Tuesday, December 29, 2009

அஸ்ஸலாமு அலைக்குமா கும்தலக்கடி கும்மாவா - சிறுகதை

அஸ்ஸலாமு அலைக்கும், கடவுள் உன்னைப் பாதுகாப்பாராக எனும் பொருள்படும்படியான வாக்கியத்தை பனி படர்ந்து இருக்கும் எனது வீட்டுத் தெருவில் நடந்து போகும்பொழுது பத்தாவது தடவையாகக் கேட்டிருப்பேன்.

கருப்புத் தலைமுடியும் மாநிற மேனியும் இருந்தால் உடனே அஸ்ஸலாமு அலைக்கும் தான், வெற்றுப்புன்னகையுடன் ஹல்லோ ஹாய் என்று பதில் சொன்னவுடன் அவர்கள் முகம் கருத்துப் போய்விடும். இந்த ரோன்னிபி நகரத் தெருக்களில் நான்கு பேரை பார்த்தால் அதில்
இரண்டு பேர் மத்திய தரைக்கடல் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.இந்த அகதிகள்தாம் என்னவோ அரசாங்கத்தையே நடத்துவது போல இவர்களின் அட்டகாசங்களை சகிக்க இயலாது. அடுத்த தலைமுறைக்கு சேவகம் பண்ணுவதற்காக தங்களை இறக்குமதி செய்து இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள இயலாத அரபுதேச அரசர்கள் இவர்கள். சுவீடனின் சர்வதேச அரசியல் தெரியாத அப்பாவி சுவிடீஷ் குடிமக்கள்,இந்த தேசம் சுவரேபியா ஆகிவிடுமோ என கவலையுடன் குழுமங்களில் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

சரித் தெருக்களில் தான் இப்படி என்றால் கல்லூரிக்குப் போனால் முக்கால்வாசி மாணவர்கள் பாகிஸ்தானியர்கள். ஏதோ இந்த தேசமும் நகரமும் அவர்களது நாட்டில் இருப்பதைப்போல எண்ணத்திலேயே திரிவார்கள். பொன்னிறத் தலைமுடியும் வெளுப்பு நிறமும் இல்லாமல்
இருப்பவர்கள் எவரைக் கண்டாலும் சலாம் ஒ அலைக்கும், இது உருது. இதைக் கேட்கும்பொழுதெல்லாம் கும்தலக்கடி கும்மா என்ற் வாக்கியம் தான் நினைவுக்கு வரும்.

ஒரு முறை கல்லூரியில் கண்ணாடித் தனியறையில் உட்கார்ந்து அம்முவுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, நீண்ட வெள்ளை அங்கி, தாடியுடன் வந்து கதவைத் தட்டியவருக்கு பதில் சொல்வதற்காக திறந்தால்,


"ஜல்தி கரோ நமாஸ் ஷுரு ஹூனே வாலே ஹய் மஸ்ஜித் கி சலே"

தொழுகை ஆரம்பிக்கப்போகின்றது, வந்து சேரவும் என அதிகாரத்தோரணையுடன் உருதுவில் சொல்லிவிட்டு போன பொழுது வந்த ஆத்திரம் அம்மு நெற்றியில் சந்தனம் வைக்கச் சொல்லி என்னுடன் போட்ட சண்டையில் கரைந்துப் போனது. கல்லூரியில் கொடுத்து இருந்த பொது பிரார்த்தனைக் கூடத்தை இவர்கள் தங்களுக்கான மசூதியாகவே மாற்றிவிட்டார்கள். அந்த அறையின் கூரையின் மேல் நான்கு கோபுரங்கள் மட்டும் தான் பாக்கி.

