Wednesday, February 24, 2010

ஈழத்து தோழமையின் கவிதைகள்

ஈழத்து தோழமைகளில் ஒருவரது கவிதைகளை அவரின் அனுமதியோடு இங்கு பதிப்பிக்கின்றேன்.

யுத்த தர்மம்

மூவேழு பேராய் வந்து உங்களை

மூக்கு மேல் விரல் வைக்க வைத்த

எம் சகாக்களிடம் வீரத்தைக்காட்டாது

அவர் சடலங்களிடம் காட்டிவிட்டீர்கள்

அவர் பூதவுடல்களை கேவலப்படுத்த

நினைத்த நீங்கள், உங்கள் சமய தர்மம்

பற்றி கொஞ்சம் சிந்தித்து இருக்கலாம்.

புத்த தர்மம் வேண்டாம்......

யுத்த தர்மம் கூட தெரியாதவர்களா நீங்கள்?


மழை

அன்றிரவு அடை மழை!

என் சின்னத்தம்பி மழையில் நனைந்தான்

பலமுறை உள்ளே அழைத்தேன்.

பிடிவாதமாய் முடியாது என்றான்.

அவனை அழைத்து சலித்த நான்

இறுதியாக கூறினேன்,

மழையில் நின்று நனையதேடா............

மழையோடு மழையை பொழியும் குண்டும்

நான் சொல்லி வாய் மூடவில்லை

அவனை அங்கு காணவில்லை

அவன் தலை மட்டும் எட்டிப்பார்த்தது

அம்மாவின் பின்னாலிருந்து.................

Tuesday, February 23, 2010

உன்னால் கவிஞனும் ஆனேன் !!!!வீதியின் திருப்பத்தில் வேறுபாதை எடுப்பாய் எனத் தெரியும்
உன்னுடன் செல்லும் வரை சிறப்பு, பிரிவாய் எனத் தெரிந்தும் ..
விதியை மதியால் வெல்ல விருப்பம் இல்லை!!
இந்தப் பாதையும் சாட்சி, நாம் இருவரும் ஒன்றாக கடந்தோம் என்பதற்கு..
பிரிவும் தனிமையும் இன்னும் புதிதல்ல ஆதலால்..
இன்றும் தனித்தே இருக்கிறேன்
உன் நினைவுகளோடு..!!!!

Wednesday, February 17, 2010

உபரி ஓட்டங்கள் (Extras 17-February-2010)

அல்லவை தவிர்த்து நல்லவை நினை என மனம் அடிக்கடி உத்தரவுகள் கொடுத்துக் கொண்டிருந்தாலும், நடைமுறை வசதிக்காக சிலப்பல சமயங்களில் சுயநலமாகவே இருக்க வேண்டியிருக்கின்றது. அத்திப்பூத்தாற் போல, உள்ளுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் நல்லவன் தன்னிருப்பைக் காட்டிக்கொள்ள அமைந்த ஒரு சந்தர்ப்பம் கடந்த வாரம் கிட்டியது.

சுவீடனில் நகரப் பேருந்துகளில் சக்கரநாற்கலியுடன் பயணம் செய்ய வசதி செய்யப்பட்டிருக்கும். சக்கரநாற்காலியுடன் பயணம் செய்பவர்கள் இருக்கும் இடத்தை ஒட்டி குழந்தைகளை தள்ளுவண்டியில் வைத்து வருபவர்களும் பயணம் செய்ய சிறிய இடம் இருக்கும். ஒரு சமயத்தில் ஒரு சக்கர நாற்காலியும், ஒரு குழந்தை வண்டியும் நெருக்கி பயணப்படலாம். வழக்கமாக நான் பேருந்து நிலையத்தில் முதலில் ஏறிவிடுவதால், பின்வரும் நிறுத்தங்களில் ஏற வரும்குழந்தை வண்டிகளுக்கு ஓட்டுனர் அனுமதி மறுத்துவிடுவார். பேருந்தின் வெளியே இருந்து தாய்மார்கள் என்னை ஒரு வில்லனைப் போல பார்ப்பார்கள். இந்த நடுக்கும் குளிரில் குழந்தையுடன் அடுத்த பேருந்துக்காக ஒரு மணி நேரம் காத்திருப்பது கொடுமையானது.

