Wednesday, December 30, 2009

உபரி ஓட்டங்கள் (Extras 30-December-2009)

சுவீடன் வந்தபின் முதன் முறையாக திரையரங்கு ஒன்றில் அவதார் திரைப்படம் பார்த்தாகிவிட்டது. 150 இருக்கைகள் கொண்ட சிறிய அரங்கத்தில் சுவிடீஷ் சப் டைட்டில்களுடன் ஆங்கிலப் படமாகவே திரையிட்டு இருந்தனர். சில வசனங்களை கீழே இருக்கும் சப்டைட்டில்களைப்படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு எனது மொழிப்புலமை வளர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. நாவி நேத்ரேயி கதாநாயகன் ஜேக்கை கிஸ்ஸடிக்கும் காட்சியில் விசில் அடிக்க எத்தனித்த அப்பாவி கணேசனைக் கட்டுப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

படத்தின் பிரம்மாண்டம், நடிப்பு எல்லாவற்றையும் காட்டிலும் படத்தில் சிறப்பாக இருந்த அரசியலை எத்தனைப் பேர் புரிந்து கொண்டார்கள் எனத் தெரியவில்லை.

ஜேக் நாவிக்களிடம் உரையாற்றுகின்ற இந்த வசனம், They've sent us a message... that they can take whatever they want. Well we will send them a message. That this... this is our land!!!

அன்று தங்கத்திற்காக, இன்று பெட்ரோலுக்காக மக்களை நசுக்கி அழித்து, நான்கு திசைகளிலும் வளங்களைச் சுரண்டும் மேற்கத்திய உலகத்தை எதிர்கொள்ள நிஜமாகவே ஒரு/சில ஹீரோ(க்கள்) இப்படி வரமாட்டார்களா என எண்ண வைத்தது.

நாவிக்களை அழிக்க வரும் அதிவேக விமானங்களைப் பார்த்தவுடன் Made in Sweden என்று கமெண்ட் அடிக்க வேண்டும் போல இருந்தது.


ஆனால் இன்னும் ஒரு வருடம் படிப்பு இருக்கின்றதே !!!

---

நேற்றிரவு அலுவலகம் முடிந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்பொழுது, நான்கு வீடுகள் தள்ளி குடியிருக்கும் சோமாலியாவைச் சேர்ந்த இளைஞனைச் சந்தித்தேன்.அவனை இதற்குமுன்னர் சிலமுறை தெருமுனைகளில் சந்தித்துப் பேசி இருக்கின்றேன். சோமாலிய
தேசத்தவர்கள இந்திய முகக்களையுடன் , இயல்பான ஆப்பிரிக்க கருப்பு நிறத்தைக் காட்டிலும் சற்று மாநிறமாக இருப்பார்கள். பேருந்தில் வீல்சேர் இறங்குவதற்கான பலகை எடுத்துப்போடுவதில் உதவி செய்த அவனிடம் வீடு வரும் வரை பேசிக்கொண்டே வந்தேன்.

"மேன் , ஐ காட் அரெஸ்டட்"

"அய்யோ!! என்னடா ஆச்சுப்பா!!" எனக்கேட்டபொழுது, முந்தைய இரவு ஒரு கைகலப்பிற்காக கைது செய்ப்பட்டதாக கூறினான். ரோன்னிபி நகரத்தில் பொதுவாக சோமலியர்கள் எந்த வம்புதும்புக்கும் போக மாட்டார்கள். அரபு நாடுகளிடம் இருந்து புலம்பெயர்ந்தவர்களைக்
காட்டிலும் இவர்கள் அமைதியாகவே இருப்பார்கள். நிறம் ஒரு காரணமாக இருக்கலாம்.

