Wednesday, January 29, 2014

காத்தமுத்து செல்வராசுவும் கலைஞரும்ஓர் அலுவலகத்தில் காத்தமுத்து செல்வராசு, வெங்கட்ராகவன் ராமானுஜம் என்ற இருவர் சமனிலையில் வேலைபார்த்தனர். செல்வராசு மிகத்திறமைசாலி 100 வேலைகள் செய்தால் ஒன்றே ஒன்றுதான் தவறும். வெங்கட்ராகவன் அப்படியில்லை ஒரு வேலையை சரியாகச் செய்துவிட்டாலே அன்று அடைமழைதான். ஆனாலும் செல்வராசு செய்யும் தவறுக்காக அடிக்கடித் தண்டிக்கப்படுவார். சஸ்பெண்ட் செய்யப்படுவார். வெங்கட்ராகவனை எதுவும் கேட்கமாட்டார்கள். அவ்வப்பொழுது சலித்துக் கொண்டாலும் வேலையை, செல்வராசு தன் கடமை பணி செய்வதே என, கனக்கச்சிதமாக செய்வார்,

புதிதாக அலுவலகத்திற்கு வந்த இளையதலைமுறை அதிகாரிகள். 'ஏன், வெங்கட்ராகவன் தவறுகளைக் கண்டு கொள்ள மாட்டீர்கள்" எனக் கேட்டதற்கு வெங்கட்ராகவனின் உறவுக்கார மேலதிகாரிகள், " வெங்கட்ராகவனைப்பற்றித்தான் தெரியுமே, அவனுக்கு ஒன்னுமே தெரியாது ஒரு வேலை உருப்படியா செய்யமாட்டான்.. அவன என்னத்த சொல்லி என்னத்தப் பண்ண, எங்க கோவம் எல்லாம், எல்லா வேலையும் தெரிஞ்ச செல்வராசுதானே எல்லாத்தையும் சரியா செஞ்சுருக்கனும்"
--
கலைஞரை விமர்சிப்பவர்கள் இருவகைப்படுவர். முதல் வகை , எடுத்த எடுப்பிலேயே கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கலைஞரை விமர்சிக்க வேண்டும் என நினைப்பவர்கள். இரண்டாவது வகை கலைஞரை அளவுக்கு அதிகமாகப் புனிதப்படுத்தி, அவரை நம்பினோமே , இப்படி செய்துட்டாரே என விமர்சிப்பவர்கள். அதாவது கதையில் வரும் செல்வராசுவை காய்ச்சி எடுப்பதைப்போல. முதல் வகையினரை விட்டுவிடலாம். ஆனால் இரண்டாவது வகையினரை நம்பமுடியாது.

சாணியைக் கரைத்து ஊற்றி அடிக்கும் அளவிற்கு கலைஞர் கீழானவரும் அல்ல, சந்தனத்தைக் குழைத்து அப்பி பூசை செய்யும் அளவிற்கு புனிதரும் அல்ல. மக்களாட்சித்தத்துவதில் அவரும் ஒரு வாக்கு அரசியல்வாதி. வாக்குகளைப் பெறுதல் தான் நல்லாட்சியைத் தருவதற்கு அடிப்படை எனும்பொழுது அதற்கு தகுந்தாற்போல அவர் நடந்து கொள்வது சட்டப்படியும் தவறில்லை... நடைமுறைப்படியும் தவறில்லை.

இந்த இடுகைக்கான விவாதம் எங்கேனும் நடந்தால், வெங்கட்ராகவனை கண்டுகொள்ளாமல் காத்தமுத்து செல்வராசுவிற்கு அலுவலகத்தில் என்ன நடந்ததோ அதே மாதிரியான விவாதத்திற்குப் போகும். 

Sunday, January 26, 2014

ஒரு வாளி ஆக்சிஜன் - தமிழாக்கம் - மின்னூல் வெளியிடு

ஓலைச்சுவடிகளின் இடத்தைத் தாள்கள் இடம்பிடிக்க சில நூற்றாண்டுகள் ஆனது. குறிப்பிட்ட காலத்திற்குப்பின்னர் ஓலைச்சுவடிகளே ஒழிந்து போனது. ஆனால், தாள்களை கையடக்க கணினி கருவிகள் , நூற்றாண்டுகள் எல்லாம் எடுக்காமல் வெகுவிரைவில் இடம்பெயர்த்துவிடும். அடுத்தத் தலைமுறை வாசிப்பு மின்னூல்களில்தான் நடைபெற போகின்றது.

