Monday, March 29, 2010
Sunday, March 28, 2010
டேனியல் வெட்டோரி - சகலகலா வல்லவன்
மென்பொருள் பொறியியலாளார் போன்றத் தோற்றம், படிப்புக்களையைத் தரும் கண்ணாடி, மென்மையான அதே சமயத்தில் தீர்க்கமான பேச்சு இவற்றை வைத்து ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் என கிரிக்கெட்டைப் பற்றி அறியாதவர்கள் டேனியல் வெட்டோரியைப் பற்றி தவறாக எடைப்போட்டுவிடக் கூடும். தன் அணி துணை வராவிடினும் தனி ஒரு ஆளாக வெற்றி அல்லது வெற்றிக்கான இடைவெளியையாவது குறைப்பதற்கு போராடுபவர் தான் டேனியல் வெட்டோரி. இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த டேனியல் வெட்டோரி ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா. தேர்வாளர்களில் ஒருவர் குறைகிறாரா !! கூப்பிடு வெட்டோரியை. என்னது பயிற்சியாளர் பதவி விலகிவிட்டாரா !! கூப்பிடு டேனியல் வெட்டோரியை பயிற்சியாளராகவும் இருக்கட்டும். முன்வரிசை ஆட்டக்காரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துவிட்டனரா!! வெட்டோரி இருக்கிறாரப்பா !! கவலையை விடு ஒரு கவுரவமான நிலைக்கு அணியை மீட்டெடுத்துவிடுவார்.
நாம் ஆதரவு தெரிவிக்கும் அணிக்கெதிராக நன்றாக விளையாடினாலும் சில ஆட்டக்காரர்களை உள்ளூர ரசிப்போம். அந்த வகையில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்களால் ரசிக்கப்படுவர் டேனியல் வெட்டோரி. ஆங்கிலத்தில் Underdogs என்றொரு பதம் உண்டு. எல்லோருக்கும் அறிந்த ஆனால் பெரும்பாலும் தோல்வியைத் தழுவக்கூடிய, சில சமயங்களில் அடுத்தவருக்கு அதிர்ச்சித் தோல்வியைக் கொடுத்து வெற்றிக்கனியைத் தட்டிச்செல்ல வாய்ப்பு இருப்பவர்கள் எனபது அந்த ஆங்கிலச் சொல்லின் அர்த்தம். அது நியுசிலாந்து அணிக்கு நூற்றுக்கு நூறுப் பொருந்தும். ஏழைகளின் ஆஸ்திரேலிய அணியான நியுசிலாந்து அணியை கிடைக்கும் சமயத்தில் அனைத்து அணிகளும் ஒரு புரட்டு புரட்டி எடுத்தாலும் சென்ற வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டம் வரை நியுசிலாந்து வந்து பரமவைரியான ஆஸ்திரேலியாவிடம் மற்றும் ஒரு முறைத் தோற்றுப்போனது.
உலகின் சிறந்த ஆட்டக்காரர்களை கொண்டு ஆடப்படும் அணிக்குத் தலைவராக இருந்து வெற்றிபெறுவதை விட , சராசரிக்கும் சற்று அதிகமான ஆட்டத்திறனுடைய ஆட்டக்காரர்களை வைத்துக் கொண்டு , அணியைச் சிறப்பாக ஆடச் செய்ய தானே முன்மாதிரியாக களத்தில் இருப்பது சிறப்பான விசயம்.இதைத் தான் கடந்த சில வருடங்களாக நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவராகச் வெட்டோரி சாதித்து வருகின்றார். டெண்டுல்கர் போலவோ ரிக்கிபாண்டிங் போலவோ எதிராளியை கலங்கடிக்கும் மட்டையளர்கள் யாரும் கிடையாது. ஒரு ஆட்டத்தில் அசூரத்தனமாக பந்து வீசிவிட்டு ஒன்பது ஆட்டங்களுக்கு ஓய்வு எடுக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள். எல்லா பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசவேண்டும் என நினைக்கும் நடுவரிசை ஆட்டக்காரர்கள் இப்படி வெட்டோரிக்கு கிடைத்து இருப்பதை விட இல்லாது இருப்பதுதான் அதிகம். கடந்த வருடம் நியுசிலாந்து கிரிக்கெட் நன்னெறிக்கான விருதைப் பெற்றது. கிரிக்கெட்டை விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டும் விளையாடாமல் அதன் பெருமைக்கு பங்கம் வராமல் வகையிலும் விளையாடும் நாடுகளுக்கு அளிக்கப்படும் விருது அது.
