Monday, March 18, 2013

ஒரு புத்த மத நீதிக் கதை

ஓர் ஊரில் ஒரு அழகான பூந்தோட்டங்களுடன் அமைந்த வீட்டில் தனது சீடர்களுடன் அமைதியான புத்தத்துறவி வசித்து வந்தார். தினமும் அவரைப் பார்க்க அவ்வூர் மக்கள் அடிக்கடி வருவர். துறவியின் பக்கத்துவீட்டில் , தன் பிள்ளைகள் மேல் ஏக பாசம் வைத்திருக்கும் பக்‌ஷேசூரா என்ற ஒருவன் வாழ்ந்து வந்தான். பக்‌ஷேசூராவிற்கு துறவியைப் பிடிக்கவில்லை. அதனால் ஏகப்பட்ட பிரச்சினைகளை துறவிக்குக் கொடுத்துக் கொண்டிருந்தான். கழிவுகளை , துறவியின் வீட்டின் எல்லைக்குள் எறிவது, துறவியை சந்திக்க வருபவர்கள் , அவன் வீட்டை கடக்கும்ப்பொழுது ஏக வசனத்தில் திட்டுவது, சில சமயம் வீட்டில் இருந்து கல்லெறிவது, துறவியின் சீடர்களைத் தாக்குவது என ஏகத்துக்கும் போய்க் கொண்டிருந்தது. பக்‌ஷேசூராவின் நெருங்கிய நண்பரின் இடத்தைத் தான் இவர்கள் வாடகைக்கு எடுத்து இருந்தார்கள். அதனால் வீட்டு உரிமையாளரிடம் சொல்ல இயலாது. துறவி ஏதாவது செய்ய வேண்டும் என சீடர்கள் கேட்டுக்கொண்டார்கள் . நாளை முதல் பக்‌ஷேசூராவின் தொந்தரவு இருக்காது என உறுதியளித்த துறவி. வழக்கமாக துறவியின் வீட்டுத் தோட்டத்தில் விளையாட வரும் ஏகப்பட்ட பிள்ளைகளில், பக்‌ஷேசூராவின் பிள்ளைகளை மட்டும் தலையில் நான்கு குட்டுகள் குட்டி, இனிமேல் இந்தப் பக்கம் விளையாட வரக்கூடாது என துறவி விரட்டினார். குழந்தைகள் விளையாட இடமும் ஆட்களும் இல்லாமல் ஏங்கித் தவித்ததைப் பார்த்த பக்‌ஷேசூரா , மனந்திருந்தியதை போல் கொஞ்சம் நடித்து தனது கொடுமைகளை நிறுத்தினான். நடிப்பு என்று துறவி புரிந்து கொண்டாலும் பக்‌ஷேசூராவின் குழந்தைகளை விளையாட அனுமதித்தார்.

நீதி - தனக்குத் தொந்தரவு கொடுப்பவர்களை சிறு வன்முறையினால் மிரட்டலாம். தவறில்லை.


கதையில் சொல்லாமல் விட்ட நீதி  

குழந்தைகளைக் குட்டியது வருத்தமானது என்றாலும் துறவியின் நிலை கடினமானது.  அவர் ஓர் இடத்தில் வாடகைக்கு இருக்கிறார். சொந்த “ இடமாக” இருந்திருந்தால் , இந்நேரம் பக்கத்துவீட்டுக்காரனை வெளுத்து எடுத்து இருப்பார். அனேகமாக அடுத்தடுத்த வாரங்களில் துறவியும் சீடர்களும் சொந்த ”இடத்தைப்” பற்றி யோசிக்க ஆரம்பித்து இருப்பார்கள்

Friday, March 15, 2013

மாங்கல்யம் தந்துநானே - சிறுகதை


நான் மூக்குவிடைத்த சாதியைச் சேர்ந்தவன் என்பது அம்முவிற்கும் , அவள் காது துடிக்கும் சாதியைச் சேர்ந்தவள் என்பது எனக்கும் இன்று தான் தெரியும். நாங்கள் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றோம் என்று எங்கள் வீட்டில் செய்தியை சொன்னபொழுது, எங்களின் அம்மாக்கள் கேட்ட முதல் கேள்வி,..

“அவங்க என்ன ஆளுக”

அப்பாக்களைக் காட்டிலும் அம்மாக்கள் சாதி அபிமானங்களை அதிகம் கொண்டிருக்கின்றனர்.