என்ன ஆயிற்று விளக்கமாக கேட்டபொழுது, இரவு விடுதி ஒன்றில், இந்த இளைஞன் சில சோமாலிய தேசத்து நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபொழுது, அடுத்த மேசையில் இருந்த ஒரு சுவிடீஷ் மத்திய வயது ஆள்,

"டே கருப்பனுங்களா !! இங்கே எதுக்குடா வந்தீங்க, ஓடுங்கடா உங்க நாட்டிற்கு" என ஆத்திரமூட்டும் வகையில் பேசியபின்னரும் பொறுமைக் காத்த இவர்கள் , குடும்பத்தைப் பற்றி இழுத்தவுடன் கோபத்தை அடக்கமாட்டாமல் , இந்த சோமாலிய இளைஞன் சுவிடீஷ் ஆளை
ஒரு குத்து விட, போலிஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வந்த போலிஸார் சுவிடீஷ் ஆளை கண்டித்து விட்டுவிட்டு, இவனைத் தாக்கிய குற்றத்திற்காக கைது செய்து ஒரு நாள் ரிமாண்டில் வைத்து விட்டார்களாம்.

"ஐ டோண்ட் நோ, ஹவ் டூ ஐ ஃபேஸ் மை பேரண்ட்ஸ்" எனக் கண்கலங்கியபடி போனவனுக்கு "மே காட் பிளஸ் யூ" என ஆறுதலும், இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எக்காரணம் கொண்டும் கைநீட்டவேண்டாம் அறிவுரையும் கூறி அனுப்பி வைத்தேன்.

" They slapped two fellas on the wrist and they killed the other fella" என்று சமீபத்திய ஆஸ்திரேலிய - மேற்கிந்திய தீவுகள் ஆட்டத்தில் சுலைமான் பென் தண்டிக்கப்பட்டபொழுது, ஜோயல் கார்னர் சொன்ன வாசகம் நினைவுக்கு வந்தது.

------

ஸ்டீரியோ டைப் காதல் தோல்விக் கதைகளையும் , அரைச்ச மாவையே அரைச்ச பேய்கதைகளையும் எழுதிக் கொண்டிருந்த நான், அஸ்ஸலமு அலைக்கும் எனற இஸ்லாமிய முகமன் வாக்கியத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டக் கதைப் பரவலாக
வாசிக்கப்பட்டபொழுதும், மக்கள் மேலோட்டமாகப் படித்து அதன் உள்ளார்ந்த அரசியல்களைக் கவனிக்காமல் போய்விட்டார்களோ எனத் தோன்றியது. எழுதி முடித்தபின்னர் மறுவாசிப்புக் கூட செய்யாமல் பதிப்புக்கும் பழக்கமுள்ள நான், சில இஸ்லாமிய நண்பர்களிடம் கருத்துக்
கேட்ட பின்னர்தான் பதிப்பித்தேன்.

உண்மைத்தமிழன் கதையின் நீளம் ரொமப அதிகம் எனச் சொல்லி இருப்பது, ஜெஃப்ரி பாய்காட் , ராகுல் திராவிட் பேட்டிங் ரொம்ப ஸ்லோ என்று சொல்வது போல இருந்தது.

//எவனைப் பார்த்தாலும் தொலைக்காட்சியில் காட்டும் குண்டு வைப்பவனைப் போலவே இருந்தது. // இந்த வாக்கியத்தில் மறைந்து இருக்கும் அரசியலைக் கவனிக்காமல், சில நண்பர்கள் வறுத்தெடுத்துவிட்டார்கள். தொலைக்காட்சியில் இப்படிக்காட்டி காட்டியே தாடி
வைச்சவனெல்லாம் குண்டு வைப்பவன் என ஊடகங்கள் ஆக்கிவிட்டார்கள் என்பதையே சராசரி மனிதனான கதையின் நாயகன் கார்த்தி மூலம் சொல்ல நினைத்தேன். சிறுகதை இலக்கணத்தில் கதை வரவில்லை, கட்டுரையாக வந்து இருக்காலாம் எனசிலர் குறிப்பிட்டு இருந்தனர்.