நான் வசிக்கும் இந்த ரோன்னிபி நகரத்தில் இரண்டு பேருந்துகள் ஊரைச்சுற்றி வந்து கொண்டிருக்கும். மாலை ஐந்து மணிக்குப் பிறகு அது ஒன்றாக குறைக்கபடுவதால் அரை மணிக்கொருமுறை என்பது ஒரு மணிக்கொருமுறை என்றாகிவிடும். கடந்த வியாழன் அன்று, நடத்துனர் ஏதும்சொல்லாததால்(கொசோவோ வைச் சேர்ந்த ஓட்டுனர்) இரண்டு இளம் தாய்மார்கள் (இவர்களும் கொசோவா அல்லது முன்னாள் யூகோஸ்லாவியாவைச் சேர்ந்தவர்கள் ) குழந்தை வண்டிகளுடன் ஏறிவிட்டனர். நானும் எனது சக்கர நாற்காலியை நெருக்கிஇடமளித்தாலும்,பாதையை வழிமறித்து போகிற வருபவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தது. ஒரு வழியாகச் சமாளித்து நான் இருக்கும் இடம் வந்து சேர்ந்தாகிவிட்டது.

அவர்களும் நான் இருக்கும் பெரிய குடியிருப்பு பகுதியில் தான் வசிக்கின்றனர் போலும். மறுநாள்கார்ல்ஸ்க்ரோனா நகரில் வேலையை முடித்துவிட்டு ரயிலில் ஏறினால் ரயிலில் அதே இரண்டு தாய்மார்கள். ரயிலில் பிரச்சினை இல்லை. நடுவில் இருக்கும் பெட்டியில் நிறைய இடம் இருக்கும். அவர்களுக்கு என்னைப் பார்த்ததும் ஒரு அதிர்ச்சி. ஏனெனில் நாங்கள் மூவருமேஒரே பேருந்தை அடுத்துப் பிடித்தாக வேண்டும். அதில் ஒரு பெண் கண்டிப்பாக நாம் இவனுக்கு முன்னால் ஏறிவிட வேண்டும் என சுவிடீஷ் கலந்த செர்பிய/குரோஷிய மொழியில் சொன்னது புரிந்தது.

அப்படியா நடக்கட்டும், யார் முதலில் பேருந்தைப் பிடிக்கிறார்கள் என பார்க்கலாம் என மனதுக்குள் நானும் சவால் விட்டுக்கொண்டேன். காலிங்கே விமானதளத்தில் இருந்து வரும் பேருந்து, பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் நின்றுவிட்டு நான் வசிக்கும் பகுதிக்குப்போகும். பேருந்து நிலையத்தில் இருந்து 5 நிமிட தூரத்தில் இருக்கும் முந்திய நிறுத்தத்தில் போய் ஏறிவிட வேண்டும் என முடிவு செய்தேன். ரோன்னிபி நகரமும் வந்தது. எனக்கு முன்னால் அவர்கள் ரயிலை விட்டு இறங்கி வேக வேகமாக பேருந்து நிலையத்தில் இருக்கும் காத்திருப்பு அறைக்குச் சென்றனர்.

மெதுவாக அங்கு வந்த என்னைப் பார்த்தஅவர்கள் , என்னைப் போலவே அவர்களும் முந்தைய நிறுத்தத்திற்குப் போக கிளம்பினார்கள். அவர்களின் பார்வையில் எரிச்சல், கோபம், எப்படியாவது பேருந்தில் இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கம் எல்லாம் தெரிந்தது. கைக்குழந்தைகள் வயது அதிகபட்சம் ஒன்றரை இருக்கும். இரண்டு நிமிடத்திற்கு என்ன செயவது என குழந்தையின் வண்டிகளைத் தள்ளிக்கொண்டு இடம் வலமாக சில மீட்டர்தூரம் அலைந்து கொண்டிருந்தனர். அவர்களின் அலைக்கழிப்பை பார்த்த மனதில் இருந்த நல்லவன் விழித்துக் கொண்டு அவர்களை நெருங்கி

ஸ்கா டூ கோ தில் ஹியோர்த்ஹொய்டான் ? ( நீங்க ஹியோர்த்யொய்டான் தான் போறீங்களா)

வா எரிச்சலாக என்ன என அதில் ஒருவர் கேட்டார்

டூ கோ இ புஸ்ஸன், யாக் ப்ரொமினிரார் தில் ஹியோர்த்ஹொய்டான் (நீங்கள் பேருந்தில் செல்லுங்கள், நான் இப்படியே சக்கரநாற்காலியில்) போய்விடுகின்றேன்.

இப்படிச் சொன்னதும் நெகிழ்ச்சியடைந்த அவர்கள் இந்தக் குளிரில் உன்னால் போவது கடினம், நீ பேருந்தில் போ, நாங்கள் அடுத்தப் பேருந்தில் வருகின்றோம் என்று அவர்கள் சொன்னதை ஏற்க மறுத்து,குளிரில் போவது எனக்குப் பழக்கமான ஒன்றுதான் என்று சொல்லி அவர்கள் இருவருக்கும் நட்புப் புன்னகையைக் கொடுத்துவிட்டு உறைநிலைக்கும் கீழான குளிரில் 40 நிமிடப் பயணத்திற்குப் பின் வீடு வந்து சேர்ந்தேன். வழக்கமாக நடுக்கும் இந்த குளிர் அன்று ஏனோ இதமானகுளிராக தெரிந்தது.

