காட்டு ரோஜாக்களுக்கும் கடமை உண்டு - சிறுகதை
விடுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை விடிய விடியக் கொண்டாடிவிட்டு தூங்கிக் கொண்டிருந்த என்னை பக்கத்து அறையில் இருந்து ஒலித்த ”ஆண்டே நூற்றாண்டே” முகவரிப் படப் பாடல் எழுப்பியது.
“அழுக்கில்லாத காற்றும் நீரும் அகிலம் முழுதும் தருவாயா!!!” என்ற வரிகளை மீறி
“டி22 கார்த்தி போன்” என்று விடுதி உதவியாளர் ஒருவரின் குரல் கேட்க எழுந்து வேகமாக தொலைபேசி இருக்கும் அறைக்கு ஓடினேன். இது நிச்சயமாக ஜெனியின் அழைப்புதான். நீண்ட நேரமாக காத்திருப்பில் வைத்திருப்பார்கள் போல, பிற அழைப்புகளுக்காகக் காத்திருந்த விடுதி மாணவர்கள் லேசாக முறைத்தனர்.
“ஹலோ”
“ஹல்லோ கார்த்தி.. நான் ஜெனி பேசுறேன்.. ஏன் லேட், நான் தான் இந்த டைம்முக்கு போன் பண்ணுவேன் வெயிட் பண்ணுன்னு சொன்னேன்ல”
“சாரி, ஜெனி நைட் போட்ட ஆட்டத்துல கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்”
“என்ன தண்ணி அடிச்சியா?”
“அந்தப் பழக்கம்தான் இதுவரை இல்லைன்னு சொன்னேன்ல, “
“பொய் சொல்லாதே!!! வாசனை கப்புன்னு அடிக்குது”
“அது என்கிட்டே இருந்து இல்லை, பக்கத்துல உட்கார்ந்து இருக்கிற ஜூனியர் பசங்க கிட்டே இருந்து”
“இது தான், இந்த டைமிங் தான்..உன்னிடம் ரொம்ப பிடிச்சது, சரி எத்தனை மணிக்கு அந்த இடத்துக்குப் போகனும், நான் ஏற்கனவே ரெடியாயிட்டேன், 2nd ஸ்டாப்ல வெயிட் பண்றேன், சீக்கிரம் வந்து சேரு”
ஜெனிக்கு சரி சொல்லிவிட்டு தொலைபேசி அறையைக் கடக்கும்போது “எப்படி எல்லாம் பில்டப் பண்ணி கடலை போடுறானுங்கப்ப” என ஒரு சக விடுதி மாணவன் சொன்னதைக் காதில் வாங்கி சிரித்துக் கொண்டே வேக வேகமாக கிளம்பி 2வது நிறுத்தத்தை அடைந்த போது ,காத்திருந்த ஜெனி என்னைப் பார்த்தவுடன் “மில்லினியம் விஷஸ்” என சொல்லி ஒரு ”Wishes 2000" என அச்சடிக்கப்பட்டிருந்த அழகான வாழ்த்து அட்டையைக் கொடுத்தாள்.
“தாங்க்ஸ் எ லாட் ஜெனி, டெக்னிகலி அடுத்த வருடம் தான் மில்லினியம் ஸ்டார்டிங்”
”உனக்கு எதாவது எடக்கு மடக்கா பேசலான்னா தூக்கம் வராதே!!” சொல்லிவிட்டு என் வண்டியில் ஏறிய ஜெனியுடன் நகரத்தின் எல்லையைத் தாண்டி அமைந்திருந்த செஷையர் இல்லம் என்றழைக்கப்படும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு வண்டியை வேகமாக செலுத்தினேன்.
ஜெனி எங்க கல்லூரில ஒரு வருடம் இளைய மாணவி , அவளோட அப்பா திருப்பூர்ல பெரிய தொழிலதிபர், இங்கே அவங்க சொந்தக் காரங்க வீட்டுல தான் தங்கிப் படிக்கிறாள். போன வருடம் கல்லூரி விழாவுக்காக போடப்பட்ட நாடகத்தில் சேர்ந்து நடித்ததின் மூலமாக ஒருவருக்கொருவர் அறிமுகம் ஏற்பட்டது. அதுவரை நானும் ஜெனியை பெரிய அலட்டல்காரி என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் மற்றவர்கள் சொல்லும் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு அலட்டல் இருக்கிறது. பணக்காரச்சூழலிலேயே வளர்ந்து விட்டதால் அவளோட இயற்பான குணங்கள் அலட்டலாக மற்றவர்களுக்கு தெரிகிறதோ என்னவோ!!
கடைசி ஐந்து மாதங்களில் நட்பின் நெருக்கம் அதிகமாகிவிட்டது என்று தெரிந்த நண்பர்கள் “மாப்லே, ஏற்கனவே அவளோட ரிலேடிவ்ஸ் உன்னைப் பத்தி விசாரிச்சுட்டு இருக்கானுங்க ... அவளோட பழகுறது தண்ணி லாரி மாதிரி... லாரி நம்ம மேல மோதினாலும் நாம லாரி மேல மோதினாலும் சேதாராம் நமக்குத்தான்,,, கொஞ்சம் ஜாக்கிரதை” என்ற நண்பர்களின் அறிவுறுத்தல்களில் அக்கறை இருந்தாலும் அக்கறையை விட பொறாமை அதிகம் இருந்தது என்பதுதான் உண்மை.
