Wednesday, November 01, 2006

எடுத்துக்காட்டு மனிதர்கள் - ஊனத்தை வென்ற ஜெகன்நாதன்


சாதனையாளர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப் படுகிறார்கள். உள்ளத்தில் உறுதியும் , வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் , சரியான இலக்கும் , அதற்கான வழிகளைத் தேடும் நோக்கமும் இருக்கும் வரையில் சூழல் எவ்வளவு கடினமாக இருந்த்தாலும் சாதிக்கலாம்.

போலியோவினால் ஏற்பட்ட கால் ஊனத்தையும் பொருட்படுத்தாமல் கல்வி, முயற்சி, உழைப்பு ஆகியவகளைக் கொண்டு வாழ்வில் உயர்ந்துக் கொண்டிருக்கும் திரு.ஜெகன்நாதனை இந்த சமுதாயத்தில் உள்ள எடுத்துக்காட்டு மனிதர்களில் ஒருவர் என்று கூறுவது மிகையாகாது.

திரு. ஜெகன்நாதன். சென்னையில் உள்ள பிரபல தனியார் கணிப்பொறி நிறுவனத்தில் மூத்த கணிப்பொறி வல்லுனராக உள்ளார்.

அவருடன் ஒரு பேட்டி,

வினையூக்கி : வணக்கம். ஜெகன். உங்களின் நேரத்திற்கு மிக்க நன்றி. ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னும் அவனது குடும்பம் நிச்சயம் இருக்கும். உங்கள் குடும்பத்தைப் பற்றியும் அவர்களின் ஊக்குவித்தலையும் பற்றி சொல்லுங்களேன்?

ஜெகன் : நன்றி, வினையூக்கி. எனது அப்பா நான் ஒரு வயது இருக்கும்போதே தவறி விட்டார். என் அம்மா ஒரு தனியார் பள்ளியில் ஆயா வேலைப் பார்த்து நான், இரண்டு அக்கா மற்றும் என் அண்ணனைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்தும் என்னைப் படிக்க வைத்தார்கள். ஆரம்பப் பள்ளிக்கு என்னுடைய சின்ன அக்கா, தன் முதுகில் என்னைத் தூக்கிச் செல்வார்கள். மாநகராட்சிப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரைப் படித்தேன். படிக்கும்போதே மதியம் பள்ளி விட்டவுடன் திரு.இராஜேந்த்திரன் என்பவரிடம் பித்தளை உருக்கு வேலையைக் கற்றுக் கொண்டேன். பிறகு அங்கேயே பள்ளி முடிந்த்தவுடன் தினமும் வந்து வேலைப் பார்க்க ஆரம்பித்தேன். என்னுடைய முதற் சம்பளம் 14 வயதில் அரை நாளுக்கு 5 ரூபாய்.

வினையூக்கி : உங்களுக்கு அப்போது படித்துக் கொண்டே வேலைப் பார்ப்பது சிரமமாக இல்லையா?

ஜெகன்: இல்லை. நான் படிப்பில் கோட்டை விட்டு விடவில்லையே? காலை படிப்பு , மதியம் வேலை , இரவு மீண்டும் படிப்பு. நான் +2 தமிழில் 186/200 எடுத்தேன்.


வினையூக்கி : பாராட்டுக்கள் ஜெகன், பள்ளிக்காலங்களில் உங்கள் பொழுதுபோக்கு என்ன?

ஜெகன் : கவிதைகள் எழுதுவேன், ராயபுரம் டோல்கேட் டெர்மினஸ் ல இருக்கிற ஒரு சத்துனவுக் கூடத்தில் இரவுப்பாட சாலையில் பாடம் எடுப்பேன். அந்த இரவு பாடகசாலை என் முயற்சியில, அபோதைய சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. விசுவநாதன் பேருதவியுடன் ஏற்படுத்தப் பட்டது. அதற்கான நூலகத்திற்கு கவிஞர்கள் மு.மேத்தா. சுரதா மற்றும் கனிமொழி இலவசமாகப் புத்தகங்களை வழங்கினார்கள். அந்தக் காலக்கட்டத்தில் அது என்னுடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக உணர்ந்தேன்.