வரும் முன் அறிவோம் என்பதன் படி, எனது சிறுகதைத் தொகுப்பை அடுத்து, www.FreeTamilEbooks.com தளத்தின் வழியாக என்னுடைய முதல் மொழிப்பெயர்ப்பு முயற்சியையும் மின்னூலாக வெளியிடுகின்றேன்.
வழக்கம்போல இது பொதுவானது, உள்ளடக்கத்தை சிதைக்காமல் எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வணிகரீதியாக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். Creative Commons -Commercial -  Non Derivative

ஒரு வாளி ஆக்சிஜன் ஓர் அறிவியல் புனைவு. ஆங்கிலத்தில் அமெரிக்க அறிவியல் புனைவு எழுத்தாளர் Fritz Leiber, A Pail of Air என்றத் தலைப்பில் எழுதி இருந்தார்.  கருப்புக் கதிரவன், நமது பூமியைக் கடத்திப் போய்விட்டால், இருள் சூழ்ந்த உலகில் தப்பிப்பிழைத்த கடைசிக் குடும்பம் என்னவாகின்றது என்பதுதான் கதைக்கரு.

பெரியவர்களுக்கு மட்டுமல்லாது, சிறுவர்களுக்கும் ஏதாவது அறிவியல் புனைவு ஒன்றை வாசிக்கக் கொடுக்க நீங்கள் விரும்பினால் இதைத் தரவிறக்கிக் கொடுக்கலாம்.

மின்னூலைத் தரவிறக்க :- http://freetamilebooks.com/ebooks/one-bucket-oxygen/

Wednesday, January 22, 2014

எழுத்தாளர் ஆன பதிவர் செங்கோவி

'தாள்' எழுத்தாளர்களுக்கும் இலக்கியத்தை 'தாளில்' பதிப்பிப்பவர்களுக்கும் இடையில் அமெரிக்க கண்காட்சி மல்யுத்த(WWF) பாணியில் தக்காளிச்சாறு சண்டைகள் நடந்து வரும் வேளையில் சத்தமிலாமல்  www.freetamilebooks.com தொடர்ந்து 'யாவருக்கும்' எனகுழுவினர் முறைப்படி அனுமதி பெற்று மின்னூல்களை வெளியிட்டு வருகின்றனர்.  எழுதப்படுபவை எல்லாம் வாசிப்பவருக்கே சொந்தம் என்பதனால் , என்னுடைய எழுத்து முயற்சிகளை நாட்டுடைமை அல்ல அல்ல, உலகவுடைமையாக ஏற்கனவே ஒப்புக்கொடுத்துவிட்டேன்.  என்னுடைய சிறுகதைகள் தொகுப்பு இந்த முறையில் மின்னூலாக கிட்டத்தட்ட 1000 முறை தரவிறக்கப்பட்டுள்ளது.

''நான் சொன்னா கேட்பியா மாட்டியா'  என்றால் உடனே கேட்கும் ஆட்களில் மிகமுக்கியமானவர் செங்கோவி. இவரை எனக்கு கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக அறைத்தோழனாக, நண்பனாக , சக எழுத்தாளராக தெரியும்.  விட்ட இடத்தில் இருந்து தொடரக்கூடிய நட்பு இவருடையது.  யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என , இந்த முன்னெடுப்பைப் பற்றி செங்கோவியிடம் விளக்குகையில் , அவரின் 'மன்மதன் லீலைகள் ( என் கிழிந்த டைரியில் இருந்து)' நாவலை மின்னூலாக தர,  உடனே சம்மதம் தெரிவித்தார். இரண்டே நாட்களில் சீனிவாசன் உதவியுடன் மின்னூல் தயாரானது.

நாவலாசிரியருடன் நானும் ஒரு கதாபாத்திரமாக நாவலில் வருவதால் , நாவலை விமர்சிப்பதோ பாராட்டுவதோ முறையாக இருக்காது.  சலிப்பைத் தராத ஆட்டோபிக்சன். படித்துப் பாருங்கள். பாராட்டோ திட்டோ செங்கோவியிடம் தெரிவித்து விடுங்கள்.


மின்னூலைத் தரவிறக்க http://freetamilebooks.com/ebooks/manmathan-leelaigal/

Saturday, January 11, 2014

இவருக்குப் பதில் இவர் - சிறுகதை


"இந்த வீடு நல்ல ராசியான வீடாம், நினைச்சது எல்லாம் நடக்குமாம், ஹவுஸ் ஓனர் சொன்னதைக் கேட்டியா?"   நான் சொன்னதை கவனிக்காமல்

'சூப்பர், இந்த  கேரக்டருக்கான ஆளை மாத்திட்டாங்க ... '  என அம்மு குதித்தற்கான காரணம் அவளுக்குப் பிடித்த தொலைக்காட்சித் தொடர் ஒன்றில், தொடர்கள் அடிக்கடி செய்யக் கூடிய 'இவருக்குப் பதில் இவர்' என ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவருக்குப் பதிலாக பிரபலமான நடிகர் ஒருவரை மற்றியதுதான்.

'சீரியல்ல ஆளை மாத்துற மாதிரி, இவருக்குப் பதில் இவர் என வாழ்க்கையிலும் ஆளை மாற்றும் வாய்ப்பு இருந்தால் எப்படி இருக்கும்?"

