Thursday, January 28, 2010

உபரி ஓட்டங்கள் (Extras 28-January-2010)

வேறு எந்த விசயத்தில் பாகிஸ்தான், இந்தியாவை நம்பி இருக்கின்றதோ இல்லையோ கிரிக்கெட்டில் இந்தியாவை விட்டால் பாகிஸ்தானுக்கு வேறு கதி கிடையாது என்ற ஒரு நிலையை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது பணபலத்தால் உருவாக்கி வைத்துள்ளது(துணைக்கண்டத்தில் கிரிக்கெட்டில் இந்தியா வைத்ததுதான் சட்டம்). இப்படி நிலைமை இருக்க, ஐபிஎல் ஆட்ட அணிகளில் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த வீரர்களுக்கு இடமளிக்களிப்படவில்லை என்ற கூச்சல் பாகிஸ்தானில் மட்டுமல்ல, சுவீடனில் இருக்கும் சக பாகிஸ்தானிய மாணவர்களிடமும் ஆதங்கமாக வெளிப்படுகின்றது. லலித்மோடியை வில்லனாக சித்தரித்து ஃபேஸ்புக் குழுமங்களில் ஒப்பாரிகளும் சாபங்களும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன(மோடி என்றலே மோதிப்பார்தானோ!!). தேசியத்தை கிரிக்கெட்டில்(மட்டும்) தேடுபவர்கள் கூகிளின் உதவியால் அந்த குழுமங்களைத் தேடிக்கண்டுபிடித்து பதில் கொடுக்கலாம்.

கிரிக்கெட்டை வைத்து, தான் சார்ந்து இருக்கும் நாட்டின் மீதானப் பற்றை நிர்ணயிக்க முடியாது என்பதால் பார்த்து படித்து விட்டு சிரித்து விட்டு வந்துவிடுவதுண்டு. கிரிக்கெட்டை உலகமயமாக்க நடத்தப்படும் இந்த வர்த்தகத்தில், வியாபாரிகள் தங்களுக்கு பிரச்சினைகள் தரக்கூடும் என நினைக்கும் காரணிகளை புறந்தள்ளுவது காலம் காலமாகவே நடந்து வருகின்றது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆட்டக்காரர்களுக்கு கிரிக்கெட் ஆடுவதை விட கிடைக்கப்போகும் பணம், புகழ் மற்றும் இன்ன பிற வஸ்துகள் கிடைக்கப் பெறாமல் போய்விட்டனவே என்பது தான் கடுப்பு. ச்சீ இந்தப் பழம் புளிக்கும் எனச் சொல்லிப் போய்விட்டாலும் கூட , நாளையே வாங்க பசங்களா சேர்ந்து விளையாடலாம் எனக் கூப்பிட்டால் மீசையின் மண்ணைத் தட்டிவிட்டு வந்துவிடுவார்கள்(பணம் புகழ் படுத்தும் பாடு ).


