Monday, March 04, 2013

மண்டப எழுத்தாளன் (Ghost Writer) - சிறுகதை

இரண்டு பேர் ஆடும் சதுரங்க ஆட்டத்தை தனியொருவனாக ஆடுவது என் பொழுது போக்குகளில் ஒன்று. தன்னை வெல்வது ஆண்மை மட்டுமல்ல, ஆன்மிகமும் கூட.  செஸ் ஆடுவதைப்போல,  அம்மு, ஆவி, ஈழம், திராவிடம், வன்மம், காமம் என   எனக்கான கேள்விகளுக்கு நான் வைக்கும் பதில்கள் என் எழுத்து. சிறுகதையோ பத்தியோ வார இதழ்களுக்கு இதுவரை எதுவும் அனுப்பியதில்லை. எனக்காக தோன்றியதை எழுதி, இணையத்தில் எங்கேயாவது பதிவு செய்துவிட்டு,  வேண்டியவர்கள் படித்துவிட்டார்கள் என்றால், கலவிக்குப்பின்னர் கிடைக்கும் அயர்ச்சியான உணர்வைப் போன்றதொரு மனநிலையில்,  அந்த எழுத்துக்களும் மறந்துப் போய்விடும். இதில் சிலர் கதையில் என்னைத் தேடிக்கொண்டிருப்பார்கள். சிறுகதை நிஜங்களை நம்புபவர்கள். அவற்றைவிட என் வாழ்க்கைத் தொடர்கதையில் சுவாரசியம் அதிகம் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்வதில்லை

எழுத்து படிக்கப்பட்டவுடன், எழுத்தாளன் மட்டுமல்ல, எழுத்தும் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்று நான் சொல்லிக்கொண்டாலும், ஆடிக்கொருதடவை ஏதாவது சஞ்சிகைகளில் சிலப் பத்திகள் வரும்பொழுது, அதை கையில் வைத்துக் கொண்டு அம்மு சந்தோசப்படுவதைப் பார்ப்பதற்காகவே வெகுசனமாகவும் எழுதவேண்டும் என நினைப்பதுண்டு.

போன வாரம், ஒரு மின்னஞ்சல் வந்து இருந்தது. கொங்கு மண்டலத்தில் இருக்கும் வளர்ந்து வரும் ஓர் ஆன்மிக குருவிற்கு , சில நீதிக்கதைகள் எழுதித் தரவேண்டும் என்பதாக செய்தி அதில் இருந்தது.  முதலில் நான் நம்பவில்லை. நான் நிறையப் பேருக்கு விளையாடியதைப் போல எனக்கும் செய்கிறார்கள் எனக் கண்டுகொள்ளவில்லை.  15 கதைகள் எழுதிக்கொடுத்தால், 60 ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார்கள். பணம் எனக்குப் பல்லைக் காட்டியது.  பதில் அனுப்பினேன்.  மீன்கடைக்கு மீனின் வாசம்போதும், இணைய உலகில் சிறு தேடல் நம் தளத்தை நோக்கிக் கொண்டு வரும்.  தொலைபேசியில் அழைத்தார்கள்.

“உங்கள் தளத்தில் அந்த ஆன்மிகத் தேடல் கதைப் படித்தோம், மகாமகாரிஷி குருக்களுக்கு பிடித்துப் போய்விட்டது. அது போன்றக் கதைகளை மகாமகாரிஷி குருக்கள் ஒரு வார இதழில் எழுதப்போகின்றார், அதற்காக அதைப்போன்ற கதைகள் நீங்கள் எழுதித் தரவேண்டும்”

“மண்டபத்தில் உட்கார்ந்து எழுதித் தந்துவிடவேண்டும் அவ்வளவுதானே... நக்கீரர்கள் யாரும் வந்துவிட மாட்டார்களே”

எதிர்முனையில் இருந்தவர் சிரித்தார். எனது வங்கிக் கணக்கும் சிரித்தது. ஆன்மிகவாதிகள் பணவிசயத்தில் நேர்மையாகத்தான் இருக்கிறார்கள்.