அம்மு மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு என்னைப் பார்த்தாள்.  அந்தப் பார்வை ஏதோ சண்டைக்கான அடித்தளம் போல இருந்தது.

"அப்படி மாத்தலாம்னு இருந்தால், யார கார்த்தி, நீ மாத்துவ'

சரியான அளவில் கால்களுக்கும் மட்டைக்கும் இடையில் எறியப்பட்ட பாதங்களைப் பதம்பார்க்கும் பந்து. இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது எனத் தெரியவில்லை.

"சும்மா, ஒரு கியுரியாசிட்டி, டிஸ்கஷனுக்காக கேட்டேன் அம்மு, நெவர் மைன்ட்"

"நானும் கியுரியாசிட்டிலதான் கேக்குறேன், எனக்கான உருவத்தைத் தானே மாத்திடுவ.... " இது மூக்கை உரசிச் சொல்லும் பவுன்சர்.

பந்துவீச்சாளர்கள் கடுங்கோபத்தில் பந்து வீசும் பொழுது, ஒன்றும் செய்யாமல் எப்படியாவது ஒப்பேத்திவிடனும். அப்படி இல்லை எனில், ஒன்று பெவிலியன் அல்லது ஹாஸ்பிடல்.  நான் பதில் சொல்லவில்லை.

"உனக்கு இன்னும் அவளை மறக்க முடியல கார்த்தி, ரிப்ளேஸ்மென்ட் சான்ஸ் கிடைச்சா, நான் தான் பர்ஸ்ட் பலியா இருப்பேன், அப்படித்தானே"

"அம்மு, லிசன் ... முகமும் குரலும் மாறினாலும், இந்த சீரியல்ல கேரக்டர் , மத்த கதாபாத்திரங்களோட நட்பு உறவு எல்லாம் அதேதானே , என் அம்முன்னா வெறும் முகமும் குரலும் மட்டுமில்ல, அவளோட கேரக்டர் , அன்பு பாசம் நேசம் எல்லாம், இதை எல்லாம் ரிப்ளேஸ் செய்ய முடியாது"
என்று ஒருவழியாக பந்தைத் தடுத்தாடினேன்.

சிலவினாடிகள் மௌனத்திற்குப்பின்னர், "சரி, அம்மு உனக்கு அப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா யாரை மாத்துவ"  கவர் டிரைவ் என நானே நினைத்துக் கொண்டு கேள்வியைக் கேட்டேன்.

என் கேள்வியைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாதவள் போல , மடிக்கணினியை திறந்து , யுடியூபில் மீண்டும் அந்தத் தொலைக்காட்சித் தொடரைப் பார்க்க ஆரம்பித்தாள்.

 பெண்கள் தங்களுக்குப் பதில் தெரியாத, பதில் சொல்ல விரும்பாத கேள்விகளை எப்படி தவிர்ப்பது எனத்தெரியும்.  ஆண்கள்தான் வேலை மெனக்கெட்டு பொய்யாக இருந்தாலும் ஏதாவது ஒரு பதிலை சொல்லுவார்கள்.

என் எண்ணம் எல்லாம், அந்த 'இவருக்குப் பதில் இவர்' என்பதிலேயே இருந்தது.

 அம்மு சொல்லுவதைப்போல , அம்முவை மாற்றி இருப்பேனோ... மாற்றி இருந்தால் யாரை வைத்து அவளை மாற்றி இருப்பேன். என் முதல் காதலி... இருக்கலாம். முதல் காதலின் பிரெஷ்னெஸ் மழைச்சாரல்.   அம்மு கியுட் தான், ஆனால் என்னுடைய ஆரம்ப இருபதுகள் மனநிலைக்குப் போனால், முதல் காதலி செம கியுட். முதல் காதலியின் முகம் மற்றும் குரல்  ஆகியவற்றுடன் அம்முவோட அன்பு பாசம் நேர்மை அர்ப்பணிப்பு அட்டகாசமாக இருக்கும் தானே !!!

இன்றைக்கான அத்தனைத் தொலைக்காட்சித் தொடர்களையும் அம்மு பார்த்து முடித்துவிட்டாள் என்பதை அவள் என் தோளைத் தொட்டு , முகத்தைத் தோள்பட்டையில் வைத்துக் கொள்கையில் புரிந்து கொள்ள முடியும்.

"புது வீடு, புது வாசம் புதுசா ஏதாவது டிரை பண்ணுவோமா " என அவளை அணைத்துக் கொண்டேன்.  விடியல் விரைவாகவே வந்தது.

அதிகாலையில், ஒரு பெண்ணின் குரல் குளியல் அறையில் இருந்து அலறலாகக் கேட்டது. எங்கேயோ கேட்ட குரல்.