அமெரிக்காவைத் திட்டிக்கொண்டே, அமெரிக்காவில் வாழ எத்தனிக்கும் நம்மவர்களைப்போலவே, பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வரவேண்டும் என்ற ஆவல் அதிகமாகவே உண்டு. இந்திய குடிமககளில் யாராவது உத்திரவாதம் கொடுத்தால் அவர்களுக்கு விசா கிடைக்குமாம்.ஜாடை மாடையாக
இதைச் சொல்லும் பாகிஸ்தான் நண்பர்களுக்கு மெல்லியப்புன்னகையை மட்டும் கொடுத்துவிட்டு நகர்ந்து விடுவதுண்டு.(நாம ஏன் நைட் 12 மணிக்கு சுடுகாட்டுக்குபோவானேன்!!). விளையாட்டில் அரசியல் கலக்கக் கூடாது என என்னுடைய புனித பிம்ப மனம் சொன்னாலும், அரசியல், சின்ன சின்ன பிரச்சினைகள் இல்லாமல் விளையாட்டுகள் நடந்தால் அதில் சுவாரசியம் ஒரு மாற்றுக் குறைவாகவே இருக்கும். விசா கொடுத்தாகிவிட்டது, அணியில் சேர்ப்பதும் சேர்க்காமல் இருப்பதும் எங்கள் பொறுப்பல்ல என கை கழுவி, போன ஐபில் எல் தென்னாப்பிரிக்காவில் நடந்த போதிலும் பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி போட்டியில் பங்கேற்க மறுத்தவர்களுக்கு விலாங்கு மீனாய் கிட்டத்தட்ட பாகிஸ்தானை மற்றும் ஒரு தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டது போல ஒரு சூழலையும் உருவாக்கிவிட்ட இந்திய அரசாங்கத்தின் ராஜதந்திரம் இங்கே கவனிக்கத்தக்கது. டன் கணக்கில் சர்க்கரை இருக்கும்பொழுது இலுப்பைப்பூ தேவையில்லை என பாகிஸ்தானிய வீரர்களை ஒதுக்கிய ஐபிஎல் நிர்வாகத்திற்கு ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்ற பழமொழி நினைவில் இருந்தால் சரி.

----


முருகன்,ராமசாமி, மாடசாமி, முனியாண்டி, ஆண்டாள், அம்பிகை, பார்வதி என முப்பத்து முக்கோடி கடவுளர்களின் பெயர்களை வைத்துக் கொள்ள நமக்கு உள்ள உரிமை மறுக்கப்பட்டால் என்னவாகும் என யோசித்து இருக்கீறீர்களா? இந்தியாவில் பெயருக்கு பஞ்சம் வந்துவிடும். ஆசை ஆசையாய் குழந்தைக்கு அல்லா என பெற்றோர் பெயரிட்டதை சுவீடன் நாட்டின் வரி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜீஸஸ் எனப் பெயரிடுவதை ஏற்றுக்கொண்ட வரி நிர்வாகம் இதை ஏற்க மறுத்திருப்பது வியப்பைத் தருகிறது. அல்லா எனப் பெயரிடுவது பொதுநலத்திற்கு எதிரானது என பெயரை சுவீடன் வரி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. முழுச்செய்தியையும் வாசிக்க இங்கே சொடுக்கவும்


---

நாம் சொல்லும் விசயங்களை ஆமோதிக்கும் விதமாக பதில் சொல்ல Nej, Precis எனச் சொற்றொடரை சுவிடீஷ் மக்கள் பிரயோகிக்கின்றனர். Nej(நெய்) என்றால் இல்லை என அர்த்தம். Precis என்பது தெளிவாகச் சொன்னாய் என்பதாக பொருள்படும். உணவு இடைவேளையில் இதைச் சுட்டிக்காட்டி கேட்டபொழுது என்னை ஆமோதிக்கும் விதமாக "Nej Precis" என்றனர். தமிழில் இது போல பேச்சுவழக்கில் பயன்படுத்தும் சொற்றொடர் ஏதேனும் உள்ளதா!!

-----

மற்றும் ஒரு வருடம் வாழ்க்கையில் தொடங்கி உள்ளது, இந்த வருடத்தில் அம்மு உடன் இல்லை என்ற குறையைத் தவிர, ஏனையவ விடயங்கள் சரியாகவே நடந்து வருகின்றன. எனது முதுகலை படிப்பை நிறைவு செய்ய இந்த நான்கு மாதத்தில் ஆராய்ச்சிக் கட்டுரையை(thesis) சமர்ப்பித்தாக வேண்டும். இந்த ஆராய்ச்சிக்கட்டுரையை பன்னாட்டு அளவில் பதிப்புக்கும்படி தரமானதாக தயாரிக்க கடுமையான உழைப்பைக் கொடுத்தாக வேண்டும். நேரமில்லை என்பது அல்ல, நேரத்திட்டமிடல் இல்லை என்பதே என் அனுபவத்தில் உணர்ந்த உண்மை, சராசரிக்கு மேல் பிரகாசிக்க வேண்டும் எனில் திட்டமிடுதலில் மட்டுமல்லாது செய்ற்படுத்தலிலும் வெற்றி பெறவேண்டும். நல்லபல வீணைகள் கிடைத்துள்ளன, சோம்பேறித்தனத்தாலும் மெத்தனப்போக்காலும் அதை புழுதியில் எறிந்துவிடக்கூடாது.