மற்றவர்கள் அங்கு போவதும் இல்லை, போக வேண்டிய சந்தர்ப்பங்களும் அமைந்ததில்லை. பக்கத்து நகரமான கார்ல்ஸ்க்ரோனாவில் அல்லேலூயா கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் இருப்பதால் நைஜீரிய கிறிஸ்தவ மாணவர்களும் இதைக் கண்டு கொள்வதில்லை. சுவிடீஷ் மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தில் மட்டுமே தேவாலயம் இருக்கும் திசை நினைவுக்கு வரும்.

சரி இதாவது பராவாயில்லை, அதிகம் பேர் இருப்பதால் அறிந்தும் அறியாமலும் செய்கிறார்கள் என விட்டுவிடலாம். எங்களுக்கு சிலப்பாடங்களுக்குத் தேர்வு கிடையாது. குழுவாக இருந்து ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும். தனியாளாக இராப்பகலாக கண் விழித்து ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்து தகவலை சக பாகிஸ்தானிய குழுவினரிடம் சொன்னால்

"ஸே இன்ஷா அல்லா" எனச்சொல்லும்பொழுது வரும் எரிச்சல் இருக்கிறதே!!! "போங்கடா நீங்களும் உங்க குல்லாவும்" எனச் சொல்லத் தோன்றும்,ஆனால் இல்லாத ஒன்றைக் கேலி செய்து ஏன் உடன் இருக்கிற நபர்களை வருத்தப்பட வைக்கவேண்டும் என சொல்லாமலேயே விட்டுவிடுவதுண்டு.

என்னுடைய அறைத் தோழன் அப்பாவி கணேசன் கதைதான் பரிதாபம், ஆள் நல்ல வாட்டசாட்டமாக பஷ்டு மொழி பேசுற பதான்கள் மாதிரி உருவத்தில் இருப்பார்.அவருக்கு சலாம் அலைக்கும் உடன் கட்டிப்பிடி வைத்தியமும் நடக்கும்.

"யோவ் சுவீடன்ல பசங்களைக் கட்டிப்பிடிக்காதீங்க, ஹோமோன்னு சொல்லிடுவானுங்க" என அச்சுறுத்திய பின்னர்தான் கணேசனும் தூரம் இருந்து வணக்கம் சொல்ல கொள்ள பழகிக் கொண்டார்.

என்னங்க!! கரசேவைக்குப் போய் வந்த காவிச்சட்டைக்காரன் மாதிரி மாதிரி பேசுறேன்னு நினைக்கிறீங்களா!! கருப்புச்சட்டைகாரரின் கருத்துக்களோடு காந்தியமும் புரிந்த என்மனப்பக்குவம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாகவே உணர்கிறது. தமிழகத்தில் இருந்தபொழுது இப்படி இல்லை.

92 ஆம் ஆண்டு உலகக்கோப்பை சிட்னி ஆட்டத்தில் , பக்கத்து வீட்டு பஷீரை இந்தியாவுடன் பாகிஸ்தான் தோற்ற பொழுது எங்களது குடியிருப்பில் இருந்த அனைத்து சிறுவர்களும்

"டேய், உங்க பாகிஸ்தான் தோத்துப்போச்சா" கேலி செய்த பொழுது அவன் டெண்டுல்கரின் தீவிர ரசிகன் என்பதையும் புரிந்த கொண்டு ஆறுதல் அளித்தது நான்தான்.


என் தாத்தா ஊரில் இருந்து எங்க வீட்டுக்கு வரும்பொழுது எல்லாம் "இந்த துலுக்கப் பசங்க பயணம் போய் போய் நிறையக் காசுபார்த்துடுறனுங்க" என அலுத்துக்கொள்ளும்பொழுதேல்லாம்

"இப்படி எல்லாம் சொல்லிட்டு ரம்ஜான்க்கு முதல் ஆளாக பிரியாணிக்கு நில்லுங்க" என்று சொல்லி என் அப்பாவிடம் கொட்டு வாங்கியதுமுண்டு.

