Wednesday, December 31, 2008

வாழும் வரை போராடு உன்னால் முடியும் தம்பி அகரம் இப்போ சிகரம் ஆச்சு

மற்றுமொரு இனிய வருடம் துவக்கம். நேற்றை விட இன்று மேலும் நலமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் , அனைவருக்கும் எனது மனதார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். புத்தாண்டு நாளை அருமையான மூன்று பாடல்களுடன் தொடங்குங்கள்

வாழும் வரை போராடுஉன்னால் முடியும் தம்பிஅகரம் இப்போ சிகரம் ஆச்சு

Tuesday, December 16, 2008

திரைப்பார்வை - பொம்மலாட்டம் , சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களுக்கான இலக்கணம்

தமிழில் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையான படங்கள் வெளிவருவது மிகவும் அரிது. அப்படியே அத்திப்பூத்தாற்போல வந்தாலும் அது பெரும்பாலும் கவர்ச்சிப்பட வரிசையில் சேர்ந்துவிடுவது கசப்பான உண்மை. திணிக்கப்பட்ட மசாலத்தனங்கள் இல்லாமல் அழகான ,விருவிருப்பான த்ரில்லர் படத்தைக் கொடுத்து மீண்டும் ஒருமுறை தனது இருப்பைக் காட்டியிருக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. ஆரம்பகாலங்களில் சிகப்புரோஜாக்கள் , ,டிக்டிக்டிக் போன்ற படங்களின் வாயிலாக நகர்ப்புறம் சார்ந்த கிரைம் திரில்லர் படங்களை கிராமத்தானாலும் திரையில் தரமுடியும் எனக்காட்டிய பாரதிராஜா, கடைசியாக“கண்களால் கைது செய்” படத்தை இதே வகையில் தரமுயன்று வெற்றியை பெற முடியவில்லை.அவரின் மூன்றாம் தலைமுறை இயக்குனர்கள் கோலேச்சிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தயாரிப்பில் இருந்து பெரும் சோதனைகளைக் கடந்து நானாபடேகர்,அர்ஜுன்,ரஞ்சிதா,ருக்மிணி, காஜல் அகர்வால் நடிக்க தெற்கத்திக் கலைக்கூடம் தயாரிப்பில் வெளிந்திருக்கும் பொம்மலாட்டம் படத்தின் மூலமாக மீண்டும் ஒரு முறை தன்னை நிருபித்து இருக்கிறார்.

வழக்கமாக திரில்லர் படங்களில் வரும் இலக்கணமான ”நல்லவர்” என அறியப்படும் கதாபாத்திரம் இறுதியில் ”குற்றம் புரிந்தவர்” என வழக்கமாக முடிக்கப்படுவது போல அல்லாமல் படம் முழுவதும் குற்றம் புரிந்தவர் என சந்தேகிக்கப்படும்

கதையின் நாயகன் கடைசியில் அப்படி இல்லை எனக் காட்டியதோடு மட்டுமல்லாமல் எதிர்பார்க்க முடியாத முடிவுக்காட்சியை வைத்து பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறார். படம் அதிர்ச்சி மதிப்பீடுகளை கொடூரம் இல்லாமல் உணர்வுப்பூர்வமாகவும் காட்டியமைக்கு பாரதிராஜாவிற்கு நிறைய நன்றிகள். படம் பார்த்து முடித்தப்பின்னர் அட இப்படிக்கூட யோசிக்க முடியுமா என வியப்பைக் கொடுக்கும் வகையில் படத்தின் முடிவு இருப்பதுதான் இப்படத்தின் சிறப்பம்சமே.
கதையின் நாயகன் பிரபல இயக்குனர் ராணா(நானாபடேகர்) தன் படத்தில் அறிமுகமாகி இருக்கும் கதாநாயகியை தனது காருடன் மலையுச்சியில் இருந்து தள்ளிவிட்டு, அதை விபத்தாக ஜோடிப்பதுடன் படம் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. அது விபத்தல்ல, திட்டமிட்ட நடத்தப்பட்டக் கொலை என சந்தேகப்படும் சிபிஐ , விவேக் வர்மாவை(அர்ஜுன்) விசாரணைக்கு அனுப்புகிறது. விவேக் வர்மா , ராணாவின் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்கனவே நடந்த கொலைகளைப்பற்றியும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். வலுவான சந்தேகங்களுடன் குற்றஞ்சாட்டப்படும் நானாபடேகர் நீதிமன்றத்தில் போதிய சாட்சிகள் இல்லாமையால் விடுவிக்கப்படுகிறார்.இறுதியில் விடாப்பிடியாக சிக்கலுண்ட அடிநுனியை சிபிஐ அதிகாரி விவேக் வர்மா கண்டுபிடிக்கும்பொழுது படம்பார்ப்பவர்களும் இருக்கையின் நுனிக்குவருவது படத்தின் தனிச்சிறப்பு.

சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் கடைசியாக அடையாளம் காட்டப்படும் குற்றவாளி , படம் ஆரம்பிக்கபடும் சில நிமிடங்களிலேயே அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது இவ்வகையானப் படங்களுக்கு ஒரு இலக்கணம். படம் பார்க்கும்பொழுது கொலைகளுக்கு காரணம் , ராணாவிடம் உதவி இயக்குனராக இருக்கும் விவேக் வர்மாவின் காதலியாக இருப்பாரோ, ராணாவின் மனைவியாய் இருப்பாரோ, படத்தின் தயாரிப்பாளராய் வருபவரோ , விவேக் வர்மாவே கொலையாளியோ என ஊகங்கள் பார்வையாளருக்கு ஏற்படும் வகையில் அமைத்து தடாலடியாக ஒரு முடிவை வைத்து அசத்தி இருக்கிறார் பாரதிராஜா. பெரும்பாலான படங்களில் நடுவில் திடீரென ஒரு கதாபாத்திரம் நுழைந்து அல்லது நுழைக்கப்பட்டு
முடிவு அமைக்கப்படும். முடிவுகளுக்கும் பழிவாங்குதலைத் தவிர போதிய வலுவான காரணம் இருக்காது. ஆனால் வலுவான காரணத்துடன் ஆரம்ப முடிச்சிலேயே கதையை முடித்து த்ரில்ல்ர் படங்களுக்கு மேலும் ஒரு பரிமாணம் சேர்த்துள்ளார் பாரதிராஜா.

மாற்றங்கள் தேவையானதுதான், அதே மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்பொழுது ஏற்படும் விளைவுகளை நேர்த்தியாக திரையில் வடிவமைத்து, த்ரில்லர் வகையிலான படங்கள் சமீப காலமாக இல்லை என்றக்குறையைத் தீர்த்துவிட்டார் இயக்குனர் பாரதிராஜா.

த்ரில்லர் படங்களுக்கு பாடல்கள் தடையாக இருந்தாலும், பொம்மலாட்டம் படத்தில் கதையுடன் ஒன்றி வருவது ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது. நானாபடேகரின் அங்க அசைவுகள் ஒவ்வொன்றும் பாரதிராஜாவை நினைவுப்படுத்துகின்றன. உண்மையில்
பாரதிராஜா இப்படித்தான் படப்பிடிப்புத்தளத்தில் இருப்பாரோ என நினைக்கத் தோன்றுகிறது. நிழல்கள் ரவியின் குரல் நானாபடேகருக்குப் பாந்தமாக பொருந்துகிறது. அமைதிப்புயலாக அர்ஜுன் , அனேகமாக அர்ஜுன் நடித்து சண்டைக் காட்சி இல்லாத படம் இதுவொன்றாகத்தான் இருக்கும்.கதையின் நாயகி த்ரிஷ்னா(ருக்மிணி) பாரதிராஜாவின் “ரா” வரிசை நாயகிகளில் நல்லதொரு நடிகையாக இடம்பிடிப்பார் என நம்பலாம். பயம்,தயக்கம்,ஆதரவைத் தேடும் கண்கள் என மற்றொரு நடிக்கத் தெரிந்த நடிகையாக வலம் வருவார். காஜல் அகர்வால் அழகாக இருக்கிறார். அர்ஜுனுடன் ஒரு டூயட் பாடல். இவர் கொலைகாரராக இருப்பாரோ எனக் கதையோட்டத்திற்கு பயன்படுகிறார். வணிகரீதியாக இணைக்கப்பட்டுள்ள விவேக் நகைச்சுவைப்பகுதி கதையுடன் ஒட்டிவருவது சுவாரசியமாக இருந்தது. சமூகத்தில் விவாதிக்க விரும்பப்படாத விசயங்களை மணிவண்ணன் கதாபாத்திரத்தின் மூலம் நேரிடையாகக் காட்டி இருப்பது இயக்குனரின் துணிச்சல்.

”ரசீத் உன் பேர் தாண்டா காரணம் உனக்கு லண்டனுக்கு விசாக் கிடைக்க மாட்டேங்குது”, ”பிரகாஷ்ராஜ் வேண்டாம், அவரு ஒரே பேமெண்ட் கேட்பாரு” என சுவாரசியமான சில வசனங்களையும் படத்தில் ஆங்காங்கே தூவப்பட்டுள்ளது.

இந்தி உதட்டசைவுகள் வெளிப்படையாகத் தெரிவது படத்தில் கண்ணுக்கு நேரிடையாகத் தெரியும் ஒரு குறை. உபகதாபாத்திரங்கள் நானாபடேகருடன் வரும் காட்சிகள் தனித்தனியாக எடுத்து சேர்க்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. படத்தில் தயாரிப்பாளராய் வரும் நபர் தயாரிப்பு நிர்வாகியாக இருந்து, தயாரிப்பாளர் ஆனவர்கள் நிஜத்தில் இப்படித்தான் இருப்பார்களோ என்பதை கண்முன் நிறுத்துகிறார்.

படத்திற்கு இசை ஹிமேஷ் ரேஷமய்யா, கலை சாபுசிரில் , ஒளிப்பதிவு - பி.கண்ணன்“சினிமா” என்ற பெயரில் இந்தியில் வெளியாகப்போகும் இப்படம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறப்போகிறது என ஆவலை இந்தத் தமிழ் பதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படம் வணிகரீதியாக தமிழிலும் இந்தியிலும் வெற்றிபெற்று, ”எங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா” மீண்டும் ஒருமுறை திரையுலகில் வலம் வரவேண்டும் என்று வாழ்த்துவோம்.

புகைப்படங்கள் நன்றி : இண்டியாகிலிட்ஸ்.கோம்

Friday, December 12, 2008

யாக் அல்ஸ்கார் தீக் (jag älskar dig) - சிறுகதை

வெளிநாட்டுப் பயணங்கள் என் வாழ்வில் அன்றாடம் ஆகிப்போன இக்காலக்கட்டங்களில் ஒவ்வொரு முறை விமானத்தில் ஏறி அமர்ந்ததும் அவளை நினைக்காமல் இருந்ததில்லை. அவளுக்கு நான் கொடுத்திருக்கும் கவுரவம் என்னுடைய கடைசி காதலி என்பதுதான். அவளுக்குப்பிறகு யாரையும் காதலிக்க தோன்றவில்லை, ஏனெனில் நான் காதலிக்கப்பட்டது அவளிடம் மட்டும் தான். காதலிப்பதை விட, காதலிக்கப்படுவது எவ்வளவு சுகம் தெரியுமா!! உலகத்திலேயே வேகமான விடயம் இந்த நேரம் தான்... சடுதியில் ஐந்து வருடங்கள் ஓடிவிட்டனவே!! என்னுடைய முதல் வெளிநாட்டுப்பயணத்தின் போது நான் அவளுடன் பேசிக்கொண்டிருந்ததை மனம் அசை போடுவது என்னையும் அறியாமல் நான் விமான இருக்கையில் வந்தமர்ந்ததும் நடக்கும்.