“ அனைத்தையும் அர்ப்பணி ... ஆண்டவனுக்கு” என்றத் தலைப்பில் நீதிக்கதைகள் சக்கைப்போடுப் போட்டன. ஒவ்வொரு வாரமும் அம்மு புத்தகத்தை கையில் கொண்டுவந்து கொடுத்து, வாசி வாசி எனப் படுத்தி எடுத்தாள். தொழிலில் நான் நேர்மையானவன் என்பதால் அவளுக்கு இந்த விசயம் தெரியாது. போகிறப்போக்கில் மகாமகாரிஷிக்களின் சிஷ்யையாகவே மாறிவிடுவாள் போல இருந்தது. அதற்கும் ஒரு காரணம் இருந்தது, சில சமயங்களில் அவள் பேச்சில் தூவிவிடும் குட்டி குட்டி விசயங்களை நான் எழுத்தில் சேர்த்து விடுவேன்.

“பாருடா கார்த்தி, நான் போன வாரம் சொன்னதை சாமி அப்படியே இந்த வாரம் எழுதியிருக்காரு”

இரண்டு மாதங்கள் கடந்து இருக்கும். ஒரு தொலைபேசி அழைப்பு. இன்னொரு சாமியாரின் அலுவலகத்தில் இருந்து.  இவரை மகாமாகாரிஷிக்குருக்களுக்கு போட்டி சாமியார் என்றும் சொல்வார்கள். அவர் கங்கைக்கரை காவி என்றால் இவர் கொஞ்சம் நவநாகரீகமானவர். பகுத்தறிவு சாமியார் எனக்கூட வைத்துக்கொள்ளலாம். ஆங்கிலம் , தமிழ் , கொஞ்சம் தமிழ்த் தேசியம் எல்லாம் பேசும் சாமியார். பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட படங்களை எல்லாம் வலைத்தளத்தில் வைத்திருப்பவர். இப்பொவெல்லாம் சோப்பு டப்பா விற்கிறவன் கூட தேசியத்தலைவருடன் இருப்பதாக படம் செய்து வைத்துக்கொள்கின்றான்.  பெரிய சாமியாராக இருந்த போதிலும் எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் அவரே தொடர்புக்கு வந்தார்.

“தோழா, உங்கள் வலைப்பதிவைப் படித்தோம், நீங்கள் ஆன்மிகத்தையும் அரசியலையும் இணைக்கும் பாங்கு பிடித்திருந்தது. ஒரு பிரபல வாரப்பத்திரிக்கைக்கு கட்டுரைகள் எழுதப்போகின்றேன், எனக்கு நேரம் இல்லாத காரணத்தால், நல்லதொரு சிந்தனையாளனை தேடிக்கொண்டு இருக்கின்றேன். நீங்கள் ஒரு பத்துக் கட்டுரைகளை எழுதுக் கொடுத்தீர்கள் என்றால் , அதற்கான சன்மானம் உங்களுக்கு வழங்கப்பட்டுவிடும். எனதுத் திருத்தத்திற்குப்பின்னர் பிரபல வார இதழில் வெளிவரும், தலைப்பு - அனைத்தையும் அடித்து நொறுக்கு .. ஆண்டவன் நீயே ”

சிவபெருமானுக்கே மண்டப எழுத்தாளன் என்ற பெருமை ஒருதடவைதான் கிடைத்தது. கடவுளை விஞ்சியவன் ஆகிவிட்டேனோ...

“தோழா, மேலும் ஒரு விசயம், ஆக்ரோஷம் தூக்கலாக இருக்க வேண்டும், குறிப்பாக அந்த மக்குசாம்பிராணி மஹாரிஷி எழுதும் நீதிக்கதைகளைத் தாக்குவதுப்போல கட்டுரையின் ஊடாக சிலக்கதைகளையும் சேருங்கள்.... கதை எழுதுகின்றானாம் கதை... மட்டமான ரசனைக்காரன்”

இந்த ஆட்டம் எனக்குப் பிடித்து இருந்தது. நான் வரிசைப்படுத்தி வைத்திருந்த கறுப்பு , வெள்ளை நிற சதுரங்கக் காய்கள் என்னைப்பார்த்து சிரித்தன. மற்றும் ஓர் ஆட்டத்தைத் தொடங்கினேன்.