தென்னை மரங்கள் இருமருங்கிலும் நிற்க இடையில் இருந்த செம்மண் சாலையின் முடிவில் செஷையர் இல்லம் தெரிந்தது. வண்டியை நிறுத்திவிட்டு ஜெனியுடன் அந்த இல்ல நிர்வாகியின் அறையினுள் நுழைந்து ஜெனியை அவரிடம் அறிமுகப் படுத்தினேன்.
அடுத்த இரண்டு மணிநேரம் அங்கிருந்தவர்களிடம் உரையாடிவிட்டு அவர்களுடனே மதிய உணவும் சாப்பிட்டுவிட்டு திரும்பும்பொழுது தான் உரைத்தது. ஜெனி அவர்கள் யாருடனும் சரியாகவே பேசவில்லை. முகத்தில் எரிச்சல் அருவருப்பு எல்லாம் தெரிந்தது. வண்டியில் திரும்பும்பொழுது ஜெனியே பேச்சை ஆரம்பித்தாள்.
“கார்த்தி, பிளீஸ் இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் இனி என்னைக் கூப்பிடாதே... ஐ யம் நாட் கம்பர்டபிள் ...இவங்களை எல்லாம் எனக்குப் பார்க்க பிடிக்கல.. ஐ யம் நாட் ஹியர் ஃபார் சோசியல் சர்விஸ்”
அவளின் இந்த பேச்சு என்னுடைய உற்சாக அளவை சிறிதுக் குறைத்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் புன்முறுவலுடன் அவளை இறக்கிவிட்டுவிட்டு விடுதிக்குத் திரும்பினேன். மறுநாள் கல்லூரியில் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டாலும் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அடுத்த இரண்டு நாட்கள் இப்படியே போனது. மூன்றாம் நாள் அவள்தான் பேச்சை ஆரம்பித்தாள்,
“புரபஷர் மோகனோட பையன் பர்த்டேவாம்... கூப்பிட்டாரு.. ரம்யா மேடமும் கூப்பிட்டாங்க”
“ம்ம் என்னையும் கூப்பிட்டாங்க”
“ரம்யா மேடமும் மோகன் சாரும் சூப்பர் ஜோடில்ல... உனக்குத் தெரியுமா அவங்க ரெண்டு பேரும் கிளாஸ்மேட்ஸ், லவ் மேரேஜாம். லவ்லி கப்புள்ஸ்”
அவளுக்குத் தலையாட்டிக் கொண்டே மோகன் ரம்யா தம்பதிகளின் 10 வயது பையன் விவேக்கைப் பற்றி நினைவு வந்தது. விவேக்கிற்கு “செரிபரல் பால்ஸி” நரம்பு சம்பந்தபட்ட ஒரு வகையான குறைபாடினால் பாதிக்கப்பட்டவன். ஆனால் மோகன், ரம்யா தம்பதிக்கு குழந்தையாய் வந்ததனால் நிஜமாகவே அவன் ஆசிர்வதிக்கப்பட்டவன் . அருமையாக கவனித்துக் கொள்வார்கள். விவேக்கிற்கு என்னுடன் விளையாடுவது மிகப்பிடிக்கும். ஜெனியின் நட்புக்கு முன்னால் வார இறுதிகள் விவேக்குடன் தான்.
விவேக்கின் பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்துவிட்டு திரும்புகையில் “கார்த்தி, விவேக்கிற்கு அப்படி ஒரு டிஸெபிலிட்டி இருக்குன்னு ஏண்டா நீ முன்னமே சொல்லல, தெரிஞ்சிருந்தா நான் வந்தே இருக்க மாட்டேன் “
“நான் அப்படி நினைக்கல..மோகன் சாரிடமோ ரம்யா மேடமிடமோ இப்படி பேசிடாதே..”
