Wednesday, November 29, 2006

இரண்டு -- திரைப்பட விமர்சனம்

"ரெண்டு" என வழக்கியல் தமிழில் முதலில் பெயரிடப்பட்டு "இரண்டு" என தூய தமிழ் பெயருடன் இப்படம் வெளிவந்துள்ளது.
சுந்தர்.சி படம் என்றாலே "மினிமம் கியாரண்டி காமெடி" யுடன் மசாலாவும் தூக்கலாகவே இருக்கும். இப்படமும் இதற்கு விதிவிலக்கு அல்ல.


டைட்டிலுக்குப் பின் ஒரு கொலையுடன் படம் ஆரம்பிக்கிறது. அடுத்த கொலைக்கு தேதியும் குறிக்கப்படுகிறது.

"வர்றட்டா வர்றட்ட என் ஊரே வர்றட்டா" எனப் பாடிய பின் சென்னைக்கு வேலை தேடி , மேஜிக் ஷோ நடத்தும் தன் மாமா வடிவேலுவிடம் வந்து சேரும் முதல் மாதவன், "கடற்கன்னி" ஷோ நடத்தும் ரீமாசென்னிடம் காதல் வயப்படுகிறார்.

இதனிடையில் இன்னொருவர் தேதிக் குறிப்பிடப்பட்டு கொல்லப்படுகிறார். அடக் கொல்வது கருப்புக் கண்ணாடி போட்ட இரண்டாவது மாதவன்.

போலிஸ் முதல் மாதவனை கைது செய்கிறது.

இரண்டாவது பாதியில் நெம்பர் 2 , நெம்பர் ஒன்னைக் காப்பாத்தி "பிளாஷ்பேக்கில்" கதை போகிறது.பெட்ரோல் வளம் கொழிக்கும் பூமியை நயவஞ்சகமாக கைப்பற்ற நினைக்கும் வில்லன் கும்பல் திருமணக் கூட்டத்தில் மாதவன்(2) வின் உறவினர் அனைவரையும் கொன்று குவிக்கிறது. மாதவன்(2), கண் பார்வை இழந்து தப்பிக்கிறார். வில்லன் கும்பலை நாள் குறித்து பழி வாங்குகிறார்.

"லொள்ளு சபா" சந்தானம் பிளாஷ்பேக் காமெடியனாகவே இப்போ வரும் படங்களில் எல்லாம் வருகிறார்.

ரீமாசென், அனுஷ்கா இரு கதாநநயகிகளும் படத்தில் நிறைய முறைக் குளிக்கிறார்கள்.


பிற்பாதியில் அதிக கலகலப்புடன் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் வில்லன் கும்பலால் கொல்லப்படும் காட்சிகள் கொஞ்சம் கொடூரமாகவே படமாக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு "A" சர்டிபிகேட். காமெடியும் "A" ரகம்தான். படத்தில் பாக்யராஜ் துப்பறியும் போலிஸ் அதிகாரியாக வருகிறார். மணிவண்ணன் லோக்கல் காமெடி வில்லனாக வந்து போகிறார்.
பாடல்கள் சுமார் ரகமே. துப்பறியும் காட்சிகளை இன்னும் சுவாரசியமாக எடுத்து இருக்கலாம். டைட்டிலில் சுபா பெயர் எல்லாம் போட்டார்கள்.

மாதவன் நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய முகம் ஹேர் ஸ்டைலுடன் நடித்துள்ளார்.

இப்படத்தைப் பற்றி மாதவன் Rediff யில்

Question : Rendu isn't exactly your type of film ?

It is a comedy, a fun film. I was quite bored after doing all this research on corporatisation of films. It was then that Sundar C told me, 'Come and do a fun film with me. Don't ask me the script or anything. Just trust me and do the film.' He said, 'give me 50 days'. And I had a ball in those 50 days.
Actually it was Abhishek Bachchan who told me to go and enjoy all films. He had learnt it from his father. I took his advice to heart and enjoyed Rendu. You can't be doing Kannathil Muthamittal or Anbe Sivam everyday.

