Saturday, May 31, 2008

மனோஜ் பிரபாகர்ஐபிஎல் ஆட்டங்களில் இராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் ஸ்வப்னில் அஸ்னோத்கரின் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது 1996ல் உலகக்கோப்பையை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்று இருந்த கலுவித்தரனாவும் , இன்று வரை அதிரடியில் கலக்கும் ஜெயசூர்யாவும் அதன் நீட்சியாக ,அவர்கள் முடித்து வைத்த மனோஜ்பிரபாகரின் கிரிக்கெட் வாழ்வும் நினைவுக்கு வந்தது.கதாநாயகனைப்போலத் தோற்றத்துடன், கைகளில் வெள்ளைப்பட்டை அணிந்து இவர் பந்து வீசும் விதம் கடை 80களிலும் ஆரம்ப 90களிலும் பிரசித்தம். மைய 90களில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரர்,துவக்கப் பந்துவீச்சாளர் என இரு முக்கிய பணிகளையும் செவ்வனே செய்து கொண்டிருந்த காலத்தில்தான் இவரின் பந்துவீச்சை தில்லியில் நடந்த உலகக்கோப்பை ஆட்டம் ஒன்றில் கலுவித்தரனா,ஜெயசூர்யா துவம்சம் செய்து இவரின் கிரிக்கெட் வாழ்வை அஸ்தமிக்கச் செய்தனர்.


முதல் இரண்டு ஓவர்களில் 33 ரன்களைக் கொடுத்த பின்னர் அடுத்த இரண்டு ஓவர்களை சுழற்பந்து வீச்சு முறையில் வீசினார். ஒரு காலத்தில் இன்சுவிங்கர் யார்க்கர்களால் பேட்ஸ்மேன்களை நிலை குலைய வைத்த மனோஜ்பிரபாகருக்கு இப்படி நேர்ந்தமை கிரிக்கெட் விநோதங்களில் ஒன்று.

இப்பொழுதெல்லாம் ஒரு ஓவருக்கு 15 ரன்கள் என்ற வீதத்தில் கொடுத்தால் கூட மன்னிக்கப்பட்டுவிடும் சூழல் அப்பொழுதெல்லாம் இல்லாமையால் அடுத்த ஆட்டத்தில் ஆடும் அணியில் இருந்தும், உலகக்கோப்பை முடிந்ததும் மொத்தமாகவும் நீக்கப்பட்டார். இங்கிலாந்து க்கு எதிரான தொடரில் நீக்கப்பட்டதும், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு,அரசியலில் குதித்த மனோஜ்பிரபாகர், காங்கிரஸ்[திவாரி] கட்சி சார்பாக தெற்கு தில்லியில் அதே வருடம் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் நின்று தோற்றுப்போனார்.

சுமாரான பேட்ஸ்மேனான இவர் ஒருநாள் போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்து உள்ளார். இவர் அடித்த இரண்டாவது சதத்திற்குப் பிரச்சினைக்குரியாதாக அமைந்தது. அந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் வெற்றிக்காக ஆடாமல், தன் சதத்திற்காக ஆடியமைக்காக இவர் அதற்கடுத்த போட்டியில் நீக்கப்பட்டார்.

இவர் டெண்டுல்கருடன் இணைந்து களம் இறங்கும்பொழுது ஒரு முனையில் டெண்டுல்கர் அடித்தாட, பிரபாகர் மறுமுனையில் நிதானமாக ஆடி நல்ல துவக்கத்தை தருவார். 130 ஒரு நாள் ஆட்டங்களில் ஆடி ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் இருந்திருப்பது இவரின் நிதானமான ஆட்டத்திற்கு ஒரு சான்று. 46 ஒரு நாள் ஆட்டங்களில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரபாகரின் சராசரி கிட்டத்தட்ட 35. வீழ்த்திய விக்கெட்டுகள்