வெற்றிகளை நான் துரத்துகின்றேனா...இல்லை வெற்றிகள் என்னைத் துரத்துகின்றனவா என்றதொரு நல்ல நிலையில் நான் இப்போது இருக்கிறேன் என்றால் அதற்கு அவள்தான் காரணம். எனக்கான பெண் என்று நான் நினைத்திருந்தவர்களில் என்னிடம் மிகக்குறைந்த காலம் இருந்தவள் அவள் தான். இருந்தாலும் அவள் வந்தபின் அவளின் நினைவு என்னை ஆக்கிரமிக்காத நாளே இல்லை..

நிறைய விடயங்களின் உயிர்ப்பு, கிடைத்தலை விட கிடைக்காமல் இருக்கும்போது தான் அதிகம் உணரப்படுகிறது. யுத்தமின்றி ரத்தமின்றி நாட்டுப்பிரிவினைகள் எப்படி சாத்தியமில்லையோ அது போல, வன்மமான வார்த்தைகள் இல்லாமல் காதல் பிரிவும் சாத்தியமில்லை என்று நினைத்துக்கொண்டிருந்ததை அவளின் அந்தக் கண்ணிர் உப்புக்கரித்த கடைசி முத்தம் மாற்றியது. சாத்வீகமாக பிரிந்த என்னுடைய ஒரே காதல் அவளுடையதுதான். அவளுக்கான நினைவுகளை மறுவாசிப்பு செய்து முடிப்பதற்கு முன்பாகவே விமானம் பிராங்க்பர்ட்டை அடைந்தது. வழக்கமான விமான நிலைய சோதனைகளை முடித்தாகியது. ஒரு மணி நேரம் காத்திருப்புக்க்குப்பின் கோபன்ஹேகனுக்கான விமானம் பிடித்தாகவேண்டும், அவளுக்கான எண்ண அலைகள், இளையராஜா பாடல்களை காதில் கேட்டுக்கொண்டே தொடர்ந்தது. ஆங்காங்கே சில தமிழ் குரல்கள் பாடலையும் மீறி காதில் விழுந்து கொண்டிருந்தது. அதில் ஒரு குரல் மிகவும் பரிச்சயமான குரல். ஆமாம்.. என்னுடைய இருக்கையில் இருந்து சில அடிகள் தூரத்தில் அவளேதான். கையில் குழந்தையுடன் குடும்பம் சகிதமாய்.. ஐந்து வருடங்களுக்கு முன்னர் பார்த்திருந்ததை விட சற்று குண்டாகி இருந்தாள். பேசலாம் என மனம் ஆசைப்பட்டாலும், அவளின் கடைசி வார்த்தைகள்

"கார்த்தி, உனக்காக தினமும் ஒரு நொடியாவது வேண்டிக்கொள்வேன், ஆனால் கல்யாணத்துக்கு பின்னாடி உன்னை எப்படி எதிர்கொள்றதுன்னு தெரியல, இனிமேல் நாம பார்க்கவேண்டாம், பேசவேண்டாம், ஈமெயில்ஸ், எதுவுமே வேண்டாம்" நினைவுக்கு வந்து எச்சரித்தது.

என்னை அவள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக வேறு இடம் பார்க்க எத்தனித்தபோது, "ஹேய் கார்த்தி " குரல், அவளின் குரல் .. ஐந்துவருடம் பின்னோக்கி சென்றதுபோல ஒரு உணர்வு.

"என்னங்க , நான் அடிக்கடி சொல்லுவேன்ல, கார்த்தி, அது இவர் தான்" ஐந்துவருடங்கள் "ன்" விகுதியை "ர்" விகுதியாக மாற்றிஇருப்பது இயல்புதான்.

