Monday, October 23, 2006

நேசம் - சிறுகதை

"இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல், அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம்" வட்டத்திற்குள் சதுரம் என்ற படத்தில் வரும் ஒரு பாடலை, டெல்லி செல்லும் விமானத்திற்காக காத்திருக்கையில், எஃப்.எம் மொபைலில் கார்த்திக் கேட்டுக்கொண்டிருந்தான்.

பிளைட் ஏற்கனவே ஒரு மணி நேரம் லேட்டாகப் புறப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். லேட்டாகும் என்ற அறிவிப்பினால் எரிச்சல் அடைந்த சகபயனிகளை பார்க்க மனமில்லாமல் கையோடு கொண்டு வந்திருந்த தினமணி பேப்பரை புரட்டலானான்.

கார்த்தி என்று யாரோ தோளைத் தொட்டுக் கூப்பிடத் திரும்பினான், அட அது ஜெனி.

"என் வாழ்க்கையின் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன், யூ மீன் நந்திங் டு மி குட்-பை" என்று சொன்ன ஜெனி இன்று என் கண் முன்னே அதே அழகான சிரிப்புடன் கையில் ஒரு குழந்தையுடன் ஹாய் சொன்னாள்.

எப்படிடா இருக்க லக்ஷ்மனா!!!!, காலேஜ்ல அவனோட பட்டப்பெயர், கிரிக்கெட்டர் லக்ஷ்மனனின் தீவிர ரசிகன், டென்டுலகருக்கும் கங்குலிக்கும் எந்த விதத்திலும் திறமையில் குறைச்சலில்லை என்ற அவனுடைய ஆர்க்யூமென்ட்ஸினால் ஜெனி அவனுக்கு வைத்தப் பெயர் அது. லக்ஷ்மன் கோல்கத்தா டெஸ்டில் 281 அடிச்ச்ப்ப கிளாஸுக்கே ட்ரீட் கொடுத்த பின் அந்த பேரே நிரந்தரமானது


மெலிதானப் புன்னகையுடன் "நல்லா இருக்கேன்" என்றான் கார்த்திக்.

மூன்றாம் செமஸ்டரில் "லெட் அஸ் சி" புக் வாங்கிப் படித்ததில் ஏற்பட்ட நட்பு, கடைசி செமஸ்டரில் "லெட் அஸ் சி திஸ் வேர்ல்ட் டுகெதர்" என்று அவன் அவளிடம் காதலைச் சொன்ன போது முறிந்து போனது.

"என்ன அப்படி பார்க்கிறே! ஆச்சர்யமா இருக்கா! உன்னை அவ்வளவு திட்டி விட்டுபோனவள் இன்று எப்படி பேசுகிறாள் என்று நினைக்கிறாயா!! அந்த நேரத்தில் அந்த சூழ்நிலையில் நீ நட்பை கொச்சைப் படுத்தி விட்டியோன்னு நினைச்சேன், ம்ம், கொஞ்சம் நான் பக்குவமா யோசிச்சு இருந்து இருக்கலாம். கார்த்தி, இப்போ நான் அப்படி நடந்து இருக்கக் கூடாதுன்னு தோனுது, எனிவே எல்லாம் நன்மைக்கே, Time is the Best healer "

சிறிது இடைவெளி விட்டு ஜெனி தொடர்ந்தாள்,

"கிட்டத்தட்ட ஆறு மாதம் வரை உன் மேல் இருந்த கோபம் போகவில்லை., உன்னோட எல்லா மெயில்களையும் படிக்காமலே டெலிட் பண்ணேன், வாழ்க்கையின் யாதார்த்தங்கள் புரிய ஆரம்பித்த பொழுது உன் மேல் இருந்த கோபங்களும் கொஞ்சம் கொஞ்சமா நீர்த்துப் போச்சு. லக்ஷ்மன், ஹீரோ பென், பன்னீர் சோடா, திருக்குறள் பழைய செவன்டீஸ் பாட்டு, டப்பிங் படம் நு அப்ப அப்போ உன்னைப் பற்றிய ஞாபகம் வருவது உண்டு நடுவில மெயில் கூட அனுபிச்சேன், பவுண்ஸ் ஆயிடுச்சு .
இதுக்கு நடுவில சில சோகங்கள், சில சந்தோசங்கள்.
ஆமாம் நீ இப்போ எங்க போற "

தொடர்ச்சியாகப் பேசி நிறுத்தினாள்.