இரட்டிப்பு மசாலாTuesday, November 21, 2006

வலைப்பதிவர் மாநாடு - சென்னை - 19.11.2006

சென்னை வலைப்பதிவாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, முன் கூட்டியே பிரென்சு டெஸ்டை எழுதி விட்டு, மதியம் சாப்பிடக் கூட இல்லாமல் களைப்புடன் பார்வதி
மினி ஹாலைக் கண்டு பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது .
உள்ளே நுழையும் முன் முத்து(தமிழினி) க்கு தொலைபேசினால், அவரும் , பாலபாரதி அவர்களும் வெளியெ வந்து வரவேற்று உள்ளே அமரச் செய்தார்கள். உண்மையில் சகவலைப்பதிவர்களைப் பார்த்தவுடன் பசிக்களைப்பு எல்லாம் பறந்து போயிடுச்சு. உற்சாகம் தானாகவே வந்து விட்டது.

"நம்ம" லக்கிலுக் என் இடதுசாரியிலிருந்து, எனக்கு வலது பக்கம் மாறி நான் தனித்து விடப்படாமல் கவனித்துக் கொண்டார். என்னமோ போங்க , லக்கிலுக் கூட இருந்தது 100 பேர் கூட இருந்தது மாதிரி இருந்தது.

முத்து(தமிழினி) , என் கதையைக் கிண்டலடித்த "அனானிய" கண்டித்த முறையைக் கூறினார்.

ஐயா,இராமகி தலைமையேற்று மாநாடு இனிதே துவங்கியது.
மா சிவகுமாரின் பேச்சின் ஊடே வந்த உதாரணங்கள் ரசிக்கும்படி இருந்தது. கோர்வையாக பேசுவது எப்படி என்பதை இவரிடம் கற்றுக் கொள்ளலாம்.

அண்ணன் வரவனையான் கருப்புக்கண்ணாடி அணிந்து அசத்தலாக வந்தார். இவர் சினிமா துறைக்கு சென்றால் விஜயகாந்த்தின் இடத்தைப் பிடிக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது. (நிஜமாத்தான் சொன்னேன்!!!!)

இட்லிவடையின் ரகசிய நிருபரின் மூலமாக அதிகாரப் பூர்வமற்ற படங்கள் பதிவேற்றப்பட்டவுடன் மாநாட்டில் சலசலப்பு எற்பட்டது.

இடையில் எஸ்.எம்.எஸ் ஸில் கடலைப் போட்டு கொண்டிருந்த என்னை ஒரு வலைப்பதிவு வாசகர் சந்தேகத்துடன் 'நீங்களும் ரகசிய நிருபரா" என்றுக் கேட்டார். என்னுடையது கேமரா மொபைல் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டில் ஈழ நண்பர்களுடன் அதிகம் கதைக்க இயலவில்லை.
முன்பு என்னுடைய ஒரு சுமாரன கதைக்கு "அனானிகள்" தர்ம அடி கொடுத்துக் கொண்டிருந்த போது , ஆறுதல் அளித்த நிலவனை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது.

சிவஞானம்ஜி என்னுடைய ஒரு கதையை பாராட்டியது சந்தோசமாக இருந்தது.

டி,பி,ஆர் ஜோசப்பின், வலைப்பதிவர்கள் சங்கம் ஆரம்பிக்கலாம் என்ற ஐடியா எதிர்காலத்தில் சாத்தியமாகப்போகும் ஒன்று என்று எனக்குப் பட்டது.

டோண்டு, என் மேல் இருந்த பழைய பின்னூட்ட பிரச்சினைக்கான வருத்தம் தீரவில்லை என்று கூறினார் மேலும்
பிரென்சு பாடங்களுக்கான சில புத்தகங்களை பரிந்த்துரைத்தார்.

பாலபாரதி யின் கட்டுரையானா வலைப்பதிவில் சாதீயம் என்பதன் மீதான விவாத அனலில் என் மெட்ராஸ் ஐ போயே போச்சு. ரோசாவசந்த், ஓகை , பூபாலன் ஆகியோர் பேசினர்.
வலைப்பதிவு வாசகர் பூபாலன் கூறிய கருத்து என்னை யோசிக்க வைத்தது.

பொன்ஸ் எனது கதைகளைத் தொடர்ந்து படித்து வருவதாகக் கூறினார்.

மாநாட்டில் மரபூரார் ரொம்ப ஆக்டிவா இருந்த்தார்.

மாநாட்டில் மூன்று முறை டீ, பிஸ்கட் வழங்கப்பட்டது.

