ஒரு முத்தத்தின் விலை சில சிகரெட்டுகள் (அ) சில சிகரெட்டுகளின் விலை ஒரு முத்தம் - சிறுகதை
கைபேசி இரவு ஒன்பதரை எனக் காட்டியது. மதுபான விடுதிகளில் கொண்டாட்டங்கள் முழுவீச்சில் தொடங்க இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கின்றதே என எண்ணியப்டி, நள்ளிரவு வரை நீளும் சூரியவெளிச்சத்துடனும் இதமானா குளிருடனும் ஐரோப்பிய கோடை நாள் ஒன்றில், நகரத்தின் மையப்பகுதியில் இருந்த ஒரு பூங்காவில் உலாத்திக் கொண்டிருந்தபொழுதுதான் மனமும் உடலும் பெண்ணின் ஸ்பரிசத்திற்கு ஏங்கியது.
நெருக்கமாக கைக்கோர்த்துக்கொண்டு ஒவ்வொரு திருப்பத்திலும் மிதமான முதல் இறுக்கமான முத்தங்களைக் கொடுத்துக் கொண்டு சென்றுகொண்டிருந்த காதலர்களை தம்பதிகளைப் பார்க்க பொறாமையாக இருந்தது. முத்தம் காதலையும் காமத்தையும் இணைக்கும் ஒரே புள்ளி. முன்பு காதலிக்கும்பொழுதும் காதலிக்கப்படும்பொழுதும் காதலை அனுபவிக்கும் சூழல் இல்லை. இங்கு சூழல் இருக்கும்பொழுது காதலிக்கவும் காதலிக்கப்படவும் யாருமில்லை. பிறந்த நாளுக்கு முந்தையநாள் ஜெனியின் வீட்டில் இருந்து மாடிப்படிகளில் இறங்கி வரும்பொழுது 'திஸ் ஈஸ் மை கிஃப்ட்' என பாதிக் கன்னத்திலும் பாதி உதட்டிலும் பட்டும் படாமல் ஜெனி கொடுத்த முத்தம்தான் ஏழு வருடங்கள் கழித்து ,இடையில் சில நூறு முத்தங்களைப் பெற்ற பின்னர் கூட முத்தம் என்றால் நினைவுக்கு வருவது.
ஆங்கிலப்பட பாணியில் கொடுக்க முயற்சி செய்து உதட்டைக் கடித்து சொதப்பியது ஒரு தனிக்கதை. உடல்கள் பின்னிப்பிணைந்துக் கிடைக்கும் சுகத்தை விட ஒரு முத்தம் தரும் சுகம் அதிகம். ஜெனியைக் காதலித்ததனால் முத்தம் கொடுக்க ஆரம்பித்தேனா இல்லை முத்தம் கொடுப்பதற்காகவே காதலைத் தொடர்ந்தேனா என்ற யோசனைத் தட்டுப்படும் முன்னர் அந்தக் காதல் முறிந்துப் போனது.
பிறகு சில வருடங்கள் வனவாசம், காதலிலும் முத்தத்திலும் !! பின்பு அம்மு வந்தாள். காதலிக்கப்பட்டேன், 'சுவீடனுக்குப்போகும் முன் என்ன கொடுத்து செல்வாய்' என்றாள், 'போதிய அளவிற்கு முத்தம் கொடுக்கின்றேன்' என்றேன்!! கோபம் அடைவாள் என்று எதிர்பார்த்தால் எங்கே எப்பொழுது எத்தனை என அவள் கேட்க, கேட்டு முடிக்கும் முன் அலையன்ஸ் பிரான்ஸைஸ் பின்புறம் இருக்கும் படிக்கட்டில் வைத்து நீண்ட வனவாசத்திற்குப் பின்னர் அம்முவின் இதழ்வாசம் என் வசம்.
ஆட்டோவில் இருந்து இறங்கும்பொழுது கொடுத்த பாதிக் கன்னம் பாதி உதடு அரை முத்தத்துடன் இருப்பத்தைந்தரை முத்தங்கள் கொடுத்தாய் என பின்னொருநாளில் இடம்பொருள் உணர்வுகளோடு கணக்குச் சொன்னாள்.
'ஹார் து சிகரெட்' என ஒரு சுவீடிஷ் பெண் சிகரெட் கடன் கேட்க இயல்நிலைக்கு வந்தேன்.
சிகரெட் கேட்டவளை ஏற இறங்கப்பார்த்தேன். கால்களின் முழு அழகும் தெரியும்படியாக சிறியக் குட்டைப்பாவாடை உள்ளத்தை அள்ளித்தா ரம்பாவை நினைவுப்படுத்தியது.சொல்லப்போனால் ரம்பாவை விட வனப்பு அதிகம். இருந்தபோதிலும் இவளின் தோற்றம் கிளர்ச்சியைத் தரவில்லை, இரண்டு வருடங்களில் பாதி உரித்தக் கோழியைப்போல வெள்ளை நிறப்பெண்களைப் பார்த்துவிட்டதால் மாநிறத்தின் சிறிய இடுப்பு விலகல் தரும் போதையில் நூற்றில் ஒரு பங்குக் கூட தருவதில்லை. கோடைக்கு ஏற்ற காற்றோட்டமான திறந்த மேலாடை, கையில் சிறிய பியர் போத்தல், ஆனாலும் தெளிவாகவே இருந்தாள்.