நான் அவளின் கணவருக்கு வணக்க்ம் சொல்லிவிட்டு "எப்படி இருக்கீங்க" இரண்டுபேருக்கும் பொதுவாக கேட்டேன்.

"நாங்க ஜம்முன்னு இருக்கோம் கார்த்தி, நீங்க எப்படி இருக்கீங்க, வொய்ஃப், குழந்தைங்க"

"ம்ம் எல்லோரும் நல்லா இருக்காங்க, ஒரு பொண்ணு, ஒரு பையன்"

"பேரு எல்லாம் சொல்ல மாட்டிங்களோ!!" அதே கிண்டல் தொனி. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கணவனின் எதிரில் தன்னுடைய பழைய தோழமையை சினேகம் பாராட்டுவது.
நான் சிரித்துக்கொண்டே "வளன் பையன் பேரு, வள்ளி பொண்ணு பேரு"

"நல்ல தமிழ் பேருங்க" இது அவளின் கணவன்.

"எந்த பிளைட்டுக்கு வெயிட்டிங்"

"சியாட்டில் கார்த்தி, இன்னும் ஏழுமணி நேரம் இருக்கு"

என்னுடைய கோபன்ஹேகன் விமானத்திற்கான முதற் அறிவிப்பு வர, வேண்டும் என்றே சீக்கிரமாக விடைபெற்றுக்கொண்டு , நகரப்பேருந்துகளை விட பாடாவதியாக இருந்த கோபன்ஹேகனுக்கான விமானத்தில் ஏறி அமர்ந்தேன். அதுவரை என் கண்களில் அடக்கி வைத்திருந்த கண்ணீர் குபுக்கென வெளிவந்தது. பொய்யில்லாமல் பழகியது அவளிடம் மட்டுமே. ஆனால் அவளிடமும் இன்று ஒரு பொய் சொல்லியாகிவிட்டது. எனக்கு திருமணம் ஆகிவிட்டது, குழந்தைகள் உண்டு என்பதுதான் அந்த பொய். நட்பான கணவன், அழகான குழந்தை என மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவளிடம் , உன் நினைவுகள் மட்டுமே என்னை வழிநடத்தி செல்கின்றன, உன்னிடத்தில் வேறு ஒருத்தியை வைத்துப் பார்க்க மனம் வரவில்லை எனஎப்படி சொல்ல முடியும். அது அவளைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிவிடாதா? நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று காட்டிக்கொண்ட பொய் , அவளுக்கு நேர்ந்திருக்கக்கூடிய சங்கடத்தை தவிர்த்தது என்ற எண்ணம் என் மனபாரத்தை சற்றுக்குறைத்தது. அவளுடைய மகிழ்ச்சியான வாழ்க்கையில் என் சந்திப்பு எந்த வித சலனத்தையும் ஏற்படுத்திவிடாது என்பது திருப்தியாக இருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தபோது ஒரு வியப்பு. அவளிடம் இருந்து தமிழில் ஒரு மின்னஞ்சல். அதுவும் நான் அவளுக்காக ஏற்படுத்திக்கொடுத்து இருந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து. இன்னும் அதை செயலில் வைத்திருக்கிறாள் என்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.. முன்பு அவள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்களில் அவளின் பெயரை மின்னஞ்சலின் முடிவில் எழுத மாட்டாள். இதிலும் அவள் பெயரை இடவில்லை. அந்த மின்னஞ்சல் இதுதான்,