பெரும்பாலோர் இதனால் எனக்கு என்ன லாபம் என்று ஆதாயம் என்று எதிர்பார்க்கும் இந்நாட்களில், தனது அன்றாட அலுவலில் பிஸியாக இருந்த்தாலும், தமிழ்,மேல் உள்ள ஆர்வத்தில் சிரத்தை எடுத்து, கலந்த்துரையாடலை ஏற்பாடு செய்த பாலபாரதிக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.

மாநாட்டில் நிறைய பேருடன் பேச இயலவில்லை என்பதில் வருத்தம் இருந்தாலும், இது போன்ற மாநாடுகள் எதிர்காலத்தில் நடத்தப் படும் போது, மேலும் பல நண்பர்களைப் பெறலாம் என்ற எண்ணத்துடன் ஆட்டோவில் வந்த்து கொண்டிருந்த போது அது வரை அமைதியாக இருந்த பசி எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.
'செவிகுணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்"

Friday, November 17, 2006

சிபாரிசு - தேன்கூடு போட்டிக்காக

"முன்பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே" நந்தா பாடல் டீவியில் ஓடிக் கொண்டிருந்த பொழுது , அப்பாவின் பைக் சத்தம் கேட்டது. நல்ல பிள்ளை போல பிபிசி செய்தி சேனலுக்கு மாற்றி ஆசியா டுடே பார்க்க ஆரம்பித்தேன். அப்பாக்கு டீவினாலே நியுஸ் தான். சேனல் மாற்றி மாற்றி ஒரு மொக்கை நியுஸைக் கூட தமிழ், ஹிந்தி , ஆங்கிலம் எல்லா மொழியிலயும் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பார்.

அப்பா, உள்ளே வந்து உடைமாற்றி விட்டு , அம்மா கொடுத்த டீ யைக் குடித்து விட்டு , என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.

"கார்த்தி, ஜாவா கிளாஸ் எப்படி போகுது?"

'நல்லா போயிட்டு இருக்குப்பா!!!'

"வேற ஏதாவது கிளாஸ் போகனும்னா சொல்லுப்பா?, பணத்தை பத்திக் கவலைப் படாதே"

"சரிப்பா"

' சந்துருவ, உனக்கு ஞாபகம் இருக்கா, நாம லால்குடி ல இருந்தப்ப நம்ம வீட்டிலேந்து நாலு வீடு தள்ளி இருந்தான்ல "

"ஆமாம்பா! சந்துரு அண்ணன நல்லா ஞாபகம் இருக்குப்பா!! "

"சந்துருவ பார்த்தேன், சிக்னல் நிக்கிறப்ப என்னை அடையளம் கண்டுக்கிட்டு பேசினான், ஆள் நிறைய மாறி சும்மா ஹிந்தி ஹீரோவாட்டம் இருக்கான், காபி சாப்பிடக் கூப்பிட்டான், சரவண பவன் ல காபி சாப்பிட்டோம். சாஃப்ட்வேர்ல தான் இருக்கானாம். பெங்களூர்ல இருக்கானாம்.. அவன் கம்பெனி கார்டு கொடுத்தான், உன்னைப் பத்திக் கேட்டான்"

'என்னங்க அப்படினா , நம்ம கார்த்திக்கு ஒரு வேலை கேட்டு பாருங்களேன்" இது அம்மா.

அம்மாக்கு எப்போதும் என் வேலைப் பத்தி தான் கவலை. இஞ்சினியரிங் முடிச்சு எட்டு மாசமாச்சு, வேலைக் கிடைக்கல, இதுல WTC வேற இடிச்சுட்டாங்க, னு அடிக்கடி புலம்பி தள்ளுவாங்க .

பிரெஷர் ரெஸ்யூம் னாலே மதிக்க மாட்டுறானுங்க. என்ன பண்றது, எல்லா கோர்ஸையும் பண்ணிக்கிட்டு இருக்கேன். அப்பா பத்தி கவலை இல்லை. போஸ்ட் ஆபிஸ் ல நல்ல பதவி, பரம்பரை வசதி, ஒரே பையன், பெரிய நிர்பந்த்தம் எதுவுமில்லை. நான் வேலைக்கு உடனடியாக போகனும்னு கட்டாயமில்லை.