கட்டுரை எனும்பொழுது தரவுகளுடன் உண்மைகளை மட்டுமே வைக்க வேண்டும். புனைவுகளில் இந்தக் கட்டுப்பாடு இல்லை. ஒரு மையக் கருத்து, அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், முடிவில் கதையின் ஆரம்பத்திற்கு நேர் எதிரான முடிவு, கதைக்கான காரணங்களைகதையிலேயே சொல்லி விடுவது என்ற எனது சிறுகதை இலக்கணத்திற்கு இது சரியாகப் பொருந்துவதால் இதுவும் சிறுகதையே !!

----


சென்ற உபரி ஓட்டங்கள் பதிவு கேள்விக்கான விடை ஆடம்பரோர். இவர்தான் முதன் முதலாக நியுசிலாந்து அணிகாக ஆடிய மவோரி இனத்தைச் சேர்ந்தவர். பரோடாவில் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் ஆட்டம் ஒன்றில் பவுண்டரிகளோ சிக்ஸரோ அடிக்காமல்

அதிக ரன்களைக் குவித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இவர் அடித்த ரன்கள் 96.


நியுசிலாந்து அணியில் ஆடிய மற்ற மாவோரி இன ஆட்டக்காரர்களில் ரோஸ் டெய்லர், டேரல் டஃபி குறிப்பிடத்தக்கவர்களாவர். ஒரு முறை மார்டின் க்ரோவ் , வர்ணனையின் போது மவோரி ஆட்டக்காரர்களுக்கு உயர்தர கிரிக்கெட் விளையாடும்பொழுது தேவையான பொறுமை
இல்லை எனக்கூறப்போக அது பிரச்சினையாக, பின்னர் மார்ட்டின் க்ரோவ் மன்னிப்புக் கேட்டார்.

----


சுதந்திரப்போராட்ட வீரர், இரண்டு மாநிலங்களுக்கு முதல்வராக இருந்தவர், படிப்பில் பல்கலைகழகத்திலேயே முதன் மாணவராகத் தேறியவர், பிரதமர் பதவியை மயிரிழையில் தவறவிட்டவர், காங்கிரஸை இரண்டாக உடைத்தவர் இவ்வளவு பெருமை வாய்ந்த என்.டி.திவாரி

உடல்நலக் காரணங்களுக்காக சமீபத்தில் ஆந்திர மாநில ஆளுனர் பதவியில் இருந்து விலகினார். நிஜக்காரணமான அஜால் குஜாலை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை , தனது இணையதளத்தில் இப்படி செய்தியாக வெளியிட்டது வெடிச்சிரிப்பை வரவழைத்தது.




After sex sting, AP governor Tiwari ejects prematurely

செய்தி இங்கே

---

இந்த உபரி ஓட்டங்கள் பதிவுக்கான கேள்வி, கீழ்காணும் படத்தில் இருக்கும் அம்மணி யார்? க்ளூ கொடுத்தால் எளிதாக கண்டுபிடித்துவிடுவேன் என வால்பையன் சொல்லுவார்.





Tuesday, December 22, 2009

உபரி ஓட்டங்கள் (Extras 22-December-2009)

கிரிக்கெட் ஆட்டத்தில் உபரி ஓட்டங்கள்(Extras) என்று ஓட்டங்கள் கணக்கெடுக்கப்ப்படும் ஒரு வகை உண்டு. பெரும்பாலும் இந்த உபரி ஓட்டங்கள் பெருமளவில் வெற்றி தோல்வியில் பங்கு பெறுவதில்லை என்றாலும், சிற்சிலச் சமயங்களில் ஆட்டத்தின் முடிவை மாற்றி
அமைக்ககூடிய வகையில் எண்ணிக்கை அமைந்து விடும்.99 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியா ஜிம்பாப்வே அணிக்கெதிராக பாரி வள்ளல் போல 51 உபரி ஓட்டங்களை வாரி வழங்கியது.அதில் 31 ஓட்டங்கள் நோபால்No ball), மற்றும் வொயிட்(Wide) முறைகளில் கொடுக்கப்பட்ட ஓட்டங்கள். கடைசியில் இந்தியா மூன்று ஓட்டங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