ஆடிய 39 டெஸ்ட் ஆட்டங்களில் 23 ஆட்டங்களில் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கி இருக்கும் மனோஜ்பிரபாகர் ஒரு சதத்துடன் சராசரி 35 வைத்திருப்பது பாராட்டுதலுக்குரிய விசயம் என்றாலும் இவர் இன்று இவரது சாதனைகளுக்காக நினைவு கூறப்படுவதில்லை.மேட்ச்பிக்ஸிங் விவகாரம் விசுவரூபம் எடுத்த பொழுது, பழைய வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ளும் விதமாக கபில்தேவை இவர் கைக்காட்டியது இவருக்கே கடைசியில் ஆப்பாக வந்து அமைந்தது. விசாரணைக்குழுவின் பார்வை இவர்மேல் திரும்பி, அசாருதீன் , அஜய்சர்மா வுடன் இவரும் தடைசெய்யப்பட்டார். அதன் பின்னர் மனைவியுடன் தகராறு, வரதட்சனை புகார், அடுத்த வீட்டுக்காரரை அடித்தது என எதிர்மறையான விசயங்களுக்காகவே கடைசி சில வருடங்களில் செய்திகளில் அடிபடுகிறார்.

1992 உலகக்கோப்பை போட்டியில் டீன் ஜோன்ஸ் அடித்த சிகஸருக்குப்பின் அவரை அடுத்த பந்திலேயே தானே கேட்ச்பிடித்து அவுட் ஆக்கி பந்தை தரையில் ஓங்கி அடிப்பார். இது ஆடுகளத்தில் விக்கெட் வீழ்த்தியவுடன் இவர் காட்டும் கடுமையான ஆக்ரோஷத்திற்கு உதாரணம், அணியில் உடன் இருப்பவர்களுடன் எப்பொழுதும் கடுமையாக இருக்கும் மனோஜ்பிரபாகரை அவருடன் விளையாடியவர்களுள் பெரும்பாலனவர்களுக்கு அவர்மேல் மிகப்பெரும் அபிப்ராயம் ஏதும் இருந்ததில்லை என இந்தியா டுடே கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது.

ஒரு கட்டத்தில் கபில்தேவை விட நன்றாகப் பந்துவீசினாலும்,பேட்டிங் செய்தாலும் கபில்தேவ் அளவுக்கு தான் புகழப்படுவதில்லை என்ற் ஆதங்கம் அவருக்கு எப்பொழுதும் உண்டு என்றும் சொல்வர்.

கொஞ்சம் பொறுமை காத்திருந்து மீண்டும் அணியில் இடம்பிடித்து, நல்ல ஆல்ரவுண்டர் என்ற அடைமொழியுடன் ஓய்வுபெறுவதை விடுத்து, 96 உலகக்கோப்பைக்குப்பின்னர் அவசரக்குடுக்கையாக 32 வயதில் ஓய்வுபெற்று மேட்ச்பிக்ஸிங் விவகாரத்தில் புலிவாலைப்பிடித்தக் கதையாக மாட்டிக்கொண்டு தனது கிரிக்கெட் புகழுக்கு தானே முடிவுரை எழுதிக்கொண்ட மனோஜ்பிரபாகர் தற்பொழுது ஐந்து வருட தடைக்குப்பின்னர் தில்லி அணிக்காக பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வருகிறார். இனிவரும் காலம் அவருக்கு வளமாக இருக்கட்டும்.

மனோஜ்பிராபகர் பற்றிய கிரிகின்போ பக்கம் இங்கே

Saturday, May 17, 2008

தையல் மெஷினும் ஆர்கெஸ்ட்ராவும் - சிறுகதை

காஞ்சிபுரத்தில் ரம்யாவின் அம்மா வைத்திருந்த அரதப்பழசான , உபயோகமில்லாத தையல் எந்திரத்தை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வரக்கூடாது என நான் சொன்னதால் கோபித்துக்கொண்ட என் மனைவி ரம்யா , மாலை என் அலுவலக நண்பர் சுந்தரலிங்கத்தின் திருமணவரவேற்புக்கு வரமுடியாது என சொல்லிவிட்டதால் எனது மேலாளர் மோகனுடன் செல்ல வேண்டியதாயிற்று.

