Friday, September 20, 2013

அனுபவம் :- நானும் பிரிட்டிஷ் விசாவும்


2008 ஆம் ஆண்டு, என்றைக்கோ வாங்கி வைத்த பாஸ்போர்ட் பெட்டியில் உறங்கிக் கொண்டிருந்தது. மண்ணுக்குள் நாட்பட்டு இருக்கும் மூங்கில் திடிரென மேலெழும்பி வருவதைப் போல , ஓரு நாள் மேற்படிப்பு ஆசை எட்டிப் பார்த்தது. அன்றைக்கு முதல் தேர்வாக இருந்தது பிரிட்டன் ... காந்தியைப் போல பிரிட்டன் போய் படித்து விட்டு , தமிழகம் திரும்பி பெரிய ஆள் ஆக வேண்டும் என்ற கனவுடன், அபர்டின் பல்கலை கழகத்திற்கு விண்ணபித்து , இடமும் கிடைத்தது. 10 லட்சம் பணம் வங்கிக் கணக்கில் காட்ட வேண்டும் என்பதால், 7 லட்சங்கள் வங்கிக் கணக்கிலும் 3 லட்சங்கள் வங்கி கடன் வழங்கும் ஆவணமும் வைத்து விசா விண்ணப்பித்தால் , கடன் ஆவணம் பிரிட்டிஷ் அதிகாரிகளால் எற்றுக் கொள்ளப்படாது, அவசரப் படவேண்டாம் , அவகாசம் எடுத்துக் கொண்டு விண்ணப்பியுங்கள் அலுவலர் அறிவுறுத்தினார். அன்று நட்ட செடி அன்றே பூக்க வேண்டும் என்ற துடிப்பில், பரவாயில்லை, ஏற்றுக்கொள்வார்கள் என்ற வெட்டி வீம்பில் கொடுத்து விட்டு வந்தேன். அலுவலர் சொன்னதைப் போலவே அந்த ஆவணம் ஏற்றுக் கொள்ளப்படாமல் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 

மிகுந்த தேசப் பற்றாளன் ஆன நான், என் பாஸ்போர்ட்டில் முதல் விசாவாக பிரிட்டிஷ் விசா அடிக்கப்படவேண்டும் என்ற கனவு தகர்ந்து போனது. மாற்று திட்டமாக வைத்திருந்த சுவீடன் அனுமதிச்சீட்டும் , விசாவும் கிடைக்க வரலாறு மாறி போனது. 

அதன் பின்னர் யாராவது பிரிட்டன் போவதாக சொன்னாலோ , இங்கிலாந்துப் புகைப்படங்கள் பகிர்ந்து கொண்டாலோ கொஞ்சம் சன்னமாக வயிறு எரியும். இப்படி போய்க் கொண்டிருக்கையில், பழைய பாஸ்போர்ட் தேதி முடிய , புதிய இந்திய பாஸ்போர்ட் கடந்த வருடம் வாங்கியாகிவிட்டது. சென்கென் நாடுகளில் தற்காலிக தங்கும் உரிமை ஆவணம் அட்டைகளில் வந்து விட்டாதால் , பாஸ்போர்ட் புத்தம் புதியதாய் இருந்தது. 

அன்பின் உருவங்களாய் நிறைய பாசக்காரர்கள் பிரிட்டனில் இருப்பதால் , சரி புது பாஸ்போர்ட்டிலாவது , நம்மை அடிமைப் படுத்தியவர்களின் விசா வாங்கலாம் என இரண்டு வாரங்களுக்கு முன்னர் , விசா விண்ணபித்தேன். 

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்... 
மீண்டும் அலட்சியம் , விண்ணப்பத்தை விசா அலுவலகத்திலேயே அச்சு எடுத்துக் கொள்ளலாம் என சென்றால், அவர்கள் விண்ணப்பம் இணையத் தளத்தில் கொடுத்து இருந்த கடவுச் சொல்லைக் கேட்டனர். பழைய அம்முகள், ஆண்டாள் , கடலைமக்கள் என அத்தனை காம்பினேஷனில் பாஸ்வோர்ட் கொடுத்தாலும் உள் நுழைய முடியவில்லை. 

சென்னை அலுவலகம் போலவே , ரோமிலும் , அவசரப் படவேண்டாம், அவகாசம் எடுத்துக் கொண்டு மீண்டும் வாருங்கள் என்று அனுப்பினார்கள். பாஸ்வேர்டை மறந்து இருந்தாலும், அந்த விண்ணப்பத்தை மடிக் கணினியில் சேமித்து வைத்து இருந்தேன். அதை அச்சு எடுத்துக் கொண்டு மறு நாள் போய் வேறு பிரச்சினை இன்றி கொடுத்தாகிவிட்டது. 


இந்த முறை எவ்வளவு பணம் தேவையோ அதைக் காட்டிலும் வங்கிக் கணக்கில் சரியாக வைத்து இருந்தேன். வேலை / படிப்பு ஆவணங்கள் என அனைத்தும் கச்சிதமாக இருந்தாலும் , ஏற்கனவே நிரகாரிக்கப் பட்டு இருக்கின்றதே, மீண்டும் அதைக் காரணம் காட்டி நிரகாரித்து விடுவார்களோ என மனதிற்குள் ஒரு பயம்

வழக்கமாக ஐந்து நாட்களுக்குள் முடிவு சொல்லும் அவர்கள், எனக்கு மட்டும் 12 நாட்கள் எடுத்துக் கொண்டனர். ஒரு வழியாக நேற்று , விசா முடிவு எடுக்கப்பட்டு விட்டது. ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என தகவல் வந்தது. பக் பக் திக் திக் என சென்று ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு , பாஸ்போர்ட்டை பிரித்துப் பார்த்தால் 6 மாதங்களுக்கு விசா வழங்கப்பட்டு இருந்தது. முதல் பாஸ்போர்ட்டில் நிறைவேறாத கனவு, இரண்டாவது பாஸ்போர்ட்டில் நிறைவேறியது. இரண்டாம் பாஸ்போர்ட்டில் அடிக்கப்பட்ட முதல் விசா பிரிட்டன் விசா. 

( இவ்வளவு பெரிய பத்தி எதற்கு என்றால், பிரிட்டனில் வசிக்கும் என் வாசகர்கள் ?? !! , ரசிகர்கள் ?? !! சோறு போடுவதாக சொன்னால் நாளையே பையைத் தூக்கிக் கொண்டு வந்து விடுவேன்.)