"டெல்லிக்கு , ஆபிஸ் விஷயமா, நீ எங்கப் போற " என்றான் கார்த்திக்

"பாம்பே, அங்கேயிருந்து நாளைக்கு நைட் கனடா, அதெல்லாம் இருக்கட்டும் , உனக்கு கல்யானம் ஆயிடுச்சா!! "


இன்னும் அவளை மட்டும் நினைத்துக் கொண்டிருப்பதாகக் கூறி அவளை தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பாமல், "ம்ம் ஆயிடுச்சு, ரெண்டு பசங்க " என்று பொய் சொன்னான் கார்த்திக்.


"ஹே தட்ஸ் நைஸ் " என்று அவள் முடிப்பதற்குள் பாம்பே பிளைட்டுக்கான அறிவிப்பு வந்தது.

"இந்தா என் கார்டு" என பிஸினஸ் கார்டை கொடுத்தவாறே குழந்தையின் பெயரைக் கேட்டான்.

"என் குட்டிப் பாப்பா பேரு லக்ஷ்மன்" என்றாள்.

சில வினாடி மௌனத்திற்குப் பிறகு, "அங்கிளுக்கு டாடா சொல்லு" என்று சொல்லியவாறு எழுந்தாள்.


"பை கார்த்திக்" என்று சொல்லியவாறு போன மாதம் கணவனை ஆக்ஸிடென்டில் பறிகொடுத்த ஜெனி , கார்த்திக்கின் சந்தோசமான வாழ்வில் எந்நாளும் தன்னால் எந்த சங்கடமுமும் வரக்கூடாது என்ற முடிவுடன் அவனின் பிஸினஸ் கார்டை வேண்டுமென்றே தரையில் தவற விட்டு குழந்தையுடன் விமானத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.


தனக்குப் பிடித்தவளின் நினைவுகளில் தான் எப்போதும் இருப்போம் என்ற சந்தோசத்துடனும், தன்க்குப் பிடித்தவள் வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கிறாள் என்ற திருப்தியுடனும் கார்த்திக் தனது பிளைட்டிற்கான அறிவிப்பிற்காக காத்திருந்தான்.

Thursday, October 05, 2006

மரணம் - மாபெரும் விடுதலை - சிறுகதை - தேன்கூடு போட்டிக்காக

"கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்துப் பாடு" என்ற மாயாவி படத்தின் பாடலின் ஹலோ டியூனைத் தொடர்ந்து என் நண்பரும் பிரபல எழுத்தாளரும் ஆன வாசகன் ஹலோ சொன்னார்.

சொல்லு கார்த்திக் என்ன விசயம்? இப்போ ஸ்டோரி டிஸ்கஷன் ல இருக்கேன் ...

சார், எங்க இருக்கீங்க , ஒரு விசயம் பேசனும் ..மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு !!!

ஈசிஆர் கெஸ்ட் ஹவுஸ் ல இருக்கேன் கார்த்தி, மணி இப்போ 6, நைட் பத்து மணிக்கு வர்றேன். வீட்டுலேயே இரு.. எங்கேயும் போய்டாதே உன்னை வந்து நான் மீட் பண்றேன்

ஒகே சார் என்று போனைக் கட் செய்தேன்.

என் பேரு கார்த்திக், ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனில சின்ன பொறுப்பிலே இருக்கேன்.எழுத்தாளர் வாசகன் நான் மதுரையில் படிக்கிறப்ப நடந்த "பெர்ஷனாலிடி டெவலப்மென்ட்" கேம்ப ல அவரை பேச அழைத்தபோது கிடைத்த அறிமுகம்.. அப்ப ஆரம்பித்த நட்பு இன்றும் சென்னை வந்த பிறகும் தொடர்கிறது.

நான் என்னுடைய அனைத்துப் பிரச்சினைகளையும் அவருடன் தான் கலந்துரையாடுவது வழக்கம் ... எழுத்தாளர் வாசகன் கடை நாற்பதுகளில் இருப்பவர்.. திருமணமாகதவர், ஆனால் பிரமமச்சாரி இல்லை...
எப்போதும் அவரைச் சுற்றி ஒரு "பாசிடிவ்" வளையம் இருப்பது போல் இருக்கும். எந்த ஒரு விசயத்துக்கும் சோர்வடையாதவர்.


