Tuesday, May 13, 2014

பக்கத்து வீட்டுப்பெண் - சிறுகதை

ஒட்டுக்கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும். சுவற்றில் காதை வைத்து, அடுத்தவர் வீட்டில் என்னப் பேசிக்கொள்கின்றார்கள் என்பதில் ஏனோ ஓர் ஆர்வமுண்டு. பக்கத்துவீட்டில் பேசிக்கொள்ளப்படும் மொழி எனக்குப் புரியவில்லை எனினும்,வாக்கியங்களின் ஏற்ற இறக்கங்களை வைத்து, சண்டையா, கொஞ்சிக் கொள்கின்றனரா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த புதுக்குடியிருப்புக்கு வந்தபின்னர், ஓட்டுக்கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது.

காதில் ஒலிவாங்கியை மாட்டி, பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தாலும், உள்நுழைந்து என் கவனத்தைத் திசைத் திருப்பும் அளவிற்கு பக்கத்து வீட்டில் இருந்து எப்பொழுதும் சத்தம்தான். கணவன் மனைவியா , காதலன் காதலியா என்று தெரியவில்லை.

பக்கத்துவீட்டுப் பெண் அலறிக்கொண்டே இருப்பாள். ஆண் கத்திக் கொண்டே இருப்பான். சமயங்களில் சண்டை நள்ளிரவு வரை நீடிக்கும். ஒருநாள் கதவைத் தட்டி, அமைதிக் காக்கும்படி சொல்லிவிடலாம் என நினைத்தேன். ஆனால் அவர்களின் ஆக்ரோசச் சண்டையில் வெளிநாட்டுக்காரனான என்னை அடித்துவிட்டால் என்ன செய்வது என்று காதில் பஞ்சடைத்துக் கொண்டு தூங்கிவிடுவேன்.

ஒருநாள், பக்கத்துவீட்டு, ஆண் கதவைப் பூட்டிவிட்டுப் போவதைப் பார்த்தேன். உள்ளிருந்து பெண்ணின் குரல். எனது அடிப்படை இத்தாலிய அறிவை வைத்து, நான் புரிந்து கொண்டது,

"பூட்டிவிட்டு போகதே, நான் எங்கும் வெளியே போகமாட்டேன்".

கொடுமைக்கார காதலன்/ கணவனாக இருப்பான் போலிருக்கின்றதே. தொடர்ந்து ஒரு வாரம் கவனித்தேன், பெண்ணின் கதறலை மீறி, இவன் பூட்டிவிட்டு செல்வதைப் பார்த்ததும் என்னுள் இருந்த துப்பறியும் சாம்பு விழித்துக்கொண்டான்.

ஒருநாள் எனது வேலைகளை விட்டுவிட்டு, அவனைப் பின் தொடர்ந்தேன். அவனது அலுவலகம் சென்றான். மதியம் உணவு இடைவேளையில், அருகில் இருந்த பூங்காவிற்கு வருகின்றான், மடிக்கணினியைத் திறந்து ஏதோ  பார்க்கின்றான். நடைபழகுவதைப் போல அவன் பின் பக்கம் சென்று என்னப் பார்க்கின்றான் எனப்பார்த்தேன். அவனது வீட்டில் இருந்து நேரலை ஒளிப்படம் ஓடிக்கொண்டிருந்தது. சிசிடிவி கேமரா வைத்து, பெண்ணைக் கண்காணிக்கின்றானே. தேர்ந்த கொடுமைக்காரன் போல.

பக்கத்துவீட்டு வாக்குவாதங்களைப் புரிந்துகொள்வதற்காகவே இத்தாலிய மொழியை வேகமாகக் கற்றுக்கொண்டேன். வழக்கமாக ஓங்கி ஒலிக்கும் பெண்குரல் இன்று கெஞ்சிக் கொண்டிருந்தது.

