Wednesday, October 02, 2013

போலிஷ் பெண்ணும் நானும் மற்றும் காந்தியும் - புனைவு அல்லது அனுபவம்

பின் வரும் சம்பவத்தை உண்மையாக எடுத்துக் கொண்டாலும் சரி புனைவாக எடுத்துக் கொண்டாலும் சரி , சொல்ல வருவது காந்தியைப் பற்றிதான். 
----
சுவீடன் கார்ல்ஸ்குரொனாவில் ( Karlskrona) இருந்து போலாந்து கிடினியா (Gdynia) விற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து உண்டு. வார நாட்களில் மிக மிக மலிவான விலையில் பயணச்சீட்டுகள் கிடைப்பது உண்டு. இன்று போல அன்றும் ஏழை மாணவன் தான். ஆக, குறைவான விலை பயணச்சீட்டை வாங்கிக் கொண்டு வீட்டிலேயே கட்டிக் கொண்ட கட்டு சோறு . கொஞ்சம் போலிஷ் சிலாத்தி பணம் என தனியாக கப்பல் ஏறிவிட்டேன். அம்மு பிரிந்து போன சோகக் காலக்கட்டம் அது . காதல் சோகங்களை மறக்க இரண்டு வழிமுறைகள் உண்டு., ஒன்று மதுவில் மூழ்கலாம் அல்லது பயணங்கள்... காட்டுத்தனமாக பயணம் செய்யும் பொழுது, சந்திக்கும் புது மனிதர்கள், அனுபவங்கள் மெல்ல மெல்ல மீட்டு, மனிதனை பக்குவமாக்கும். நான் தேர்ந்து எடுத்தது பயணங்களை. நான் படு சுமாரான எழுத்தாளன் என்பதால், அனுபவங்களை கதைகளாக்கி நான்கு பேர் கைத் தட்டி படிக்கும் அளவிற்கு வாசகர் கூட்டமும் சேர்த்து வைத்து இருக்கின்றேன். ஆக பயணங்கள் பலவகைகளில் பயனுள்ளதாக இருந்தன. 

கப்பலில் வழமைப் போல சூதாட்ட அறையில் கூட்டம் இருந்தது. சூதாட்டம் பிடிக்காது என்பதாலோ அல்லது சூதாட்டம் ஆடும் அளவிற்கு பணம் இருக்காது என்பதாலோ எப்பொழுதுமே , அந்த அறைகள் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை. அப்படியே கப்பலை ஒரு சுற்று சுற்றிவிட்டு , வெளித்தளத்தில் கடலை வேடிக்கைப் பார்க்க ஆரம்பிக்கையில் , தடுப்புக் கம்பிகளுக்கு அருகில் இருந்த நீள் நாற்காலியில் , மென் சோகத்துடன் ஒரு பெண் வந்து அமர்ந்தாள். எப்பொழுது என் பக்கம் திரும்புவாள், புன்னகையைத் தரலாம் என காத்து இருந்தேன். அவள் என் பக்கம் திரும்பிய அடுத்த நொடி, நான் கொடுத்த சிரிப்பிற்கு , மின்னலைப் போல பதில் புன்னகை வந்து விழுந்தது. என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். இந்தியா என்றதும் பெஞ்சின் அடுத்த முனையில் இருந்து நகர்ந்துநெருங்கி வந்து தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள். 

அவளின்  பெயரைச் சொல்லப் போவதில்லை. சொன்னால் என்னுடைய பேஸ்புக்கை நீங்கள் தோண்டி அவளைக் கண்டுபிடித்து விடுவீர்கள். அவளின் தேசம் போலாந்து , அவளின் தாத்தா பாட்டி ஜெர்மானியர்கள். கிடினியாவும் அதன் இரட்டை நகரமான கிடான்ஸ்க் (Gdansk)  நகரமும் பல காலங்கள் ஜெர்மானிய ஆதிக்கத்தில் இருந்தன. போருக்குப் பின்னர் போலாந்து வசம் வந்து விட்டது. ஜெர்மானியர்கள் அப்படியே இங்கேயே இருந்து விட்டனர். 

குளிர் எடுக்க ஆரம்பித்த்து விட்டதால், கப்பலின் வரவேற்பு தளத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம். சுவீடனில் தனது காதலனுடன் வாழ்ந்து வந்ததாகவும் , தற்பொழுது பிரிந்து விட்டதால் மீண்டும் தனது நாட்டிற்கே போகின்றதாக அவள் சொன்ன பொழுது அவளின் மென் சோகம் புரிந்தது. 

தமிழ், கிரிக்கெட், இலங்கை எனது படிப்பு, எனது வாழ் சூழல் என பேச்சு நள்ளிரவு வரை தொடர்ந்தது. நள்ளிரவின் பொழுது, தனக்கு அன்றுதான் பிறந்த நாள் எனக் கூறினாள். கைக்குலுக்கினேன். வரியற்ற கடையில் ஏதேனும் வாங்கித் தரலாம் என்றாலும் கையில் இருந்த பணம் மிக மிகக் குறைவு. யோசிக்கையில் சட்டென அம்மு நினைவுக்கு வந்தாள். ஆம் மெட்ராசில் இருந்து கிளம்புவதற்கு முதல் நாள், சிலப் பல பத்து ரூபாய்த் தாள்களை என் கையில் திணித்து "என் நினைவாக வைத்துக் கொள், படித்து முடித்து விட்டு திரும்புகையில், என்னைப் பார்க்க வருகையில் இந்தப் பணத்தை பயன்படுத்து" என சொன்னது நினைவுக்கு வந்தது. அதை என் பணப்பையில் ஒளித்து வைத்து இருந்தேன். சட்டென அதில் இருந்த ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து, கப்பல் தோழியின் பெயரை எழுதி, பிறந்த நாள் வாழ்த்துகள் என தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் கொடுத்தேன். 

"காண்டி " எனச் சொல்லியபடி என்னை அணைத்துக் கொண்டாள். 

"உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நீ வருவதற்கு முன்னர் ஒரு நொடி கடலில் குதித்து விடலாம் எனத் தான் நினைத்தேன். உன் சக்கர நாற்காலி, இந்திய முகம் ஆகியன, முடிவை ஒத்திப் போட வைத்தது ... இப்பொழுது காந்தியின் படம் போட்ட பணத்தாள் "

நாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தேன். 

"இந்த நேர்மறை சம்பவங்கள் எல்லாம் எனக்கு ஏதோ ஒன்றை சொல்லுகின்றதோ ... ஹிட்லரின் காலத்தில் காந்தி என்றொரு ஒரு மகான் வாழ்ந்து இருக்கின்றார் என்பதை நினைக்கையிலேயே சிலிர்க்கின்றது... இந்தக் கப்பலில் வந்தமைக்கும் நன்றி ... இந்த காந்தி பணத்தாளிற்கும் நன்றி " எனச் சொல்லிவிட்டு அவளின் அறைக்கு சென்றுவிட்டாள். 

நான் எனது மலிவுவிலை நாற்காலிப் பயண அறைக்கு சென்றுவிட்டேன். அடுத்த இணைய இணைப்பு வந்தவுடன் பேஸ்புக்கில் அவளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவளின் பெயரை குறித்து வைத்துக் கொண்டேன். 

மறுநாள் அவளைப் பார்த்தேன். அப்பாடா கடலில் விழவில்லை. பேஸ்புக்கில் சேர்த்துக் கொண்டாள். சோகமாய் இருக்கும்பொழுது எல்லாம் பேசுவாள், நான் இல்லை என்றால் காந்தியைப் பற்றி ஏதாவது ஒன்றைப் படித்து விட்டு சோகத்தில் இருந்து மீண்டு கொண்டதாக சொல்லுவாள். அவள் ஸ்காட்லாண்டு சென்ற பொழுது , காந்தியின் மேல் மதிப்புக் கொண்ட ஒரு பிரிட்டிஷ் தோழனுடன் தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றாள். அவளின் பேஸ்புக் தளத்தில் , நான் அளித்த காந்தி பணத்தாளின் மின்னச்சு வடிவம் , தன்னை மீட்டு எடுத்த விஷயம் என்றத் தலைப்பில் இன்றும் இருந்து கொண்டு இருக்கின்றது.