Wednesday, July 03, 2013

அப்பாவி கணேசனும் விமான அனுபவமும் - சிறுகதை

சுவிடனின் கோத்தன்பர்க்  நகரத்தில் இருந்து  வரும் அம்முவிற்காக , ரோம் சாம்பினோ விமான நிலையத்தில் காத்து இருந்த பொழுது , அப்பாவி கணேசன் நினைவுக்கு வந்தார். கடைசியாக ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், இந்த விமான நிலையத்திற்கு கணேசனுடன் வந்ததுடன் சரி அதன் பின்னர்  இன்றுதான் வருகின்றேன் .  மற்றபடி  என் போக்கு வரத்து எல்லாம்,  ரோமின் மற்றொரு விமான நிலையத்தை மையம் கொண்டு தான். 

சுவீடனில் படித்த பொழுது , அப்பாவி கணேசனுக்கு என்னுடன் பிரயாணம் செய்ய வேண்டும் என்றாலே பயம். ஒரு முறை கோபன்ஹெகன் ரயிலில் அவருடையை பயணச்சீட்டையும் எடுத்துக்கொண்டு வேண்டும் என்றே அவரைத் தெரியாததைப் போல வேறு  ஓரிடத்தில் போய் அமர்ந்து, பரிசோதகர் வரும் நேரத்தில் பரிதவிக்க விட்டு இருக்கின்றேன். 

மற்றொரு முறை, 

"கணேசன் , நம்ம காலேஜ் கார்டை காமிச்சா, ஒரு பாக்கெட் கடலை , வில்லிஸ் சூப்பர் மார்கெட்டில் கொடுப்பாங்க " 

 என சொல்ல போக , உண்மையிலேயே அட்டையைக் காட்டி கடலையைக் கேட்க , அந்த சூப்பர் மார்கெட்டில் அன்றைய மாலைப் பொழுது சூப்பராக போனது. 

தில்லு முல்லு ரீமேக் படத்தில் வருவதைப் போல, நான் ஒரு முறை விலை குறைந்த கூலிங் கிளாஸின் விலைக் குறிப்பை , விலை அதிகமான ஒன்றிற்கு மாற்றி வைத்து விட்டேன்.   

°கார்த்தி, சூப்பர் மாடல், வெறும் நூறு குரோனர் "  என சொல்லிக் கொண்டு எடுத்துப் போனார் நான் நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு வெளியே  வந்து விட்டேன்.  

கடைக்காரன் கில்லாடி ... பார்த்தவுடன் நிஜ விலையை கண்டுபிடித்து விட்டான்.
ஆயிரம் குரோனர், பணத்தைக் கட்டிவிட்டு வாங்கி வந்தார். அடுத்து வந்த கோடையில் அவரை விட , நான் தான் அந்தக் கண்ணாடியை அதிகம் அணிந்து இருப்பேன். 

என்னுடைய கெட்டப் பழக்கம் , அப்பாவிகளை , அம்மாஞ்சிகளை ,விளையாட்டுத் தனமாக கிண்டலடிப்பது. அது ,  சுமாரான பவுலர் நல்ல வாட்டமா பவுலிங் போட்டால் சிக்ஸர்களாய் அடிக்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சியைப் போல இருக்கும் . பேட்ஸ்மேன் களுக்கு தொடர்ந்து அடித்தாடினால் தான் மதிப்பு ... ஆனால் பவுலர்களுக்கு ஒரு பந்து  போதும்.. அத்தனையையும் தரை மட்டமாக்க ... 

தொடர்ந்த ஓட்டலில் களைப்படைந்து வெறுப்படையும் அப்பாவிகள்  என்னை ஒரு கட்டத்தில் எதிரியாக பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். சந்தர்ப்பம் அமையும் பொழுது , மூக்கில் குத்தி விட்டு ஓடி விடுவார்கள். 