அந்த தோல்வியினால் அடுத்து வரும் ஆட்டங்கள் அனைத்தையும் வென்றால் மட்டுமே அடுத்தச் சுற்றுக்கு தகுதிப் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்ட தோட மட்டும் அல்லாமல்
இந்தச் சுற்றில் பெற்றிருக்க வேண்டிய போனஸ் பாயிண்டுகளையும் இந்தியா இழந்தது.அடுத்தச் சுற்றில்(super six) தர்ம அடி வாங்கி உலகக் கோப்பையை போட்டிகளில் இருந்து இந்தியா வெளியேறியது.



ஒரு வேளை ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா குறைவான உபரி ஓட்டங்களைக் கொடுத்து வென்றிருக்குமானால் உலகக் கோப்பை அரையிறுதி வரையாவது இந்தியா முன்னேறி இருக்க வாய்ப்பு இருந்தது.அந்த ஆட்டத்தின் விபரத்தைப் பார்க்க இங்கேச் சொடுக்கவும்


திடீரென ஏன் உபரி ஓட்டங்கள் பற்றியக் கதை என்கிறீர்களா, பிரபலபதிவர்கள் எழுதும் கொத்துபரோட்டா, என்'ண்ணங்கள், சாண்ட்விச் அண்ட் நான்வெஜ், நங்கநல்லூர் பஞ்சாமிர்தம், குவியல், இட்லி-வடை-பொங்கல் ஆகியனவற்றை தொடர்ந்து வாசித்து வந்த
பாதிப்பினால் நானும் உபரி ஓட்டங்கள் தலைப்பில் சிலப் பல சுவாரசியமான தகவல்களை, அனுபவங்களை, பார்த்து ரசித்து சிந்தித்த விசயங்களை , புலம்பல்களைப் பதிவு செய்யலாம் எனத் தோன்றியது. மேற்சொன்ன பதிவுகளைப் போல சுவாரசியமானதாக இருக்குமா எனத்
தெரியவில்லை. இருந்த போதிலும் முயற்சித்தல் தவறில்லையே!!!

உபரி ஓட்டங்கள் ஆட்டத்தின் வெற்றித் தோல்விகளுக்கு பங்கு வகிப்பதைப் போல என்னுடைய இந்த உபரி ஓட்டங்களும் உங்களின் அன்றாட வாழ்வின் சுவாரசியத்தை அதிகப் படுத்தலாம் அல்லது yet another post என்ற வகையில் படித்தும் படிக்காமலும் ஒதுக்கிவிடலாம். வாரத்திற்கு ஒரு முறையாவது எழுதிவிட வேண்டும் என்ற உறுதியில் இதோ எனது முதல் உபரி ஓட்டங்கள் தொகுப்பு,

உபரி ஓட்டங்கள் என்று பெயர் வைத்தபின் கிரிக்கெட்டை வைத்து துவக்குவதுதான் சாலப்பொருத்தமாக இருக்கும். நேற்றைய ஒரு நாள் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தான் டெண்டுல்கரின் சத வாய்ப்பைக் கெடுத்து விட்டார் என ரசிகர்கள் நொந்து கொள்வதாக எழுதி
இருக்கின்றனர். தினேஷ் கார்த்திக் விரைவாக ஒட்டங்கள் பெற்றது தவறு, டெண்டுல்கருக்கு மட்டையடிக்க வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் என கூறுவதில் நியாயம் இருந்தாலும், தொடர்ந்து கார்த்திக்கை ஆட்டமிழக்கச் செய்யும் வகையில் நடுவரிடம் முறையிட்டுக்கொண்டிருக்கையில் பந்தை அதிரடியாக சிகஸருக்கு விரட்டாமல் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்து இருந்தால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா ரசிகர்களுக்கு முன்னொரு காலத்தில் பழக்கப்பட்ட தோல்விக் காட்சிகள் மறுஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கும்.ஒரு முனையில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்கா பந்து வீசிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