முகத்தைப் பொத்திக் கொண்டு "கார்த்தி, இங்கே பாரு என் முகம் வேற மாதிரி கண்ணாடியில் தெரியுது"

கண்ணாடியில் தெரியும் முகமும் அவளின் முகமும் ஒன்று. அவள் என் பழையக் காதலி. இவளுக்குப் பதில் அவளா...

திரும்பக் கண்ணாடியைப் பார்த்தேன். அய்யோ !!! இது நானில்லை. வேறு ஒருவன். அம்மு முகத்தில் இருந்து கைகளை விலக்கினாள்.

"ஜீவா,,,, நீயா ,,, நீ இங்க எப்படி... கார்த்தி "

 எனக்குப் பதில் அவனா.

என்னை விட ஜீவா , அழகா இருந்திருப்பான் போல.

அம்மு திகில் அடித்ததைப்போல இருந்தாள். வீட்டில் இருக்கும் அத்தனை கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினாள்.

அவள் அளவுக்கு எனக்கு திகிலும் இல்லை கோபமும் இல்லை.
வாழ்க்கையில் இனி என்ன வேண்டும், முன்னொரு காலத்தில் நான் உருகி உருகி காதலித்தப் பெண் வடிவில் , இன்று என்னை உருகி உருகி நேசிக்கும் பெண். அவளுக்கு அவள் ஒரு காலத்தில் உருகி உருகி காதலித்த ஆணின் உருவில் நான்.  எனக்கு இது வின் - வின் சூழலாகத் தெரிந்தது.

"அம்மு, ஒருவேளை நம்முடைய பிரமையாக இருக்கும். ஒரு போட்டோ எடுத்துப் பார்ப்போமா"

புகைப்படத்திலும் எனக்குப்பதில் அவன், இவளுக்குப்பதில் அவள்.  இதுக் கூட தோற்ற மயக்கமாக இருக்கலாம் என பேஸ்புக்கில் புகைப்படத்தைத் தரவேற்றினால்.


"யார் இவர்கள், உங்களது தோழர்களா " என நண்பன் ஒருவன் கேட்டு இருந்தான்.

 உண்மையிலேயே எங்களை அவர்கள் ரிப்ளேஸ் செய்துவிட்டார்கள் என்பது விளங்கியது. எனக்கு திகிலை மீறிய கிளுகிளுப்பு இருந்தது. புத்தம் புதிதாய் ஒரு புதிய பெண் என் படுக்கை அறையில், எனக்கானவளாய்.

வாழ்க்கை என்ற நுண்கணிதத்தில் ஆண்கள் தொகைநுண்கணிதம் போல. அவர்களால் வாழ்க்கையில் அனைத்தையும் அரவணைத்துச் செல்ல முடியும்.

அம்முவின் தோளைத் தொட்டேன், விலக்கினாள்.

"வேண்டாம் கார்த்தி, தொடாதே !!  "  அம்முவின் அழுகையை நிறுத்த முடியவில்லை.  அன்றைய நாள் முழுவதும் வீட்டை விட்டு வெளியேப்போகவில்லை.  யாரைப்பார்ப்பது என்ன செய்வது எதுவுமே தெரியவில்லை.  அம்முவை கார்த்தையையும் நாங்கள் கொன்றுவிட்டோம் என கைது கூட செய்யப்படலாம்.

கண்ணாடித்துகள்களை எல்லாம் கூட்டிப்பெருக்கினோம். நேற்றைய மீத சாப்பாட்டை சாப்பிட்டோம்.  அம்மு தொலைக் காட்சித் தொடர்களின் அன்றைய பகுதிகளைப் பார்க்க ஆரம்பித்தாள். தோளைத் தொட்டாள் சாய்ந்தாள். அணைத்து முத்தமிட முயற்சிக்கையில் தள்ளிவிட்டாள்.

"நீ கார்த்தி தான், ஆனால் என் கண்களுக்கு நீ அவன்... எனக்குப்பிடிக்கல கார்த்தி, உன் கூட எந்தவிதத்திலும் நெருக்கமாக இருக்க என்னால் முடியாது , செத்துடலாம் போல இருக்கு... நான் செஞ்ச ஒரே தப்பு, நேத்து நீ அந்த கேள்வியைக் கேட்டப்ப , நீ ஒருவேளை ஜீவா உருவத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என யோசிச்சதுதான்... ஆனால் சத்தியமா உன்னைத் தவிர உன்னிடத்தில் வேறு எந்த உருவத்தையோ குரலையோவைக்க முடியாது"

பெண்கள் வகைநுண்கணிதம் போல. பகுப்பாய்வின் அடிப்படையில் வாழ முடியும். ஒன்றை பழைய காலத்தில் பிடித்து இருந்தாலும், காலம் கடந்து பழையது மீண்டு வந்தாலும் பகுத்து அவர்களால் ஒதுக்க முடியும்.

