பலமான ஆயுளைக் கொடு" என்று மனதினுள் வேண்டிக்கொண்டார்.

"தாத்தா, நானும் என் கிளாஸ்மேட் கார்த்தியும் மதுரைப் போய் காலேஜ் அப்ளிகேஷன் வாங்கி வந்துடுறேன்"

"சரிம்மா, இருட்டுறதுக்குள்ள வந்துடு"


"சார், போஸ்ட், " தபால் காரரின் குரல் கேட்க

"..."

"உங்க மருமகன் அனுப்பி இருக்கிற லெட்டர் தான்"

லெட்டரைப் பெற்றுக் கொண்ட

இரண்டு வருடத்தில் திரும்பி வருகின்றேன் என்று சொல்லிப் போனவன் 8 வருடங்கள் ஆகியும் திரும்ப வரல... இவன் அனுப்புற காசு மட்டும் தனக்கு எதுக்கு என்று மனதினுள் முனகிக் கொண்டே லெட்டரை தனது பழைய டிரங்கு பெட்டிக்குள் போட்டார்.

எல்லாம் புரிந்திருந்தும் புரியாதது போல் வெளியுலகத்திற்கு தன்னை மனநோயாளியாக காட்டிக் கொண்டிருக்கும் காவேரி எல்லாவற்றையும் மவுன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
---------------------------------முற்றும்-----------------------------------------

4 பின்னூட்டங்கள்/Comments:

said...

//எல்லாம் புரிந்திருந்தும் புரியாதது போல் வெளியுலகத்திற்கு தன்னை மனநோயாளியாக காட்டிக் கொண்டிருக்கும் காவேரி எல்லாவற்றையும் மவுன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்//
nice ending

said...

இரு வாரங்களாக இணையம் பார்க்க முடியவில்லை. தேவ் கதையை தொடர ரொம்ப நாளான போது விட்டுப் போனது. இப்போது வந்து பார்த்தால் கதையே முடிந்து விட்டது.

ஜிரா என்ன கதையை 12 வாரங்களில் முடிக்க செய்து விட்டீர்கள்? இன்னும் கொஞ்சம் போயிருக்கலாம். நான் ஒரு 30 போகலாம் என்று நினைத்தேன். சரி பரவாயில்லை.

நாயகி ஓடிப் போய் விட்டதாக முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதற்கேற்ப கதை செல்லவில்லை. ஆனால் பல்வேறு திருப்பங்களுடன் பொருத்தமாகவே கதை நகர்ந்து செல்கிறது. எனவே கதையின் போக்கிற்கு ஏற்ப அதை பதிவுத் திருமணம் என்று இறுதியில் சரியாக முடித்துள்ளார்.

படைப்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நன்றி.

சிந்தாநதி

said...

நன்றி சிறில் அலெக்ஸ்.
----------------------
நன்றி சிந்தாநதி. ஆம் முதற்பகுதியில் "ஓடிப்போன" விசயத்தை வைத்தும் சரியாக முடிக்க வேண்டும் என்பதற்காக சிரத்தை எடுத்து முடித்தேன்

said...

நன்றி சிந்தாநதி.