Tuesday, January 01, 2013

உள்ளுணர்வு - சிறுகதை

இதை செய், இதை செய்ய யோசி இப்படி அடிக்கடி உள்ளுக்குள் இருந்து அடிக்கடி மணி அடித்துக் கொண்டே இருக்கும். பெரும்பாலும் அந்த உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுக்க மாட்டேன். அட என்னதான் நடக்குதுன்னு பார்த்திடலாமேன்னு ஓர் அசட்டுத் துணிச்சல். 

சில வருடங்களுக்கு முன்னர், இடதுப்பக்கம் போகாதே அங்கு ஒரு சோகம் இருக்கிறது, என உள்மனது சொன்னபொழுதும், அதையும் மீறி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அருகில், அம்முவை அவளின் கணவனோடும் அழகான குழந்தையோடும் பார்த்தேன். அவள் என்னைப் பார்க்காமல் இருந்திருந்தால் கூட சங்டமாக இருந்திருக்காது, பார்த்து சிரித்தும் வைத்தாள்,அதன் பின்னர்  பழைய மின்னஞ்சல்களை வாசித்தலில் இரண்டு நாட்களுக்கு தூக்கம் போனது.  

ஒன்பதாவது படிக்கும் பொழுது கணக்காசிரியர் , பத்தாவது பாடத்திற்கான சிலக் கணக்குக் கேள்விகளை கவனக்குறைவில் எங்களுக்கான காலாண்டு  வினாத்தாளில் சேர்த்துவிட ,  எங்கள் வகுப்பில் எவனும் 60 விழுக்காடுகளைத் தாண்டவில்லை. நான் எடுத்தது நூற்றுக்கு நூறு. 

ஆச்சரியப்பட்ட வாத்தியாருக்கு எனக்கான பதில். 

“ஏற்கனவே அடிக்கடிப் போட்டுப் பார்த்த கொஸ்டின்ஸ் மாதிரி இருந்துச்சு சார்”   

அதற்கடுத்த வருடம் 10 ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகளில் நான் கணக்குப்பாடத்தில் நூற்றுக்கு நூறு. இது மாதிரி ஏகப்பட்ட உதாரணங்கள்,  இப்பொழுது வேலைப் பார்க்கும் ஆஸ்திரியா நிறுவனத்தில் ,முதல் வருடத்தில் ,  ஒருமுறை தெரியாத நிரலி வகையில் நண்பனுக்கு உதவி செய்தேன், ஸ்நான பிராப்தமே இல்லாத ஒன்றில் அகஸ்மாத்தாக செய்த உதவி பெரிய அளவில் பேசப்பட்டது. அதன்பின்னர் அந்த நிரலிமுறைகளை கடந்த ஆறு மாதங்களில் கற்றுக்கொண்டேன். 

ஐந்து வயதாக இருக்கும்பொழுது, மலைக்கோட்டை அருகில் அப்பாவின் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு சாரதாஸிற்கு செல்லும் கூட்டத்தை வேடிக்கைப்பார்க்கையில், எங்களைக் கடந்த இரண்டு வெள்ளைக்காரர்களை என் அப்பா காட்டி,

“அங்கப் பாரு, இங்கிலீஷ்காரனுங்கப் போறாங்க” 

“அப்பா அவங்க இங்கிலீஷ் காரங்க இல்லை, அவங்கப் பேசுறது ஜெர்மன்” 

நடுவில் கொஞ்சம் அடங்கி இருந்த எச்சரிக்கை மணியோசைகள், அடுத்து நடக்கப்போவதற்கான குறிப்புகள் கடந்த பத்து நாட்களாக அடிக்கடி வந்துப் போகின்றன. ஏதோ நானே இன்னொரு உருவம் எடுத்து எனக்குள் வந்தமர்ந்து கொண்டது போல. கிறிஸ்துமஸ் புது வருட விடுமுறைக்கு ஊருக்குப் போகாதே , வியன்னாவிலேயே கொண்டாடு  என்று சொல்லிய உள்ளுணர்வை நான் கேட்கவில்லை. உனக்கு ஏதோ தப்பு நடக்கப்போகிறது என்ற உள்ளுணர்வை கேட்கவில்லை. ஆழ்வார் திருநகர் வாசுதேவன் வீட்டில் குடிக்க முடிவு செய்த பொழுது, வேண்டாம் பெசண்ட் நகரில் இருக்கும் ரங்கநாதன் வீட்டில் வைத்துக் கொள் என்று சொன்ன மன ஓசையையும் கேட்கவில்லை. 

காமராஜர் சாலை வழியாகப் போகாதே  - நான் கேட்கவில்லை 
 நேரா லாமெக் பள்ளி வழியாகப்போ -  கேட்கவில்லை. 
 குறுக்க நாய்கள் வரலாம் மெதுவாகப்போ - கேட்கவில்லை 

“நாய் வருது, பிரேக் அடி”  

சின்ன கல்லில் தலையில் அடிபட்டு அதோ அங்கே கிடக்கிறேன். 

அறிவுகெட்ட முண்டம், செத்துப் போன என்னை நானே திட்டிக் கொண்டேன். எத்தனைத் தடவைதான் ஆன்மாவாக கடந்த காலத்திற்கு வந்து உள்ளுணர்வாக உதவி செய்வது, ஒவ்வொரு முறையும் இப்படி அல்ப ஆயுசில் செத்துப் போக வேண்டியாதாயிருக்கு.  கடைசியா இன்னொரு முறை முயற்சிப் பண்ணப்போறேன். ஒரு வேளை என்னை நான் காப்பாற்றி விடலாம், அது சரி, என் சோகக் கதை இருக்கட்டும், நீங்கக் கூட,  என்னை மாதிரி உள்ளுணர்வை எல்லாம் கேட்கமா இருக்காதீங்க, Intuitions could be  your own soul coming back from the time of your death and foretelling and warning you the things that had already been experienced.