தோல்வியாக இருந்தாலும் வெற்றியாக இருந்தாலும் நிறைகுடம் போல அணியை நடத்திச் செல்லும் வெட்டோரியின் பங்கு, நியுசிலாந்து அந்த விருதைப் பெற்றதில் அதிகம். இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டி ஒன்றில் சக ஆட்டக்காரர் ஒருவர் ஆட்ட நன்னெறிகளுக்கு எதிராக ஆட்டமிழக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் தனது கோபத்தை வெளிப்படுத்தி, இங்கிலாந்து அணி வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததை தவிர வேறு எந்தவிதமான சங்கடமான செய்திகளிலும் வெட்டோரி சிக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1997 ஆம் ஆண்டு தனது 18 வயதில் இங்கிலாந்து அணிக்கெதிராக முதன் முறையாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான வெட்டோரி 13 வருடங்களுக்குப்பின் தனது 100 வது டெஸ்ட்டை சனிக்கிழமை (27 மார்ச் 2010) ஆஸ்திரேலியா அணியுடன் ஆடியிருக்கின்றார். இந்த நூறு கணக்கில் ஒரு பிரச்சினை இருக்கின்றது. வெட்டோரி, உலக அணிக்காகவும் ஒரு டெஸ்ட் போட்டி ஆடியுள்ளதால் , ஆஸ்திரேலியாவுடன் ஆடப்போகும் ஆட்டம் நியுசிலாந்து சார்பாக 99 வது ஆட்டமாகவும் ஒட்டுமொத்தத்தில் 100 வது ஆட்டமாக அமைந்திருக்கின்றது.
கிட்டத்தட்ட 4000 ஓட்டங்களையும் முன்னூற்றுக்கு மேற்பட்ட விக்கெட்டுகளையும் எடுத்துள்ள டேனியல் வெட்டோரி சமகால சகலகலா வல்லவர்களில்(Allrounder) குறிப்பிடத்தக்கவர். 2003- 2004 காலங்களில் ஆடிய மோசமான ஆட்டத்தைத் தவிர்த்துப் பார்த்தால் வெட்டோரி தனது அறிமுகத்தில் இருந்து இன்று வரை அந்த அணியின் முக்கியமான பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். புள்ளிவிபர சாதனைகளும் மைல்கற்களும் தன்னை ஊக்குவிக்கும் காரணிகள் என கூறும் வெட்டோரி தனது முந்தைய அணித்தலைவர் ஸ்டீபன் பிளமிங்
ஆடிய 111 டெஸ்ட் ஆட்டங்களை ஆடிக் கடக்க வேண்டும் என்பது லட்சியமாம். பந்துவீச்சில் இந்திய அணியின் ஹர்பஜன் சிங்கையும் மட்டை வீச்சில் ராகுல் திராவிட்டையும் தன் விருப்ப ஆட்டக்காரர்களாக நினைக்கும் டேனியல் வெட்டோரி டெஸ்ட் ஆட்டங்களில் 5 சதங்கள் அடித்துள்ளார்.