----

படத்தின் தயாரிப்பாளரிடம் மானசீகமாக மன்னிப்பைக் கேட்டுக்கொண்டு ஆயிரத்தில் ஒருவன் பார்த்தாகிவிட்டது. வரலாற்று அம்சங்களை பிரதிபலித்து புனைவை அதில் இணைத்து, சமகால அரசியலையும் வாழைப்பழ ஊசியாய் ஏற்றிய செல்வராகவனைப் பாராட்டியாக வேண்டும்.ஆயிரத்தில் ஒருவனை டாவின் சி கோட் வகைப்படமாக என்னால் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. படத்தில் வரும் தமிழ் வசனக் காட்சிகள் எனக்குப் புரிந்தது. ஷேக்ஸ்பியர் கால அல்லது மேற்தட்டு ஆங்கிலம் பேசும் படங்களை சப்புக்கொட்டி புரிந்து கொண்டதாகக் காட்டிக்கொள்ளும் 'தமிழ்' பேசுபவர்கள் இந்தத் தமிழ் புரியவில்லை எனச் சொன்னால் அது வெட்கப்பட வேண்டிய விசயம்.

---

இந்தியா என்றாலே 'ஹிந்தியா' என வாதிடுபவர்களுக்காக குஜராத் உயர்நீதிமன்றம் ஒரு நினைவூட்டலை வழங்கியுள்ளது. இந்தி இந்தியாவின் தேசியமொழி என எங்கேயும் குறிப்பிடப்படவில்லை, ஏனைய மொழிகளைப் போல அதுவும் ஒரு அலுவல் மொழி என்பதுதான் அந்த நினைவூட்டல். இந்தியாவை ஒருங்கிணைக்க ஒரு மொழி தேவையெனில் அது புவியியல் ரீதியாக இந்தியாவைக் கட்டமைத்த ஆங்கிலேயர்களது ஆங்கிலமாக இருக்கட்டும்.

---

சென்ற உபரி ஓட்டத்திற்கான விடை, அவதார் படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தவர் ஜோ சால்டானா. அவரைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த விக்கித் தளத்தை நீங்கள் வாசிக்கலாம்.
-----

இந்த உபரிஓட்ட பதிவிற்கான கேள்வி, கீழ்காணும் படத்தில் காணப்படும் நபர் யார்?.தனது நாடு பாதுகாப்பான நாடு என நம்பி, தனது பிரதமர் பதவிக்காலத்தில் மனைவியுடன் இரவுக்காட்சி திரைப்படம் பார்த்து விட்டு பாதுகாவலர் துணையின்றி வீடும் திரும்பும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டவர். ராஜிவ் காந்தி இந்தியாவின் பிரதமாராக இருந்த காலத்தில் தனது நாட்டின் பிரதமராக இருந்த இவரை யார் எனக் கண்டுபிடியுங்களேன் பார்க்கலாம்?

5 பின்னூட்டங்கள்/Comments:

said...

விடை சுவீடன் முன்னாள் பிரதமர் சுவென் ஓலோப் பால்மே (Sven Olof Joachim Palme )

said...

துணைக்கண்டத்தில் கிரிக்கெட்டில் இந்தியா வைத்ததுதான் சட்டம்

// அட!, உங்க தன்னடக்கத்துக்கு அளவே இல்ல ....

தேசியத்தை கிரிக்கெட்டில்(மட்டும்)

// 'இணையத்தில் மட்டுமே' னு சொல்லியிருக்கலாம்...

தமிழில் இது போல பேச்சுவழக்கில் பயன்படுத்தும் சொற்றொடர் ஏதேனும் உள்ளதா!!

//ஆமாங்க.. நானா கூட யோசிடிருகேன் ... இங்க இந்தில 'அச்ச 'னு(மீனிங் 'Good') ஒரு சொல் இருக்கு .. அடுக்கு ஈடா எதாச்சும் நம்மட இருக்கா?

...இந்தத் தமிழ் புரியவில்லை எனச் சொன்னால் அது வெட்கப்பட வேண்டிய விசயம்...

// Precis :)

said...

...நேரமில்லை என்பது அல்ல, நேரத்திட்டமிடல் இல்லை என்பதே என் அனுபவத்தில் உணர்ந்த உண்மை...

//Some one told me "there is nothing called as Time Mgmt, and u can not manage ur time... there is only event management, and u hav to manage ur events"

...இந்தியாவை ஒருங்கிணைக்க ஒரு மொழி தேவையெனில் அது புவியியல் ரீதியாக இந்தியாவைக் கட்டமைத்த ஆங்கிலேயர்களது ஆங்கிலமாக இருக்கட்டும்...

//உண்மையே!... இந்திய என்ற ஒரு நாடு கிடையாது.... அது அரசியல் வரைபடத்தில்(Political Map) தான் இருக்கிறது...இந்தியாவை ஒன்றுதிரடியவர்கள் ஆங்கிலேயரே

said...

கிரிக்கற் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அதுக்காக மற்ற விடயங்கள் எல்லாம் தெரியுமன்றல்ல. அவை பற்றித் தெரியாது.அவ்வளவே!

இந்த அல்லா போல் ஜேர்மனியில் ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு சிவா எனப் பெயரிட முற்பட்டபோது; சட்டத்தில் முன் நிறுத்தப்பட்டு; ஜேர்மன் கலாச்சாரத்துடன் ஒட்டாத பெயர்
எனத் தவிர்க்கப்பட்டது. இவர்கள் குறைந்தவர்கள் அல்ல!! வெறி பிடித்தவர்கள்.அதிகம் வெளிக்காட்ட மாட்டார்கள். அவ்வளவே!

பிரஞ்சு மொழியிலும் இப்படி ஒரு வாக்கியம் பேச்சு வழக்கில் உண்டு. ca va pas ,non- ச வ பா - நோ; ca va pas என்றால் "சரியில்லை;தவறு; பொருத்தமில்லை" எனப் பொருள்படும். non - நோ- என்றால் இல்லை. ca va pas இந்த வாக்கியத்தில் பின் non
எனவும் கூறுவார்கள். இது பற்றிக் கேட்டபோது; பொருத்தமில்லைத் தான் அப்படியே என்கிறார்கள்.
உங்களுக்கும் பிரஞ்சு தெரியும் தானே பார்க்கவும்.

மெத்தனப்போக்கால் புழுதியில் எறிய மாட்டீர்கள் என நம்புகிறேன். கிட்டாதாயின் வெட்டன மற!
அது அம்மு வானாலும் அமுதமானாலும்.

ஆயிரத்தில் ஒருவன் பார்க்கவில்லை. அவதார் பார்த்தேன் பிடித்தது. பிரமிக்க வைத்தது.

இந்தியாவுக்கென்ன ? இலங்கைக்கும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கட்டும். அதே வேளை
விரும்பி ஏனைய மொழியையும் கற்பவற்களை ஊக்கி; உதவி செய்வது நன்று. மந்திரிமார் பிள்ளைகள்
படித்து முன்னுக்குவர மற்றவர் வாய் பிளக்க வைப்பது அநியாயம்.

said...

Sateesh eluthinaar:

//நேரமில்லை என்பது அல்ல,//

Yes, the issue is not "no time" but time management. Which leads us to prioritisation. Which in turn requires us to device our own prioritisation criteria.