எதிர்பாராத சமயங்களில் எதிர்பார்க்காத விசயங்களை அள்ளிதருவதில் கிரிக்கெட் ஆட்டங்களைப்போல வேறு எதுவும் இல்லை. கிரிக்கெட்மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் அவளை நான் எப்பாடுப் பட்டாவது திருமணம் செய்து இருப்பேன். ஜெனி,ரம்யா, அம்முவைப்போல கிரிக்கெட்டும் என்னை விட்டுப் போய் இருக்க மாட்டாள். கிரிக்கெட் தந்த சுவாரசியங்கள் போல வேறு எந்த விளையாட்டும் எனக்குத்தராததாலும் கிரிக்கெட் இந்திய துணைக்கண்டத்தில் பிறந்த சாராசரி மனிதனின் மனோநிலைக்கு ஏற்ப இருப்பதாலும் கிரிக்கெட்டை பெண்ணாக உருவகிக்க முடிகிறது என நினைக்கின்றேன்.

சுவாரசியம் என்றதும், தோழர் ஒருவரிடம் ஏற்பட்ட ஒரு சமீபத்திய உரையாடல் நினைவுக்கு வருகிறது. வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்ற அவரின் கேள்விக்கு சுவாரசியமாக இருக்கின்றது என்றேன். அவருக்கு எனது அம்முவுடன் ஆன பிரிவு தெரியும். அவருக்கு ஒரே
வியப்பு, 100 நாட்கள் கூட ஆகவில்லை, எப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள் என்று கேட்டார். நான் பதில் சொல்லவில்லை. சிரிப்பானை போட்ட்டுவிட்டு அடுத்த பேச்சுக்குத் தாவினேன். நான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கின்றது என்று தானே சொன்னேன், மகிழ்ச்சி
என்று சொல்ல வில்லையே!! . சோகங்கள் வருத்தங்கள், ஏமாற்றங்கள் கூட சுவாரசியமான அனுபவங்களைத் தரும் அல்லவா!! அம்முவிற்கு நான் Phd பட்டம் பெறவேண்டும் என்று ஒரு விருப்பம். அடிக்கடி எனக்கு நினைவுப் படுத்தி என்னை உற்சாகப் படுத்துவாள். அவளின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக என்னுடைய மாஸ்டர்ஸ் படிப்பிற்குப் பின் ஆராய்ச்சிப்படிப்பு படிக்க தயாராக வேண்டும் என ஐரோப்பிய பல்கலைக் கழகங்களைத் தேடிக்கொண்டிருக்கையில் பின்லேந்து தேசத்தில் படிக்க இருக்கும் வாய்ப்புகளைப் பற்றிய அதிகாரப்பூர்வமான இணையதளம் கண்ணில் சிக்கியது.மேற்படிப்பு படிக்க விரும்புவர்கள் இந்த தளத்தில் http://www.universityadmissions.fiஉபயோகமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.