முதல் தர அறிமுக ஆட்டம் ஆடிய அதே மைதானத்தில்(ஹாமில்டன்) தனது 100 வது டெஸ்ட் போட்டியை ஆடிக்கொண்டிருக்கும் டேனியல் வெட்டோரி டெஸ்ட் அரங்கில் 100 போட்டிகளை ஆடிய 50 வது நபர் என்ற பெருமையும் அடைந்திருக்கிறார். ஸ்டீபன் பிளமிங்கிற்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டியிருக்கும் இரண்டாவது நியுசிலாந்து ஆட்டக்காரர். ஆரம்பத்தில் கால்பந்து வீரராக வேண்டும் என விரும்பிய வெட்டோரி, அவருக்கு 15 வயதாக இருக்கும்பொழுது, பயிற்சிக்கு செல்லும் வாகனம் விபத்துக்குள்ளானதில் முதுகெலும்புகளில் பலத்த காயம் அடைந்தார். அதில் இருந்து கிரிக்கெட்டை தனது விருப்ப விளையாட்டாக தேர்வு செய்தாராம். தனது முதல் ஆயிரம் ஓட்டங்களை எடுக்க 47 டெஸ்ட் போட்டிகள் எடுத்துக்கொண்ட வெட்டோரி அடுத்த ஆயிரம் ஓட்டங்களை 22 ஆட்டங்களில் கடந்தார்.
பாகிஸ்தான் அணிக்கெதிராக அடித்த தனது முதல் டெஸ்ட் சதத்திற்குப் பின் தன்னை நடுவரிசை மட்டையாளராக நிலை நிறுத்திக் கொண்ட வெட்டோரி, கடந்த வருடம் ஹாமில்டனில் இந்தியாவுக்கெதிரான ஆட்டத்தில் 60/6 என்ற நிலையில் இருந்து அணியை மீட்டு சதமும் அடித்து இந்திய பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றினார். இத்தனைக்கும் தனது முதல் ஆட்டத்தில் 11 வது ஆட்டக்காரராக டக் அவுட் புகழ் ஜெஃப் அல்லாட்டிற்குப்பின் களமிறக்கப்பட்டவர். 2011 உலகக் கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறத்திட்டமிட்டுள்ள வெட்டோரி அதன் பின் சில வருடங்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடுவேன் எனக்கூறியிருக்கிறார்.
ரிச்சர்ட் ஹாட்லியின் 431 விக்கெட்டுகளை முந்துவது ஒரு நோக்கமாக இருக்கலாம். 5000 ஓட்டங்கள் 400க்கும் அதிகமான விக்கெட்டுகள் எடுத்து ஓய்வு பெற்றால் சமகாலத்திய கபில்தேவ் வகையிலான சகலகலாவல்லவர் என்ற பெயர் வெட்டோரிக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.
வாழ்க்கையிலும் கிரிக்கெட்டிலும் சாதனைகளை போராட்டங்களில் வாயிலாக புரிபவர்கள் தாம் அதிகமாக நினைவுகூறப்படுவார்கள். தன் ஆட்டத்திறன் பாதிக்கப்படக்கூடும் என தலைவர் பதவியை உதறுபவர்கள் மத்தியில் தலைவர் பதவி, ஒன்றுக்கும் மேற்பட்ட பொறுப்புகளின் அழுத்தம் தன்னை இன்னும் அதிகமாக பிராகசிக்க செய்கிறது எனக்கூறும் வெட்டோரி ஒரு போராளி.
தனது நீண்ட நாள் தோழியான மேரி ஓ கேரல்லை மணந்து ஜேம்ஸ் என்ற மகனுடன் குடும்பத்தலைவர் என்ற பொறுப்பையும் சிறப்பாகச் செய்து வரும் டேனியல் வெட்டோரி, தனது 100 வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி , ஆஸ்திரேலிய ரன்குவிப்பை 231 க்குள் கட்டுப்படுத்தினாலு மட்டையாளர்களின் ஒத்துழைப்பு இல்லாததினால் மீண்டும் மண்ணைக்கவ்வியது.
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
என்ற குறளுக்கு ஏற்ப தனக்கு அளிக்கப்பட்டதை குறை கூறாமல் சராசரியான அணியை வைத்துக்கொண்டு அவ்வப்பொழுது சாதனைகளைச் செய்ய வைக்கும் அணித்தலைவர் , சுழற்பந்து வீச்சாளார் , மட்டையாளர், தேர்வாளர், சமயங்களில் பயிற்சியாளார் என அனைத்திலும் கலக்கும் இந்த சகலகலகலா வல்லவன் வெட்டோரி 100 வது டெஸ்ட் போட்டியில் வெல்வதோடு மட்டுமல்லாமல் 2011 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை வரும் படி வாழ்த்துவோம்.
