Monday, April 30, 2012

ஐரோப்பிய அம்மு - சிறுகதை

ஆணுறையைத் தவிர அனைத்தையும் விமானப் பயணத்தின் போது விற்கும் விமான சேவை இது, மலிவு விலை விமான சேவை எனக்கு அறவேப் பிடிக்காது எனினும், ரோமில் இருந்து ஸ்லோவாக்கிய தலைநகரத்திற்குப் போவதற்கு இதைவிட்டால் வேறுவழி கிடையாது என்பதால் பிராட்டிஸ்லாவாவில் ஒரு கருத்தரங்கை முடித்துவிட்டு ரோமிற்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றேன்.

எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த, பெண் மென்சோகத்துடன் ஒரு கையில் தனது இரண்டு அல்லது மூன்று வயது குழந்தையையும் பிடித்துக் கொண்டு செக்-இன் உடைமைகளின் எடை அதிகம் இருக்கின்றது என, சிலவற்றை எடுத்து, கைப்பையில் திணித்துக் கொண்டிருந்தாள். அம்மு கொஞ்சம் நிறமாக இருந்து, தங்க நிறக் கூந்தல் இருந்தால் எப்படி இருந்திருப்பாளோ அதேப்போல இருந்தாள். பிரதிகளில்தான் தருணங்கள் தன்னை நீர்த்துக் கொள்கின்றன. அம்முவின் உருவத்தை உணர்வை சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் தேடிக்கொண்டிருக்கின்றேன்.  நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்திருப்பாளோ என்னவோ, குழந்தையை இழுத்துக்கொண்டு, பாதுகாப்பு சோதனை வலையத்தை நோக்கி வேகமாக நடந்துப் போனாள்.


நான் வைத்திருந்தது வெறும் கைப்பைதான், பொதுவாக 10 கிலோ தான் அனுமதி என்றால் நான் எடுத்துச் செல்வது 5 கிலோவிற்கு மிகாது. எனக்கான நடைமுறைகளை முடித்து, விமானத்திற்காகக் காத்திருக்கும் தளத்திற்கு சென்றபொழுது , அங்கும் இங்கும் ஓடிவிளையாடிக்கொண்டிருந்த குழந்தைக்கு முதுகில் ஓர் அடியைப்போட்டு உட்கார வைத்துக்கொண்டிருந்தாள் அந்த ஐரோப்பிய அம்மு. ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளை அடிக்க மாட்டார்கள் என்றாலும், முன்னாள் சோவியத் தோழமை நாடுகளில் , ஒழுக்கம் தண்டனைகளின் வழியாகவும் போதிக்கப்பட்டிருந்ததால், இந்தத் தலைமுறையிலும்  சிலப் பல இடங்களில் வெளிப்படும். ஏன் மேற்கத்திய  இத்தாலியில் கூட , ஒரு முறை அடம்பிடித்த குழந்தையை அம்மா இரண்டு சாத்து சாத்த, பாட்டியிடம் ஓடிப்போன குழந்தைக்கு , பாட்டியிடமும் இரண்டு அடி கிடைத்தது.

சிறுகதைகளைத் தேட ஆரம்பித்தபின்னர் காத்திருப்பின்பொழுது புத்தகம் படிக்கும் பழக்கத்தையும்,  இளையராஜாவைக் கேட்கும் பழக்கத்தையும் விட்டுவிட்டதால் மனிதர்களை கவனிக்க ஆரம்பித்தேன், கண்டிப்பாக ஒரு சிறுகதையாவது சிக்கும். ஐரோப்பிய அம்முவின் குழந்தை, என்னைப் பார்த்து கண் சிமிட்டியது,  அப்படியேக் குட்டி ஐரோப்பிய அம்மு. கூந்தல் நிறம் மட்டும் கருப்பு, குழந்தையின் அப்பாவின் பாதி ஜீன் கூந்தலில் வந்துவிட்டது போலும், நிமிடத்திற்கு ஒரு முறை கைபேசியை எடுத்து யாருக்கோ அழைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்,  ஒரு சந்தர்ப்பத்தில் பேசிக்கொண்டிருக்க, குழந்தை அவள் கட்டுப்பாட்டை மீறி என்னை நோக்கி ஓடி வந்தது. பேசிக்கொண்டிருந்தவள், ஓடி வந்து குழந்தையை வெடுக்கென இழுத்துக் கொண்டு போனாள். கோபமும் அம்முவையே பிரதிபலித்ததனால் ஐரோப்பிய அம்முவின் மேலும் ஈர்ப்பு அதிகமானது.