என்னுடைய "அவள்" என்னை விட்டு பிரிந்ததிலிருந்து எனக்கு "தற்கொலை" எண்ணம் மேலோன்கி வருகிறது... நேற்று கூட அலுவலக்த்தின் மாடியிலிருந்து குதித்து விடலாம் என்று தோன்றியது... அதனாலேயே இன்று லீவு போட்டுட்டு வீட்டிலேயே அடைந்து உள்ளேன்.

எழுத்தாளர் வாசகனுடன் பேசினால் ஏதாவது தீர்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவரை அழைத்தால் அவரும் பிஸியாக உள்ளார். சரி எதாவது படிக்கலாம் என்று முன்பு வாங்கி வைத்து இருந்த "வெரோனிகா டிசைட்ஸ் டொ டை" எடுத்து படிக்கலானேன்.

கதையின் துவக்கமே சுவரசியமாக "தற்கொலை" முயற்சியில் ஆரம்பித்தது... கதை பாதி படித்துக் கொண்டிருக்கும்போதே அப்படியே தூங்கிப் போனேன். திடிரென எனது வீட்டு நாய் வழக்கத்தை விட அபாயகரமாக குரைக்க தூக்கம் கலைந்து எழுந்தேன்.. கதைவைத் அகல திறந்து யாரவது வெளிமனிதர்கள் வந்துள்ளனரா எனப் பார்த்தேன்.

அட !!! எழுத்தாள்ர் வாசகன் நின்று கொண்டிருந்தார்,
சார் எப்படி உள்ள வந்தீங்க ..

வெளி கேட்டு பூட்டியல்ல வச்சிருந்தேன்...

ஏறிக் குதித்து வந்தேன்..அதுதான் உன் வீட்டு நாய் குரைக்கிறது.

சிரித்துக் கொன்டே , உங்களுக்கு எப்போதும் விளையாட்டுதான் சார், மொபைல் ல கால் பண்ணி இருந்தா கேட்டை திறந்து விட்டிருப்பேனே.. ஏன் சிரமம்...எனப் பேசிக் கொண்டே இருவரும் உள்ளே வந்தோம்.

நாய் இன்னும் குரைத்துக் கொண்டிருந்தது..

மொபைல் எடுத்துட்டு வரல கார்த்திக்.. சாரி ஒரு அவசரமான விசயம்னால சொன்ன டைம்க்கு வர முடியல.. கொஞசம் லேட்டாயிடுச்சு...


ஆமாம் சார் பத்து மணிக்கு வர்றேன்னு சொல்லிட்டு 12 மணிக்கு வர்றீங்க..


கோவிச்சுக்காதே கார்த்திக், சரி என்ன பிரச்சினை சொல்லு!!

சார், அவள் போன பிறகு வாழ்க்கையின் மேலே ஒரு வெறுப்பு வந்துடுச்சு... எனக்கு என் கவலைகளிலிருந்து விடுதலை வேணும்... ஒரே சொல்யூஷன் ..மரணம்... தற்கொலைப் பண்ணிகொள்ளலாம் போல இருக்குது... ஆனால் உங்க சிஷ்யப் பிள்ளையா இருந்து கொண்டு இப்படி யோசிப்பது தவறுதான்..எனக்கு ஒரு வழி சொல்லுங்க...


ஹாஹா திடிரென வித்தியாசமக சிரிக்க ஆரம்பித்தார்... கோழைகள் எடுக்கும் தைரியமான முடிவு. ஆனால் முட்டாள் தனமானது.. உண்மை மரணம் மாபெரும் விடுதலை தான்..ஆனாலது தானாகவே சம்பவிக்க வேண்டும்.. உன் வாழ்க்கையின் குறிகோள் என்ன ? உன்னவளா? நிச்சயம் இல்லை!! உனக்கு அவளை எவ்வளவு நாளாத் தெரியும் .

கடைசி இரண்டு வருடங்கள்!!!

யோசித்துப் பார், உனது கல்லூரி கால குறிக்கோள்கள் எதையாவது அடைந்து இருக்கிறாயா?

இல்லை !!!