வினையூக்கி : இந்த இரவுப் பாட சாலை எந்த வருடம் ஏற்படுத்தப்பட்டது?

ஜெகன் : 1998, இன்றும் நல்லபடியா நடந்த்து கொண்டிருக்கிறது. நேரம் கிடைக்கும் போது அங்கு செல்வதுண்டு.

வினையூக்கி : நீங்கள் ஒய்வு நேரத்தில் கவிதைகள் எழுதுவீர்கள் என்று சொன்னீர்கள்? ஏதாவது கவிதை போட்டிகளில் பங்கேற்ற அனுபவமோ/ பத்திரிக்கைகளில் இடம் பெற்றதை பற்றியோ சொல்லுங்களேன்?

ஜெகன் : கல்லூரியில் படிக்கும் பொழுது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய 'ஜாதிக்கலவரம்' எனும் தலைப்பிலான கவிதைப் போட்டியில் "சிறப்புப் பரிசுக் கிடைத்தது. தமிழருவி மணியன் வெளியிட்ட தமிழருவி எனும் வளரும் கவிஞருகளுக்கான புத்தகத்தில் என் கவிதை வெளிவந்துள்ளது.

தற்போது "உன்னுடன் பேசுகிறேன் - நீண்ட காதல் பயணம்" எனும் தலைப்பில் கவிதை தொகுப்பு எழுதி வருகின்றேன். அடுத்த வருட மத்தியில் புத்தகமாக வெளியிட உள்ளேன்.

வினையூக்கி : ஜெகன், எந்த கல்லூரியில் படித்தீர்கள்? என்ன படித்தீர்கள்?

ஜெகன் : சென்னையில் தியாகராயர் கலைக் கல்லூரியில் B.A Economics படித்தேன்.

வினையூக்கி : கல்லூரியில் படிக்கும்போதும் அந்த பித்தளை உருக்கு வேலையை தொடர்ந்தீர்களா?

ஜெகன் : ஆம். சம்பள உயர்வுடன், அரை நாளுக்கு 250 . (மெலிதான சிரிப்புடன்)

வினையூக்கி : எனக்கு ஒரு சநதேகம் , நீங்கள் படித்தது, economics, வேலையோ பித்தளை உருக்கு வேலை, பிறகு எப்படி கணிப்பொறி யில் வேலைக்கு வந்தீர்கள்?

ஜெகன் : எனக்கு +2வில் தமிழ் படத்தில் முதற் மதிப்பென் எடுத்தமைக்காக ராஜஸ்தானி அமைப்பிலிருந்த்து உதவித்தொகை கிடைத்தது. அதில் கல்லூரிக்கு கட்டிய கட்டனம் போக மீதமிருந்ததை வைத்து "ஆப்டெக்' கில் டிப்ளமோ இன் இன்பர்மேசன் சிஸ்டம் பயிற்சியில் சேர்ந்த்து கணிப்பொறிக் கற்றுக்கொண்டேன். 2001 ல இப்போ நான் வேலைப் பார்க்கும் நிறுவனத்தில் நடந்த தேர்வில் தேர்ச்சிப் பெற்று கடந்த 5 ஆண்டுகளாக இங்கு முழு திருப்தியுடன் வேலைப் பார்த்து வருகின்றேன்.

வினையூக்கி : இப்போது வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கையில் எப்படி உண்ர்கிறீர்கள்?

ஜெகன்: பெருமிதமாக இருக்கும். என்னுடைய அம்மா, குடும்பத்தார், பள்ளி ஆசிரியர்கள் , கல்லூரி ஆசிரியர்கள், எனது நிறுவனத்தார் அனைவரும் எனக்கு உதவி இருக்கிறார்கள்.