"செத்துப்போய்டவா, ஒழுங்கா சொன்ன பேச்சைக் கேட்கலான்னா, உன் கண் முன்னாடியே கையை அறுத்துக்கிட்டு செத்துடுவேன், நான் வாழனும்னு நீ நினைச்சின்னா ஒழுங்க இரு, யாரையும் எதையும் செய்யவேண்டாம்" என்றான் ஆண்.

பெண் கெஞ்சி கெஞ்சி அழும் குரல் கேட்டு பின் நிசப்தமானது.

மறுநாள், முதன்முறையாக பக்கத்துவீட்டு ஆண், அந்தப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு வெளியே சென்று கொண்டிருந்தான். அந்தப் பெண்ணைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில்,  அவர்களை முந்திச்சென்று, அவளை ஓரக்கண்னால் பார்த்தபடி, அவனுக்கு வணக்கம் சொன்னேன்.

நான் ஓரக்கண்ணால் பார்ப்பதைக் கவனித்துவிட்டு, சுட்டெரிப்பதைப் போலப் பார்த்தாள். பார்வையில் பயந்துப்போய் , அவர்களுடன் லிஃப்டில் செல்லாமல், படியில் இறங்கிவிட்டேன். . அன்றிரவு சத்தம் குறையும் என்று பார்த்தால் மறுபடியும் அதிகரித்தது.  ஆண் தான் செத்துப்போகப்போவதாக மிரட்டிக்கொண்டிருந்தான். பெண்ணின் அழுகுரல். யாராவது இவனைக் காப்பாற்றுங்களேன் என்ற குரல்.

உடனடியாக போலிஸிற்கு அழைத்து வரவழைத்தேன். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து, உள் நுழைய மணிக்கட்டை அறுத்துக்கொண்டு இரத்தவெள்ளத்தில் கிடந்தான். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டான்.

அப்பெண்ணை அவ்வீட்டினில் தேடினேன். அவள் இல்லை. சன்னல் எல்லாம் அடைக்கப்பட்டுத்தான் இருந்தது. மெல்ல குடியிருப்பின் சொந்தக்காரரை நெருங்கி,

"இவ்வீட்டில் இந்தப் படத்தில் இருக்கும் பெண்ணும் இருக்கின்றாள் சார், அவளின் குரலைக் கேட்டிருக்கின்றேன், அடிக்கடி சண்டைப்போட்டுக்கொள்வார்கள், இவன் மிரட்டுவான் , அவள் அழுவாள், அவளை வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டுப் போய்விடுவான்,"

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு,

"அவள் அவனின் காதலி, சிலரால் கொடூரமாக கொல்லப்பட்டு ஆறு மாதங்கள் ஆகின்றன, அவள் இறந்தபின்பு இவன் கிறுக்குப்பிடித்தவன் மாதிரி அவளின் குரலிலும் தன் குரலிலும் மாறிமாறிப்பேசிக்கொள்வான், அதைத்தான் நீ கேட்டிருப்பாய்"

அப்படியானால், அவர்கள் இருவரையும் ஒருசேர அன்று பார்த்தேனே!!, பார்த்ததை அவரிடம் சொல்லவில்லை. மருத்துவமனைக்கு விரைந்தேன். கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர் சொன்னார். அவனின் நெருங்கிய நண்பன் என்று சொல்லி மன்றாடி அனுமதிப் பெற்றுவிட்டு அந்த சிகிச்சை அறைக்குள் நுழைந்தேன். அந்தப்'பேய்'ப்பெண்ணும் அங்கிருந்தாள். இந்தமுறை உக்கிரமான பார்வையில்லை.

மெல்ல கண் திறந்த பக்கத்துவீட்டுக்காரன், உடைந்த ஆங்கிலத்தில்,

"இதோ இவள் என் காதலி, இறந்துவிட்டாள், . இவளுக்கு அவளைக் கொன்றவர்களைப் பழிவாங்க வேண்டும்,  பழிக்குப் பழிக்கூடாது என்பது என் நோக்கம். அந்த வாக்குவாதங்களைத்தான் நீ கேட்டிருப்பாயே, என்னை மீறி அவள் வெளியேப்போகக் கூடாது என்பதன் உணர்வுப்பூர்வமான தடைதான் அவளை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு செல்வது"

பேய்கள் மனிதர்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதைப் பற்றி படித்திருக்கின்றேன். ஆனால், ஒரு பெண் இறந்து பழிவாங்கத் துடிக்கும் பேய் ஆன பின்னரும் காதலின் அன்பின்  கட்டுக்குள் இவன் வைத்திருக்கின்றானே....