இருவரும் விலகியேப் படுத்துக் கொண்டோம்.  இந்தப் பாழாய்ப்போன வீட்டிற்கு ஏன் குடிவந்தோம் என இருந்தது.  விடியல் நீண்டு கொண்டே இருந்தது. எப்பொழுது தூங்கினேன் எனத் தெரியவில்லை, காலையில் கார்த்தி என காது மடல்களுக்கு அருகே அம்முவின்  குரல். கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். இமைகளை  மெதுவாகத் திறந்தேன்.
                         ---------------------

Tuesday, January 07, 2014

மூளைச்சலவை செய்யும் கட்டுரைகள் எழுதுவது எப்படி? - எழுதியவர் கிளிமூக்கு அரக்கன்இக்கட்டுரையை எழுதியவர் என் மண்டப எழுத்தாளர் கிளிமூக்கு அரக்கன் (https://www.facebook.com/kilimookku).  அவரின் அனுமதியுடன் இங்கு பகிரப்படுகின்றது. போற்றலும் தூற்றலும் அவருக்கே !!
------------------------------------
இந்தியக்குடியரசும் சரி தமிழ்ச்சமுதாயமும் சரி எந்நேரமும் பாசிஸ்டுகளின் கையில் மாட்டிக்கொள்ளலாம் எனும் வேளையில் அன்றாடம் கட்டுரைகள், சிறப்புக்கட்டுரைகள் என்ற பெயரில்விரலில் அடங்க கட்டுரைகளை நீங்கள் வாசிக்க நேரிடும். அவற்றிற்கு எதிர்வினை , விட்டேனா பார் என்ற வகையில் வரிக்கு வரி எழுதினால் செல்லுபடியாகாது. அதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டும் எனில் முள்ளை முள்ளால் எடுக்கும் விதமாக நீங்களும் மூளைச்சலவை செய்யும் கட்டுரைகளை எழுத வேண்டும். மூளைச்சலவைக் கட்டுரைகள் என்பது படித்தவுடன் வேலை செய்யாது. எந்த எதிர்விளைவையும் ஏற்படுத்தாது.

கனிய காத்திருக்கும் காயைப்போல நேரம் எடுக்கும். கனியும் நேரத்தில், நீங்கள் கொடுத்த மாத்திரை வேலை செய்யும். அப்படியான கட்டுரைகளை எழுதுவது எப்படி என இக்கட்டுரையில் பார்ப்போம்.

உங்களது நல்லெண்ண சமத்துவ இடது சாரி மூளை, இக்கட்டுரைக்குப் பொருத்தமாக இருக்காது என்பதால் உங்களது மூளை வலது சாரி ஆதிக்கத்தனமானது என கற்பனையாக நினைத்துக் கொள்ளுங்கள். அம்மூளை, கலைஞர் நயவஞ்சகமானவர் என்ற ஓர் எதிர்மறையான கருத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என விரும்புகின்றது என வைத்துக் கொள்ளுங்கள். நேரிடையாக கலைஞரைத் திட்டினால்நீதிமன்ற வழக்குகளைக் கூட சந்திக்க நேரிடும். ஆக வார்த்தைகளைத் தெளிவாக தேர்வு செய்ய வேண்டும். கலைஞரின் சூழ்ச்சி என்றாலும் எபெக்ட் இருக்காது. சாணக்கியர் கலைஞரின் சூழ்ச்சி. இதில் சூழ்ச்சி என்பதை பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும். இது நல்ல நுட்பம் என்றாலும் பழைய நுட்பம்.

எனவே உங்களின் கட்டுரையை நரி அப்பத்தைப் பகிர்ந்த கதையுடன் ஆரம்பிக்கலாம். இங்கு நரி என நேரிடையாக சுட்டிவிடக்கூடாது. அப்பத்தைப் பறிகொடுத்த குரங்குகள் மனிதர்கள் என்பதுடன் நிறுத்திவிட வேண்டும். படிப்பவர்கள் நரியுடன் கலைஞரைப் பொருத்திக் கொண்டு, சோற்றால் அடித்த பிண்டங்களாய் மாறி , பட்டனை மாற்றித் தட்டுவார்கள்.

படிப்பவருக்கு ஆற்காடு வீராசாமி என்ன சாதி எனத் தெரியாது. விஜயகாந்த் என்ன சாதி என தெரியாது. துரைமுருகன் என்ன சாதி எனத் தெரியாது, சிலருக்கு ஐயா ராமதாஸ் என்ன சாதி என்று கூடத் தெரியாது. ஆனால் விஜயகாந்தை ஆற்காட்டார் தேர்தல் கூட்டணிக்காக சந்தித்தார் என்ற சாதாரண நிகழ்வை எழுதிவிட்டு, தமிழ்நாட்டில் பரவலாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட சமூக வாக்குகளை திமுக - தேமுதிமக இதன் மூலம் அள்ளத்திட்டமிட்டுள்ளது என கொளுத்திப் போடலாம்.

