Wednesday, October 24, 2007

கார்த்தி, ஜெனி மற்றும் மோகன் - சிறுகதை

வழக்கமான ஞாயிற்றுக்கிழமை காலை போல் தூங்கி வடியாமல், பெண்கள் விடுதி பரபரப்பாய் இருந்தது. ஜெனி தடதடவென இரண்டாவது மாடியில் இருந்து படிகளில் இறங்கி ரம்யாவின் அறைக்கு ஓடினாள். அசந்து தூங்கி கொண்டிருந்த ரம்யாவை வேகமாக உலுக்கி எழுப்பினாள்.

"ரம்யா, கார்த்தி, சூசைட் பண்ணிக்கிட்டானாம்"

"வாட்... "

தூக்கத்தில் பாதியில் எழுப்பப்பட்ட அதிர்ச்சியுடன், இந்த செய்தி மேலும் ரம்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"எப்படிடி ஆச்சு, ஃபிரைடே ஈவ்னிங் கூட அவன்கிட்ட பேசினேனே...பட் அன்னைக்கு கூட அவன் டல்லாதான் இருந்தான், இன்னும் கொஞ்சநேரம் இருந்து பேசிட்டு போக சொன்னான், நான் தான் கிளம்பி வந்துட்டேன் "

ரம்யாவின் படபடப்பு அதிகமானது

"ஆமா, ரம்யா, நேத்து காலைல எனக்கு போன் பண்ணான், ஒரு முக்கியமான விசயம் பேசனும், லைப்ரரி வர்றமுடியுமான்னு கேட்டான், அவன் ஏற்கனவே எனக்கு புரோபஸ் பண்ணி இருக்குறதுனாலா, திரும்ப ஏதாவது சொல்லிடுவானோன்னு நான் தான் போகல"

"ஒரு வேளை, அவன் சொல்ல வந்ததைக் கேட்டிருந்தா அவனைக் காப்பாத்தி இருக்கலாமோ?"

தற்கொலை செய்து கொண்ட கார்த்தி, ரம்யா ஜெனியுடன் ஒரே வகுப்பில் கல்லூரி இறுதி ஆண்டு படிப்பவன். ஜெனி, கார்த்தி பெயர்கள் வரிசைப்படி அடுத்தடுத்து வருவதால் ஆய்வக வகுப்புகளில் ஒரே அணியில் இருப்பார்கள், இரண்டாமாண்டில் ஏற்பட்ட அறிமுகம், கார்த்தி ஜெனியை காதலிப்பதாக சொல்லும் வரை நன்றாகவே போனது. போன அரையாண்டில் அவன் தனது விருப்பத்தைச் சொல்லப்போக , முகம் திருப்பிப் போன ஜெனி, விடுமுறை முடிந்து கல்லூரி மீண்டும் ஆரம்பித்து . இந்த ஒரு வாரத்தில் கார்த்தி எவ்வளவோ முயன்றும், அவனிடம் பேசவில்லை.

கார்த்தியின் இந்த ஒரு தலைக் காதலுக்கு "வில்லன்" மோகன், மோகனும் கார்த்தி ஜெனியுடன் தான் ஆய்வக சோதனைகளைச் செய்தாக வேண்டும். ஜெனிக்கு ஆரம்பத்தில் மோகனின் "கலாட்டா செய்யும் போக்கு" பிடிக்கவில்லை என்றாலும், போக போக உள்ளூர அவனை நேசிக்க/ரசிக்க ஆரம்பித்தாள். நிறைய இடங்களில் வெளிப்படையாகவே கார்த்தி எதிரிலேயே மோகனிடம் நெருக்கமாக இருப்பதைக் காட்டிக் கொள்வாள். எரிச்சல் கோபம் இயலாமை எல்லாம் சேர்ந்து கார்த்தியை கடந்த இரண்டு மாதங்களாக பித்துப்பிடித்தவன் போல் அலைய வைத்தது. தேர்வில் மிகவும் மட்டமான மதிப்பெண்களையேப் பெற்றிருந்தான்.

"ரம்யா, கார்த்தி எதாவது லெட்டர் எழுதி வச்சிட்டு செத்துப் போய் இருப்பானா, நான் தான் காரணம்னு எழுதி இருப்பானா?" என்று பயத்துடன் அழ ஆரம்பித்தாள்.

"அப்படி எல்லாம் எதுவும் இருக்காதுடி, சரி, வா பாய்ஸ் ஹாஸ்டல் போய்ட்டு வரலாம், மோகன் வந்துட்டானா? "

"இன்னும் வரல.. அவன் கூட சாட் பண்ணி 15 நாள் ஆகுது, அவங்க அப்பாகூட மொரிஷியஸ் ல இருக்கான்"

ரம்யா, ஜெனி இருவரும் உடை மாற்றிக்கொண்டு கல்லூரிக்கு அடுத்த முனையில் அமைந்திருந்த ஆடவர் விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

கல்லூரி பிள்ளையார் கோவிலின் வாசலில் நின்று கொண்டிருந்த மோகனைப் பார்த்த ரம்யாவும் ஜெனியும்,

"மோகன் எப்போ வந்தே!! விசயம் கேள்விப்பட்டியா? கார்த்தி சூசைட் பண்ணிக்கிட்டான்"

"நான் வந்து ரெண்டு நாளாச்சு, ம்ம் தெரியும்.. அவன் ஒரு கவர்ட், பயந்தாங்கொள்ளி, ஐ ஹேட் ஹிம்"

"மோகன் , நீ எங்க கூட வாடா, பாய்ஸ் ஹாஸ்டல் வர்றைக்கும் போய்ட்டு வந்துடலாம்" ஜெனிக்கு இன்னும் நடுக்கம் விடவில்லை.

"நீங்க போயிட்டு வாங்க, நான் இங்க வெயிட் பண்றேன்".

---

"முடிந்தது என்று நினைத்த விசயம், மீண்டும் வந்ததனால் நான் போகின்றேன்" இதுதான் கார்த்தி விட்டுச்சென்ற குறிப்பு. கல்லூரியின் தாளாளர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, மாணவ, மாணவிகள் யாரையும் விசாரணை என்ற பெயரில் அதிக தொந்தரவுக் கொடுக்காமல் பார்த்துக் கொண்டார்.

ஜெனிக்கு தான் தான் காரணமோ என்ற குற்ற உணர்ச்சியில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்தாள். அடுத்த இரண்டு நாட்கள் ரம்யாவும் ஜெனியும் கல்லூரிக்குப் போகவில்லை. ஜெனியைத் தேற்றுவதிலேயே ரம்யா நேரத்தைச் செலவிட வேண்டியதாக இருந்தது.
புதனன்று காலையில் ஜெனி எழுந்தவுடன் ரம்யாவிடம்,

"நேத்து நைட், கார்த்திக்கிட்டே இருந்து கால் வந்தது, அவன் தான் பேசினான் ஸ்யூர்"

"உளறாதே!!ஜெனி அவனோட செல்போன் தான் போலிஸ் கிட்ட இருக்கு, சான்ஸே இல்லை.. உன்னோட பிரமை...சரி வா இன்னக்கி நாம கிளாஸ் அட்டெண்ட் பண்ணலாம் சீக்கிரம் கிளம்பு"

"இல்லை ரம்யா, நான் சத்தியமா சொல்றேன்,கார்த்தி தான் பேசினான். அவனோட வாய்ஸ்தான்..மோகன் பத்தி ஒன்னு சொல்றேன்னு ஸ்டார்ட் பண்ணான், நான் பட்டுன்னு போனை வச்சுட்டேன்"

ரம்யாவுக்கு ஜெனியைப் பார்க்கையில் பாவமாக இருந்தது.

"சரி காலேஜுக்கு கிளம்பு"

"இல்லை ரம்யா, நான் வரல.. நான் இங்கேயே இருக்கேன்"

தனது அறையிலேயே ஜெனியை விட்டு விட்டு, ரம்யா தனது துறை அலுவலகத்திற்கு வந்தாள். அங்கு மோகனின் அம்மா, அப்பா இருவரும் நின்று கொண்டிருந்தனர். முகத்தில் ஏதோ சோகம் இருந்தது.

"ஆண்டி, மோகன் எங்க?" ரம்யா கேட்க,

மோகனின் அம்மா அழ ஆரம்பித்தார்.பத்து நாட்களுக்கு முன் கடலில் நீச்சலடிக்கப் போனவன் வெறும் உயிரற்ற சடலமாகத் திரும்பினான் என மோகனின் அப்பா சொன்னார்.

ரம்யாவுக்கு தலையே வெடித்துவிடும் போல் இருந்தது. அப்படியே அருகில் இருந்த நாற்காலியில் சரிந்தாள். மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
ஏதேனும் விபரீதம் நிகழும் முன் ஜெனியை அழைத்துக் கொண்டு ஊருக்குப் போய் விட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே கல்லூரியில் இருந்து விடுதிரும்பும் போது, ரம்யாவின் கைத்தொலைபேசி மணி அடித்தது..

"ஹலோ, ரம்யா, நான் கார்த்தி பேசுறேன், மோகனைப் பத்தி ஒன்னு சொல்லனும்,"

ரம்யாவுக்கு வியர்த்துக் கொட்டியது.

"எல்லாம் எனக்குத் தெரியும்.,, பிளீஸ் இனி போன் பண்ணாதே... எங்களை விட்டுடு"

அழைப்பை துண்டித்துவிட்டு வேகமாக பிள்ளையார் கோயில் நெருங்குகையில்,

அய்யோ.. அங்கு மோகன் , கார்த்தி ஜெனி மூவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள்.மூவரும் ஒரே சமயத்தில் ரம்யாவைத் திரும்பிப் பார்த்து மெலிதாக சிரித்தனர்.

"கடவுளே... அங்க யாரும் இல்லை சும்மா பிரமை... இன்னைக்கு நைட் நல்லா தூங்கிட்டா சரி ஆயிடும்..." என தனக்குத் தானே நினைத்தபடி வேகமாக ரம்யா விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். விடுதியில் ரம்யாவின் அறை முன் பதட்டமாக விடுதி பணியாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.

------முடிந்தது-------

1 பின்னூட்டங்கள்/Comments:

said...

ஆகாகா... அப்பம் அதுவா அது...... திரும்பவும் பேய் கதையா.....

நல்லாயிருக்கு :-)