4தமிழ்மீடியாவிற்காக எழுதியது
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
7:02 AM
7
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: கிரிக்கெட், நிகழ்வுகள்
Monday, March 15, 2010
துவைதம் - சிறுகதை
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
1:38 AM
29
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: அனுபவம், சிறுகதைகள், திகில்
Tuesday, March 09, 2010
கம்பன் நகர், இரண்டாவது தெரு - சிறுகதை
பயணதிசைக்கு எதிர் திசையில் ஓடும் மரங்களைப் போல, மனமும் சில வருடங்களுக்கு பின் சென்று முந்தைய அம்முவின் இருப்பை அசைபோட்டு
நிகழ்காலத்துக்கு அவ்வப்பொழுது திரும்பிக்கொண்டிருந்தது. மோகன் காரை வேகமாக கிழக்கு கடற்கரைச்சாலையில் செலுத்திக் கொண்டிருந்தார். சுவீடன்
சாலைகளில் இதைவிட வேகமாகப் பயணப்பட்டுப் பழகி இருந்தாலும், எதிர்திசையில் அசூர வேகத்தில் வரும் வாகனங்களைப் பார்க்கும்பொழுதெல்லாம் என் சீட் பெல்ட்டை சரிபார்த்துக் கொண்டேன். சாவின் மேல் பயம் என்பதற்காக இல்லை. அம்முவை பார்க்கும் முன் செத்துப் போய்விடக்கூடாது என்பதனால் !!
"ஆடியோ பிளேயர்ல ஏதாவது பாட்டை நீயேப்போடு" மோகன் சாலையில் கவனம் வைத்தபடியே என் கவனத்தை இயல்புக்கு கொண்டுவந்தார்.
சிரித்துக்கொண்டே, அங்கு கிடந்த இளையராஜாப் பாடல்களின் தொகுப்புகளில் சிலவற்றைப் பார்த்தேன்.
"நானே ஏதாவது பாட்டைப் போட்டால், நீ எமோஷனலா டிஸ்டர்ப் ஆயிட்டேன்னு ஒரு கதை எழுதி என்னை காமெடியனா ஆக்கிடுவே, எதுக்குப்பா பிரச்சினை"
இதற்கும் நான் ஏதும் பதில் சொல்லாமல், சிரித்துக் கொண்டே உல்லாசப்பறவைகள் படத்தில் இருந்து ஜெர்மனியில் செந்தேன் மலரே பாடலை பாட வைத்துவிட்டு , மோகனைப் பார்த்து "இன்றைக்கு முழுவதும் அம்முவின் விருப்பப்பாடல்கள்தான்"
நான் சுவீடன் வரும் முன், ஜெர்மனி என்பதை சுவீடன் என மாற்றி அம்மு அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருப்பாள். அவளுடன் சேர்ந்துப் பாடிப் பாடியே எனக்கும் ஜெர்மனி என்பது போய் சுவீடன் எனவே வந்தது.
"என்ன கார்த்தி,பிளாஷ்பேக்கா!!"
"ஆமா மோகன்!!! அவளைப்பத்தி யோசிச்சு யோசிச்சு எனது ஆத்திரங்களை அதிகப்படுத்திக்கிட்டு இருக்கேன், நேரிலப் பார்க்கிறப்ப திட்டித் தீர்க்கனும். அவள்
ஒரு துரோகி எனத் திட்டனும்"
நான் சொன்னதை மோகன் காதில் வாங்கிக் கொள்ளாதது போல,
"கம்பன் நகர் செகண்ட் ஸ்ட்ரீட் தானே !!