"மாட்டுக்கறி திங்கிற சையத் அக்தர்ஷா எப்படிறா இப்படி நல்லா மார்க் வாங்குறான்" பள்ளித்தோழன் வாசுதேவன் அடித்த கிண்டலுக்குப்பின்னர் வாசுதேவனின் நட்பை முறித்துக் கொண்டவன் நான்.

"மச்சான் , சுவீடன் விசாவுக்கு பத்து லட்சம் புரட்டனும்டா" சொன்னவுடன் வங்கியில் இருந்து தனது இரண்டு லட்சங்களை எடுத்துக் கொடுத்தது அஜீஸ் அகமது தான். இப்படி தமிழக இஸ்லாமியர்களுடன் நட்பு பாராட்டிய என்னால் இவர்களுடன் சகஜமாகப் பழக முடியவில்லையே என்பது வருத்தமாகத்தான் இருந்தது. எவனைப் பார்த்தாலும் தொலைக்காட்சியில் காட்டும் குண்டு வைப்பவனைப் போலவே இருந்தது.


கடவுள் நம்மைப் பற்றி கவலைப்படுவதில்லை, நாமும் கடவுளைப் பற்றி கவலைப் பட வேண்டியதில்லை என என் கொள்கை என்க்கு மட்டும் என இருக்கும் நான் அம்முவைத் தவிர வேறு யாருடனும் கடவுள் சம்பந்தப்பட்ட விசயங்களை விவாதிப்பதில்லை.

"நீ சாஃப்ட்வேர் ஆர்க்கிடெக்சர் பரிட்சை நல்லா எழுதனும்னு பிள்ளையார் கோயில்ல 108 சுத்து சுத்தியும் நீ ஏண்டா ஃபெயில் ஆன" அம்முவின் நம்பிக்கையை பொய்யாக்கியதற்கு நான் மனதிற்குள் மன்னிப்புக் கேட்டாலும்,

"கடவுளுக்கும் கல்விக்கும் சம்பந்தம் இல்லை. பட் ஒன் திங் கடவுளோடு சிற்பங்களுக்கும் கலவிக்கும் சம்பந்தம் இருக்கு"

"கார்த்தி, நீ இப்படியே பேசிட்டு இரு, ஒரு நாள் சாமி சாமின்னு தெருத்தெருவா சுத்தப் போற"

"குட் ஈவ்னிங் அங்கிள்" என மழலைக்குரல் கேட்டு நிகழ்கால நினைவுக்கு வந்தபொழுது , எதிரில் தன்குழந்தையுடன் வாசிம்ராசா நடந்து வந்து கொண்டிருந்தார்.

வாசிம்ராசா பாகிஸ்தானி தான், ஆனால். இவர் இந்தியாவில் இருந்தால் கண்டிப்பாக ஏதாவது ஒரு மாநிலத்துக்கு ஆளுனராகப் போகக்கூடிய அளவிற்கு இந்து அரசியல்வாதிகளுக்குப் பிடித்தமான அப்துல்கலாம் மாதிரியான இஸ்லாமியர். "இந்தியா, ஹிந்தி நாஹி மாலும்"
எனக் கேட்காத ஆங்கிலம் சரளாமாகப் பேசும் பஞ்சாபி பாகிஸ்தானியர்.

ஆரம்ப சில சந்திப்புகளில் அவர் குழந்தை சலாம் ஒ அலைக்கும் எனத்தான் சொல்லிக்கொண்டிருந்தது. என்னுடைய மனோபாவத்தைப் புரிந்து கொண்ட வாசிம், அவரின் குழந்தையிடம் அப்படிச் சொல்லவேண்டாம் என அறிவுறுத்தி இருப்பார் போலும், இப்பொழுதெல்லாம் சொல்வதில்லை.