“என்னடா கார்த்தி, காது துடிக்கிறவனுங்க, இன்னக்கி நமக்கு சமமா இருக்கிற மாதிரி இருக்கலாம், ஒரு காலத்தில் எங்க தாத்தா அவங்களை எல்லாம் மதிக்கவே மாட்டாரு” என் அம்மா இப்படி சொல்லிவிட்டார் என்பதை மிகவும் வருத்தமாக அம்முவிடம் சொன்னபொழுது, அவளின் அம்மா மூக்குவிடைத்த சாதியைப் பற்றி  மிகக் கேவலமாக சொன்னதை சொல்லி என்னைத் தேற்றினாள்.

அம்மு பாசம் காட்டுவதில் மட்டும் “நெஜமாத்தான் சொல்றியா” வகை பெண்ணாக இருந்தாலும், நிறையவே முற்போக்கு அரசியல் சிந்தனைகளைக் கொண்டிருப்பவள். என்னைப்போல் அவளுக்கும் எளிமையான சுயமரியாதை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் விருப்பம்.

“ஏண்டா கார்த்தி உனக்கு இந்த நினைப்பு, உன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதே பெரிய விசயம், நல்லநாள் அதுவுமா, வாழ்த்தாம வசவா பாடிட்டு இருப்பானுங்க, ஒரு மரியாதையும் வேண்டாம்... எனக்கு சடங்கு சம்பிராதாயம் எல்லாம் முக்கியம்...“

அம்முவிற்கு கிட்டத்தட்ட இதே பதில்தான். பெரியாரைப் புரிந்து இருந்ததால் , மூக்கும் காதும் இந்த ஒரு புள்ளியில் இணைவது வியப்பைத் தரவில்லை.

அம்முவைப்போல் எனக்கு எப்படியாவது பிரச்சினை இல்லாமல் திருமணம் முடியவேண்டும் என்ற பயம் இருந்ததால் சமாதானத்திற்கு தயாரான பொழுது, எனது அப்பா ஒரு யோசனையை சொன்னார்.

அம்மா ஏற்கனவே தேர்ந்து எடுத்து வைத்திருந்த புரோகிதரிடம் திருமண சடங்குகளுக்கு முன்பதிவு செய்ய நானும் அப்பாவும் தான் போனோம்.  புரோகிதர் ஆங்கிலத்தில் தான் பேசினார். இடையிடையே மணிப்பிரவாள நடைப்போல கொஞ்சம் தமிழும் நிறைய சமஸ்கிருதமும் வந்து விழுந்தது.

“தமிழில், திருமண வாழ்த்து வசனங்களை சொல்ல வேண்டும், அதற்கான தமிழ் இலக்கியப்பாடல்கள் குறள்களை நாங்களே தருவோம்”

”நோ இட் ஈஸ் இம்பாஸிபிள், நீங்க வேற ஆளைப் பார்த்துக்கோங்க. ... இல்லாட்டி திக காரவாளை கூப்பிட்டுக்கோங்க”

என வெளியில் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக விரட்டினார்.

இந்த புரோகிதர் தான் வேண்டும் என அம்மா ஒற்றைக்காலில் நின்றார். இனி அம்மாவிற்குப் பதில் சொல்ல வேண்டுமே...எனக் கையைப் பிசைந்து கொண்டிருந்த பொழுது,

அப்பா என்னை புரோகிதரின் அலுவலகத்திற்கு வெளியே நிற்க வைத்துவிட்டு  மீண்டும் உள்ளே சென்றார். வரும்பொழுது சிரித்துக் கொண்டே ”புரோகிதர் தமிழுக்கு சம்மதித்துவிட்டார் “ என்றார்.

அன்பும் அறனும் உடைத்தாயின் எனத் தொடங்கி  தமிழ் வாழ்த்துப்பாக்களுடன் அந்த புரோகிதரால் திருமணம் சிறப்பாகவே நடத்தி வைக்கப்பட்டது. சாப்பாட்டை விட, திருமணத்திற்கு வந்தவரெல்லாம் தமிழ் மந்திரங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

சாவகாசமாக , அப்பாவிடம், எப்படி அந்த புரோகிதர் சம்மதித்தார் எனக் கேட்ட பொழுது

“அவர் வழக்கமாக வாங்கும் பணத்தை விட, இரண்டு மடங்கு தருவதாக சொன்னேன், ஒப்புக்கொண்டார்”

“அட..”    இது எனக்குத் தோன்றாமல் போய்விட்டதே என நினைக்கையில் அப்பாவே தொடர்ந்தார்,

”இன்னொன்றை கவனித்தாயா, அவர் பூணூல் கூட போட்டிருந்திருக்க மாட்டார், அதற்கும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கொடுத்தேன்”

----

Monday, March 04, 2013

மண்டப எழுத்தாளன் (Ghost Writer) - சிறுகதை

இரண்டு பேர் ஆடும் சதுரங்க ஆட்டத்தை தனியொருவனாக ஆடுவது என் பொழுது போக்குகளில் ஒன்று. தன்னை வெல்வது ஆண்மை மட்டுமல்ல, ஆன்மிகமும் கூட.  செஸ் ஆடுவதைப்போல,  அம்மு, ஆவி, ஈழம், திராவிடம், வன்மம், காமம் என   எனக்கான கேள்விகளுக்கு நான் வைக்கும் பதில்கள் என் எழுத்து. சிறுகதையோ பத்தியோ வார இதழ்களுக்கு இதுவரை எதுவும் அனுப்பியதில்லை. எனக்காக தோன்றியதை எழுதி, இணையத்தில் எங்கேயாவது பதிவு செய்துவிட்டு,  வேண்டியவர்கள் படித்துவிட்டார்கள் என்றால், கலவிக்குப்பின்னர் கிடைக்கும் அயர்ச்சியான உணர்வைப் போன்றதொரு மனநிலையில்,  அந்த எழுத்துக்களும் மறந்துப் போய்விடும். இதில் சிலர் கதையில் என்னைத் தேடிக்கொண்டிருப்பார்கள். சிறுகதை நிஜங்களை நம்புபவர்கள். அவற்றைவிட என் வாழ்க்கைத் தொடர்கதையில் சுவாரசியம் அதிகம் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்வதில்லை

எழுத்து படிக்கப்பட்டவுடன், எழுத்தாளன் மட்டுமல்ல, எழுத்தும் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்று நான் சொல்லிக்கொண்டாலும், ஆடிக்கொருதடவை ஏதாவது சஞ்சிகைகளில் சிலப் பத்திகள் வரும்பொழுது, அதை கையில் வைத்துக் கொண்டு அம்மு சந்தோசப்படுவதைப் பார்ப்பதற்காகவே வெகுசனமாகவும் எழுதவேண்டும் என நினைப்பதுண்டு.

போன வாரம், ஒரு மின்னஞ்சல் வந்து இருந்தது. கொங்கு மண்டலத்தில் இருக்கும் வளர்ந்து வரும் ஓர் ஆன்மிக குருவிற்கு , சில நீதிக்கதைகள் எழுதித் தரவேண்டும் என்பதாக செய்தி அதில் இருந்தது.  முதலில் நான் நம்பவில்லை. நான் நிறையப் பேருக்கு விளையாடியதைப் போல எனக்கும் செய்கிறார்கள் எனக் கண்டுகொள்ளவில்லை.  15 கதைகள் எழுதிக்கொடுத்தால், 60 ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார்கள். பணம் எனக்குப் பல்லைக் காட்டியது.  பதில் அனுப்பினேன்.  மீன்கடைக்கு மீனின் வாசம்போதும், இணைய உலகில் சிறு தேடல் நம் தளத்தை நோக்கிக் கொண்டு வரும்.  தொலைபேசியில் அழைத்தார்கள்.

“உங்கள் தளத்தில் அந்த ஆன்மிகத் தேடல் கதைப் படித்தோம், மகாமகாரிஷி குருக்களுக்கு பிடித்துப் போய்விட்டது. அது போன்றக் கதைகளை மகாமகாரிஷி குருக்கள் ஒரு வார இதழில் எழுதப்போகின்றார், அதற்காக அதைப்போன்ற கதைகள் நீங்கள் எழுதித் தரவேண்டும்”

“மண்டபத்தில் உட்கார்ந்து எழுதித் தந்துவிடவேண்டும் அவ்வளவுதானே... நக்கீரர்கள் யாரும் வந்துவிட மாட்டார்களே”

எதிர்முனையில் இருந்தவர் சிரித்தார். எனது வங்கிக் கணக்கும் சிரித்தது. ஆன்மிகவாதிகள் பணவிசயத்தில் நேர்மையாகத்தான் இருக்கிறார்கள்.

“ அனைத்தையும் அர்ப்பணி ... ஆண்டவனுக்கு” என்றத் தலைப்பில் நீதிக்கதைகள் சக்கைப்போடுப் போட்டன. ஒவ்வொரு வாரமும் அம்மு புத்தகத்தை கையில் கொண்டுவந்து கொடுத்து, வாசி வாசி எனப் படுத்தி எடுத்தாள். தொழிலில் நான் நேர்மையானவன் என்பதால் அவளுக்கு இந்த விசயம் தெரியாது. போகிறப்போக்கில் மகாமகாரிஷிக்களின் சிஷ்யையாகவே மாறிவிடுவாள் போல இருந்தது. அதற்கும் ஒரு காரணம் இருந்தது, சில சமயங்களில் அவள் பேச்சில் தூவிவிடும் குட்டி குட்டி விசயங்களை நான் எழுத்தில் சேர்த்து விடுவேன்.

“பாருடா கார்த்தி, நான் போன வாரம் சொன்னதை சாமி அப்படியே இந்த வாரம் எழுதியிருக்காரு”

இரண்டு மாதங்கள் கடந்து இருக்கும். ஒரு தொலைபேசி அழைப்பு. இன்னொரு சாமியாரின் அலுவலகத்தில் இருந்து.  இவரை மகாமாகாரிஷிக்குருக்களுக்கு போட்டி சாமியார் என்றும் சொல்வார்கள். அவர் கங்கைக்கரை காவி என்றால் இவர் கொஞ்சம் நவநாகரீகமானவர். பகுத்தறிவு சாமியார் எனக்கூட வைத்துக்கொள்ளலாம். ஆங்கிலம் , தமிழ் , கொஞ்சம் தமிழ்த் தேசியம் எல்லாம் பேசும் சாமியார். பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட படங்களை எல்லாம் வலைத்தளத்தில் வைத்திருப்பவர். இப்பொவெல்லாம் சோப்பு டப்பா விற்கிறவன் கூட தேசியத்தலைவருடன் இருப்பதாக படம் செய்து வைத்துக்கொள்கின்றான்.  பெரிய சாமியாராக இருந்த போதிலும் எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் அவரே தொடர்புக்கு வந்தார்.

“தோழா, உங்கள் வலைப்பதிவைப் படித்தோம், நீங்கள் ஆன்மிகத்தையும் அரசியலையும் இணைக்கும் பாங்கு பிடித்திருந்தது. ஒரு பிரபல வாரப்பத்திரிக்கைக்கு கட்டுரைகள் எழுதப்போகின்றேன், எனக்கு நேரம் இல்லாத காரணத்தால், நல்லதொரு சிந்தனையாளனை தேடிக்கொண்டு இருக்கின்றேன். நீங்கள் ஒரு பத்துக் கட்டுரைகளை எழுதுக் கொடுத்தீர்கள் என்றால் , அதற்கான சன்மானம் உங்களுக்கு வழங்கப்பட்டுவிடும். எனதுத் திருத்தத்திற்குப்பின்னர் பிரபல வார இதழில் வெளிவரும், தலைப்பு - அனைத்தையும் அடித்து நொறுக்கு .. ஆண்டவன் நீயே ”

சிவபெருமானுக்கே மண்டப எழுத்தாளன் என்ற பெருமை ஒருதடவைதான் கிடைத்தது. கடவுளை விஞ்சியவன் ஆகிவிட்டேனோ...

“தோழா, மேலும் ஒரு விசயம், ஆக்ரோஷம் தூக்கலாக இருக்க வேண்டும், குறிப்பாக அந்த மக்குசாம்பிராணி மஹாரிஷி எழுதும் நீதிக்கதைகளைத் தாக்குவதுப்போல கட்டுரையின் ஊடாக சிலக்கதைகளையும் சேருங்கள்.... கதை எழுதுகின்றானாம் கதை... மட்டமான ரசனைக்காரன்”

இந்த ஆட்டம் எனக்குப் பிடித்து இருந்தது. நான் வரிசைப்படுத்தி வைத்திருந்த கறுப்பு , வெள்ளை நிற சதுரங்கக் காய்கள் என்னைப்பார்த்து சிரித்தன. மற்றும் ஓர் ஆட்டத்தைத் தொடங்கினேன்.




Friday, March 01, 2013

அவள் உடைத்தது வெறும் கண்ணாடிப்பாத்திரங்கள் மட்டுமே- சிறுகதை



கண்ணாடி பாத்திரம் ஏதோ ஒன்று உடையும் சத்தம் கேட்டது. கேத்தரீனா மற்றும் ஒரு கண்ணாடி குவளையை உடைத்திருக்கிறாள் போலும். கேத்தரீனா என்னைக் காதலிக்கிறாள். அவளை இத்தாலியின் மிலான் நகரில் ஓர் ஆய்வகக் கருத்தரங்கில் சந்தித்தேன்.  ஒரு வருடப் பழக்கம், அவளை விட நான் அறிவாளி, அவள் என்னை விட உலகத்தையும் மனிதர்களையும் அதிகமாக நேசிப்பவள், அதனாலேயே ஒரு வேளை ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கலாம். அவளின் ஒரு வார விடுமுறையில் ரோம் நகரத்திற்கு வந்திருக்கிறாள். சொல்லப்போனால் என்னை மட்டும் பார்ப்பதற்காகத்தான் இந்த ரோம் பயணமே.... ரோம் நகரத்தைச் சுற்றிப்பார்ப்பது என்பது இரண்டாம் பட்சம், அல்லது முக்கியமே அல்ல..

“மன்னித்துவிடு கார்த்தி, இன்னொரு பாத்திரத்தை உடைத்துவிட்டேன்” அவள் கண்களில் நான் திட்டிவிடுவேனோ என்ற பயம் தெரிந்தது.

என்னிடம் பாசம் காட்டும் பெண்களை எனக்குப் பிடிப்பதைப்போல, என்னிடம் பயப்படும் பெண்களையும் பிடிக்கும்.

“பரவாயில்லை, கேத்தி, உடைந்த கண்ணாடி உன் கைகளைக் கீறிவிடவில்லைத்தானே” அவளின் பயம் எனது நேசமான வார்த்தைகளால் மறைந்தது.

இரண்டு கண்ணாடிக்குவளைகள், மூன்று பீங்கான் தட்டுகள், ஒரு ஸ்விட்ச் போர்டு, குளிர்சாதனப் பெட்டியில் காய்கறி வைக்கும் பிளாஸ்டிக் தடுப்பு, சன்னலை மூடும் நீண்ட ஷட்டர் கதவு என அவள் உடைத்த விசயங்கள் நீண்டு கொண்டே இருந்தன.

அவள் உடைத்த பொருட்களின் ஒட்டு மொத்த மதிப்பு, விடியற்காலையில், அவள் அன்பாக போட்டுத்தரும் டீக்கு கால் தூசியாகாது.  அவள் போடும் டீ படு சுமாரான ஒன்றுதான், ஆனாலும் அவள் அதைக் கொண்டு வந்துத்தரும் அன்பில், இனிப்பு சரியாகக் கலக்கவில்லை என்றாலும், டீத்தூள் சரியாகப் போடவில்லை என்றாலும் எதுவுமே குறையாகத் தெரியாது. சுடுதண்ணியில் டீ பாக்கெட்டைப் போட்டு, டீக் குடித்து பழகியவளுக்கு, டீத்தூளைக் கொதிக்க வை, பாலைக் கலந்து, இஞ்சி ஏலம் தட்டிப்போடு என்பது எல்லாம் லத்தீன் கற்றுக்கொள்வதுப் போல... இருந்தாலும் மகிழ்ச்சியாக செய்கின்றாள்.

இப்பொழுது கூட, இணையக் குறிப்புகளைப் படித்து , பிரியாணி செய்ய முயற்சி செய்துக் கொண்டிருக்கிறாள். அதீத அன்பு காட்டுபவர்கள் அவர்களை அறியாமல் அடிமையாகிவிடுவார்கள்.  அந்த அதீத அன்பில்தான், மூன்று வெங்காயங்களை கண்கள் கலங்க வெட்டிக்கொண்டிருக்கிறாள்.

”கார்த்தி, பிரியாணி சாப்பிடுகிறோம், அப்புறம் ஒரே கொஞ்சல்ஸ் மட்டும்” கொஞ்சல்ஸ் என்ற அவளுக்குத் தெரிந்த பிடித்த ஒரே தமிழ்வார்த்தையை மட்டும் கலந்து ஆங்கிலத்தில் சொன்னாள்.