"யெஸ் மோகன், அலெக்ஸ் இந்திராகாந்தி சிலைக்கிட்ட வெயிட் பண்ணுவாரு, எனக்கு வழித் தெரியும்,இருந்தாலும் அலெக்ஸையும் வரச்சொல்லி இருக்கேன்"
மோகனுக்கு நான் அம்முவைத் திரும்ப பார்க்கிறதில் சுத்தமாக விருப்பமே இல்லை. அவரைப் பொருத்தவரை எங்கிருந்தாலும் வாழ்க கொள்கைதான். இழந்ததை வைத்து அழுவதை விட, இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சிலக் காதல்கள் நெட் பிராக்டிஸ் மாதிரி, அவை நிஜமான ஆட்டத்திற்கு தயார்படுத்தும் பயிற்சிகள். சிலப்பலக் காதல்கள் தவறி, கடைசியில் வெற்றிகரமாக காதல் திருமணம் செய்து கொண்டவர், குழந்தைகளுக்கு முன்னாள் காதலிகளின் பெயர்களை வைக்கவில்லை. அம்முவைப் பற்றி யோசிக்கும் தருணத்தில் மோகனைப் பற்றிய விவரணை எதற்கு !!!
இதே கடற்கரைச்சாலை, அன்றொரு நாள், பாண்டிச்சேரி செல்லும் விரைவுப் பேருந்தில் என் தோளில் சாய்ந்தபடியே அம்மு என்னிடம் கேட்டாள்.
"ஏண்டா, நான் அவ்வளவு அழகாவா இருக்கேன் !!"
"ஆமாண்டா, குட்டிம்மா.. அவ்வளவு அழகு நீ" அவளின் கைவிரல்களை நீவிய படி.
"அதோ, அந்த மூனாவது சீட்ல மஞ்சள் சுடிதார்ல ஒரு பொண்ணு இருக்காளே, அவளை விடவா நான் அழகா இருக்கேன்".
"அம்மு, நிச்சயமா நீ அவளை விட அழகு தான்"
"நீ பொய் சொல்றே!! சுவீடன் போறமுன்ன நான் கவலைப்படக்கூடாதுன்னு தானே, இப்படி சொல்றே !!"
"இல்லைடா, அந்த பொண்ணு எங்க அம்மா மாதிரி இல்லை, நீ எங்கம்மா மாதிரி இருக்கே !! அதனால நீ தான் அழகு "
ஓட்டுனர் பேருந்தை சடாரென நிறுத்த, அந்த சந்தர்ப்பத்தில் என் கன்னத்தில் முத்தமிட்டு "தாங்ஸ்" என்றாள்.
"கார்த்தி " என ஆண்குரல் கேட்க, நிகழ்காலத்துக்கு வந்தேன்.
"கார்த்தி நீ கண்டிப்பாக கீர்த்தனாவைப் பார்க்கனுமா, நீ இண்டியால இருக்கப்போற இந்த பத்து நாட்களை வீட்டோட இருக்கலாம்லே.. அனாவசியமா ஒரு சலசலப்பு எதற்கு, உன்னை அவள் மறந்துகூடப் போயிருக்கலாம் !! "
"எனக்கு அந்த சலசலப்புதான் வேண்டும் மோகன், ஒரு வேளை அவள் என்னை மறந்து சந்தோசமா இருந்தால், நான் அவள் வாழ்க்கையில் இருந்தேன்னு அவளுக்கு ஞாபகப்படுத்தி சஞ்சலப்படுத்தனும், ஒரு வேளை அப்படி இல்லாமல் சராசரி வாழ்க்கையில் இருந்தால், என்னை அப்பா அம்மாவுக்காக
நிராகரிச்சோமேன்னு வலிக்கனும், இந்த சலசலப்பு, சஞ்சலம் , வலி எல்லாம் அவளுக்கு மட்டுமில்ல, அவங்க அப்பா அம்மாவுக்கும் தான்"
"நீ படிச்ச படிப்புக்கும், இப்போ நீ இருக்கிற லெவலுக்கும் , இப்படி யோசிக்கிறது ரொம்ப அல்பமா இருக்கு!!"