பாகிஸ்தானின் கல்வி முறைகளில் மதச்சார்பு குறைந்தால் மட்டுமே நாடு வளமைடைய வாய்ப்பு உண்டு என்பதை ஒப்புக்கொள்பவர். உன் நாட்டைப்போல கருப்புச்சட்டைகளும் கம்யூனிஸ்ட்களும் இருந்திருந்தால் , நீ குறையாகச் சொல்லும் விசயங்கள் எங்களிடம் இருந்திருக்காது என்று சொல்லும் அவரின் நேர்மை எனக்கு மிகவும் பிடிக்கும்.


" வாட் ஹேப்பண்ட் டு யுவர் குங்கும்" வாசிமிற்கு , நான் நெற்றியில் இட்டு இருந்த சந்தனம் பனிச்சாரலில் கரைந்துப் போய் இருப்பதைப் பார்த்துக் கேட்டார்.

" யூ லுக் ஸ்மார்ட் அண்ட் லுக்ஸ் டிபிகல் இண்டியன் வித் தட் "

" தாங்க்ஸ் " சிரித்துக்கொண்டே விடைபெற்றேன்.

வீட்டின் எதிரில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் என்னைப்பார்த்து சிரித்து விட்டு விளையாட ஆரம்பித்து விட்டன. முன்னைப்போல இவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் சொல்வதில்லை.குழந்தைகள் மற்றவர்களின் வெறுப்பை எளிதாகப் புரிந்து கொள்வார்கள்.

வீட்டிற்கு வந்து அம்முவை இரண்டு முறை தொலைபேசியில் அழைத்தேன். அவளிடம் இருந்து பதில் இல்லை. வெந்நீரில் குளித்து விட்டு, அம்முவுக்குப் பிடித்தமாதிரி மெல்லிய சந்தனக் கீற்றை நெற்றியின் மையத்தில் இட்டுவிட்டு இணையத்தில் ரோன்னிபி உள்ளூர் செய்திகளை வாசிக்க ஆரம்பித்தேன்.

பாக்தாத் நகரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ரோன்னிபி நகரத்தில் இருக்கும் அகதிகளின் உறவினர்கள் பலர் மரணம், சிறப்புத் தொழுகை கல்லூரி வளாகத்தில் உள்ள வழிபாட்டு அறையில் நடைபெறும் என்று இருந்தது. வருத்தமாக இருந்தது.

அம்முவின் அழைப்பு வர,

"பெங்களூர் டிரிப் எப்படி இருந்துச்சுடா குட்டிமா!!"

"செம ஆட்டண்டா, போட்டோஸ் அனுப்பிச்சிட்டே இருக்கேன், போட்டோஸ்ல என்னைத் தவிர வேற எவளையாவது சைட் அடிச்சே மவனே உனக்கு சாவுதான்!!"

அம்முவின் அப்பா வேதகிரி , பாண்டிச்சேரி அரசாங்கத்தில் உயர் அதிகாரி, கண்டிப்பு கட்டுப்பாடுகள், எங்கு போனாலும் அபபாவின் நிழலில் இருந்து அடக்கமாகவே இருந்து பழக்கப்பட்டவள், பெங்களூர் ஒரு வார அலுவலக் சுற்றுலாவில் மடைதிறந்த வெள்ளமாக இவ்வளவு கொண்டாட்டமாக இருந்ததில் எனக்கு வியப்பில்லை.

"ஓய், வேதகிரி இல்லாட்டி இவ்வளவு ஆட்டம் போடுவியா நீ"

"நீ இப்ப எதுக்கு அப்பாவை ஞாபகப்படுத்துற, நான் ஏற்கனவே எப்படி உன்னைப் பத்தி அவர்கிட்ட சொல்றதுன்னு பயந்து நடுங்கிக்கிட்டு இருக்கேன்!!!"

அம்மு பெங்களூர் சுற்றுலாப் பற்றி சொல்லிக்கொண்டிருக்க, ஆழ்மனதில் அரபு அகதிகளைப் பற்றி ஓடிக்கொண்டிருந்தது. கலவர பூமியில் இருந்து வந்து தப்பித்தோம் பிழைத்தோம் என தஞ்சம் புகுந்த நாட்டில் அவர்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்வது எனக்கு எரிச்சலாக இருப்பது
தவறோ!!