உன்னுடைய இந்த இரண்டு "குவாலிட்டி" வருடங்களை அவளைக் காதலித்ததன் மூலம் தொலைத்து விட்டாய். காதல் தோல்விகளினால் தற்கொலை என்றால் மனித இனம் என்றோ அழிந்துப் போய் இருக்கும். நான் அடிக்கடி சொல்லும் தத்துவம்தான்

" ஒரு விசயம் கிடைத்தால் சந்தோசம் கிடைக்கா விட்டால் ரொம்ப சந்தோசம், எந்தவொரு நிகழ்வும் காரணம் இன்றி நிகழ்வதில்லை, எல்லாம் நன்மைக்கே"

அப்படியே நீ தற்கொலை பண்ணிகொள்வதால், உன்னவளின் மனம் எவ்வளவு வேதனைப்படும்.. எதற்காக நீ அவளை காலம் முழுதும் குற்றணர்ச்சியில் வாழ வைக்க நினைக்கிறாய்.

அவளுடன் நேரம் போதவில்லை என்ற உனக்கு இனி அத்தனை நேரத்தையும் பயனுள்ள் முறையில் செலவு பண்ணலாம்.

ம்ம்ம்.. சார், சிகரெட் என்று மெந்தால் சிகரெடை அவரிடம் நீட்டினேன்...

அவர் சிரித்துக் கொண்டே என்னால் இப்பொது சிகரெட் பிடிக்க முடியாது என்றார்.

எதாவது பொடி வைத்தே பேசுங்கள்..எப்படி சார் நீங்க எப்போதும் சந்தோசமாகவே இருக்கிறீர்கள்.. பொறாமையா இருக்கு என்றேன்

கார்த்தி, பார்க்கிற விசயமெல்லாம் பார்க்கிறது போல் கிடையாது. "என் வலி தனி வலி"

சிலேடை அருமை!!! என்றேன்

உனக்கு தெரியுமா தற்கொலை பண்ணி கொள்கிறப்ப இருக்கிற வேதனை..அது அனுபவிப்பனுக்குத்தான் தெரியும்...

தாங்க்ஸ் சார், இதுக்கு தான் "வாசகன்" துணை வேண்டும் என்பது என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டே, நானில்லாமலும் நீயாக சிந்திக்க வேண்டும், அப்போதுதான் நீ என் உண்மையான் சிஷ்ய பிள்ளை...

சரி சார், எனக்கு ஏதோ தெளிவு ஏற்பட்டது போலிருக்கு... தாங்க் யூ... டைம் ஆயிடுச்சு... தூங்கலாமா..

எனக்கு தூக்கம் வராது நீ போய் தூங்கு என்றார்.

ஓகே என்று தூங்கப் போனேன்.

நாய் குரைத்தலை இன்னும் நிறுத்தவில்லை.

பாதி வெட்டப்பட்ட மாடு என்னைத் துரத்துவது போல் வந்த கனவினால் தூககம் கலைந்து மணியைப் பார்த்தேன். 8 அடித்தது. ஹாலில் வந்து பார்த்தேன்..வாசகனை காணவில்லை..

அவர் எப்பொதும் இப்படித்தான் சொல்லாமல் கொள்ளாமல் கதவைத் திறந்து வைத்துச் சென்று விடுவார்.


வெளியே கிடந்த தினமணி பேப்பரை புரட்டலானேன்.

அதில்,
பிரபல எழுத்தாளரும் திரைவசனகர்த்தாவுமான வாசகன் நேற்றிரவு சுமார் பத்து மணியளவில் தனது கடற்கரை வீட்டில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். பிரபல திரைப்பட நடிகயுடனான காதல் முறிவு இம்முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.

ஐயோ அப்போ நேற்றிரவு நான் பேசிகொண்டிருந்தது??!!!!!!!!!!!!!!!! அப்படியே தரையில் சரிந்தேன்....

Tuesday, October 03, 2006

ஜெனி - சிறுகதை - தேன்கூடு போட்டிக்காக

"அவன் கனவில் அவள் வருவாள் அவனைப் பார்த்த்து சிரிப்பாள்,
அவள் கனவில் யார் வருவாள் யாரப் பார்த்து அழைப்பாள்"

பழைய சந்திரபாபு பாட்டு அந்த பேக்கரி ரேடியோ வில் ஓடிக் கொண்டிருந்தது. கார்த்திக் வெஜிடபள் பப்ஸும், சாத்துக் கொடி ஜூசும் ஆர்டர் செய்து விட்டு, ஒரு மெந்தால் சிகரெட்டைப் பற்ற் வைத்தான்

கார்த்தி.... என்ற குரலைக் கேட்டு இடது புறம் திரும்பினான்..