“ஏண்டா இப்படி எல்லாம் பொறக்குறாங்க...இவங்களை எல்லாம் பிறந்த உடனேயே கில் பண்ணிடலாம்ல, இவங்களால மத்தவங்களுக்கும் கஷ்டம்... எமொஷனலா ..பிசிக்கலா நிறைய பேருக்குத் தொந்தரவு... இந்த விவேக் இருந்து என்ன சாதிக்கப் போறான்... எல்லோரையும் டிஸ்டர்ப் பண்ணிட்டு கொஞ்ச நாள்ல செத்துப் போகப் போறான்.. ”
ஜெனியை அப்படியே அறைய வேண்டும் என்பது போல இருந்தது. கோபத்தைக் கட்டுப் படுத்திக்கொண்டு “பைபிள் பழைய ஏற்பாட்டுல ஒரு வசனம் வரும்.. --காட்டில் பூக்கும் ரோஜாக்கள் கூட தன் கடமையை உணர்ந்தே பூக்கின்றன-- “
நான் சொன்னதைக் காதில் வாங்கி கொண்டாளா என்று தெரியவில்லை. இருந்தும் ஊதுற சங்கை ஊதி வைப்போம்னு
“ஜெனி, இந்த யுனிவர்ஸோட செண்டர் பாயிண்ட் எது தெரியுமா.. ஒவ்வொரு தனி மனிதன் தான்.. என்னைப் பொறுத்து நான் தான் இந்த யுனிவர்சோட மையம்.. அது மாதிரி உனக்கும்... விவேக்கிற்கும்.. ஒவ்வொருத்தரோட பிறப்பும், இருப்பும், இறப்பும் ஏதாவது காரண காரியங்களுக்காகத்தான் நிகழ்த்தப்படுது..இங்க பில்டிங் கட்டுறப்ப ஏற்படுற சின்ன அதிர்வுகள் வேற எங்கேயோ பூகம்பமா மாறும்..everyhting has got its own reasons for its existance"
"cut the crap... வர வர உன் பேச்சு ஆர்க்யூமெண்ட்ஸ் எல்லாம் கேட்க கடுப்பா இருக்கு" என எரிச்சலைடைந்து பேச்சை நிறுத்த சொன்னாள். பிப்ரவரி 14 ஆம் தேதி அவளிடம் என் விருப்பத்தை சொல்லலாம் என்ற நினைப்பு இனி எழவேக் கூடாது என மனதில் உறுதி எடுத்து அவளை விட்டு விட்டு விடுதிக்கு வந்தேன். அதன் பிறகு வலிய ஜெனியுடன் ஆன நட்பையும் குறைத்துக் கொண்டேன். ஓடிப்போயிற்று கல்லூரியில் அந்த கடைசி ஆறுமாதங்களும் அதன் பின் இந்த ஏழு வருடங்களும்.
பொருளாதரத்தை வளப்படுத்திக் கொள்ளும் போராட்டத்தில் பழைய அக்கறை மனப்பான்மைகள் நீர்த்துப் போயிருந்தன. சம்பிரதாயமாக ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் ஒரு கணிசமான தொகையை சில ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பிவிட்டு அதில் ஒரு பொய்யான ஆத்ம திருப்தி அடைந்து விட்டதாக என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டிருந்தேன். செஷையர் இல்லம், மோகன் சார், ரம்யா மேடம் , விவேக் பற்றிய நினைவுகள் மட்டும் அவ்வப்போது வந்து போகும். ஜெனி என் பிறந்த நாளுக்கு மட்டும் மின்னஞ்சல் அனுப்புவாள். அவள் கல்யாணம் கோயம்புத்தூரே அதிர நடந்ததாக போய் வந்த என் கல்லூரித் தோழர்கள் சொன்னார்கள். பழைய நினைப்பெல்லாம் தூர ஏறக்கட்டிவிட்டு என்னுடைய மடிக்கணியில் ஆங்கில செய்தித் தாள்களின் இணையத் தளங்களை மேய ஆரம்பித்தேன்.
அட..சிறப்புக்கட்டுரை ஒன்றில் மோகன் ரம்யா தம்பதியினரின் பேட்டி,தங்களது வேலைகளைத் துறந்து விட்டு சேமிப்பு பணத்துடன், செரிபரல் பால்ஸியினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்காக ஒரு மையத்தை இரண்டாண்டுகளுக்கு முன் துவங்கி அதை மிகுந்த நேயத்துடன் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டு இருந்தார்கள். .மூன்று வருடங்களுக்கு முன் தங்கள் மகன் விவேக் இறந்துவிட்டதாகவும், அவனின் நினைவாக அவனைப் போல பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு சேவை செய்ய முழுமனதுடன் வந்துவிட்டதாகவும் சொல்லி இருந்தனர்.
”முன்ன விவேக் மட்டும் தான் எங்க குழந்தை, இப்போ இந்த அத்தனைக் குழந்தைங்க முகத்திலேயும் எங்க விவேக்கைப் பார்க்கிறோம்..கடவுள் சில பேரை சில விசயங்களை செய்ய வைப்பதற்காக அனுப்புகிறார்.. அதுமாதிரியான கடவுளோட தூதுவன் தான் விவேக் ” என அந்த பேட்டியில் ரம்யா மேடமும் மோகன் சாரும் குறிப்பிட்டிருந்ததை நெகிழ்ச்சியாகப் படித்து முடித்தேன்.
அந்த இணைய செய்தியின் சுட்டியை அப்படியே ஜெனியின் மின்னஞ்சலுக்கு ”கடமை தவறாத காட்டு ரோஜா “ என தலைப்பிட்டு அனுப்பி வைத்தேன். இந்த மின்னஞ்சலுக்கு ஜெனியிடம் இருந்து பதில் வரலாம் வராமலும் இருக்கலாம், ஆனால் அதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை. காலம் சில விசயங்களை சிலருக்கு தாமதமாகத்தான் உணர்த்தும். எனக்கு இன்று உணர்த்தியது. கட்டுரையில் தரப்பட்டிருந்த மோகனின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்தேன்.
-------- முடிந்தது----