அவள் பேசி முடித்தவுடன், நான் என்னுடைய ஒரு வாரக் கதையை ஆரம்பித்தேன். வாசிம்ராஜா சந்தனக் கீற்றைப்பற்றி கேட்டதைச் சொன்னேன்.

"கார்த்தி உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேட்கனும்னு நினைச்சிட்டு இருக்கேன்!! நீ குமதல்லகடி கும்மான்னு கிண்டல் பண்ற மாதிரி, நீ எனக்காக வைக்கிற நெத்தி சந்தனத்தை வெட்டுக்காயமான்னு கேட்டா உனக்கு எப்படி இருக்கும்"

அவள் கேட்டபிறகு தான் எனக்கு உரைத்தது, இதுவரை யாருமே குறிப்பாக எந்த ஒரு பாகிஸ்தானியும் அதைப் பற்றிக் கேட்டதே இல்லை. மனதில் இருந்த வெறுப்பு அகன்று மனது லேசாக மாறியது. வழமைப்போல இரவு முழுவதும் சங்கீத சுவரங்கள் பாடிவிட்டு ,

மறுநாள் காலை கல்லூரிக்குப்போகும் பொழுது,எனது குடியிருப்பின் இடதுபுறம் கொட்டிக்கிடந்த வெண்பனிக்குவியலில் பனிமனிதனை செய்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் என்னைப்பார்த்துச் சிரித்தன.

அவர்களைப் பார்த்து அஸ்ஸலாமு அலைக்கும் என்றேன். சில வினாடிகள் நிதானித்துவிட்டு

"வ அலைக்கும் சலாம்" என்று மொத்தமாக மழலை முகத்துடன் என்னைப்பார்த்து சொன்னார்கள். குழந்தைகளின் சிரிப்பில் இறைத்தன்மை தெரியும் எனப்புரிந்தது. அந்த வேற்று மொழி வாக்கியங்கள் எனது மொழியாகவேப் பட்டது. அம்மு காதலைச் சொன்ன நாளை விட இன்று அழகாக இருக்கிறது என்ற உணர்வுடன், என் மனதைப்போலவே வெண்மையாக படர்ந்து இருந்த பனிப்பரப்பில் நடக்கலானேன்.

18 பின்னூட்டங்கள்/Comments:

said...

பதிவர் சென்ஷியின் மின்னஞ்சல் கருத்து அவரின் அனுமதியுடன் இங்கு பிரசுரிக்கின்றேன்

-------------------

இதில் பின்வரும் எழுத்துக்கள் அனைத்தும் சென்ஷி என்ற சுய அபிமான வாசகத் தன்மை கொண்டவனின் பார்வை மாத்திரமே...

(o)

முதலில் அஸ்ஸலாமு அலைக்கும் - சாந்தி நிலவட்டும் அல்லது அமைதி உண்டாகுவதாக என்பதுஅர்த்தம். இதில் அல்லாஹ் அல்லது இறைவன் என்ற பொருள் படும் அர்த்தம் வருவதில்லை.

முஸ்லீம் அல்லாதவர்களிடம் ஸலாம் என்கிற முகமன் பெரும்பாலும் செய்கிற பழக்கம் யாருக்கும் கிடையாது. அதிலும் பாகிஸ்தானிகள் கெடுபிடிக்காரர்கள். நெருங்கிப் பழகிக் கொண்டிருப்பதால் சொல்கிறேன். முஸ்லீம் அல்லாதவர்களைப் பார்த்து சலாம் என்ற வணக்கம் சொல்வது மிகக்குறைவு,