“அந்த தையல் மெஷின் இல்லேன்னா, இந்த ரம்யா கிடையாது.. என் எஞ்சினியரிங் டிகிரி கிடையாது... நான் உனக்கு கிடைச்சிருக்கவே மாட்டேன்” என்ற அவளின் அழுகை விசும்பலுடன் சொன்னது காதில் ஒலித்துக் கொண்டிருக்க

நான், மோகனுடன் சுந்தரலிங்கத்தின் திருமண வரவேற்பு நடக்கும் மண்டபத்தினுள் நுழையும்பொழுதே மோகனின் கால்கள் தாளம் போட ஆரம்பித்துவிட்டன. மணமக்கள் அமரும் இடத்திற்கு வலப்பக்கமாக இசைக்குழுவினர் சில மெட்டுக்களை அடித்து
தயாராகிக் கொண்டிருந்தனர். சுந்தரலிங்கத்தின் உறவினர்கள் சிலர் ஆங்கங்கே அமர்ந்திருந்தனர். எங்கள் அலுவலகத்தில் இருந்து என்னையும் மோகனையும் தவிர வேறு யாரும் வந்து சேர்ந்திருக்கவில்லை. மோகன் இசைக்குழுவினர் இருக்கும் இடத்திற்கு நேர் எதிராக முதல் வரிசையில் ஒரு இருக்கையைப் பிடித்து அமர்ந்து கொண்டார். வேறு வழியில்லாமல் நானும் அவரின் அருகில் அமர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று.

சுந்தரலிங்கத்தின் திருமணம் நேற்று விருதுநகரில் சுயமரியாதை முறைப்படி நடந்து விட்டது. என் கல்யாணம் கூட அப்படி நடக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ரம்யாவின் அம்மா சம்பிரதாயப்படி தான் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்ததால் காதல் கொள்கையை வென்றது. எதிர்காலத்தில் என் பிள்ளைகளுக்காவது ,மந்திரங்கள் தவிர்த்த திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்ற எனது முக்கால எண்ண ஓட்டம்

“கார்த்தி, இந்த ஆர்கெஸ்ட்ரா ட்ரூப் நல்லா வாசிப்பாங்க, தொடர்ந்து இரண்டு நாள் எல்லாம் கச்சேரி பண்ணி இருக்காங்க!!” என்ற மோகனின் பேச்சால் கலைந்தது.

மோகனுக்கு திரைப்படப் பாடல்கள் மேல் அப்படி ஒரு மோகம். சுமாரான பாடல்களைக்கூட ரசித்து கேட்பார். அலுவலகத்தில் ஆறு மணிக்கு மேல் இருந்து வேலை செய்தால் அவரின் மடிக்கணினியில் 80களில் வெளிவந்த பாடல்களை சத்தம் அதிகமாக வைத்துக் கேட்பார். யாரேனும் கல்யாணப்பத்திரிக்கை அளித்தால், முதலில் அதில் இசைக்கச்சேரி இருக்கா, யார் இசைக்குழு என பார்த்துவிட்டுத்தான் எந்த கல்யாண மண்டபம், தேதி எல்லாம் பார்ப்பார். மோகன் நல்ல பாடகரும் கூட. எஸ்பிபி குரலின் சாயலில் அவர் பாடிய பாடல்களை சில சமயம் அலுவலகத்தில் நல்ல மனநிலையில் இருக்கும்பொழுது பாடிக்கொண்டிருப்பார்.

சரியாக ஏழரை மணிக்கு மேடைக்கு மணமக்கள் வந்து சேர, இசைக்கச்சேரி ஆரம்பித்தது. ”பாடவா உன் பாடலை “ பாட்டை ஆண் ஒருவர் அச்சு அசலாக ஜானகியின் குரலில் பாடிக்கொண்டிருந்தார். மோகன் எழுந்து சென்று மேடையில் பாடலைப் பாடியவருக்கு அன்பளிப்புக் கொடுத்துவிட்டு வந்தார்.

“என்ன மோகன் சார் வேலையை ஆரம்பிச்சிட்டாரா?” என்றக்குரலைப் பார்த்து நான் திரும்பிப் பார்க்க எங்கள் அலுவலக கிண்டல் கிருஷ்ணமூர்த்தி நின்று கொண்டிருந்தான்.