விமானத்திற்குள் செல்ல ஒவ்வொருவராகத் தயாராக, விமான சேவையின் அதிகாரிகள் கைப்பையின் எடையையும் பரிமாணத்தையும் சோதிக்க ஆரம்பித்தனர். பாதிக்குப் பாதி பேர் அழுத்தி திணித்து, சமாளித்துவிட்டனர். ஐரோப்பிய அம்முவின் கைப்பையோ இரண்டு மடங்கு இருந்தது,அவளே சில மேல் சட்டைகளை எடுத்து மாட்டிக்கொண்டாலும் இன்னும் அளவு குறையவில்லை. நேரம் அதிகம் எடுத்துக் கொண்டிருப்பதால், அவளை தண்டக் கட்டணம் செலுத்தச் சொன்னார்கள். ஸ்லோவாக்கிய மொழியில் அதிகாரிகளும் அவளும் பேசிக்கொண்டிருந்தாலும், கெஞ்சல்கள் எந்த மொழியிலும் புரியும் என்பதால் என்னப் பேசி இருப்பார்கள் என்பது விளங்கியது.   அவளிடம் பணமும் குறைவாக இருந்தது போலும். வரிசையில் இருந்து விலகி, குழந்தையின் சில உடைகள், அவளது சில உடைகள், சில விளையாட்டுப்பொருட்கள்,ஆகியனவற்றை குப்பைத் தொட்டியில் போட்டாள். அனுமதிக்கப்பட்ட அளவிற்கு பை இருந்ததால் இந்த முறை விமானத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டாள். வரிசையில் இருந்து விலகிய நான்,  குப்பைத் தொட்டிக்குச் சென்று அவற்றை எடுத்து யாரும் கவனிக்காதபடி  கைப்பையில் போட்டுக்கொண்டேன்.



மாநகரப்பேருந்தில் பயணம் செய்ய உள்நுழையும் பொழுது என்ன உணர்வு ஏற்படுமோ அதே உணர்வு, கடைசியாக விமானத்திற்குள் நுழையும்பொழுது ஏற்பட்டது. எந்த விசயத்தை ஒதுக்க நினைக்கிறமோ , அதுவே ஆடை அலங்காரங்களுடன் அருகே வரும். எனக்கு அவளுக்கருகே ஓர் இருக்கை கொடுக்கப்பட்டது.  தலைக்குமேல் கைப்பைகளை வைக்கும் இடங்கள் நிரம்பிவிட்டதால், காலுக்கு அடியில் அவரவர் கைப்பைகளை வைத்துக்கொள்ள அறிவுறுத்த்தப்பட்டனர். எனது பையில் துருத்திக் கொண்டிருந்த குழந்தையின் விளையாட்டு பொம்மையின் நுனியைப் பார்த்த அவளின் குழந்தை தையத்தக்கா என கையாட்டிக்கொண்டே இருந்தது. இரண்டு முறை பேச முயற்சித்தேன், குழந்தைக்கு தொடர்ந்து அடி கிடைக்கக் கூடாது என ரோம் வரும் வரை எதுவும் பேசவில்லை. ரோமில் விமானம் தரையிறங்கிய பின்னர் அவள் குப்பையில் தூக்கி எறிந்த பொருட்களை எடுத்துக் கொடுக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த பொழுது, எல்லோருக்கும் முன்னராக வேகமாக வெளியேறினாள்.