"நான் இத்தனை ஜெயிச்சதும், அத்தனை வலியையும் பொருத்துக்கிட்டு படிச்சதும் இந்த ஒரு சந்தர்ப்பத்துக்காகத்தான், நான் ஒரு தோல்வியடைஞ்சவனா அவளைப் பார்க்கக்கூடாதுன்னு மட்டும் உறுதியா இருந்தேன், அப்படி தோத்துப்போகனும்னா பால்டிக் கடல்ல குதிச்சிருப்பேனே!!, என்னை அவ்வளவு சீக்கிரம் எலிமினேட் பண்ண முடியாதுன்னு அவளுக்கு காட்டனும், இனி எப்பொவெல்லாம் இண்டியா வரேனோ, அப்பொவெல்லாம் அவளைப் போய் பார்ப்பேன், அவளுக்கும் வலிக்கனும் "
மோகன் அதன் பின் எதுவும் பேசவில்லை. எனக்கும் தொடர்ந்து பேச விருப்பம் இல்லை. அம்முவின் மேல் இருக்கும் ஆத்திரத்தை நான் மோகனிடம் பேசுவதினால் நீர்த்துப் போய்விடுமோ என்ற பயம் வந்தது. அலெக்ஸிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை, அவரிடம் மரக்காணத்தைக் கடந்துவிட்டதாக சொல்லி வைத்தேன்.
அம்முவுடம் பயணப்பட்ட அன்றும் இதேபோல் அலெக்ஸிடம் இருந்து அழைப்பு வந்தது.
"யாருடா, அலெக்ஸா !! நான் உன்கூட இருக்கேன்னு அவரிடம் சொல்லலத்தானே !!"
"நம்ம ஆபிஸ்ல , நான் உன் கூட பேசிட்டு இருக்கேங்கிறதே யாருக்கும் தெரியாது, நம்ம கல்யாணத்துல சொல்லிக்கலாம்"
"கார்த்தி, அலெக்ஸ் பேரை இங்கிலீஷ்ல எழுதுறப்ப ஏ வை எடுத்துட்டு பி,சி, டி இசட் வரைக்கும் போட்டு படிப்போமா!!"
"அலெக்ஸ், பிலெக்ஸ்,சிலெக்ஸ்,டிலெக்ஸ்,எலெக்ஸ்,ஃபெலக்ஸ்......க்யூலெக்ஸ்..எக்ஸ்லெக்ஸ்,வொய்லெக்ஸ்,இசட்லெக்ஸ்" என நான் முழுமையாகச் சொல்லி முடிக்க பேருந்தே திரும்பிப்பார்க்கும்படி சிரித்தாள்.
இந்த மாதிரி எங்களது சங்கீத ஸ்வர இரவுகளில் ஒவ்வொருத்தர் பெயரையும் எழுத்தை மாற்றிப்போட்டு வாசிச்சு சிரிப்போம்.
"அம்மு, உங்க வீட்டுக்கு எப்படி வரது. வழிச் சொல்லு"
"அடேய், வீட்டுக்கு எல்லாம் வந்துடாதே, எங்க அப்பா எங்க வீட்டுக்கு எதிர்த்தாப்புல இருக்கிற அம்மன் கோவிலுக்கு என்னை பலி கொடுத்துடுவாரு"
"வீட்டுக்குள்ள வரமாட்டேன், சும்மா அலைபாயுதே படத்துல மாதவன் வந்து வீட்டை ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு போற மாதிரி, அலெக்ஸோட வரேன்"
"அலெக்ஸா, டேய் வேண்டாம்டா,"
"ச்சேசே அவரு ஒரு ஜெண்டில்மேன், நீ பயப்படாதே!!, அவரு எதுவும் கேட்கமாட்டார், கேட்டாலும் நான் சமாளிச்சிடுவேன்".
"எங்கத் தெருவில எங்க வீடுதான் கடைசி, நாங்க மாடில இருக்கோம். எதிர்த்தாப்புல நான் உனக்காக வேண்டிக்கிற அம்மன் கோயில், நீ எங்க தெருப்பக்கம் வரப்ப எனக்கு ஒரு குட்டி மிஸ்ட் கால் கொடு, முடிஞ்சா நான் வந்து எட்டிப்பார்க்கிறேன்".