ooOoo

அன்புடன் கார்த்திக்கு,

'பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்' என்ற திருக்குறள் உனக்கு பிடித்த குறள் என நீ அடிக்கடி சொல்லுவாய். நீ உன் குழந்தைகளின் பெயர்கள் அர்ஜுன் , அஞ்சலி என இல்லாமல் வளன்,வள்ளி எனச்சொல்லும்பொழுதே நீ பொய் சொல்லுகிறாய்
எனப்புரிந்தது. எத்தனை வருடங்கள் ஆனாலும் உன்னை என்னால் புரிந்து கொள்ள முடியும். நீ எனக்காக சொல்லிய பொய், விரைவில் உண்மையாகாத வரை அது எனக்கான தண்டனையாகவே இருக்கும். ஒருவொருக்கொருவர் தண்டனைக்
கொடுத்துக்கொள்ள மாட்டோம் என்பதுதான் நமது உடன்பாடு என்பதை நான் நினைவுப்படுத்த தேவையில்லை.

பின் குறிப்பு : நீ என்னுடைய குழந்தையின் பெயர் அஞ்சலி எனத் தெரிந்து கொள்ளாமாலேயே போய்விட்டாய்.. பெயருக்கான காரணமும் என் கணவருக்குத் தெரியும்.

ooOoo

சாட்டையடியாக இருந்தது அவளின் வார்த்தைகள். என்னை நேசிக்கும் உறவுக்கு எத்தனைப் பெரிய தண்டனை தர இருந்தேன். பெருமூச்சுவிட்டு விட்டு எனது கட்டிடத்தை விட்டு வெளியே வந்தேன்.. பனிமழையில் நனைந்தபடி, எனது அலுவலத்தின் இன்னொரு கட்டிடத்தை நோக்கி கேத்ரீனாவைப் பார்க்க நடந்தேன். கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக கேத்ரீனா என்னைத் திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பத்தை தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டிருக்கிறாள். கேத்ரீனாவிடம் "யாக் அல்ஸ்கார் தீக்(jag älskar dig)" என சுவிடீஷ் மொழியில் சொல்லி எனது சம்மதத்தை தெரிவிக்கத்தான் கேத்ரீனாவை தேடிக்கொண்டிருக்கிறேன்.. "யாக் அல்ஸ்கார் தீக்" என்றால் சுவீடிஷ் மொழியில் நான் உன்னைக் காதலிக்கிறேன் எனப்பொருள்.


---------------------
தமிழோவியம் இணைய இதழில் வெளிவந்தது

Sunday, December 07, 2008

சுவீடனில் மேற்படிப்பு : சேர்க்கை ஆரம்பமாகிவிட்டது ,முந்துங்கள் மாணவ நண்பர்களே

டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து சுவீடனில் மேற்படிப்பு படிக்க, அடுத்த வருடத்திற்கான சேர்க்கை ஆரம்பித்துவிட்டது. ஜனவரி 15 வரை இணையத்தில் பதிவு செய்யலாம். சான்றிதழ்கள் தபாலில் அனுப்ப வேண்டிய கடைசித்தேதி பிப்ரவரி 1 2009.


சுவீடனில் இந்திய பொறியியல்,அறிவியல் பட்டதாரி மாணவர்களுக்கு ஆங்கில நுழைவுத்தேர்வு கிடையாது.

சுவீடனில் படிப்புக்கான கட்டணம் கிடையாது.

அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள், மாணவ நண்பர்களே!! விரைவாக இந்தத்தளத்தில் பதிவு செய்து கொண்டு https://www.studera.nu/studera/1499.html

விண்ணப்ப வேலைகளை ஆரம்பியுங்கள்.

மேலும் விவரங்களுக்கு முந்தையப் பதிவைப்படிக்க இங்கே சொடுக்கவும்

நான் படிக்கும் கல்லூரியான பிலெக்கிஞ் தொழிற்நுட்பக் கல்லூரியில் விண்ணப்பிக்க இங்கே சொடுக்கவும்

இதைப்படிக்கும் கல்லூரி மாணவர்கள்/விரிவுரையாளர்கள்/பேராசிரியர்கள் அவர்களின் கல்லூரி தகவற்பலகைகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் இந்த அரிய வாய்ப்பு மேலும் பலரைச் சென்றடையும்.