சரி செக்.இன் உடைமைகள் எடுக்கும்பொழுதாவது பிடித்துவிடலாம் பின் தொடர்ந்தால், அங்கும் எல்லோரையும் முந்திக்கொண்டு, தனது பெரிய பெட்டியை எடுத்துக்கொண்டு விமானநிலையத்தில் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தவனை நோக்கி வேகமாக நடந்தாள். அது அவளுடைய காதலனாகவோ கணவனாகவோ இருக்கக்கூடும், குழ்ந்தை அவளிடம் இருந்து அவனிடம் தாவிக்கொண்டது. நல்ல வாட்ட சாட்டமான இத்தாலிய இளைஞன். குழந்தை மீண்டும் என்னைப்பார்த்துக் கைக்காட்ட ஐரோப்பிய அம்முவும் ஏதோ சொல்ல, அவன் என்னை முறைக்கத் தொடங்கினான்.  இத்தாலியர்கள் முதலில் அடித்துவிட்டுத்தான் பேசுவார்கள், எதற்கு வம்பு என பொருட்களைக் கொடுக்காமலேயே எனது பேருந்து வரும் இடத்திற்குப் போனேன்.  ஒரு வேளை உண்மையான அம்முவும் என்னை சந்திக்க நேர்ந்தால் இப்படித்தான் நடந்து கொள்வாளோ !! என்ற யோசனையுடன் குழந்தையின் விளையாட்டுப்பொருளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஐரோப்பிய அம்முவின் கார் கடந்தது. முன்னிருக்கையில் இருந்த குழந்தை பொம்மையைப் பார்த்து தையத்தக்கா என ஆட, அந்த ஐரோப்பிய அம்மு என்னைப் பார்த்தாள், அவளின் மாறும் முகபாவத்தைக் கவனிக்கும் முன்னர் எனதுப் பேருந்து இடையில் வர, மற்றும் ஒரு சிறுகதை அனுபவத்துடன் பேருந்தில் ஏறினேன்.






Monday, April 23, 2012

ஒரேயொரு கிரிக்கெட் கேள்வி - விடை - விதி எண் 19.5



”கிரிக்கெட் ஆட்டங்களில் மட்டையாளரால் அடிக்கப்பட்ட பந்து, தரையில் படாமல் எல்லைக்கோட்டைத் தாண்டி பறந்து வந்து விழுந்தால் ஆறு ஓட்டங்களும், தரையில் பட்டு எல்லைக்கோட்டைக் கடந்தால் நான்கு ஓட்டங்களும் வழங்கப்படுகின்றது.

சாத்தியப்படக் கூடிய கற்பனையான ஒரு பன்னாட்டு ஆட்டம் (இது டெஸ்ட் ஆட்டமாகவோ, ஒரு நாள் ஆட்டமாகவோ அல்லது இருபதுக்கு இருபதாகவோ இருக்கலாம்) புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் ஆடப்படுகின்றது. மைதானம் அமைக்க பொருள் உதவி செய்தவருக்கு 5 உம் 8 உம் விருப்பமான எண்கள் ஆதலால், தான் கட்டிய ஆடுகளத்தில் தனக்கான எண்கள் , அதிகபட்ச ஓட்டங்களாக அமைய விரும்புகிறார். அவரின் விருப்பத்தைத் தொடர்ந்து, அந்த ஆடுகளத்தில் ஆட்டம் நடைபெறும்பொழுதெல்லாம் பவுண்டரிக்கு 5 ஓட்டங்களும், சிக்ஸருக்கு எட்டு ஓட்டங்களும் வழங்கப்படுகிறது. இது சாத்தியமா? சாத்தியம் என்றால் ஏன் எப்படி? சாத்தியம் இல்லை என்றால் ஏன் ? எப்படி?”