காலம் கடந்த நினைவிலும், கடக்கப்போகும் நிகழ்விலும் ஒரு சேர இந்திரா காந்திசிலை நிறுத்தம் வர, அங்கு அம்மு பேருந்தை விட்டு இறங்கிக் கொள்ள ,
இங்கு அலெக்ஸ் காரினுள் ஏறிக்கொண்டார்.
அலெக்ஸும் மோகனைப்போலவே எனக்கு வாய்த்த சில அரிய நண்பர்களில் ஒருவர். அலெக்ஸின் பண உதவிகள் இல்லாமல் எனது மேற்படிப்பையும்
ஆராய்ச்சிப்படிப்பையும் என்னால் முடித்திருக்க முடியாது. அவற்றை எல்லாம் வட்டியின்றி போன வாரம் தான் திருப்பிக் கொடுத்தேன்.
இந்திராகாந்தி சிலையில் இருந்து எப்படி அவளின் வீட்டிற்கு வரவேண்டும் என அம்மு சொன்னது அப்படியே பசுமையாக மனதில் வர, மோகனுக்கு சரியாக வழி
சொன்னதைக் கேட்ட அலெக்ஸ்
"கார்த்தி,எனக்கு அன்னக்கி சொன்ன மாதிரியே வழிச் சொல்ற, அப்போ உன்னை இந்த தெருவுக்கு கூட்டி வந்த பிறகு இப்போதான் வரேன்"
எல்.ஆர்.ஈசுவரி அம்மனின்மேல் இருக்கும் பக்தியை ஸ்பீக்கரில் பரப்பிக்கொண்டிருந்தார்கள். மரத்தடி அம்மன் இப்பொழுது கோபுரங்களுடன் கூடிய கோவில் அம்மனாக எழுந்தருளியிருக்கிறார். அம்முவின் வீட்டிற்கு சில அடிகள் முன்னர் காரை நிறுத்தி என்ன செய்யலாம் என மோகன் என்னைக் கேட்டார். அவளுடன் பழகிய அத்தனைக் கணங்களும் சுருங்கி அணுவை விட அளவுக்குறைவான ஒரு புள்ளியில் இணைந்தால் எப்படி இருக்குமோ அப்படி என் மனது இருந்தது. அப்பொழுது அவள் அந்த கோவிலில் இருந்து அவளின் வீட்டை நோக்கி நடந்துப் போனாள். கூடவே அவளின் அம்மா, அப்பா, கைத்தாங்கலாய் ஒருவன், ஒருவன் இல்லை, ஒருவர், என் நாட்டு இளவரசிக்கான ராஜகுமாரன்.அவர்கள் அனைவரும் பூவைப்போல அவளைத் தாங்கி அழைத்துச் சென்றுக்கொண்டிருந்தனர். நிறைமாதக் கர்ப்பிணிக் கோலத்தில் பூரிப்பாக இருந்தாள். அவள் என் அம்முவாகத் தெரியவில்லை. என் கடைசித் தம்பி பிறந்த போது என் அம்மா எப்படி இருந்தார்களோ அப்படியே இருந்தாள். உண்மையில் அவளில் என் அம்மாவைப் பார்த்தேன். என் ஆத்திரம், ஆதங்கம், வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம், தோற்கடிக்கப்பட்டோம் என்ற எரிச்சல் எல்லாம் சுவடில்லாமல் மனதில் இருந்து கரைந்தது. அவள் வீட்டை அடைந்து மாடிப்படிகளில் ஏறும் வரை அவளைப் பார்த்தபின் கண்களில் பூத்திருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். நான் சொல்லும் முன்னரே மோகன் காரை பின்பக்கமாக திருப்பலானார்.
என் அனுமதியின்றியே மோகன் இளையராஜாப்பாடல்களைப் ஒலிக்க வைத்தார். முதன் முறையாக தனித்து இருத்தலில் அம்முவின் நினைவுகள் ஆறுதலைக்
கொடுப்பது போல இருந்தது. கம்பன் நகர் இரண்டாவது தெரு அந்த வழிகாட்டும் பலகையைப் பார்த்தேன். இதுவே கடைசி முறையாக இருக்கும் அதைப் பார்ப்பது.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
5:07 AM
27
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: அனுபவம், சிறுகதைகள்