ஆனால் அம்மாவுக்கு இது அக்கம்பக்கத்தில், உறவினர்கள் மத்தியில் கௌரவப் பிரச்சினை. என் மாமா பையன் இந்த எட்டு வருடத்தில் எட்டு முறை உலகம் சுற்றி வந்து விட்டான். அம்மாவோட லட்சியம் அவனை விட நான் பெரிய ஆளா வரனும்னு.

எல்லாம் என் நேரம் 2001 ல ஐ.டி ஸ்லோ டவுன், WTC வேற.. ஏதாவது referral ல தான் உள்ளே போகனும்.

கடவுளே பார்த்து சந்த்துரு அண்ணாவ அனுப்பிச்சு இருக்கார், சந்துரு அண்ணன் என்னை விட எழு , எட்டு வயசு பெரியவர், இஞ்சினியரிங் செமஸ்டர் லீவிலே வீட்டுக்கு வர்றப்ப எல்லாம் எங்க கூட கிரிக்கெடடாடுவார். சந்த்துரு அண்னனோட அப்பா , என் அப்பாவிடம் பல முறை கடன் கேட்டு ஆபிஸ் வந்ததை அம்மாவிடம் சொல்லக் கேட்டு இருக்கிறேன். அப்பா, படிப்புக்கு மட்டும் உதவி என்று கேட்டால் உடனே உதவி விடுவார். சந்துரு அண்ணாவும் நல்லா படித்து வேலைக்கு சேர்ந்த பிறகு அவங்க அப்பா, எல்லா கடனையும் வட்டியுடன் நாங்க சேலம் மாற்றல்
ஆகி வந்த பிறகும் தேடி வந்து கொடுத்த போது, அப்பபவுக்கு பெருமிதமாய் இருந்த்தது.

அப்பா மட்டும் எனக்காக ஒரு வேலை சந்துரு அண்ணவிடம் கேட்டால் நிச்சயம் செய்வார், ஆனால் அப்பா கேட்கனுமே... சிபாரிசுங்கிறது ஓசில ஒரு காரியம் ஆகனும்னு உறவுகளை/நட்புகளை துருப்புசீட்டா பயன்படுத்துவது என்று அப்பா அடிக்கடி ஒரு எரிச்சல் தரக் கூடிய வேதாந்தம் பேசுபவர்.
அனேகமா கேட்க மாட்டார், இன்னும் எவ்வளவு நாளளென் வேலை தேடும் படலம் தொட்ரப் போகிறதோ!!!!


அப்போ போன் அடித்தது... போனை எடுத்து ஹலோ என்றேன்,
"கார்த்தி , நான் சந்த்துரு பேசுறேன் நீ எப்படி இருக்க? "
'நல்லா இருக்கேன் அண்ணே, "
"சார் கிட்ட உன் ரெஷ்யூம் கேட்டேன், தர்றேன் சொன்னாரு, ஆனால் நிச்சயம் தர மாட்டாரு, என் மெயில் ஐடி நோட் பண்ணிக்கோ, நாளைக்கே, உன் ரெஷ்யூம் forward பண்னு , நான் இண்டர்வியூக்கு அரேஞ் பண்றேன், இது உதவி இல்லை, ஒரு நன்றிக்கடன், அப்பா கிட்ட சொல்லலதே" னு சொல்லி போனை வைத்தார்.

அடுத்த 10 நாளில் சந்துரு அண்ணா வோட சிபாரிசுல மெட்ராஸ்லே யே ஓரளவுக்கு நல்ல சம்பளத்துடன் வேலைக் கிடைத்தது.

வேலைக்கு சேர்ந்த 15 நாள் கழித்து அப்பா சந்துரு அண்ணாவொட விசிட்டிங் கார்டைத் தேடிக் கண்டுபிடித்து,அவருடன் போனில் பேசிக் கொண்டிருந்த்தார்.

"சந்துரு, என்னோட ஆபிஸ்ல , ஒரு கிளார்க் கோட பையன் இஞ்சினியரிங் முடிச்சுட்டு வேலை இல்லாமல் கஷ்டப் படுறான், ரொம்ப சிரமமான குடும்ப சூழல், பேங்க் லோன்ல தான் படிச்சான், நல்ல பெர்ஷெண்டேஜ் கூட , கொஞ்சம் உதவி பன்ண முடியுமா, நிச்சயம் பேரைக் காப்பாத்துவான், " என்று அவனின் குடும்ப நிலைமையை விளக்கிக் கொண்டிருந்த்தார் என் அப்பா.