கேள்விக்கான விடை 


பந்து எல்லைக் கோட்டைக் கடந்தால் பெறப்படும் ஓட்டங்கள் பற்றி தெளிவாக விதி எண் 19 சொல்கிறது. டாஸ் செய்யும் முன் நடுவர்களும் இரு அணித் தலைவர்களும் பந்து எல்லைக் கோட்டைத் தாண்டும் பொழுது பெற வேண்டிய ஓட்டங்களைப் பற்றித் தெளிவாக இருக்க வேண்டும் என்று அவ்விதி சொல்கிறது. ஆட்டம் நடக்கும் மைதானத்தில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்ட விதிகளை இவர்கள் பின்பற்ற வேண்டும். இப்படி குறிப்பாக மாற்றம் செய்யாத நிலையில் தரையைத் தொட்டுச் சென்றால் நான்கு ஓட்டங்களும் தொடாமல் எல்லைக் கோட்டைத் தாண்டினால் ஆறு ஓட்டங்களும் அளிக்க வேண்டும். 

இதனால் நடுவர்களும் இரு அணித் தலைவர்களும் டாஸின் முன் 5 மற்றும் 8 ஓட்டங்கள் என்ற விதியை ஏற்றுக் கொண்டால் அதன்படி விளையாடலாம். 

Law 19.5(a)
 states: "Before the toss, the umpires shall agree with both captains the runs to be allowed for boundaries. In deciding the allowances, the umpires and captains shall be guided by the prevailing custom of the ground."


http://www.lords.org/laws-and-spirit/laws-of-cricket/laws/law-19-boundaries,1355,AR.html



சரியான விடையை எழுதி தபால் அட்டையை விரைவில் பெறப்போகிறவர்கள்

1. மருத்துவர். புருணோ (http://www.payanangal.in/)
2. வெண்பூ (http://venpu.blogspot.it/)
3. இலவசக்கொத்தனார் (http://elavasam.blogspot.com  )
4. காரணன் (https://twitter.com/kaaranan)
5. கேவிஆர் (http://kvraja.blogspot.it/)
6. ஸ்டாலின் ஜே. தங்கராஜ் 

பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி 

Wednesday, April 18, 2012

ஒரேயொரு கிரிக்கெட் கேள்வி - பதில் சொல்லுங்கள் ...வெல்லுங்கள் ரோமில் இருந்து ஒரு தபால் அட்டை


கிரிக்கெட் ஆட்டங்களில் மட்டையாளரால் அடிக்கப்பட்ட பந்து, தரையில் படாமல் எல்லைக்கோட்டைத் தாண்டி பறந்து வந்து விழுந்தால் ஆறு ஓட்டங்களும், தரையில் பட்டு எல்லைக்கோட்டைக் கடந்தால் நான்கு ஓட்டங்களும் வழங்கப்படுகின்றது.

சாத்தியப்படக் கூடிய கற்பனையான ஒரு பன்னாட்டு ஆட்டம் (இது டெஸ்ட் ஆட்டமாகவோ, ஒரு நாள் ஆட்டமாகவோ அல்லது இருபதுக்கு இருபதாகவோ இருக்கலாம்) புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் ஆடப்படுகின்றது. மைதானம் அமைக்க பொருள் உதவி செய்தவருக்கு 5 உம் 8 உம் விருப்பமான எண்கள் ஆதலால், தான் கட்டிய ஆடுகளத்தில் தனக்கான எண்கள் , அதிகபட்ச ஓட்டங்களாக அமைய விரும்புகிறார். அவரின் விருப்பத்தைத் தொடர்ந்து, அந்த ஆடுகளத்தில் ஆட்டம் நடைபெறும்பொழுதெல்லாம் பவுண்டரிக்கு 5 ஓட்டங்களும், சிக்ஸருக்கு எட்டு ஓட்டங்களும் வழங்கப்படுகிறது. இது சாத்தியமா? சாத்தியம் என்றால் ஏன் எப்படி? சாத்தியம் இல்லை என்றால் ஏன் ? எப்படி

பதிலை எனது மின்னஞ்சல் முகவரி rrselvakumar@gmail.com வரும் ஞாயிற்று கிழமைக்குள் அனுப்பலாம். சரியான பதில் சொல்லும் அனைவருக்கும் ஒரு தபால் அட்டை ரோம் நகரத்தில் (பதில் சொல்பவர்களின் விருப்ப முகவரிகளுக்கு) இருந்து அனுப்பப்படும்.