வினையூக்கி : உங்கள் வாழ்க்கையின் லட்சியமமென்ன?

ஜெகன் : கணினியிலும் கவியிலும் மேலும் வல்லமை பெற வேண்டும். என்னால் முடிந்ததை பிறருக்கு உதவ வேண்டும்.

வினையூக்கி : உங்களைப் போல் இருக்கும் உடற் ஊனமுற்ற இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது ?

ஜெகன் : ஐயா வைரமுத்து சொல்லுவது போல் போராடும் வரை வாழ்க்கை.. வாழ்க்கை போராடுவதற்கே. கூடுமானவரை சுயபச்சாதாபம் இல்லாதவாரு பார்த்துக் கொள்ளுஙகள்.

வினையூக்கி : நன்றி ஜெகன். உங்களுடன் பேசியது உள்ளத்துக்கு உத்வேகம் அளித்தது.

ஜெகன் : நன்றி, வணக்கம்9 பின்னூட்டங்கள்/Comments:

said...

நல்ல பதிவு. ஜெகன்நாதனின் ஆரம்பகால வாழ்க்கைப் போராட்டங்கள் மனதை நெகிழ வைத்தன.
பதிவினை படித்து முடித்ததும், யாரோ என்னை சாட்டையால் அடித்ததுபோல் இருந்தது.
சமீபத்தில் யாரோ சொன்னதாக படித்தது : "ஒருவன் ஏழையாக பிறக்கலாம். அது அவன் தவறல்ல. ஆனால் அவன் ஏழையாகவே சாகிறானென்றால் அதற்கு அவனே பொறுப்பு." என்று.
மனிதம் இம்மண்ணில் இன்னும் மங்கிவிடவில்லை என்பதை நிரூபனம் செய்திருக்கிறீர் உமது இப்பேட்டியின் மூலம்.
வளர்க. தொடர்க.

said...

நல்ல பதிவு வினையூக்கி..

திரு ஜெகன்நாதனின் நிழற்படம் ஒன்றும் போட்டிருக்கலாமே..
அவர் எழுதிய கவிதைகளில் ஒன்றையும்..

said...

Pons,
I had uploaded Mr.Jegannathan's photo. Earlier blogger was not allowing to upload the photo

Vinaiooki

said...

ஜெகனின் வழ்க்கையை படம் பிடித்துக் காட்டிய வினையூக்கிக்கு என் நன்றி கலந்த பாராட்டுக்கள்.
திருவாளர் ஜெகன் போன்ற மேன்மக்கள் தற்கால இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணம் என்பதில் ஐயம் ஏது.

தொடரட்டும் இது போன்ற தன்னம்பிக்கை பதிவுகள்.

said...

அருமை...அருமை...

சாதித்தவருக்கும், அதை எங்களுக்கு காட்டிய தம்பிக்கும்...

வாழ்த்துக்கள்

said...

That was a good post Anna.
Inspiring.

said...

'inspiring'......'truely inspiring'

said...

nice post

said...

அருமையான பதிவு வினையூக்கி.

இப்படி பலரையும் நான் சந்தித்திருக்கிறேன். அதாவது சிறுவயதில் மிகவும் சிரமப்பட்டு உயர்வுக்கு வந்தவர்களை.. அவர்களைப் பற்றி என்னுடைய கடந்து வந்த பாதை என்ற தொடரிலும் எழுதியுள்ளேன்..

பொருளாதாரத்தில் பட்டம் பெற்று மென்பொருள் பொறியாளாராக பணிபுரிவதே ஒரு சாதனைதான்..

இவர்களை பணியில் அமர்த்தி ஆதரவு அளிக்கும் அந்த நிறுவன அதிபரை எத்தனை பாராட்டினாலும் தகும்..

இத்தகையோரின் சாதனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.