"நான் என்ன செய்யவேண்டும், சொல் " என்றேன்.

"இதோ, இந்த மருத்துவக் கவசங்களை நீக்கி என்னைக் கொன்றுவிடு, இவளுடன் நான் வேறுலகத்திலாவது இணைந்து வாழ்கின்றேன்"

அந்தப்பேய்ப்பெண், உக்கிரமான பார்வையில் ,

"இவன் வாழவேண்டும், இவனுக்கு ஏதாவது நேர்ந்தால் உன்னைக் கொன்றுவிடுவேன்"

 "சீக்கிரம் என்னைக் கொன்றுவிடு" என்ற அவன் என்னைக் கெஞ்ச

"அவனை ஒன்றும் செய்யாதே" என்று பேய் அலற, மருத்துவர் கதவைத்திறக்க,

அவனைக் கொன்று விடுதலை செய்யவா, கொல்லாமல் வாழவிடவா
நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் நீங்களே சொல்லுங்கள்.

Sunday, May 11, 2014

யாமிருக்க பயமே - திரைப்பார்வை

பேயால் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் என்ன ஆவார்கள்? என்ற கேள்வி பேய்ப்படங்களை, முகத்தை மறைத்துக் கொண்டு விரலிடுக்கில் பார்க்கும்பொழுது எல்லாம் தோன்றும். கொல்லப்பட்டவர்கள் பேயாக வந்து , கெட்டப் பேயை அழித்தால் என்ன என்று கூட நினைப்பேன்? ராம்கோபால் வர்மாவின் ஒரு பேய்ப்படத்தில், தன் பிணத்தைப் பார்த்து அழுதுக்கொண்டிருக்கும் ஒரு பேயை , கொன்ற பேய் ஆறுதல் சொல்லி அழைத்துச் செல்லும்.
மங்காத்தா படத்தில் 'திருஷ்டிக்கு" வரும் திரிஷாவைத் தவிர எல்லோரும் ஒன்று கெட்டவர்கள் அல்லது ரொம்பக் கெட்டவர்கள். வில்ல நாயகனாக வரும் அஜீத்திற்கு எந்தவிதமான சென்டிமென்ட் பிளாஷ்பேக்கும் வைக்காமல், கெட்டவன்னா கெட்டவன்தான் என்றிருக்கும்.
"யாமிருக்க பயமே"  திரைப்படத்திலும் பேய் என்றால் பேய். கொடூரமான பேய்.  முனி, காஞ்சனா போன்ற நகைச்சுவைப் பேய்ப்படங்களில் வரும் பேய்களைப் போல இதில் வரும் பேய்க்கு சென்டிமென்ட் பின்கதை எல்லாம் கிடையாது. நல்ல நோக்கத்திற்கான பழிவாங்கல் எல்லாம் கிடையாது. பயங்கரமான பேயினால் கொல்லப்பட்டவர்கள் பேயானாலும், இந்த பவர்புல் பேயை ஒன்றும் செய்யமுடியாது என்பதை எவ்வளவு நகைச்சுவையுடன் சொல்லமுடியுமோ அவ்வளவு சொல்லியிருக்கின்றார்கள். 