----

ஒரு குழந்தைக்கும் அடுத்தக் குழந்தைக்கும் போதிய இடைவெளி தேவை என்ற குடும்பக் கட்டுப்பாடு விளம்பரத்தைப் போல ஒரு காதலுக்கும் மற்றொரு காதலுக்கும் குறைந்தபட்ச இடைவெளி இரண்டுவருடங்களாகவாது இருக்க வேண்டும் என்பதால் இந்த வருட காதலர்கள் தினம்சிங்கம் சிங்கிளாத்தான் இருக்கும் என்ற வகையில் கழிந்தது.மற்றும் ஒரு காதல் அல்லது காதலி அமைய இரண்டு வருடங்கள் ஆகும் என்பதல்ல, பழைய காயத்தை மறக்க அல்லது மறந்ததாக நினைக்க இரண்டு வருடங்களாவது தேவை. ஆகையால் See you in 2011 செப்டம்பர்.

2007 ஆம் ஆண்டு எழுதிய முன்னாள் காதலி என்ற கதை இந்த காதலர் தின உபரி ஓட்டங்களுக்குக்காக தரப்படுகிறது. வாசிக்க இங்கேச் சொடுக்கவும் http://vinaiooki.blogspot.com/2007/05/blog-post_14.html


------


ரோன்னிபி நகரத்தில் இருக்கும் திரையரங்கில் இந்த வசந்தகாலத்தில் தொடர்ந்து பன்னாட்டு அளவில் புகழ்பெற்ற படங்களை திரையிடுவார்கள். நான் மற்றும் அறைத்தோழர்கள் அப்பாவி கணேசன், அக்கறை அழகுராஜா மூவரும் அந்த சங்கத்தில் உறுப்பினர்கள் ஆகிவிட்டதால்
ஒவ்வொரு இரண்டாவது திங்கட்கிழமையும் ஒரு வெளிநாட்டுப்படம் பார்க்க வாய்ப்புக்கிடைக்கிறது, இந்த திங்களன்று ஒரு பிரஞ்சுப்படத்தை திரையிட்டார்கள்.பிரஞ்சுப்படம் சுவிடீஷ் சப்டைட்டில். இரண்டுமே அரைகுறை என்பதால் ஒரு வழியாகக் கதையைப் புரிந்து படத்தைரசிக்க முடிந்தது. அக்கறை அழகுராஜா சுவிடீஷ் வேகமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டதால் அவராலும் படத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. அப்பாவி கணேசன் பாடுதான் திண்டாட்டம். அப்பாவி கணேசன் பொறுமைசாலி, என்னதான் அவருக்கு சலிப்பு ஏற்பட்டாலும் உடன்இருப்பவர்களுக்காக அவர் அதை பொறுத்துக் கொள்வார். படம் முடியும் தருவாயில் "ச்சே பிரஞ்சுப் படம்னு சொன்னீங்க, ஒரு பிரஞ்சு கிஸ் கூட இல்லை" என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்ல, பிரஞ்சுகிஸ் என்பதைப் புரிந்து கொண்ட, சில இருக்கைகள் தள்ளி இருந்த நடுத்தர வயது சுவிடீஷ் அம்மணி அப்பாவி கணேசனைப்(மட்டும்) பார்த்துச் சிரித்தது.

------


கிரீன்வீச் மைய நேரத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் நாட்டுக்கான நேரங்களைப் பின்பற்றும் நாடுகளின் நேரங்கள் 30 நிமிடங்களின் மடங்குகளில் தங்களது நிர்ணயித்துக் கொள்ளும். உதாரணமாக இந்தியா 5.30 மணி நேரம் முன்னதாக வைத்திருக்கின்றது. சைனா 6மணி நேரம் கிரீன்வீச்சை விட முந்தையதாக வைத்திருக்கின்றது. இந்த வார உபரி ஓட்டக் கேள்வி என்னவெனில் எந்த நாடு 15 மடங்கில் வைத்திருக்கின்றது. ஆஸ்திரேலியா , நியுசிலாந்தைச் சேர்ந்த தீவுகள் 15ன் மடங்கில் நேரத்தை வைத்திருந்தாலும், இந்தியாவுக்கு
நெருக்கமான ஒரு நாடு 15 நிமிட மடங்கில் தனது நேரத்தை நிர்ணயித்து இருக்கின்றது. அந்த நாடு என்ன என்பதுதான் இந்த வாரக் கேள்வி?