சுமைக்கூலி முக்கால் பணம் - மலிவுவகை விமான சேவைகள்
தரைக்கு மேலே பல்லாயிரம் அடிகளில் பறக்கும் விமான பயணம் என்பது எப்பொழுதுமே ஒரு சாகசம்தான், விமானப் பயணம் என்பது கடந்த பத்தாண்டுகள் முன்பு வரை, பணக்காரர்களுக்கானது என்ற நிலையை, மலிவு விலை விமான சேவைகள் அடித்து நொறுக்கி வருகின்றன. ஐரோப்பாவை பொறுத்தமட்டில், ஐரோப்பிய ஒன்றிய இணைப்புகளைக் காட்டிலும் மக்களை இணைத்தது இந்த வகை விமான சேவைகள்தாம், குறிப்பாக ரையான் ஏர் என்ற விமான சேவை. மேல்நடுத்தர வர்க்கத்திற்கான இன்பச்சுற்றுலாக்களை, சாமனிய ஐரோப்பியர்களுக்கும் திறந்துவிட்டது ரையான் ஏர் விமானசேவை என்பது மிகைப்படுத்தப்பட்டதல்ல, ஏறக்குறை மூடப்பட வேண்டிய பல விமான நிலையங்களுக்கு மறு வாழ்வு அளித்தது ரையான் ஏர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் ஏகப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், கட்டிட வேலைகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்டிருக்கலாம், ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய குடிமக்கள் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்ற உரிமையத் தந்திருந்தாலும் , மக்களை எளிதாக இடம்பெயர இந்த வகைவிமான சேவைகள் கண்டிப்பாக உதவின.
ஆனாலும் சுண்டைக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம் என்ற வகையில் ரையான் ஏர் விமான சேவையோ அல்லது ஏனைய மலிவுவகை விமான சேவைகளை உண்மையில் அத்தனை மலிவானது அல்ல, அடிப்படை விலை ஒன்றுமே இல்லாதது போலத் தோன்றினாலும், அடுக்கடுக்காய் அவர்கள் வைக்கும் கட்டணங்கள், ஏனைய விமான சேவைகளைக் காட்டிலும் பல சமயங்களில் அதிகமாகவே வந்துவிடும்.
ஐரோப்பாவில் விஸ் ஏர், ரையான் ஏர் போன்ற மலிவுரக விமானசேவைகளின் பிரச்சினைகள்,

2. உதாரணத்திற்கு, ஸ்டாக்ஹோல்மில் இருந்து பாரிஸிற்கு விமான சேவை இருக்கிறது, வெறும் 20 ஈரோக்கள் தான் என விளம்பரப்படுத்துவார்கள், ஆனால் நிஜத்தில், இந்த சேவையைப் பயன்படுத்த, நீங்கள் ஸ்டாக்ஹோல்ம் நகரத்தில் இருந்து ஸ்காவ்ஸ்டா (நீயுஷாப்பிங்)என்ற 160 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் நகரத்திற்கு பயணப்படவேண்டும். அதேபோல, பாரிஸை அடுத்துள்ள பவாய் நகரத்திற்கே பறப்பீர்கள், அங்கு இருந்து பாரிஸ் சொல்வது உங்கள் பிரச்சினை. ஸ்டாக்ஹோல்மில் இருந்து பாரிஸ் போய் வர, வெறும் உள்ளூர் பஸ் பயணத்திற்கே ஒரு ஆளுக்கு கிட்டத்தட்ட 50 ஈரோக்கள் செலவளிக்க வேண்டியதாக இருக்கும்.
3. தொடர் பயண விமான சேவைகளை இவர்கள் அனுமதிப்பதில்லை. உதாரணத்திற்கு நேரிடையான விமான சேவை இல்லாத நகரத்திற்கு, ஒரே பயண சீட்டின் மூலம் வேறு ஒரு நகரம் வழியாக பயணப்படுவது, நேரிடை விமான சேவை இல்லாத நகரத்திற்கு நீங்கள் பயணப்பட வேண்டுமனால், தனித்தனியாக பயணச்சீட்டு எடுத்து, தனித்தனி உள்நுழைவு நடைமுறைகளை ஒவ்வொரு விமான நிலையத்திலும் தொடரவேண்டும்.
4. பயணச்சீட்டுடன் 10 கிலோ கைப்பை மட்டுமே அனுமதி. செக்-இன் வழியாக உடைமைகளை எடுத்துச் செல்ல, மேலதிக கட்டணம் செலுத்த வேண்டும். செக்.இன் உடைமையோ கைப்பையோ குறிப்பிட்ட எடைக்கு மேல் அதிகமாக இருந்தால் ஈவிரக்கமின்றி தண்டக்கட்டணம் வசூலிப்பார்கள்., குறைந்தது 50 ஈரோக்கள் வரை தண்டக்கட்டணம் இருக்கும். உங்கள் சுற்றுலாவுக்கான மகிழ்ச்சி மனநிலையை நொடியில் உடைத்துவிடுவார்கள்.