ஒரு திகில் முடிச்சை அவிழ்க்கையில் ஒன்று அதிர்ச்சி இருக்கும் அல்லது உப்புசப்பில்லாத ஆன்டி -கிளைமேக்ஸாக இருக்கும். ஆனால், இதில் இணை-கதாநாயகன் கருணாகரனின் மறுப்பக்கம் தெரியவரும்பொழுது பயத்தை மறந்து வெடித்துச் சிரிப்பீர்கள்.
எவ்வளவு சுமாராக காட்சியமைக்கப்பட்டிருந்தாலும் , கொலைக்காட்சிகள் அனுதாபத்தைத் தரும். ஆனால் இதில் வரும் கொலைக்காட்சிகள் குரூரத்தை மீறி உங்களை சிரிக்க வைக்கும்.
படத்தில் , "பேய் இருக்கு ஆனால் இல்லை" என்று ஏமாற்றவெல்லாம் இல்லை. பேய் பங்களாதான். ஒன்றிற்குப் பல பேய்கள் இருக்கின்றன. மங்காத்தா படத்தில் வலியவன் வெல்வான் என்பதைப்போல், இதிலும் பேய்தான் ஜெயிக்கின்றது. 'தர்மம் தானே' வெல்லவேண்டும் என்றெல்லாம் உங்களை யோசிக்க வைக்காமல் சிரித்துக் கொண்டே , வெளியே அனுப்பியதில்தான் இயக்குநரின் வெற்றி இருக்கின்றது.
அளவான கவர்ச்சி, அடபோடவைக்கும் அடல்ட் காமெடி, உண்மையிலேயேத் திகிலூட்டும் இரண்டாம் பாதி, கடைசிவரை விடாது கருப்பாய் இருக்கும் நகைச்சுவை ஆகியன உங்கள் நேரத்திற்கும் காசிற்கும் பொழுதுபோக்காய் ஈடு செய்யும்.
யாமிருக்க பயமே - பயந்து பயந்து சிரிக்க !!
திரைப்பட முன்னோட்டம் - https://www.youtube.com/watch?v=7utXPKENd-s

Tuesday, May 06, 2014

கைப்பட ஒரு கடிதம் - சிறுகதை

"ஏன்டா கார்த்தி, லெட்டரே போட மாட்டேங்கிற"

"எதுவா இருந்தாலும் இமெயில் அனுப்புப்பா, பக்கத்திலதானே பிரவுசிங் சென்டர் நான் இப்போ பிசி"

என்று அப்பாவின் அலைப்பேசி அழைப்பை வெடுக்கென துண்டித்த பின்னர்தான் அந்த பாட்டியைக் கவனித்தேன். கையில் தடிமனான அஞ்சல் உறையுடன் என் வீட்டின் வாசல் அருகே நின்று கொண்டிருந்தார்.  இந்த மலையோர ஆஸ்திரியக் கிராமத்தில், என் வீட்டில் இருந்து கொஞ்சம் தொலைவில் உள்ள வீட்டில் வசிக்கின்றார்.   பாட்டியின் பெயர் எல்ஃபி, வயது எண்பதுக்குமேல் இருக்கும்.

பல்கலைகழகத்தின் அருகில் குடியிருக்க வீடுகளின் மாத வாடகை அதிகமாக இருந்ததனால், 50 கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் இந்த கிராமத்தில் குடியிருக்கின்றேன். 1000 பேருக்கும் குறைவாக வசிக்கும் இக்கிராமத்தில் , அனேகமாக நான் ஒருவன்தான் வெளிநாட்டுக்காரன். ஆரம்பத்தில் மாநிறத்தில் ஒருவன் சுத்திக் கொண்டிருப்பதை குறுகுறுவெனப் பார்த்தாலும் கடைசி ஆறுமாதங்களில் சிலர் நல்ல நட்பாகிவிட்டனர்.

அதில் இந்த பாட்டியும் ஒருவர். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கு ஜெர்மன் தெரியாது.  குத்து மதிப்பாக ஏதாவது புரிந்து கொண்டு அவருடன் ஒரு சில நிமிடங்கள் மாலையில் கல்லூரி முடித்துவிட்டு வரும்பொழுது பேசிவிட்டு வருவேன். இணையம், கம்ப்யூட்டர் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை அவருடையது. ஸ்கைப்பில் ஒரு நாள் அம்முவுடன் பேசிக்கொண்டே வந்தபொழுது, அம்முவை, என் வாழ்க்கையின் ஆண்டாள் என்று  பாட்டிக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றேன். அவருக்கு ஸ்கைப் தொழில்நுட்பத்தைக் கண்டு வியப்போ வியப்பு. சாதாரண விசயம் அவருக்கு வியப்பைத் தருகின்றதே என்று எனக்கும் வியப்பு.