புதிய தலைமுறையின் ஸ்வீட் ஸ்வீடன் மேற்படிப்புப் பற்றியக் கட்டுரைக்குப்பின்னர் மின்னஞ்சல்கள் வந்தவண்ணம் உள்ளது. வரும் மின்னஞ்சல்களில் வருத்தமான விசயம் என்னவெனில், கன்சல்டன்சிகளை அணுகலாமா என்றக் கேள்வியுடன் மின்னஞ்சல்கள் வருவதுதான்.கட்டுரையின் முக்கிய நோக்கமே பரவலாகத் தகவல்கள் போய்ச்சேர வேண்டும், ஆலோசனை மையங்களிடம் தேவை யில்லாமல் பணம் கட்டி ஏமாறவேண்டாம் என்பவை தான். அந்தக் கட்டுரையில் மாணவர்களே படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான ஆங்கிலத்தில்அனுமதி முறைகள் கொடுக்கப்பட்டிருக்கும் இணையச்சுட்டி http://studera.nu தரப்பட்டுள்ளது. நுனிப்புல் மேய்வது போல தகவல்கள் தரும் கட்டுரைகளை வாசிக்கும் பழக்கம் மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களிடம் இருக்ககூடாது.
நினைவூட்டல் ஜனவரி 15 ஆம் தேதி வரை இணையதளத்தில் மேற்படிப்பிற்காக பதிவு செய்யலாம். சிலரின் மின்னஞ்சல்களுக்குப் பதில்தர இயலவில்லை. நேரத்திட்டமிடலில் இன்னும் நான் தேர்ச்சி பெறாததால் வழமையான பதிலான, நேரம் இல்லை,மன்னிக்கவும் என்ற பதிலை சொல்லிவிடுகின்றேன்.


பதிவுலக நண்பரான செந்தழல் ரவி கொடுத்த தகவலினால், டெலினூர்(Telenor) என்ற சுவிடனின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனத்தில் ஒரு வருடத்திற்கான சம்பளமற்ற பயிற்சி கிடைத்திருக்கின்றது. பயிற்சி என்ற போதிலும் நானும் அங்கு வேலைப் பார்க்கும்
ஒருவராகத்தான் கருதப்படுவேன். வாரத்திற்கு 30 மணி நேரம் அலுவலகத்திற்கு வர வேண்டும். கணிமை ரவி கொடுத்த பகிர்ந்து கொண்ட தகவலினால் சுவீடன் மேற்படிப்பு சாத்தியம் ஆயிற்று. மற்றும் ஒரு ரவி மற்றும் ஒரு பதிவுலக நட்பு மற்றும் ஒரு பயன்.நன்றி பதிவுலகம். வேலைவாய்ப்புகள் ஒன்றுமே இல்லாதநிலையில் மிகப்பெரும் நிறுவனத்தில் கிடைத்த வாய்ப்புக் கிடைக்க காரணமான செந்தழல் ரவிக்கு ஒரு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உபரியில் ஒரு உதிரித்தகவல், இந்த டெலினூர் தான் நமது ஊரில் யுனினூர் என்று வந்திருப்பது.





ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கும் தொடர் பனிப்பொழிவினால் சுவீடன் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ரயில்கள் தாமதமாக வந்தாலும், மாற்று ஏற்பாடாக பேருந்துகளை ஏற்படுத்திக் கொடுத்துவிடுகிறார்கள். பனிப்பொழி ஸ்காண்டிநேவியா மக்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாகஇருப்பதனாலும் குளிர்காலத்திற்காக தயார் நிலையில் அரசாங்க இயந்திரம் இருப்பதனாலும் அன்றாட வாழ்விற்கு பெரியதாக பிரச்சினை இல்லை. நான் இருக்கும் ரோன்னிபி நகரத்திலும் பணிபுரியும் கார்ல்ஸ்க்ரோனா நகரத்திலும் சென்ற வருடத்தைக் காட்டிலும் பனிபோழிவு அதிகம் தானாம்.


கடைசியாக இந்த வார உபரி ஓட்டக் கேள்வி நியுசிலாந்து தேசத்தில் மவோரிக்கள் எனப்படும் பூர்வக்குடி மக்கள் இன்றும் சிறுபான்மையினராக இருக்கின்றனர். இந்த மவோரி சமூகத்தில் இருந்து நியுசிலாந்து கிரிக்கெட் அணிக்காக ஆடிய முதல் வீரர் யார்? இவர் தன் வசம்

வைத்திருக்கும் மற்றும் ஒரு சுவாரசியமான கிரிக்கெட் சம்பந்தப்பட்ட சாதனை என்ன? விடைகள் அடுத்த உபரி ஓட்டங்கள் பதிவில்.