அட அது ஜெனி ..அவளைப் பார்த்ததும் அனிச்சையாக சிகரெட்டை கீழே போட்டு அணைத்தான்.

ஹாய் குட்டிமா எப்படி இருக்க?? சாரி எப்படி இருக்கிங்க??

ம்ம் நல்லா இருக்கேன் கார்த்தி... நீ எப்படி இருக்க?

எனக்கென்ன? ம்ம் ரொம்ப நல்லா இருக்கேன் ..ஓ சாரி மறந்துட்டேன் ..ஹேப்பி மேரிட் லைப்.... ஜெனி ..எப்படி இவ்வளோ நாள் கழித்து என்னைப் பார்ர்க்க வந்து இருக்கீங்க...

கார்த்தி, எனக்கு பயமாயிருக்கு ... உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் பயமாயிருக்கிறது நீ எப்படி வேணாலும் எடுத்துகோ. குற்ற உணர்ச்சி என்று வேண்டுமனாலும் எடுத்துக்கோ ... நாம் காதலித்த காலத்தில் என்னைப் பற்றி , என் குடும்பத்தை பற்றி நிறைய விசயங்கள் சொல்லி உள்ளேன். ஒவ்வொரு முறை உன்னைப் பார்க்கும் போதும் I feel that I am exposed.
என்னோட பிரச்சினைகள் , என் குடும்ப பிரச்சினைகள் எல்லாம் உனக்கும் தெரியும் கிறதை நினைக்கிறப்ப பயமாயிருக்கு... என் ஹஸ்பெண்டு கிட்ட எல்லாம் சொல்லி என் வாழ்க்கையில் பிரச்சினை பண்ணிடிவியோன்னு பயமாயிருக்கு கார்த்திக் என்று அழ ஆரம்பித்தாள் ஜெனி.

ஜெனி...பிளீஸ்..குட்டிமா அழாதேடா. ..உனக்கே தெரியும் இந்த ஒரு வருஷத்தில , நீ எனக்கு 'குட்-பை' சொன்ன பிறகு உன்னை நான் எதாவது தொந்தரவு செய்தேனா??? வீடுகூட மாறி போய்ட்டேனே....

எக்ஸ்-க்யூஸ் மீ சார்.. உங்க ஆர்டர் என்று பேக்கரி பையன் பப்ஸையும் ஜூசையும் டேபிளில் கொண்டு வந்து வைத்தான்.

ஜெனி என்ன சாப்பிடுற? அவள் பதில் எதிர் பாராமாலே அவளுக்குப் பிடித்த ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் செய்தான்

ஜெனி ..நீ என்னை விட்டு பிரிஞ்சப்ப எனக்கு உன்மேல் ஆத்திரம் தான் வந்தது... உன்னைக் கொல்லனும்னு கூட தோனுச்சு... ஆனால் நிதானமா கொஞ்சம் உட்கார்ந்து யோசிச்சுப் பார்த்த்தேன்... உன் மேல் இருக்கும் பிரியம் நீ பிரிஞ்சதால போச்சுன்னா நான் உன் மேல் வைத்த விருப்பம் உண்மையில்ல.... உண்மையான காதல் உறவில் இல்லை ..பிரிவில் தான் உள்ளது. நான் "ஜென்டில்மேன்" ண்னு நிருபிக்கிற ஒரு சந்தர்ப்பம் நினைச்சு உன்னை விட்டு விலகி தானே இருந்தேன்..

கார்த்தி இல்ல... உன் வார்த்தையில சொல்லனும்னா "புனித பிம்பம்" நு நடிக்கிறே... அப்புறம் நீ ஏன்டா.. உன் ஆனந்த விகடன் கதையில என்ன பற்றி எழுதி இருக்க? அந்த கதையைப் படிச்ச பிறகுதான் உன் மேல் பயம் அதிகம் ஆகுதுடா... பிளீஸ் உன்னை கெஞ்சிக் கேட்கிறேன் தயவு செய்து என் சம்பந்தப் பட்ட எதுவும் எழுதாதே...

தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு ஜெனி தொடர்ந்தாள்

கார்த்தி , நீ ஒருத்தியை காதலிச்சேன்னு எல்லோருக்கிட்டேயும் சொல்லிக்கிறது உனக்கு ஒரு பெருமையான விசயமா இருக்கலாம்... என்னை ஒரு கதாபாத்திரமா உலவ விட்டு நீ பேர் வாங்கிக்கலாம்..ஒரு நிமிஷம் என்னைப் பற்றி யோசிச்சுப் பார்.... நான் உன்னைவிட்டுப் போனது தப்பாகவே இருக்கலாம் அதுக்காக உன் எழுத்தில் என்னைக் கேலிப் பொருள் ஆக்காதே..

என் மேல் உள்ள வெறுப்பை என் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தி உன் பழி வாங்கும் என்ணத்திற்கு வடிகால் தேடிக் கொள்கிறாய்

Dont assasinate my character in your writings!
பிளீஸ் எக்காரணம் கொண்டும் என்னைப் பற்றி எழுத மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடு...

உன் எழுத்துலகிலிருந்து எனக்கு விடுதலை கொடு ... நான் நிம்மதியா என் வாழ்க்கையை ஆர்ம்பிக்க விரும்புகிறேன்

சரி ஜெனி, இனி உன்னைப் ப்ற்றி எழுதவில்லை.. முடிந்தால் எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்

Thanks, நான் அடுத்த வாரம் கனடா கிளம்புறேன்.... உன் வாழ்க்கையை சந்தோசமாக அமைத்துக்கொள் கார்த்தி என்று எழுந்தாள் ஜெனி.
-----------------------------------------------------

ஏன் சமுதாய கதைகளெழுதுவதில்லை என்ற டீவி நிருபரின் கேள்விக்கு பிரபல விஞ்ஞான எழுத்தாளாரான கார்த்தியின் கண் முன் 20 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் நிழலாடிச் சென்றது.. எழுத்து சுதந்திரத்தில் ஜெனியால் தனக்கு தானே விதித்துக்கொண்ட கட்டுப் பாடுகள் தாம் என்னவோ சிறந்த விஞ்ஞான எழுத்தாளரை உருவாக்கியுள்ளது என்று நினைத்துக் கொண்டான் கார்த்திக்.

Monday, October 02, 2006

Get well soon

உளவியல்ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை மையமாக வைத்து "நல்ல மனமாற்றத்தை" ஏற்படுத்தக் கூடிய தரமான படங்களை எடுக்கலாம் என்பதற்கு உதாரணம் "லகே ரகோ முன்னாபாய்"

கதை ஓட்டத்தை மட்டும் புரிந்து கொள்ளும் அளவே உள்ள என் ஹிந்தி{நன்றி அந்தக் கால தூர்தர்ஷன்} அறிவுடன் , நான் தியேட்டர் ல பார்த்த முதல் ஹிந்தி படம் "லகே ரகோ முன்னாபாய்"

ரேடியோ அறிவிப்பாளரின் மேல் பிரியம் கொள்ளும் சஞ்ஜய் தத் , அவர் நடத்தும் காந்தி பற்றிய "வினாடி-வினா" நிகழ்ச்சியில் "தில்லாலங்கடி" செய்து வெற்றி பெறுகிறார். அதன் பிறகு ஏற்படும் தொடர்ச்சியான சம்பவங்களுக்காக சஞ்ஜய் தத் காந்தி பற்றிய புத்தங்களைப் படிக்க ஆரம்பிக்கிறார். அதன் விளைவாக அவருக்கு ஏற்படும் "ஹாலுசினேஷன்" மற்றும் தொடர்ச்சியான ஹாஸ்யம் கலந்த நெகிழ்ச்சியான விசயங்கள் தான் கதை. "காந்தீயம்" இன்றும் , என்றும் ஏற்புடையது என்று படம் முடிகிறது.

மக்களே படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்


பின் குறிப்புகள்:

1. "Get well Soon " என்பது படத்தில் வரும் ஒரு சிந்திக்க வைக்கும் ஒரு ஒன் லைனர்

2. காந்தி பற்றிய எனது சில "எதிர்மறையான" எண்ணங்களை இப்படம் சற்று விலக்கியது.