Thursday, April 05, 2012

கெட்ட வார்த்தை - ஒரு நிமிடக்கதை

மொழியின் ஆளுமை வெறுமனே இலக்கியங்களில் மட்டும் இருப்பதில்லை, பயன்படுத்தப்படும் கெட்ட வார்த்தைகளிலும் இருக்கின்றது. பொதுவாக எனக்குக் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது பிடிக்காது, இருந்த போதிலும் அவற்றைத் தெரிந்து வைத்துக்கொள்வேன். அகர்வால் மூச்சுக்கு முந்நூறு தடவை இந்தியில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவான். ஆங்கிலம் தெரிந்த தோழிகள் அருகில் இருந்தால் கெட்ட வார்த்தைகள் ஆங்கிலத்திலும் தப்பும் தவறுமான சாதாரண வாக்கியங்களுக்கு மத்தியிலும் வந்து விழும். அவனைப் பொருத்தமட்டில் வெகு சகஜமாக இருப்பதாகக் காட்டிக்கொள்கிறானாம்.


கனியிருப்பக் காய்கவர்ந்தற்று வகையில் அதீத கோபம் வந்தாலொழிய எந்த மொழியிலும் நான் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்துவது கிடையாது. அதே சமயத்தில் கலாச்சாரத்தினுள் ஊறிய கெட்ட வார்த்தைகளுக்கு எதிர்ப்பு எதுவும் காட்ட மாட்டேன்.

“கார்த்தி எப்படி இருக்கிறாய்” என்ற கேள்விக்கு முன்னர் பெஹன்சூத், மாதர்சூத் என்ற அடைமொழியும் சேர்ந்து வரும்.

எந்த மொழியும் கைவைசப்படும் முன்னர், பிரயோகப்படுத்தப்படும் வார்த்தைகள் நம்மைக் குத்தாது. தூர்தர்ஷனின் இந்தித் தெரிந்த எனக்கு, கடந்த சில வாரங்களாகவே அகர்வாலின் வேண்டுமென்ற , இடம் பொருள் ஏவலற்ற கெட்ட வார்த்தைகள் ஊடான பேச்சு நடை எரிச்சலை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. தேவையின்றி கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாதே என அவனிடம் ஒரு முறை சொல்லியும் விட்டேன்.

“உனக்கு கெட்ட வார்த்தைகள் தெரிந்தால் நீயும் பயன்படுத்திக்கொள் பெஹன்சூத்? என பதில் சொன்ன பின்னர் அவனிடம் ஒட்டு மொத்தமாகப் பேச்சை நிறுத்திக்கொண்டேன்.

சில மாதங்கள் கழித்து, ஒரு மாணவர் கொண்டாட்டத்தின் போது, வலிய வந்து சிலப்பல மதராசி நகைச்சுவைகளுடன் “இன்றிரவு என்ன செய்யப்போகிறாய்” என முன்னர் சொன்ன கெட்ட வார்த்தைகளுடன் கேட்டான். என்னைச் சுற்றிலும் சில இந்திப் பேசும் தோழிகள் மற்றும் அரை குறை இந்தித் தெரிந்த தென்னிந்தியர்கள்.

இதற்காகத்தானே காத்திருந்தாய் என , நினைத்து சிரித்துக்கொண்டே,

“ தேர்ரி லௌடியா கொ ச்சூடு கியா” நான் சொன்ன பதிலை அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை. வெளிறிப்போன முகத்துடன் வெளியேறிய அகர்வால், அதன்பின்னர் யாரிடமும் கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்துவதில்லை.

சொல்ல மறந்துவிட்டேன், அந்த சம்பவத்திற்கு சில வாரங்களுக்கு முன்னர் தான் அவனுக்குத் திருமணம் ஆகி இருந்தது.