அவளை நான் திருமணம் செய்து கொள்வேனா, காதலிப்பேனா என்றெல்லாம் அவளுக்கு கவலை இல்லை. நான் அவளுக்கு ஒரு குழந்தையைத் தரவேண்டும். அவளுக்கு இந்தியக் குழந்தை, குறிப்பாக தமிழ்க்குழந்தை வேண்டுமாம். பெரியப் பிடிப்பற்ற அவளின் வாழ்க்கையில் பெருமிதமான பிடிப்பாக ஒரு தமிழ்க் குழந்தை, அதுவும் என் குழந்தை இருக்கும் என்பது அவளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இந்திய ஆண்களைக் காதலிக்கும் மேற்கத்தியப் பெண்கள் மாயையான பொய்மை அதிகம் நிறைந்த இந்தியக் கலாச்சரத்தில் மதிமயங்கிவிடுகிறார்கள். அந்த மதிமயக்கத்தை கிறுக்குத்தனம் என்றும் சொல்லலாம். ஆனால் இந்திய அல்லது தெற்காசியப் பெண்களைக் காதலிக்கும் மேற்கத்திய ஆண்கள் பெரும்பாலோனோருக்கு குனி என்றால் குனியும் நிமிர் என்றால் நிமிரும் பெண்கள் வேண்டும் என்ற ஆதிக்கத்தனம். நான் ஒரு முறை கேத்தரீனாவை அரைக் கிறுக்கு என்று கூட சொல்லி இருக்கின்றேன்.

“அன்பு செய்வது அரைக்கிறுக்குத்தனம் என்றால் நான் முழுக் கிறுக்காக விரும்புகின்றேன்” என்பது அவளின் பதிலாக இருந்தது.

பிரியாணிக்கான வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கையிலேயே , “

“குட்டிப்பாப்பாக்கு என்ன பெயர் வைக்கலாம் கார்த்தி” எனக் கேட்டுக்கொண்டிருக்கும்பொழுதே இன்னொரு கண்ணாடி டம்ளரை உடைத்தாள்.

பாலச்சந்திரன் அல்லது இசைப்பிரியா என்று சொல்லத்தான் நினைத்து இருந்தேன், ஆனால் அந்த நொடி துடுக்குத்தனத்தில்,

“பாத்திரங்களை கீழேப்போட்டு உடைத்துவிடுவதுபோல பாப்பாவையும் கீழே போட்டு உடைத்து விடாமல் இருந்தால் பெயர் வைப்பதுப் பற்றி யோசிப்போம்” என்றேன்.  நகைச்சுவை ஆளுமைகள் எல்லா நேரத்திலேயும் ரசிக்கப்படுவதில்லை விரும்பப்படுவதில்லை.

 கண்களில் தாரைத் தாரையாக கண்ணீர் வழிந்தது. நிச்சயம் வெங்காயம் காரணமில்லை. அப்படியே போட்டது போட்டபடி என்னருகில் வந்து அமர்ந்து கொண்டு, என்னைக் கட்டிக்கொண்டு அழுதுத் தீர்த்தாள். பெண்கள் அழுது விட்டார்கள் என்றால் , அந்தப் பிரச்சினைக்காக மற்றும் ஒரு முறை அழ மாட்டார்கள். அழுது முடித்தவுடன் சில முத்தங்களுடன் சின்னப்புன்னகையைக் கொடுத்துவிட்டு , பிரியாணி செய்து முடித்தாள்.  தலைப்பாக்கட்டு பிரியாணி தோற்றுவிடும்,,, அவ்வளவு ருசியாக இருந்தது.

நான்கு நாட்கள் கழித்துப்போவதாக இருந்த பயணத்தேதியை இரண்டு நாட்கள் முன்னதாகவே மாற்றினாள். அடுத்த இரண்டு நாட்களுக்கு எனக்கு எந்த குறையும் வைக்கவில்லை. ரயில் நிலையத்தில் , வண்டியில் ஏறிய பின்னர், இறங்கி  ஆழ்ந்த முத்தம் கொடுத்து பின்னர் ரயில் ஏறினாள். மிலான் சேர்ந்ததும் எஸ் எம் எஸ் அனுப்ப சொன்னேன். தலையாட்டினாள். 10 மணி நேரம் ஆகியும் அனுப்பவில்லை. பேஸ்புக்கிலும் தகவல் அனுப்பவில்லை. அவளின் பேஸ்புக் முகப்புப்பக்கம் போய்ப்பார்த்தேன்.

”நான் உடைத்தது வெறும் கண்ணாடிப்பாத்திரங்கள் மட்டுமே” எனப் பொருள் தரும் வாக்கியத்தை சோகச்சின்னத்துடன் இத்தாலிய மொழியில் எழுதி வைத்திருந்தாள்.

அவள் அலைபேசிக்கு அழைத்தேன்,,,, நீண்ட அழைப்பு எடுக்கவில்லை.. இரண்டாம் முறை எடுக்கவில்லை... முன்றாம் முறையும் அழைக்கின்றேன்... கண்டிப்பாக அழைப்பை எடுப்பாள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
----------