பாகிஸ்தானிய பதான்கள் அல்லது பட்டாண்கள் பேசும் மொழி பிரெஷ்து. படிப்பறிவு அதிகம் இல்லாதவர்கள். உடல் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள். கோபக்காரர்கள். பாக்-ஆப்கன் எல்லையில் வசிப்பவர்கள். பெரும்பாலும் மதச்சண்டைக்கு தூண்டிவிடப்பட்டு எல்லைதாண்டி செத்து மடிபவர்களாக இருப்பது கொடுமையானது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சார்ந்த அதாவது லாகூரைக் கொண்ட பஞ்சாபி முஸ்லீம்கள் பணவசதி படைத்தவர்கள். புத்திசாலிகள். பணம் பண்ணுவது எப்படி என்று தெரிந்தவர்கள். பெரும்பாலும் வெளிநாடுகளில் படிப்பிற்காகவும் வருபவர்கள்.

(o)

அகதிகள் என்ற சொல்லாடல் - அரபு அகதிகளைக் குறிக்கும் வாய்ப்பு இருக்கிறதென்றால் அவர்கள் ஈராக், லெபனான், சிரியா, பாலஸ்தீனம் போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களாக இருக்கும் வாய்ப்பு அதிகம். அரபு மொழி பேசும் 7 நாட்டு அமைப்பு தவிர மற்றவர்களை அரபிகள் என்று அழைக்கும் வழக்கம் இல்லை.

(o)

எந்த ஒரு கதையோட்டமும் படிப்பவரிடையே ஏற்படுத்தும் பாதிப்புதான் அதை எழுதியரின் வெற்றி. கதையை முடித்துவிட்டு படைப்பாகி மீண்டும் வெளித்தன்மையுடன் ஆசிரியன் வாசிக்கும் படைப்பில் கிடைக்கும் பரிமாணத்தன்மையைப் பொறுத்தே வாசகத்தன்மைக்கும் படைப்புத்தன்மைக்கும் உள்ள இடைவெளி நிரப்பப்படுகிறது.

(இது எதுக்காக எழுதினேன்னு கேக்கப்படாது. தோணுச்சு. டைப் அடிச்சிருக்கேன்)

(o)

உங்க கதைகளை அதிகம் வாசித்ததுண்டு என்ற வகையில் இந்தக் கதையும் மிகச்சாதாரணமான டெம்ப்ளேட் தனமான மற்றொரு கதையாகத்தான் எனக்குப் படுகிறது.

காரணம்.... நீங்கள் எடுத்திருக்கிற மதச்சார்புத்தன்மைப் பற்றிய பற்றுதல் அழுத்தம் ஈடுபாட்டுடன் வெளியாகவில்லை. அழுத்தம், ஈடுபாடு என்பது கருப்பொருள் சார்ந்ததாயும் அதைச் சுற்றி நிகழும் சூழலைக் கொண்டதாயும் இருக்கிறது.

கதைசொல்லி கொண்டு வரும் முரண் என்ற பாங்கு வெளிப்படுத்தப்படாத மற்றொரு இயைபு மாற்றமாகப் படுகிறது. வெறும் சந்தனம் பற்றிய குறிப்பேட்டில் மனம் மாறுதல் என்பது புருடாத்தன்மை. காரணம் நாயகனின் இறைசார்புத் தன்மை என்பது நாத்திகமாகக் குறிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் பாகிஸ்தானி சந்தனத்தை பற்றிக் கேட்டாலும அது அவனுக்கு நகைச்சுவையாகத்தான் தோன்ற வேண்டும். மாறாய் அவனுக்குள் மனமாற்றம் ஏற்படுவதோ கோபம் ஏற்படுவதோ மத அபிமானத்திற்கான சான்றாக வெளிப்படுகிறது.

காதல் என்பது இறைநம்பிக்கை பொறுத்ததல்ல என்ற கெட்ட எண்ணம் என் வழக்கமாய் கொண்டிருப்பதால் என்னால இந்தக் கதையை அம்புட்டு சூப்பரா ரசிக்க முடியலை.. சோ சாரி!