Wednesday, April 04, 2012

நெடுங்கதைப் போட்டி - ரிஷ்வன் எழுதும் தொடரின் பாகங்கள்

சில வாரங்களுக்கு முன்னர் என்னால் அறிவிக்கப்பட்ட வினையூக்கி நெடுங்கதைப் போட்டியில் பங்கேற்பதற்காக பதிவர் ரிஷ்வன் மிகச் சிரத்தையாக தொடரை எழுதிவருகின்றார்.

அந்தத் தொடரை வாசிக்க பின்வரும் சுட்டியினை சொடுக்கவும்.

கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி

---
1. என் மனதைக் கவர்ந்த முதல் நெடுங்கதைக்கு - இந்திய ரூபாய் 2500 பணமுடிப்பாக வழங்கப்படும்.

2. இரண்டாவது பரிசு - 1500 ரூபாய்

3. பங்கு பெறும் அனைவருக்கும் ரூபாய் 100 மதிப்பில் புத்தகங்கள் வழங்கப்படும்.

இன்ப அதிர்ச்சியாக பரிசுத் தொகை அதிகப்படுத்தப்படவும் கூடும்.

இந்தியக் குடியரசுக்கு வெளியே இருப்பவர்கள் வெற்றிபெற்றால், அவர்கள் நாட்டு நாணயத்தின் மதிப்பிற்கு சமமாக வழங்கப்படும்.

கதைகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் ----> நான் மட்டுமே !!! - வினையூக்கி செல்வா :)
-----

Tuesday, April 03, 2012

வாடிகன் - சிறுகதை

மிகப்பெரும் கோயில்களுக்குச் செல்லும்பொழுதெல்லாம் ஏற்படும் ஒருவிதமான சிலிர்ப்பு, இந்த நீண்ட நெடிய வரிசையில் வாடிகன் நகரம் / நாட்டிற்குள் நுழைய நிற்கும்பொழுதும் ஏற்பட்டது. சிலிர்ப்பிற்கு காரணம் பக்தியல்ல, கடவுளின் பெயரால் அமைக்கப்பட்ட எந்த ஓர் இடமும், அதிகார மையத்தின் மற்றொரு வடிவம் தான். வரலாற்றின் நீட்சிகளையும் மிச்சங்களையும் கடக்கும்பொழுது சிலிர்ப்பு ஏற்படுவது இயற்கைதானே !!!



சிறுவயதில், வாடிகன் தபால்தலைக்காக 20, வெவ்வேறு நாட்டுத் தபால்தலைகளை பரிமாற்றம் செய்த்தில் இருந்து வாடிகன் மேல் ஈர்ப்பு, தொடர்ந்து கத்தோலிக்கப் பள்ளியில் படித்ததால், முதலில் இறை சார்ந்த அபிமானமும், பின்னர் அதிகாரம் சார்ந்த அபிமானமும், தொடர்ந்து ரோமப் பேரரசின் எச்சங்களைப் பாதுகாத்து வருவதால் தொன்மை சார்ந்த அபிமானமும் தொடர்கின்றது.

நாட்டிற்குள் நாடு என்பதைக்காட்டிலும், நகரத்திற்குள் நாடு என்பதே சரி, பொடிநடையாக நடந்து ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு கடப்பது என்பது சுவாரசியமானதுதான். உள் நுழைவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. வரிசையில் எனக்கு முன்னால் சில அமெரிக்க மக்கள், அதற்கடுத்தாற்போல ஒரு முஸ்லீம், தாடி, உடை மத்தியக் கிழக்கு முஸ்லீம் எனச் சொல்லியது. எனக்கு முன்னிருந்தவர்களும் பின்னிருந்தவர்களும் அவரை ஒரு கருப்பாட்டைப் போலவே பார்த்துக் கொண்டிருக்க , நான் அரைக் கால்சட்டை, மெலிதான மேலாடை அணிந்து இருந்த அமெரிக்கப் பெண்களை ரசித்துக் கொண்டிருந்தேன். அந்த முஸ்லீம் மனிதருக்கு ஒருத் தயக்கம் இருந்திருக்கும் போல, மெல்ல பின் நகர்ந்து , சினேகமாக சிரித்த என்னருகில் வந்து நின்று கொண்டார்.