சென்ற வாரம் முழுவதும் , பாட்டியின் மகனும் குடும்பத்தாரும் பல ஆண்டுகளுக்குப்பின்னர் அமெரிக்காவில் இருந்து வந்திருந்ததால் பாட்டியின் வீடு திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. மகன், மருமகள், பத்து பதினோரு வயதில் இரண்டு பேரப்பிள்ளைகள் , அமைதியாய் இருந்த தெரு கலகலவென இருந்தது. ஒரு நாள் என்னைக்கூட மகனின் குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அமெரிக்கா திரும்பிய சில நாட்களில் நியுயார்க்கில் இருந்து பாஸ்டனுக்கு மாற்றலாகப்போவதாகவும் , புதிய அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் நிறைய பேர் தமிழர்கள் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். ஐரோப்பாவைப் போல அல்லாமல் அமெரிக்காவும் அமெரிக்க ஆங்கிலமும் எப்பொழுதும் எனக்கு அந்நியமாகவே தெரியும்.  நட்பின் முதற்படியாக மின்னஞ்சல்கள் பரிமாறிக்கொண்டோம்.

வீட்டிற்குள் பாட்டியை அழைத்தபடி, "மாலை, வணக்கம், என்ன செய்ய வேண்டும் எல்ஃபி?"  உடைந்த ஜெர்மனில் கேட்டேன்.

கையில் இருந்த தடிமனான அஞ்சலைக் கொடுத்தார்.

"நீ, லின்ட்ஸ் போகும்பொழுது, அமெரிக்காவிற்குத் தேவையான தபால்தலை ஒட்டி, தபால்பெட்டியில் போட்டுவிடுகின்றாயா?"

"ஓ நிச்சயமாக"  அஞ்சலை முன்னும் பின்னும் பார்த்தேன். வெறும் மின்னஞ்சல் முகவரி மட்டுமே இருந்தது.

"எல்ஃபி, வெறும் மின்னஞ்சல் மட்டும் இருக்கின்றது, முழுமுகவரி எங்கே"

"இதைத்தான் தனது முகவரி என்று எனது பேரன் கொடுத்தான்"  என்று சிலப்பத்து ஈரோத்தாள்களை தபால் செலவிற்காக நீட்டினார்.

"அனுப்பிவிட்டு வந்து வாங்கிக்கொள்கின்றேன்" என தபால் கவரைப் பெற்றுக்கொண்டேன்.

மறுநாள் கல்லூரியில் இருந்து பாட்டியின் தாள் கடிதத்தின் 10 பக்கங்களை மின்னச்சு எடுத்து, பாட்டியின் பேரனுக்கு மின்னஞ்சல் செய்துவிட்டேன். அடுத்த அரைமணி நேரத்தில் பாட்டிக்குக் கொண்டு சேர்க்க பதில் பேரனிடம் இருந்து வந்து சேர்ந்தது. தாளில் பதிப்பித்து எடுத்துப் போகலாம் எனநினைத்தேன். வேண்டாம் என்று முடிவை மாற்றிக்கொண்டு ,

எல்ஃபி பாட்டியின் வீட்டு முகவரிக்கு தபாலில்  கைப்பட எழுதியனுப்பவும் என்று பாட்டியின் பேரனுக்குப்பதில் அனுப்பிய கையோடு, ஒர் ஏ4 தாளை எடுத்து மேசையின் மேல் வைத்து, அன்புள்ள அப்பா நலம் நலமறிய ஆவல் என்று கைப்பட ஒரு கடிதத்தை எழுத ஆரம்பித்தேன்.

                                                                      -------------