(o)

அம்புட்டுத்தேன்.. :)

said...

:-)

கமெண்டாவே போட்டாச்சா..

said...

கொஞ்சம் நச் கம்மிதான் வினையூக்கி!

said...

Romba Nallarukku...

said...

வித்தியாசமான ஸ்டைல். நல்ல சிந்தனையும் ......

said...

இதை சிறுகதையாகப் பார்க்காமல் உங்கள் அனுபவமாகவே எடுத்துக் கொண்டு படிக்கிறேன், சிறுகதைக்கான இலக்கணங்கள் குறைவு என்பதால்.

தமிழகத்தை நீங்கள் உங்கள் சொந்த தேசமாகவும் , இப்போது இருக்குமிடம் அயல் தேசமாகவும் நினைப்பதின் வெளிப்பாடே இந்த ஆற்றாமை. ..தமிழகத்தின் முஸ்லிம்களை நீங்கள் அகதிகளாகவே நினைப்பதுபோல் உள்ளது.கருப்பு சட்டைக்காரனின் ஒரு துளி கூட உங்கள் எழுத்தில் வெளிப்படவில்லை. தமிழக இஸ்லாமியர்களுடன் நட்பு பாராட்டுவதை உங்கள் பெருந்தன்மையாக நினைக்கிறீர்கள்.

//எவனைப் பார்த்தாலும் தொலைக்காட்சியில் காட்டும் குண்டு வைப்பவனைப் போலவே இருந்தது. //
எவ்வளவு பிற்போக்குத்தனமான கருத்து. அதுவும் மாணவர்களைப் பற்றி..அகதி என்ற சொல்லையே படித்தவர்கள் உபயோகப்படுத்தகூடாது என்பது என் கருத்து. உங்களுடைய முடிவு ஆறுதலைத் தந்தாலும், மனதை மிகவும் காயப்படுத்திவிட்டது.

said...

//எவரைக் கண்டாலும் சலாம் ஒ அலைக்கும், இது உருது. இதைக் கேட்கும்பொழுதெல்லாம் கும்தலக்கடி கும்மா என்ற் வாக்கியம் தான் நினைவுக்கு வரும்.//

ஹாஹாஹா!
உங்களுக்கு நினைவுக்கு வருவது பற்றி தனி அகராதி போடலாமா!?

said...

//"ஸே இன்ஷா அல்லா" எனச்சொல்லும்பொழுது வரும் எரிச்சல் இருக்கிறதே!!! "போங்கடா நீங்களும் உங்க குல்லாவும்" எனச் சொல்லத் தோன்றும்,//

இந்த எதிர்வினை கூட நல்லாயிருக்கே!

said...

//"கடவுளுக்கும் கல்விக்கும் சம்பந்தம் இல்லை. பட் ஒன் திங் கடவுளோடு சிற்பங்களுக்கும் கலவிக்கும் சம்பந்தம் இருக்கு" //

அதை சொல்லி கொடுக்குறதுக்கு கூட கடவுளா!?

said...

இதை சொல்றதுக்கா தல இம்மாம் பெருசு!

வார்த்தையின் பொருள்களில் எனக்கு நம்பிக்கையில்லை, இதையே குட் மார்னிங் என்றாலும் அதே அர்த்தம் மாதிரி தான்,மனசுல இருந்து வரணும் வாழ்த்து!, வாயில இருந்து இல்ல!

ஏன் சொன்னேன்னு தெரியாது, தோணுச்சு சொல்லிட்டேன்

said...

கொஞசம் சுருக்கி இருக்கலாம். மற்றபடி உங்கள் நேர்மையை பாரட்டியெ ஆகணும்.

said...

ரொம்பவே சுருக்கியிருக்கலாம் தம்பி..!