'நெய் , யாக் ரோக்கர் இந்தே' நான் சிகரெட் பிடிப்பதில்லை என்பதை சுவிடீஷில் சொன்னேன்.
'பரவாயில்லை, அந்தக் கடையில் வாங்கிக் கொடு, நான் காசு தருகின்றேன்' என்றாள். பதினெட்டு வயதுக் குறைவானவர்களுக்கு புகையிலை மது சம்பந்தபட்ட விசயங்கள் வாங்க உரிமை கிடையாது. நம்ம ஊர்ப் பெண்களை ஒப்பிடுகையில் இவர்களின் வளர்ச்சி கிடுகிடுவென இருந்தாலும் தோற்றத்தைவிட உண்மையான வயது ஐந்து குறைவாகத்தான் இருக்கும்.
வார இறுதியானதால் அங்கும் இங்கும் காவல் துறையினர் சினேக முகபாவத்துடன் உலவிக்கொண்டிருந்தனர். குறை வயது உடையவர்களுக்கு வாங்கிக் கொடுப்பதும் சட்டப்படிக்குற்றம், ஏதேனும் பிரச்சினையாகிவிடுமோ என்ற பயத்தினால் வாங்கித் தர மறுத்துவிடலாம் என நினைத்தேன். மன சஞ்சலமும் தனிமையான சூழலும் நிறையவே சபலப்படுத்தியது.
'உனக்கு சிகரெட் வாங்கிக் கொடுப்பதனால் எனக்கு என்ன லாபம்' எனக் கேட்டேன்.
'உனக்கு என்ன வேண்டும் '
'ஆழ்ந்த பிரெஞ்சு முத்தம் வேண்டும்' என்றேன்.
முகத்தில் சிறிய அதிர்ச்சியுடன் இரண்டு மடக்கு பியர் குடித்துவிட்டு என் அருகில் உட்கார்ந்து 'சரி, நீ முதலில் வாங்கு, பின்னர் இங்கு வருவோம், முத்தம் கொடுக்கின்றேன்,கொடுத்தபின்னர் உன்னிடம் இருந்து சிகரெட்டுகளை வாங்கிக் கொள்கின்றேன்' என்றாள். இந்த ஒப்பந்தம் எனக்கும் தோதுப்பட்டது.
இவளின் முத்தத்தில் என்னுடைய பழையக் காதலை மீள் நினைவு செய்துகொள்ளலாம், இப்பொழுது மனதுக்கு தேவைப்படும் பெண்ணின் அருகாமையும் பூர்த்தி செய்யப்படும் என்ற இரட்டை நோக்கத்தில் அவளுடன் அருகில் இருந்த கடைக்குச் சென்றேன். செல்லும் வழியில்
'தேவை என்றால் உனக்கு மூன்று மடங்குப் பணம் தருகின்றேன், உனக்கு கண்டிப்பாக முத்தமே வேண்டுமா' என்றாள்
நான் பதில் சொல்லாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தேன்.
'முத்தம் காதலுடன் கொடுக்கப்படவேண்டும், காதலுடன் பெறப்படவேண்டும், என் முத்தங்கள் என் காதலுனுக்காக மட்டும் என நினைத்திருந்தேன்' என்ற அவள் சொன்ன பொழுது எனது சபலம் கரையத் தொடங்கியது.
அந்நியனை முத்தமிட வேன்டுமே என்ற கலக்கம் சிகரெட் வேண்டும் என்ற விருப்பத்தைவிட அவள் கண்களில் அதிகமாக தெரிந்தது.
'என்னை மன்னிக்கவும், என்னால் சிகரெட் வாங்கித் தர இயலாது' என என் மேல் எனக்கு ஏற்பட்டிருந்த அருவெறுப்பை உதிர்த்தபடியே அங்கிருந்து நகர்ந்தேன். வரும் வழியில் ஒரு மரத்தடியில் ஒரு நடுத்தர வயது ஆள், ஒரு சிறுவயது பெண்ணை தன்கைகளை அவளின் மேலாடைக்குள் பரப்பியபடி முத்தமிட்டுக்கொண்டிருந்தான், அவர்களின் அருகில் சில சிகரெட் பாக்கெட்டுகள்., என்னிடம் சிகரெட் கேட்டப் பெண்ணோ என அந்தப் பெண்ணின் ஆடையையும் அவளின் பக்கவாட்டு முகத்தையும் கவனித்தேன். நல்லவேளை அந்தப் பெண் இவளில்லை.