“கார்த்தி பார்த்துக்கிட்டே இரேன், அப்படி இப்படி சீன் கிரியேட் பண்ணி இவரு பாட்டுப் பாடிடுவாரு!!! ”

அன்பளிப்பு கொடுத்துவிட்டு வந்த மோகனிடம் ”எவ்வளோ சார் கொடுத்தீங்க”

“லேடிஸ் வாய்ஸ்ல பாடுறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா!! எத்தனைக் கொடுத்தாலும் தகும்,.. ஆனால் நான் நூறு ருபாதான் கொடுத்தேன்!!”

அலுவலகத்தை விட்டுக்கிளம்பும்போது இரண்டு ஐநூறு ருபாய்களை நூறு ரூபாய்களாக மோகன் மாற்றி வைத்துக் கொண்டதன் காரணம் புரிந்தது. வெளியே மேகங்கள் கோடை மழைக்கு தயாராகிக்கொண்டிருந்தன. மோகன் தொடர்ந்து பாடுபவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். வந்திருந்த சில கல்லூரி இளைஞர்கள் சிலரும் மோகனுடன் இணைந்து கொள்ள கச்சேரி களை கட்டியது. ”சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்” பாடல் பாடப்படும்பொழுது, நானும் பாடலுடன் சேர்ந்து பாடலை சன்னமான குரலில் பாடிக்கொண்டிருந்தேன். இது போன்ற கச்சேரிகளில் நம் குரல் எவ்வளவு கர்ண கொடூரமா இருந்தாலும் , நாமும் இணைந்து பாடும்பொழுது ஒரு வித மகிழ்ச்சியான உற்சாகம் நல்லா இருக்கும். இந்த மாதிரி சூழலில் ரம்யா இல்லாமல் இருப்பது வருத்தமாக இருந்தது.

கிருஷ்ணமூர்த்தி சொன்ன மாதிரியே மோகன் இசைக்குழு நிர்வாகியுடன் பேசிவிட்டு ”மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு” பாட்டைக் கலக்கலாக பாடி அசத்தினார். அந்தப் பாட்டுக்கு ஏற்றவாறு வெளியே மழை கொட்ட ஆரம்பித்தது.

“நல்லாதான்யா பாடுறாரு!!” கிருஷ்ணமூர்த்தியே பாராட்டினான்.

மோகன் பாடி முடித்தவுடன் , மோகனுடன் மணமக்களிடம் கையோடு கொண்டு வந்திருந்த பாரதிதாசன் நூல் தொகுப்புகளை அன்பளிப்பாக அளித்துவிட்டு , வெளியே வந்தபோது ”நல்லா பாடினீங்க சார்” சிலர் பாராட்ட மோகன் என்னைப் பெருமிதமாகப் பார்த்தார்.

வீடு திரும்பும்போது மோகன் என்னிடம் “இன்னும் நாலு நூறு நோட்டு பாக்கி இருக்கு, ”

“கேட்கறேன்ன்னு தப்பா நினைச்சுக்காதிங்க சார், 600 ரூபா செலவு பண்ணி அப்படி நீங்க மேடையில ஏறிப் பாடனுமா!!” இப்படிக் கேட்டப்பிறகுதான் எனக்கு உரைத்தது. இந்தக் கேள்வியைத் தவிர்த்து இருக்கலாமே என்று.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த மோகன் “எல்லோருக்கும் தன்னோட அப்பா அம்மா வேலைப்பார்த்த புரபஷன்ஸ் மேல ஒரு அபிமானம் மரியாதை இருக்கும்..நீங்க நம்ம ஆபிஸுக்கு வர போஸ்ட்மேன் கிட்ட எங்க மற்ற எல்லோரையும் விட பிரியமா பேசுவிங்கல்ல,அதுக்கு காரணம் உங்க அப்பாவும் போஸ்ட்மேனா இருந்தவர்... என் அப்பாவும் அம்மாவும் இது மாதிரி ஆர்கெஸ்ட்ரா நடத்திதான் என்னையும் என் தம்பியையும் படிக்க வச்சாங்க, ”

“-------”


”அசலை விட , அசலைப்போலவே நகல் உருவாக்கல் தான் கஷ்டம், ஒவ்வொரு முறையும் ஒரிஜினல் பாட்டு மாதிரியே பாடனும்னு பாடுறவங்க எடுக்கிற முயற்சியோட வலி நாம கொடுக்கிற கைத்தட்டலில்தான் அவங்களுக்கு மறக்கும்..”

“--------”

சில வினாடிகளுக்குப்பின்னர்,

”எங்க அப்பா இது மாதிரி மேடைல பாடிட்டு இருக்கிறப்பதான் உயிரைவிட்டார்..... நான் இப்படி ஒவ்வொரு தடவையும் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறப்ப எல்லாம் பாடுறது அவருக்கு செலுத்துற மரியாதையா நினைக்கிறேன்”

நாளை ரம்யாவுடன் காஞ்சிபுரம் போய் அந்த தையல் எந்திரத்தை எடுத்துவரவேண்டும் என முடிவு செய்து கொண்டேன்.

Monday, May 12, 2008

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கம் - பார்வைஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சென்ற ஆண்டு சொல்லிக்கொடுத்ததையே திரும்ப திரும்ப சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு அந்த பணி எப்படி உவகையாக இருக்கிறது என்ற ஐயத்திற்கு விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் விடைகிடைத்தது. ஒவ்வொரு முறையும் புதிய புதிய மனிதர்களுக்கும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வலர்களுக்கும் சொல்லித்தரும்பொழுது சொல்லித்தரும் விடயம் பழகின ஒன்றாக இருந்தாலும் அது சுவாரசியமாகவே இருக்கும் என்பது மீண்டும் ஒரு முறை வலைப்பதிவு, தமிழ்தட்டச்சு நுட்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட போது உணர முடிந்தது.அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பயிலரங்கம் நடக்கும் கணிப்பொறி மையத்தில் மா.சிவக்குமார் மற்றும் பாலபாரதியுடன் உள்நுழைந்த போது முனைவர்.மு.இளங்கோவன் வலைப்பதிவு பயிலரங்கம் பற்றியும் தமிழ் தட்டச்சு முறைகள் பற்றியும் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து மா.சிவக்குமாரும் பாலபாரதியும் களத்தில் இறங்கினர், முதலில் மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களுக்கு ஜிமெயிலில் கணக்கு துவங்கவும் அதைக்கொண்டு பிலாக்கரில் தங்களுக்கான பக்கத்தை உருவாக்கிக் கொள்ளவும் பயிற்சி அளித்தனர்.மா.சிவக்குமார், பயிற்சி பெற வந்திருந்தவர்களில் சிலர் உருவாக்கிய வலைப்பதிவுகளை உரக்கச்சொல்லி பக்கம் ஆரம்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தவர்களை உற்சாகமளித்துக் கொண்டிருந்தார். இடையே சென்னைப்பதிவர் விக்கி அலுவல்களுக்கு இடையிலும் 12 மணியளவில் வந்து எங்களை இன்ப அதிர்ச்சி அடைய வைத்தார்.
பயிலரங்கம் நடந்து கொண்டிருந்த போது வாழ்த்துரை வழங்க வந்த மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு க.பொன்முடிக்கும் வலைப்பதிவு ஆரம்பித்துக் கொடுக்கும் யோசனையை மா.சிவக்குமார் சொல்ல, கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் புதிய வலைப்பதிவு அமைச்சர் உருவாக்கும் முறைகளை ஆர்வத்துடன் குறித்துக்கொண்டார். மா.சிவக்குமார் வழிமுறைகளை விளக்க, அருணபாரதி ஒளிப்படமாக திரையில் கொண்டு வர கலைஞர் என்ற புதிய வலைப்பூ அமைச்சருக்காக உருவாக்கப்பட்டது.மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர், வலைப்பதிவுகளில் ஒலி,ஒளி,படங்கள் ஆகியன இணைப்பதைப்பற்றிய நான் எடுத்த வகுப்பைத் தொடர்ந்து, ரா.சுகுமாரன் குறிச்சொல் இடுவது, அதன் பயன்பாடுகள் பற்றியும் விளக்கினார். தாமதமாக வந்தாலும் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்ட விக்கி திரட்டிகளில் வலைப்பதிவுகளைப்பற்றி தன்னுடைய பாணியில் விரிவாகவே விளக்கிக் கொண்டிருக்கதேநீருக்காக வெளியே வந்தபோது விழுப்புரம் பதிவர் பயிலரங்க முதுகெலும்புகளான தமிழ்நம்பி , ரவி.கார்த்தி மற்றும் எழில்.இளங்கோ ஆகியாருடன் தனியாக அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் அவர்களைப் பற்றியும் அவர்களின் தமிழார்வத்தைப் பற்றியும் கேள்விக்கேட்க கிடைத்த பதில்கள் சுவாரசியமாகவும் பிரமிப்பாகவும் இருந்தது.துறை சார்ந்த தமிழ்வளர்ச்சிகளில் ஆர்வம் கொண்ட தமிழ்நம்பி தஞ்சைப் பல்கலைகழகம் தொகுத்த அருங்கலைச் சொற் அகரமுதலி உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிருக்கும் இவர் தொலைத்தொடர்பு துறையில் பொறியாளராக இருந்து பணி நிறைவு செய்தவர்.ரவி.கார்த்தி போக்குவரத்து கழகத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருபவர். எழில்.இளங்கோ விழுப்புரத்தில் கணிப்பொறி மையம் நடத்தி வருபவர்.
மூவரும் வெவ்வேறு தளங்களில் இருந்து வந்திருந்தாலும் அவர்களை இணைத்தது தமிழ் என்றால் மிகையாகாது. கடந்த பொங்கல் திருநாளில் மருதம் என்ற பொங்கல் விழாவை விழுப்புரத்தில் சிறப்பாக நடத்திக்காட்டிய இந்த குழு, தங்களது சொந்தப் பணத்தை செலவு செய்து இந்த பயிலரங்கத்தை ஏற்பாடு செய்து இருக்கின்றனர். என்பதைக் கேட்ட போது அடைந்த மகிழ்ச்சி அளவில முடியாதது.