நெற்றியில் வைக்கும் திருநீற்றுக்கும், ஸலாம் அலைக்கும் என்று முகமண் பாராட்டுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

அவரவர் மொழியில் அவரவர் அன்பைத் தெரியப்படுத்துகிறோம்.. சிறுகதைக்கான வடிவம் இதில் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் தம்பி..!

said...

அது என்னாங்க சிறுகதை வடிவம்.

said...

இதை நீங்கள் கட்டுரையாக எழுதியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்..."துளு..." போன்ற வார்த்தைகளை தவிர்ப்பது நமக்கு அழகூட்டும்.சென்ஷி சொன்னபடி, நீங்கள் மத்கச்சாற்பர்ரவராக தோன்றவில்லை.தன்குள் சிந்தனையை நீங்கள் உற்றுக் கவனிப்பதற்காக சொன்னேன்.

said...

அஸ்ஸலாமு அலைக்கும் என்பதின் தமிழ் = ” உங்கள் மீது சாந்தி, சமாதானம் உண்டாகட்டும் “ என்பதே. அதற்கு பதில் நாம் சொல்ல வேண்டியது “அலைக்கும் அஸ்ஸலாம்” உங்கள் மீதும் சாந்தியும், சமாதானம் உண்டாகட்டும் “

இன்ஷா அல்லாஹ்! என்றால் “இறைவன் நாடினால்”

சகோதரர்களே தமிழில் அர்த்தம் இதுதான். இனி உங்கள் மீது நான் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொன்னால் திருப்பி பதில் சொல்வீர்களா அல்லது முகம் கருத்து மாறுபடுவீர்களா?

அன்புடன்
சகோ.அசலம்

said...

Romba pathichiruchu..Ana Neenga nichayama Karuppu sattaikarar kidayathu...Thadivachavenallam Terroristnu sollreengale ithu ungalukke niyayama irukka...Niraya varuthapadanum pola irukku..Naane pattukkuren,,,Ungalakku, Evvaluthan neenga inthu sarba irunthalum..Konjam pathu eluthunga. Nanri

said...

செல்வா,

இந்தப் பதிவின் உள் அல்லது நுண்ணரசியல் குறித்து நீங்கள் இதற்கு அடுத்த பதிவில் விளக்கியிருப்பதால் நான் அதற்குள்ளும் உங்கள் கதை சொல்லும் பாங்குடனும் விவாதிக்க விரும்பவில்லை.

பாகிஸ்தானியர்களையும் மற்ற அரபிக்களைப் பற்றி மட்டும் குறிப்பிட விரும்புகின்றேன். நான் இருக்கும் நகரிலும் இந்தியர்களை விட ஏராளமான பாகிஸ்தானிகள் உள்ளனர். பிரெஞ்சுக்காரர்களைப் பற்றிக் கூட புலம்பிய தமிழர்கள் உண்டு ஆனால், இது வரை ஒரு பாகிஸ்தானியர்களைப் பற்றிக் கூட இங்கு யாரும் தவறாகக் கூறியதில்லை. தென்னிந்திய அல்லது தமிழகத்து மாணவர்களை அல்லது ஆய்வுப் பணியிலிருப்பவர்களுக்கு வட 'இந்தி'யர்களை விட பாகிஸ்தானிகளுடன் எந்தவித தயக்கமும் பிரச்சனையும் இல்லாமல் பழக முடிகின்றது. அதே போல் தான் மற்ற மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களுடனும்.

அதற்கு, அடுத்தவர்களுக்கு ஒரு மொழி தெரியுமா எனக் கூட யோசிக்காமல் பேச ஆரம்பிப்பதில் தொடங்கி, ஆண்டை மனப் பான்மையில் மற்றவர்களை அணுகும் வட இந்தியக் கலாச்சரம் காரணமா, அல்லது, பாகிஸ்தானியர்களைப் பார்க்கும் பொழுது இந்தியத் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களாக எனக்குத் தோன்றுவது காரணமா எனத் தெரியவில்லை.

said...

For some reasons i like your Ammu, she seems to be sweet !