எனக்கு நிச்சயம் தெரியும் , சந்துரு அண்ணா அந்த கிளர்க் பையனுக்கும் உதவுவார்.

அப்பாவை நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது . இன்றிலாவிடிலும் என்றாவது ஒரு நாள் எனக்கு வேலை கிடைத்த விதத்தைப் பற்றி அப்பவிடம் சொல்லுவேன், நிச்சயம் என்னை மன்னிப்பார்.

Monday, November 13, 2006

இரட்டை நட்சத்திரம் - 'காதல்' சிறுகதை

பிரகாசமாக தூரத்திலிருந்து ஜெனி வருவதைப் பார்த்துவிட்ட கார்த்தி,
"ஜெனி, வா வா? உனக்காக எவ்வளவு நாளா காத்திருக்கேன் தெரியுமா?"
என்றான்.
"தெரியும் டா, இன்னக்கி தான் எனக்கு விடுதலை கிடச்சுது என்ன பன்றது, நான் உன்னை நினைக்காத நாளில்லை தெரியுமா?" என்றாள் ஜெனி.

"ம்ம்ம் , எல்லாம் விதி, நம்ம காதலுக்கு உங்க வீட்டுல ஒத்துக்கல, நீயும் பாவம்தான், அம்மா அப்பா வற்புறுத்தலுக்கு, மிரட்டலுக்குப் பணிந்து அந்த பையனோட உன் கல்யானத்துக்கு ஒத்துக்க வேண்டியதா போச்சு, உன் மேலே எப்போதும் எனக்கு கோபம் இல்லை,உன் கல்யானத்துக்கு கூட என்னால வர முடியல, உன் கல்யாணத்தன்னக்கி நான் ஹாஸ்பிடல்ல இருந்தேன்". என்ற கார்த்தியிடம்

'விசயம் கேள்விப் பட்டு அம்மா கூட பயந்தாங்க தெரியுமா?நீ இருந்தாலும் அப்படி பன்ணிட்டு போய் இருக்கக் கூடாது' என்றாள் ஜெனி.

கீழே வெறித்துப் பார்த்தபடி மேலும் தொடர்ந்தான், "எல்லோரும் ரொம்ப வருத்தமா இருக்கிறாங்க போல"

"ஆமாம், இருக்காத பின்ன? அவருக்கு என் மேல கொள்ளைப் பிரியம்.
என்னை நல்லதான் கவனிச்சிகிட்டாரு,அதனால அவரைப் பிரியுறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு"

'தெரியும் ஜெனி, அப்போ அப்போ இங்கேயிருந்து பார்ப்பேன், உன் மேலே அவர் பிரியமா இருக்கிறதைப் பார்க்கையில் சந்தோசமா இருக்கும்."

"விதி வலியது, கார்த்தி, என்ன பன்றது/"


"ஜெனி, உன்னோட ஆக்ஸிடெண்ட் அ இங்கேயிருந்த்து பார்த்தேன், ஒரு பக்கம் கவலையா இருந்ததலும், உன்னோட கண நேர மரணம், ஆறுதல இருந்துச்சு, ஹாஸ்பிடல் வேதனை, மரண வலியைவிட கொடுமையானது, நான் ஆசிட் குடிச்சு , பெட்ல இருந்த்ப்ப எப்போட சாவு வரும்னு இருந்துச்சு, நல்ல வேளை அந்த வலி உனக்கு இல்லாமல் போச்சு '

'ம்ம்ம், இனி சில கோடி வருசங்களுக்கு யார் தொந்தரவுமில்லாமல் இங்கு இருக்கலாம்' என்று கார்த்தியும், ஜெனியும் வானில் இரட்டை நட்சத்திரமாக மின்ன தொடங்கினார்கள்.