தனித்தமிழ் ஆரவலர்களான இவர்களின் முயற்சியில் தாய் தமிழ் தொடக்கப்பள்ளி ஒன்று விழுப்புரத்தில் செயற்பட்டு வருகிறது என்ற செய்தியையும் பகிர்ந்து கொண்டனர். ரவி.கார்த்தி பொறியாளராக இருந்தாலும் தமிழ்ச்சமூகம், தெய்வங்களும் என்ற சமூக விஞ்ஞான ஆய்வு புத்தகத்தை பத்தாண்டுகளுக்கு முன்பாக எழுதி வெளியிட்டு இருக்கிறார்.

எத்தனை சிறப்பாக திட்டமிட்டாலும் களப்பணியாளர்கள் இல்லாவிடின் எந்த திட்டமும் சிறப்பான வெற்றியை அடையாது. தமிழ் சம்பந்தபட்ட எந்த ஒரு விசயமானாலும் கட்சி , கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு முன்னுக்கு நிற்பவர் எழில்.இளங்கோ, இவரின் முயற்சியால் இணைய இணைப்பு மற்றும் வேறு சில ஆரம்பகட்ட வேலைகள் துரிதமாக நடந்தது என தமிழ் நம்பி மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். தமிழுணர்வும் அதை தொழில்நுட்பத்துடன் மற்றவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஆர்வமும் கடினமான அலுவல்களுக்கிடையிலும் நேரத்தை தமிழுக்காக கொடுத்தால் சிறுநகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறப் பகுதிகளில் கூட இத்தகைய பயிலரங்கத்தை நடத்த முடியும் என்பது அவர்களுடன் நடத்திய சிறு உரையாடலில் புரிந்து கொள்ள முடிந்தது.