கட்டுரையைப்படிப்பவனுக்கு இருவரின் சாதியும் தெரிந்துவிடும். இதற்குப்பின்னர் சாதிக் கண்ணாடியிலேயே அவர்களைப் பார்க்க ஆரம்பிப்பான். கட்டுரை ஆசிரியர் சாதியை குறிப்பிடும் நோக்கம் என்ன என எவனும் கேள்வி கேட்கமாட்டான்.
அடுத்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு எப்பொழுது போகலாம் என்பதில் அவன் யோசனை இருப்பதால் அவன் உங்கள் நோக்கத்தை விட்டு விட்டு, நீங்கள் கொடுத்த மாத்திரையை விழுங்கிவிடுவான்.

எங்கோ ஜெர்மனியிலோ ரசியாவிலோ பார்வையற்றவர் ஒருவர் கத்திச்சண்டையில் வல்லவராக இருந்தால், அவரைப்பற்றிய கட்டுரையைப் போட்டு, பாருங்கள் இவரால் சாதிக்க முடிந்து இருக்கின்றது, நம்மவர்களால் ஏன் முடியாது. இப்படி விதிவிலக்குகளை முன் நிறுத்தி இடப்பங்கீடு சமுத்துவம் சம்பந்தப்பட்ட விவாதங்கள் உச்சத்தில் இருக்கும் பொழுது கட்டுரைகள் எழுதலாம். இப்படி எழுதும்பொழுது, படிப்பவனுக்கு இடஒதுக்கீடு விசயங்கள் தாழ்வான ஒன்றாக  ஏதோ ஓசியில் மங்களம் பாடுவதைப்போல தோன்றும்.

பலவீனமான பிரதமர்கள் என ஒரு கட்டுரை எழுதும்பொழுது நைச்சியமாக விபி.சிங்கை அதில் சேர்த்துவிட வேண்டும். வாசிப்பவன் சந்திரசேகர் , மன்மோகன் சிங் வரிசையில் விபி.சிங்கையும் வைத்துவிடுவான். எண்ணம் நிறைவேறும்.

விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என நிறுவ வேண்டும், அதே சமயத்தில் உங்களை சந்தேகப்பட்டுவிடக்கூடாதா... பிராபகரன் மாவீரன் என குறிப்பு எழுதிவிட்டு, அதற்கு கீழேயே தனிநாடு கோரும் காஷ்மீர் தீவிரவாதிகள் பயங்கரம். 100 பேர் குண்டு வெடிப்பில் படுகொலை அப்படி என சிறப்புசெய்தி வெளியிடவேண்டும். ஒன்றும் ஒன்றும் இரண்டாகிவிடும். அதே போல், உங்களுக்குப் பிடிக்காத கடவுள் மறுப்பாளர்கள் யாராவது , மரியாதை நிமித்தமாக இறை சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒன்றைப் பெற்றுக்கொண்டார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதனை படம் பிடித்து தேவைப்படும்பொழுது பயன்படுத்திக் கொள்ளுங்கள். மசூதியை இடிப்பது தவறு என்றத் தலைப்பு வைத்து, அதில் ஔரங்கசீப் எப்படி கோவில்களை இடித்தார் என்ற விபரணனைகள் சேர்ப்பது மற்றும் ஓர் உதாரணம்.

இப்பொழுது உங்கள் மூளையை இயல்பாக்கிக் கொள்ளுங்கள். கூடங்குளம் அணு உலை செயற்படவேண்டும் என நினைக்கின்றீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். கட்டுரை எழுதும்பொழுது, கூடங்குளம் அணு உலைத்திட்ட எதிர்ப்பாளர்கள் என்பதற்குப்பதிலாக,
நாட்டு நல கூடங்குளம் அணுமின்சாரத்திட்டத்தை எதிர்க்கும் போராளிகள் எனக் கட்டுரையில் எழுதவேண்டும்.

மேற்சொன்ன வழிகாட்டுதல்களை வைத்து நீங்கள் கட்டுரையும் வரையலாம் அல்லது படிக்கும் கட்டுரையை பகுத்தும் ஆயலாம்.

இறுதியாக மூளைச்சலவை செய்யும் கட்டுரைகளில் 'டாக்டரேட்' பட்டம் பெற ஜெயமோகனின் கட்டுரைகளையும் கிளிமூக்கு அரக்கனின் (https://www.facebook.com/kilimookku) கட்டுரைகளையும் தொடர்ந்து வாசியுங்கள்.

பின்குறிப்பு :- கலைஞரையும் திமுக வையும் இங்கு எடுத்துக்காட்டுகளாக எடுக்கக் காரணம், அவர்கள் மட்டுமே விமர்சனங்களை எப்படி வைத்தாலும் எடுத்துக் கொள்வார்கள்.