எல்லோரையும் அனுமதிக்கும் இந்த பாங்கிற்காகவே எனக்கு கிறித்தவ புனிதத் தலங்களை எனக்குப்பிடிக்கும். ஓரளவிற்கு சமத்துவம் நிலவும் தமிழ்நாட்டில் கூட இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புப் பலகைகளைப் பார்த்து நொந்ததுண்டு.



“மெக்கா, மதீனாவிற்கு ஏனையவர்களை விட மாட்டார்கள், இவர்கள் மட்டும் ஏன் இங்கு வருகிறார்கள்” பின்னால் இருந்த சிலப் பழமைவாதிகள் இத்தாலிய மொழியில் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். ஏறத்தாழ இதையொட்டி என் மனதிலும் ஒரு கேள்வி இருந்தது. கடவுளுக்கு முன்னர் அனைவரும் சமம் என்பவர், அந்தந்த மதம் சார்ந்தால் மட்டுமே
அனுமதிப்பதேன் !!!

எனக்கு முன்னால் இருந்த முஸ்லீம் துருக்கி நாட்டவராம். அவர் ஆபிராகமிய மதங்கள் பற்றிய ஆராய்ச்சிப்படிப்பைப் படித்துவருகின்றாராம். வரிசை மெல்ல பாதுகாப்பு பரிசோதனை வளையத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சமீபத்தில் வாடிகன், துருக்கிய ஆட்டோமான் பேரரசு சம்பந்தப்பட்ட பழமையான குறிப்புகளைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளிக்கொண்டுவந்தது. துருக்கிய ஆட்டோமான் பேரரசர்களின் பெருந்தன்மைதான் இன்னும் வாடிகனை நிலைகுலையாமல் வைத்திருக்கக் காரணம் என்று எங்கேயோப் படித்து இருக்கின்றேன்.



முன்னால் இருந்த அரைக் கால் சட்டை கவர்ச்சி அமெரிக்கக் கும்பலை, புன்னகையுடன் வரவேற்று பாதுகாப்பு அதிகாரி எந்த தடவல் சோதனைகளையும் செய்யாமல் இடது புறம் நுழைவாயிலின் வழியாக ஆலயத்திற்கு செல்லுமாறு கைக்காட்டினார். அடுத்து துருக்கியரை நிறுத்தி, முடிந்தவரை தடவல் சோதனை நடைபெற்றது. அவர்களின் சந்தேகம் தீரும் வரையில் சோதனைக்குட்படுத்தப்பட்டு பின்னர் உள்ளே நுழைய அனுமதிகப்பட்டார்.


எனக்குப் பின்னிருந்த இத்தாலியர்கள் அவைக் குறிப்புகளுக்கு ஒவ்வாத வகையில் இஸ்லாமியர்களைப் பற்றிய தங்களுக்கான கருத்துக்களைக் கூறிக்கொண்டிருந்தனர். இணையாக இருந்த அடுத்தடுத்த பாதுகாப்பு சோதனைத் தளங்களில் இத்தாலியர்கள், வெள்ளைக்காரர்கள் எந்தவிதமான தடவல் சோதனைகளுக்கும் உட்படுத்தப்படாமல் உள்ளே அனுப்பப்பட்டனர்.

அடுத்தது நான், மாநிறத்திற்கும் சற்று குறைவான எனக்கும் , தடவல் சோதனை இருந்தது, ஆனால் கடமைக்கென , கையை மேலேத்தூக்கு அகட்டு என நடந்து முடிந்த பின்னர் அந்தத் துருக்கிய முஸ்லீமைக் கண்கள் தேடியது. வலதுபுறம் இருந்த வாயிலின் வழியாக வேகமாக வாடிகனை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்.