5. விமானப் பயணத்தில் குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள். ஆனால் சந்தைக்கடையைப் போல லாட்டரி சீட்டில் இருந்து, கவர்ச்சிப்படம், சிகரெட் , பரிசுப்பொருட்கள், நொறுக்குத் தீனிகள், உணவு என அரை மணி நேரப் பயணம் என்றாலும் கூட ஆணுறைகளைத் தவிர அத்தனையையும் விற்பார்கள்.
6. விமானங்கள் ரத்து செய்துவிட்டால், அனாதைகளைப் போல விமான நிலையத்தில் தேவுடு காக்க வைத்துவிடுவார்கள்.
7. விமானப் பயணம், மேட்டிமை மக்களைப்போல கவுரவமாக நடத்தப்படுவீர்கள் என எதிர்பார்க்காதீர்கள், சென்னை மாநகரப்பேருந்துகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
8. நேரங்கெட்ட நேரத்தில்தான் விமான் சேவைகளை இயக்குவார்கள்,
இதையெல்லாம் மீறி பயணம் செய்ய விரும்புபவர்கள் கவனிக்க வேண்டிய விசயங்கள்,
1. விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து விட வேண்டாம், விமான நிலையத்திற்கும் நீங்கள் செல்ல வேண்டிய நகரத்திற்கும் எத்தனை தூரம் , எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் உங்கள் பயணச்செலவில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ரோம் நகரத்தைப் பொறுத்த மட்டில், ரையான் ஏர் விமான சேவை செயற்படும் விமான சேவை, கிட்டத்தட்ட நகரத்திற்குள்ளேயே இருக்கின்றது. ரோம் நகர மையத்திற்கு குறைந்த பட்சம் 2.20 அதிகபட்சம் 4 ஈரோக்களில் சென்றுவிடலாம். இவர்கள் வியன்னா நகரத்திற்குப் பறப்பதில்லை, ஆனால் வியன்னவில் இருந்து 40 நிமிட பேருந்து பயணத் தூரத்தில் இருக்கும், ஸ்லோவாக்கிய நாட்டின் தலைநகரத்திற்குப் பறக்கிறார்கள். ஆக ரோம், வியன்னா நகரங்களைச் சுற்றிப்பார்க்க, இந்த வகை விமான சேவைகள் நிச்சயம் உதவும். போலாந்து நாட்டைப் பொறுத்த மட்டில் எல்லா நகரங்களின் மைய விமான நிலையத்திற்கே இந்த வகை சேவைகள் இயக்கப்படுகின்றன.. விரைவில் மாற்றப்பட இருக்கும் வார்சாவா விமான நிலையம் கூட நகரத்தில் தான் இருக்கின்றது.
2. ஒரேயோரு கைப்பை தான் உடன் எடுத்து செல்ல அனுமதி. அதனுள்ளேயே மடிக்கணினி , ஏனைய பொருட்கள் அனைத்தும் வைத்துவிட வேண்டும். அதுவும் விமானசேவைகள் கொடுத்து இருக்கும் அளவீடுகளில் தான் பை இருக்க வேண்டும். விமானம் ஏறுவதற்கு முன்னர் கூட சோதிப்பார்கள். ஆகையால் அவர்கள் சொல்லி இருக்கும் அளவீடுகளின் படியே பயணப்படுவது, மன உளைச்சலைக் குறைக்கும். எதற்கும் செக்-இன் உடைமைகளை எடுத்துச் செல்லவும் முன்பதிவு செய்துவிடுவது நல்லது,
3. விமானப் பயணங்களில் அனுமதிக்கப்படும் அளவிலான குடிதண்ணீர் , உணவு வகைகளை உடன் எடுத்துச் செல்வது உசிதமானது. மறந்தும் கூட விமானத்தில் விற்பதை வாங்காதீர்கள். 5 மடங்கு விலை கொடுக்க நேரிடும்.
4. செக்-இன் உடைமைகளுக்கான விலை , நகர மையத்திற்கு செல்லும் பேருந்துக்கான கட்டணம், பயணச்சீட்டின் விலை இவற்றை ஏனைய நற்மதிப்பு பெற்ற விமான சேவைகளுடன் ஒப்பிட்டு பின் பதிவு செய்யுங்கள்.
சுமைக்கூலியை குறைத்துவிட்டால் சுண்டைக்காய் பணத்தில் நிச்சயம் ஐரோப்பாவை ஒரு சுற்று சுற்றிவிடலாம்.
---
நார்வேயில் இருந்து வெளிவரும் வானவில் மாத இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை.
---
நார்வேயில் இருந்து வெளிவரும் வானவில் மாத இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை.