Monday, April 18, 2011

ஃபீனிக்ஸ் தேசத்திலே - தொடர்கதை - பாகம் 4

பாகம் 1

-----

சரியாக 60 நிமிடங்களுக்குப் பின்னர் குளித்து முடித்துவிட்டு, தலையில் தேங்காய்பூ துண்டுடனும், கணுக்காலுக்கு சற்றுமேல் இருந்து, கழுத்து வரை இறுக்கமாக நீலநிறக் கவுனை அணிந்து வெளியே வந்தாள்.

”என்ன கார்த்தி, உங்கள் திரைப்படங்களில் வரும் கதாநாயகியைப்போல இருக்கின்றேனா !!” என்ற அவளின் குறும்பான கேள்விக்கு நான் பதில் எதுவும் சொல்லவில்லை. டிராட்ஸ்கியின் புகைப்படங்களைப் பார்த்தபின்னர் கோஸியாவை கவர்ச்சி நோக்கில் பார்க்க இயலவில்லை.

புகைப்படங்களைப் பற்றி சொல்லிவிடலாமா !! எப்படியும் மனம் உடைந்துப் போய்விடுவாள், இந்தச் சூழலில் அவளுக்கு எப்படி ஆறுதல் அளிப்பது என்பது எனக்குத் தெரியாது, தெரிந்து இருந்தாலும் நான் இருக்கும் சூழலில் கோஸியாவிற்கு ஆறுதல் அளிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்பதால் டிராட்ஸ்கியைப் பற்றிய எந்த விபரத்தையும் பகிர்ந்து கொள்ளவேண்டியது இல்லை என முடிவு செய்தேன்.

”கார்த்தி, நாளை காலை சீக்கிரமாக நான் அலுவலகம் செல்ல வேண்டியிருப்பதால், நான் தூங்கப்போகின்றேன்” என்றபடி வரவேற்பறையில் இருந்த சிறிய சோஃபாவில் இருந்து மடக்கு கட்டிலை நீட்டி எனக்கான படுக்கையை தயார் செய்து கொடுத்து விட்டு, அவளின் அறைக்கு சென்று உள்தாழிட்டுக் கொண்டு விளக்கை அணைத்துவிட்டாள்.

முன்பின் தெரியாத என்னை, எப்படி கோஸியா அவளின் வீட்டில் தங்க அனுமதிக்கிறாள் , என்பதன் குழப்பம் மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது.

எது எப்படியோ இருக்கட்டும், எனக்கு 300 ஈரோக்கள் மிச்சம் என்ற திருப்தியுடன் உறங்கிப்போனேன். நெடுந்தூக்கத்தில் ஏற்பட்ட ஒரே இடைவெளி விடியற்காலையில் கோஸியா எழுப்பியதுதான். வெளியில் பூட்டிவிட்டு சாவியைத் தானே எடுத்துக் கொண்டுப் போவதாக சொல்லிவிட்டுப் போனாள். அரைத் தூக்கத்தில் என் மேல் நம்பிக்கை இல்லாமல் அப்படி செய்கிறாளோ என்றெல்லாம் யோசிக்கத் தோன்றவில்லை.

10 மணி அளவில், வந்து சாவியைக் கொடுத்துவிட்டு, “விருந்தினரை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு செல்வது, எங்களது போலிஷ் நாகரிகக் கூறு இல்லை, நீ தூங்கிக் கொண்டிருந்ததால் சாவியை எடுத்துச் சென்றேன்” என மன்னிப்புக் கோரினாலும், என்மேல் இருந்த சிறிய சந்தேகத்தால் திரும்ப வந்திருப்பாளோ எனத்தான் தோன்றியது.

காலைக்கடன்களை முடித்துவிட்டு , அடுக்களையில் சென்று காப்பி போட்டுக்கொண்டு, சில பிரட் துண்டுகளுடன் நான் சந்தித்து இருக்க வேண்டிய நபருடன் ஸ்கைப்பில் தொடர்பு கொண்டேன். என்னுடைய பின்புலம், வேகத்துடன் ஆன விவேகமான பேச்சு, எனது படிப்பு, தமிழார்வம் , இன உணர்வு எல்லாம் அவருக்குப் பிடித்து இருந்ததால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இந்தத் திட்டத்திற்கு என்னுடன் 5 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், எங்கள் அனைவருக்கும் முன்னாள் யூகோஸ்லாவியா நாடான, கொசோவாவில் பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மிகுந்த சிரமங்களுக்கு இடையில் நான் விரும்பிய பணியில் என்னை ஈடுபத்திக் கொள்ளப்போகின்றேன்.

கையில் கிடைத்த கோழிக்கறி, கொஞ்சம் மீன் ஆகியவற்றுடன், எனக்குத் தெரிந்த வகையில் இரவு உணவு தயார் செய்துவிட்டு, கோஸியாவின் வருகைக்காகக் காத்திருந்தேன். வீட்டின் அழைப்பு மணி அடிக்கப்பட்டது. கதவைத் திறந்தேன்.. வாட்டசாட்டமான ஒரு போலாந்து நாட்டுக்கார இளைஞனுடன் கோஸியா நின்று கொண்டிருந்தாள்.

”இது மார்ச்சின், ஆங்கிலத்தில் மார்ட்டின் என்பார்கள், காவலதிகரியாக இருப்பவன் எனக்கு நெருங்கிய நண்பன்” மார்ச்சினை இறுக்கக்கட்டியபடி எனக்கு அறிமுகப்படுத்தினாள்.

காரமாக இருந்தாலும், நான் தயார் செய்து இருந்த உணவுகளை விருப்பத்துடன் கோஸியாவும் மார்ச்சினும் விரும்பி சாப்பிட்டார்கள். சிறிய அளவில் வைன் மற்றும் வோட்கா எடுத்துக் கொண்டு பேசிக்கொண்டு இருந்தபொழுது “கடைசியாக டிராட்ஸ்கியின் இந்திய தமிழ் சமையல் சாப்பிட்டோம் அல்லவா” என மார்ச்சின் நினைவுகூர்ந்த பொழுது கோஸியாவின் முகம் சுணக்கமானது. பேச்சை கட்டிட்டகலை, போலாந்து வரலாறு , போலாந்து காவல்துறை என திசை மாற்றினேன். கிட்டத்தட்ட 5 சுற்றுகளுக்குப்பின்னர் மார்ச்சினுக்கு போதைக்குத் தலையேறி போலிஷ் மொழியில் ஏதோ ஏதோ உளற ஆரம்பிக்க , கோஸியா தூங்கப்போகலாம் என மார்ச்சினை தனது அறைக்குக்கூட்டிக்கொண்டுப் போக, நான் என் படுக்கையில் போர்வையைப்போர்த்திக்கொண்டு போதையை உணரலானேன். ஐந்து நிமிடங்களுக்குப்பிறகு கோஸியா என் போர்வையினுள் நுழைந்து கொண்டாள்.

“நீ மார்ச்சினுடன் அல்லவா இன்று இரவைக் கழிப்பாய் என நினைத்தேன்” என்று நான் சொன்னதும், கோஸியா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

“மார்ச்சின், ஓரினச் சேர்க்கையாளன்” என என்னைப்பார்த்துக் கண் சிமிட்டினாள். வோட்காவின் இனிமையான போதையில் காதலும் காமமும் எட்டிப்பார்க்க கோஸியாவை அணைக்க எத்தணித்தேன்.

தொடரும்