Wednesday, November 01, 2006

எடுத்துக்காட்டு மனிதர்கள் - ஊனத்தை வென்ற ஜெகன்நாதன்


சாதனையாளர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப் படுகிறார்கள். உள்ளத்தில் உறுதியும் , வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் , சரியான இலக்கும் , அதற்கான வழிகளைத் தேடும் நோக்கமும் இருக்கும் வரையில் சூழல் எவ்வளவு கடினமாக இருந்த்தாலும் சாதிக்கலாம்.

போலியோவினால் ஏற்பட்ட கால் ஊனத்தையும் பொருட்படுத்தாமல் கல்வி, முயற்சி, உழைப்பு ஆகியவகளைக் கொண்டு வாழ்வில் உயர்ந்துக் கொண்டிருக்கும் திரு.ஜெகன்நாதனை இந்த சமுதாயத்தில் உள்ள எடுத்துக்காட்டு மனிதர்களில் ஒருவர் என்று கூறுவது மிகையாகாது.

திரு. ஜெகன்நாதன். சென்னையில் உள்ள பிரபல தனியார் கணிப்பொறி நிறுவனத்தில் மூத்த கணிப்பொறி வல்லுனராக உள்ளார்.

அவருடன் ஒரு பேட்டி,

வினையூக்கி : வணக்கம். ஜெகன். உங்களின் நேரத்திற்கு மிக்க நன்றி. ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னும் அவனது குடும்பம் நிச்சயம் இருக்கும். உங்கள் குடும்பத்தைப் பற்றியும் அவர்களின் ஊக்குவித்தலையும் பற்றி சொல்லுங்களேன்?

ஜெகன் : நன்றி, வினையூக்கி. எனது அப்பா நான் ஒரு வயது இருக்கும்போதே தவறி விட்டார். என் அம்மா ஒரு தனியார் பள்ளியில் ஆயா வேலைப் பார்த்து நான், இரண்டு அக்கா மற்றும் என் அண்ணனைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்தும் என்னைப் படிக்க வைத்தார்கள். ஆரம்பப் பள்ளிக்கு என்னுடைய சின்ன அக்கா, தன் முதுகில் என்னைத் தூக்கிச் செல்வார்கள். மாநகராட்சிப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரைப் படித்தேன். படிக்கும்போதே மதியம் பள்ளி விட்டவுடன் திரு.இராஜேந்த்திரன் என்பவரிடம் பித்தளை உருக்கு வேலையைக் கற்றுக் கொண்டேன். பிறகு அங்கேயே பள்ளி முடிந்த்தவுடன் தினமும் வந்து வேலைப் பார்க்க ஆரம்பித்தேன். என்னுடைய முதற் சம்பளம் 14 வயதில் அரை நாளுக்கு 5 ரூபாய்.

வினையூக்கி : உங்களுக்கு அப்போது படித்துக் கொண்டே வேலைப் பார்ப்பது சிரமமாக இல்லையா?

ஜெகன்: இல்லை. நான் படிப்பில் கோட்டை விட்டு விடவில்லையே? காலை படிப்பு , மதியம் வேலை , இரவு மீண்டும் படிப்பு. நான் +2 தமிழில் 186/200 எடுத்தேன்.


வினையூக்கி : பாராட்டுக்கள் ஜெகன், பள்ளிக்காலங்களில் உங்கள் பொழுதுபோக்கு என்ன?

ஜெகன் : கவிதைகள் எழுதுவேன், ராயபுரம் டோல்கேட் டெர்மினஸ் ல இருக்கிற ஒரு சத்துனவுக் கூடத்தில் இரவுப்பாட சாலையில் பாடம் எடுப்பேன். அந்த இரவு பாடகசாலை என் முயற்சியில, அபோதைய சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. விசுவநாதன் பேருதவியுடன் ஏற்படுத்தப் பட்டது. அதற்கான நூலகத்திற்கு கவிஞர்கள் மு.மேத்தா. சுரதா மற்றும் கனிமொழி இலவசமாகப் புத்தகங்களை வழங்கினார்கள். அந்தக் காலக்கட்டத்தில் அது என்னுடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக உணர்ந்தேன்.

வினையூக்கி : இந்த இரவுப் பாட சாலை எந்த வருடம் ஏற்படுத்தப்பட்டது?

ஜெகன் : 1998, இன்றும் நல்லபடியா நடந்த்து கொண்டிருக்கிறது. நேரம் கிடைக்கும் போது அங்கு செல்வதுண்டு.

வினையூக்கி : நீங்கள் ஒய்வு நேரத்தில் கவிதைகள் எழுதுவீர்கள் என்று சொன்னீர்கள்? ஏதாவது கவிதை போட்டிகளில் பங்கேற்ற அனுபவமோ/ பத்திரிக்கைகளில் இடம் பெற்றதை பற்றியோ சொல்லுங்களேன்?

ஜெகன் : கல்லூரியில் படிக்கும் பொழுது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய 'ஜாதிக்கலவரம்' எனும் தலைப்பிலான கவிதைப் போட்டியில் "சிறப்புப் பரிசுக் கிடைத்தது. தமிழருவி மணியன் வெளியிட்ட தமிழருவி எனும் வளரும் கவிஞருகளுக்கான புத்தகத்தில் என் கவிதை வெளிவந்துள்ளது.

தற்போது "உன்னுடன் பேசுகிறேன் - நீண்ட காதல் பயணம்" எனும் தலைப்பில் கவிதை தொகுப்பு எழுதி வருகின்றேன். அடுத்த வருட மத்தியில் புத்தகமாக வெளியிட உள்ளேன்.

வினையூக்கி : ஜெகன், எந்த கல்லூரியில் படித்தீர்கள்? என்ன படித்தீர்கள்?

ஜெகன் : சென்னையில் தியாகராயர் கலைக் கல்லூரியில் B.A Economics படித்தேன்.

வினையூக்கி : கல்லூரியில் படிக்கும்போதும் அந்த பித்தளை உருக்கு வேலையை தொடர்ந்தீர்களா?

ஜெகன் : ஆம். சம்பள உயர்வுடன், அரை நாளுக்கு 250 . (மெலிதான சிரிப்புடன்)

வினையூக்கி : எனக்கு ஒரு சநதேகம் , நீங்கள் படித்தது, economics, வேலையோ பித்தளை உருக்கு வேலை, பிறகு எப்படி கணிப்பொறி யில் வேலைக்கு வந்தீர்கள்?

ஜெகன் : எனக்கு +2வில் தமிழ் படத்தில் முதற் மதிப்பென் எடுத்தமைக்காக ராஜஸ்தானி அமைப்பிலிருந்த்து உதவித்தொகை கிடைத்தது. அதில் கல்லூரிக்கு கட்டிய கட்டனம் போக மீதமிருந்ததை வைத்து "ஆப்டெக்' கில் டிப்ளமோ இன் இன்பர்மேசன் சிஸ்டம் பயிற்சியில் சேர்ந்த்து கணிப்பொறிக் கற்றுக்கொண்டேன். 2001 ல இப்போ நான் வேலைப் பார்க்கும் நிறுவனத்தில் நடந்த தேர்வில் தேர்ச்சிப் பெற்று கடந்த 5 ஆண்டுகளாக இங்கு முழு திருப்தியுடன் வேலைப் பார்த்து வருகின்றேன்.

வினையூக்கி : இப்போது வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கையில் எப்படி உண்ர்கிறீர்கள்?

ஜெகன்: பெருமிதமாக இருக்கும். என்னுடைய அம்மா, குடும்பத்தார், பள்ளி ஆசிரியர்கள் , கல்லூரி ஆசிரியர்கள், எனது நிறுவனத்தார் அனைவரும் எனக்கு உதவி இருக்கிறார்கள்.

வினையூக்கி : உங்கள் வாழ்க்கையின் லட்சியமமென்ன?

ஜெகன் : கணினியிலும் கவியிலும் மேலும் வல்லமை பெற வேண்டும். என்னால் முடிந்ததை பிறருக்கு உதவ வேண்டும்.

வினையூக்கி : உங்களைப் போல் இருக்கும் உடற் ஊனமுற்ற இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது ?

ஜெகன் : ஐயா வைரமுத்து சொல்லுவது போல் போராடும் வரை வாழ்க்கை.. வாழ்க்கை போராடுவதற்கே. கூடுமானவரை சுயபச்சாதாபம் இல்லாதவாரு பார்த்துக் கொள்ளுஙகள்.

வினையூக்கி : நன்றி ஜெகன். உங்களுடன் பேசியது உள்ளத்துக்கு உத்வேகம் அளித்தது.

ஜெகன் : நன்றி, வணக்கம்