Monday, January 06, 2014

என்னுடைய சிறந்த 150 சிறுகதைகள் - சிறுகதைத் தொகுப்பு - நூல் வெளியீடு - விளம்பரங்கள் தேவை


எழுதப்படுபவை எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்படுபவை என நான் நம்புவதால் , என்னுடைய எல்லா ஆக்கங்களும் வாசிப்பவர்களுக்கே சொந்தம் என்ற வகையில் தான் உரிமத்தை வலைப்பூவில் வைத்திருக்கின்றேன்.  இதில் என்னுடைய பேஸ்புக் பத்திகளும், டிவிட்டர் குறிப்புகளும் கூட அடங்கும்.

நான்கு பேர் தொடர்ந்து கைத்தட்டிக் கொண்டே இருந்தாலும், நம் எழுத்து நல்ல எழுத்துதானா என ஐயம் நீங்க குறைந்தது நான்கு ஆண்டுகளாவது எழுத்துப் பயிற்சி தேவை.  அப்படியான நம்பிக்கை ஏற்பட்ட ஒரு நாளில் சிலப்பதிப்பகங்களுக்கு மின்னஞ்சல் செய்தேன். அவரவர் வேலைகளில் மும்முரமாக இருந்ததனால் பதில் ஏதும் வரவில்லை.

அப்பொழுது (2010 ஆம் ஆண்டு இறுதியில்) அமேசானின் சுயப்பதிப்பு திட்டம் பற்றிய விபரம் தெரிய வந்தது.  அமேசானில் Print on Demand என்ற வகையில் தமிழிலும் , சிலக்கதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு தொகுப்பையும் வெளியிட்டேன்.  ஆங்கில மொழிப்பெயர்ப்பு அமேசான் கிண்டில் வடிவிலும் வெளியிடப்பட்டது.

இதற்கு முன்னர் அமெரிக்க வாழ் தமிழ் எழுத்தாளர்கள் செய்து இருக்கின்றனரா எனத் தெரியவில்லை, ஆனால் எனது சமகால எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு முன்பாகவே நான் தமிழ்ச்சிறுகதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை, அமேசான் கின்டில் வடிவில் வெளியிட்டேன் எனும் பொழுது பெருமையாகத்தான் இருக்கின்றது. ( ஜெர்மன் , ஸ்விடீஷ் , இத்தாலிய , போலிஷ் மொழிப்பெயர்ப்புகளையும் தயார் செய்து வைத்து இருக்கின்றேன். சரியான நேரத்தில் வெளியிடலாம் என காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளது)

சிறுகதைத் தொகுப்பு - தமிழ் - புத்தகம் http://www.amazon.com/Baltic-Days-Stories-Collection-Edition/dp/1456538888

சிறுகதைத் தொகுப்பு - ஆங்கிலம் - கிண்டில் http://www.amazon.com/Omega-Stories-Catalyst-Selva-ebook/dp/B004IWQZJ6/

சிறுகதைத் தொகுப்பு - ஆங்கிலம் - புத்தகம் http://www.amazon.com/Omega-Stories-perspective-Catalyst-Selva/dp/145653274X/

புத்தகம் பெரிய அளவில் விற்பனை ஆகி, நான் ஒன்றும் பணக்காரன் ஆகிவிடவில்லை. ஆனாலும் ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் புத்தகங்கள் இருந்தது ஒரு முகவரியாக இருந்தது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என வலைப்பதிவும் எழுதினேன்.  நீரின் இயல்பு ஊறுவது.. இறைத்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை.

உணர்ச்சி வசப்பட்டு மேல் இருக்கும் சுட்டிகளில் இருந்து புத்தகங்களை வாங்கிவிடாதீர்கள். அவை எல்லாம் என் தளத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன.

அதன் பின்னர் நண்பர்கள் ரவிசங்கர் ( https://www.facebook.com/ravidreams) மற்றும் சீனிவாசன் (https://www.facebook.com/tshrinivasan) இருவரும் அவர்களது இலவச மின் நூல் திட்டத்தில் ( freetamilebooks.com ) சேர , This work is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License. உரிமத்தில் கதைகளைத் தர முடியுமா எனக் கேட்டார்கள்.  வெட்டியாய் வெயிலில் காயும் நீரை , வாய்க்கால் வரப்பு வெட்டி எடுத்து செல்ல விரும்புவருக்கு இல்லை என்றா சொல்வேன். அனுமதிக்க, உடனே மின்னூல் ஆக கொண்டு வந்தார்கள். கிட்டத்தட்ட 600 முறைக்கு மேல் மின்னூல் சிறுகதைத் தொகுப்பு தரவிறக்கப்பட்டுள்ளது.