உரையாடலுக்குப்பின்னர் பயிலரங்க அறைக்கு வந்த பொழுது கடலூர் சீனிவாசன் கூகுள் ரீடர் பற்றி சொல்லித்தந்ததைத் தொடர்ந்து பயர்பாக்ஸ் பற்றி பாலபாரதி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.5.30 மணியளவில் விழுப்புரம் வலைப்பதிவர் மன்றம் சார்பாக சென்னைப்பதிவர்களுக்கு அளிக்கப்பட்ட நினைவுபரிசைப் பெற்றுக்கொண்டு மற்றும் ஒரு நிறைவான பயிலரங்கத்தில் பங்கேற்க வாய்ப்பளித்த தமிழுக்கும் பயிலரங்கம் நடத்திய நிர்வாக குழுவினருக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றோம். <படங்களுக்கு இங்கே சொடுக்கவும்>

துணுக்குகள்

* இரண்டரை ஆண்டுகளாக மா.சிவக்குமாரிடம் “சுசே லினக்ஸ்” இன்ஸாடால் செய்து தர வைத்திருந்த கோரிக்கையை பாலபாரதி விழுப்புரம் பயணத்தில் நிறைவேற்றிக்கொண்டார்.

* பழனியில் பயிலரங்கத்துக்கு வந்திருந்த மாரி, பழனியிலும் இது போன்ற பயிலரங்கத்தை நடத்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் பயிற்சி அளிக்க வரவேண்டும் என்ற வேண்டுகோளை மா.சிவக்குமாரிடம் வைத்தார்.

* புதுவை வலைப்பதிவர்கள் சார்பாக பயிற்சி பெற வந்தவர்களுக்கு குறுந்தகடு ஒன்று அளிக்கப்பட்டது.

* கோ.சுகுமாரன் அவர்கள் சுடச்சுட பயிலரங்க நிகழ்வுகளை வலையில் ஏற்றிக்கொண்டிருந்தார்.

* சென்னைப்பட்டறையில் மட்டுறுத்தல் பற்றிய ஒரு விசயத்தை ரா.சுகுமாரனிடம் கற்றுகொண்டேன். விழுப்புரத்தில் 98 விண்டோஸ் இயங்கியில் எப்படி எழுத்துருக்களை நிறுவுதல் என்ற விசயத்தைக் கற்றுக்கொண்டேன்.


* மைலம் சந்தை ரோட்டில் சாப்பிட வண்டியை நிறுத்திய பொழுது, கால்சட்டைப் பையில் கைத்தொலைபேசியை வைத்துக்கொண்டே , கைத்தொலைபேசியை காணவில்லை என மா.சி தேட ஆரம்பிக்க, பாலபாரதி கடையில் கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவரின் காதருகே போய் அது மா.சி உடையதா என பார்த்துவிட்டு வந்தார்.

* நாங்கள் சென்றிருந்த வாகனத்தின் ஓட்டுநர் , சென்னையை நெருங்குகையில் , இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு தன் பிள்ளைகளுக்கும் கணினிப் பயிற்சி தரவேண்டும், தனது பிள்ளைகள் தமிழ்வழிக்கல்வியில் படிப்பதாகவும் தமிழில் படித்தால் கணினி கற்றுக் கொள்வது கடினமா எனக்கேட்க, மா.சிவக்குமார் தனக்கே உரித்தான பாணியில் அவருக்குத் தேவையான ஆலோசனைகளை அளித்தார்.

Saturday, May 10, 2008

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கம் , புகைப்படங்கள்

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் , விழுப்புரம் மாவட்டம் வலைப்பதிவர் மன்றம் நடத்தும் வலைப்பதிவர் பயிலரங்கம், இன்று [மே,11 ஞாயிறு] இனிதே தொடங்கியது. சென்னையிலிருந்து மா.சிவக்குமார், பாலபாரதி, 'வினையூக்கி' செல்வா ஆகியோரும் பயிற்சி வகுப்பு எடுக்க அழைக்கப்பட்டுள்ளனர்

--------------------
மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பொன்முடி துவக்கவிழாவில்முனைவர் மு.இளங்கோவன் அறிமுக உரையில்

பதிவர் வினையூக்கி வலைப்பதிவர் பயிலரங்க ஆயத்த கட்ட வேலைகளில்
மா.சிவக்குமார் தமிழில் வலைப்பதிய வந்திருக்கும் ஆர்வலர்களுக்கு வலைப்பதிவு ஆரம்பிப்பதைப் பற்றி வகுப்பு எடுக்கிறார்.