ஆனால் இந்த அப்பாவி கணேசன் அவர்களைப் போல அல்லாதவர். 
என் தொடர் கலாய்த்தலை தாங்கிக் கொண்டதால் தான், அன்று ரோம் நகரத்திற்கு நான் குடி பெயர்ந்த பொழுது, அவருக்கும் டிக்கெட் போட்டு அழைத்து வந்தேன். அதில் கூட ஒரு சுயநலம் உண்டு. இரண்டு பெட்டிகள் எடுத்து வர வேண்டும். மேலதிக சுமைகளுக்கு ஆகும் செலவிற்கு இவரைக் கூட்டிக் கொண்டு வந்தால், பெட்டி தூக்க ஒரு ஆள் இருக்கும் என்பதுதான். 

ஊர்ப்புறங்களில் பேருந்து கடைசி நிறுத்தத்தில் வந்து நின்றவுடன், அடுத்து ஐந்து நிமிடங்களில் திரும்ப எடுப்பார்கள். மக்கள் இறங்குவதற்கு முன்னரே கூட்டம் ஏறத் தொடங்கும். இது விமானம் என்பதால் அரை மணி நேரம். வந்த விமானமே திரும்ப பறக்கும். 

டவுன் பஸ்ஸில் இடம் பிடிப்பதைப் போல இடம் பிடித்தோம். 10 எ 10 பி , 10 சியில் யாரும் இல்லை.  மலிவு வகை விமான சேவை என்பதால், வண்டியை வளைத்து கிளம்பத் தொடங்கியதும் லாட்டரி சீட்டு முதற்கொண்டு சாராயம் , சிகரெட் வரை  அனைத்தையும் விற்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படி விற்றுக் கொண்டு இருக்கையில் 

ஒரு விமானப் பணிப் பெண்ணைக் கூப்பிட்டு , கணேசனை சுட்டி,

"இவர், காண்டம் கிடைக்குமா என கேட்கிறார்"  என்றேன் 

இருவரும் என்னை முறைத்தனர். பின்னர் கணேசனை , சமாதானப் படுத்தும் முயற்சியாக பேச்சை ஆரம்பித்தேன். 

°கணேசன் , நான் பிளைட்டோட லைஃப் ஜாக்கெட்டை திருடப்  போறேன்" 

"வேண்டாம் கார்த்தி, தப்பு ...மாட்டினால் மானம் போயிடும் " 

கைசுமைகளுக்கான பைகளை  கால் மாட்டில் தான் வைத்து இருந்தோம். விமானம் தரையிறங்கும் சமயத்தில் , எல்லோருடைய கவனமும் அதில் இருந்த பொழுது இருக்கைக்கு கீழ் இருந்த  உயிர் காப்பு கவசங்களை கையை விட்டு எடுத்து ஒன்றை அவரின் பையிலும் மற்றொன்றை என் பையிலும் வைத்துக் கொண்டேன்.  கணேசனுக்கு வெளியில் வரும் வரை வியர்த்துக் கொட்டியது. அன்று எனக்கு ரோமில் உதவி செய்து விட்டு போனவர் தான், அதன் பின்னர் என்னுடன் பேசவே இல்லை. அந்த லைஃப்  ஜாக்கெட்டுகளை இன்றும் பாதுகாத்து வருகின்றேன். 

எதோ ஓர் அறிவிப்பில் விமான நிலையம் வருகைப் பகுதி சலசலப்பானதும், அப்பாவி கணேசன் நினைவுகளை விட்டு நிகழ் காலத்திற்கு வந்தேன். கோத்தன்பார்க் விமானத்தைப் பற்றிதான் சொல்லுகின்றனர். கோத்தன்பார்க்கில் இருந்து வரும்  விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக நகரத்திற்கு வெளியே கடலில் விழுந்து விட்டது  எனவும் மீட்புக் குழுக்கள் விரைந்து இருக்கின்றனர் எனவும் அந்த அறிவிப்பு சொன்னது. 
                                                                 ---