அதற்கான சுட்டி -  http://freetamilebooks.com/ebooks/vinaiooki-short-stories/ 


இப்படி புத்தகமாகவும் , மின்னூலாகவும் கிடைக்கும் அதே வேளையில் என் சிறுகதைகள் எனது வலைத்தளத்திலும் பண்புடன் குழுமத்திலும், இன்ன பிற இணையத்தளங்களிலும் வாசிக்கக் கிடைக்கின்றன.  எனது சிறுகதைகளில் இருக்கும் இலக்கணப்பிழை, ஒற்றுப்பிழை, வார்த்தைப்பிழைகள் எல்லாவற்றையும் தளைத்தட்டி திருத்தி ,  சிறந்த 150 சிறுகதைகளை மின்னூலாகவும் அச்சுவடிவிலும்( சுயப்பதிப்பு - கேளுங்கள் அச்சடிக்கப்படும் வகையில்) வெளியிடலாம் என இருக்கின்றேன்.

இதில் இந்தத் தடவை எடுக்கப்போகும் சிறப்பு முயற்சி, சிறுகதைத் தொகுப்பின் இரண்டு வடிவிலும் , விளம்பரங்களை உள்ளடக்குவது.  பள்ளி/ கல்லூரி , நிறுவன ஆண்டு விழா மலர்கள் எல்லாவற்றிலும் இப்படியான விளம்பரங்களைப் பார்த்து இருப்பீர்கள்.

150 சிறுகதைகள் என்றால் 400 பக்கங்கள் குறைந்தது வரும். 10 பக்கங்களுக்கு ஒர் அரைப்பக்க விளம்பரம் , 40 விளம்பரங்கள் பெறலாம் என இருக்கின்றேன்.  நான் சுமார் எழுத்து குமாரு என்பதால் 40 விளம்பரங்களுக்கு அப்படியே ஆயிரக்கணக்கில் கொண்டு வந்து மக்கள் கொடுப்பார்கள் என்பது எல்லாம் பேராசை. அதற்காக 'விளம்பரங்களை' இலவசமாகவும் கொடுக்கலாம் என்றால், இதை நடைமுறைப்படுத்தப்போகும் மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடலாம்.

ஆக அரைப்பக்கத்திற்கு ரூபாய் 500 என்றும் முழுப்பக்கத்திற்கு ரூபாய் 1000 என்றும், அட்டைப்பின் பக்கத்திற்கு ரூபாய் 5000 என்றும் வைக்கலாம் என இருக்கின்றேன்.

வெளியீட்டு வகைகள்

1. மின்னூல் - எதிர்பார்ப்பு - குறைந்தது 2000 தரவிறக்கங்கள் (விளம்பரங்கள் , நிலைத்து நிற்கும், அளவிலா மறு சுற்றுக்குப் போகும்)
2. கிண்டில் - குறைந்தது 100
3. அச்சுப்புத்தகம் - அமேசான் மற்றும் பொதி குறைந்தது 500 ( கை செலவில் நூலகங்களுக்கும் கொடுக்கலாம் என இருக்கின்றேன் , ஆக சிறுகதைகளுடன் விளம்பரங்கள் இன்னும் அதிகமான நபர்களைச் சென்றடையும்)

மேலும் உரிமத்தின் படி உள்ளடக்கத்தை சிதைக்காமல் மறுபிரசுரம் செய்து கொள்ளலாம் எனும்பொழுது , உள்ளடக்கத்தில் விளம்பரங்களும் அடங்கும்.

யார் யாரிடம் விளம்பரங்கள் கேட்கலாம்.

1. பதிப்பகங்கள்
2. புத்தக விற்பனை நிலையங்கள்
3. அரசியல் வாதிகள் - தேர்தல் நெருங்குவதால் அரசியல்வாதிகள் தங்களது கட்சி சார்பாக விளம்பரங்கள் கொடுக்கலாம்
4. கல்லூரிகள்
5. பெரிய நிறுவனங்கள்
6. புலம்பெயர்ந்து இருக்கும் இந்தியத் / ஈழத் தமிழர் நிறுவனங்கள்
7. சிறுதொழில் நிறுவனங்கள்

ஒரு வேளை யாருமே விளம்பரம் கொடுக்க முன்வரவில்லை என்றாலும், ஒரு ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு 40 விளம்பரங்களை வெளியிடலாம் என இருக்கின்றேன்.  செய்து காட்டினால் பின்வருபவர்களுக்கு ஒரு பாதை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் ஒரு ருபாயிலும் சிறப்பு முயற்சியை செய்யலாம். அனேகமாக இந்த முயற்சி வெற்றியடையும். அப்படி அடையும் பட்சத்தில் மின்னூல் / சுயப்பதிப்பு வழியே வெளியிடுபவர்கள் தங்களது படைப்புகளை பதிப்பிக்கும் முன்னரே கொஞ்சம் காசு பார்க்கலாம்.  அனேகமாக எனது முதல் விளம்பர விண்ணப்பத்தை கிழக்குப் பதிப்பக பத்ரியிடம் இருந்து ஆரம்பிக்கலாம் என இருக்கின்றேன். 500 ரூபாயோ ஒரு ரூபாயோ விளம்பரம் கொடுப்பார் என நம்புகின்றேன்.