Wednesday, February 27, 2013

கடவுள் - சில ஒரு வரித்தொடர்கதைகளும் ஒரு அறிவியல் புனைவும், கூடவே ஒரு கவிதையும்


தொடர்கதை , காலம் காலமாய் தொடர்ந்த, தொடர்கின்ற, தொடரும் வினைத்தொகையாய் இருக்கும் மற்றொரு வினைத்தொகையான கட + உள் கடவுள் பற்றிய சில ஒரு வரிக்கதைகள் 
----
1. மனிதனிடம் தஞ்சம் புகுந்த முதல் அகதி - கடவுள்

2. மனிதனின் முதல் வளர்ப்புப் பிராணி கடவுள், மனிதன் காலங்காலமாய் அதற்கு தரும் பிஸ்கட் - பக்தி

3. மனிதன் உருவாக்கிய முதல் நகைச்சுவை கதாபாத்திரம் - கடவுள்

4. மனிதனின் முதல் ஊழல் - கடவுள்

 5. மனிதன் தன் இயலாமைக்கு வைத்த பெயர் - கடவுள்

6. மனிதனின் சோதனை எலி வேற்றுமதக் கடவுள் (எழுதியவர் டான் அசோக் - www.donashok.blogspot.com )

7. காரணமில்லாமல் சண்டையிட மனிதன் உருவாக்கிய காரணம் - கடவுள் (பாலராமன் - https://twitter.com/BalaramanL)

---


கொஞ்சம் அறிவியல் புனைவாய் ஒரு குட்டிக்கதை -  (நிஜமாகக் கூட இருக்கலாம்)

டைனோசரின் சிதிலமடைந்த சிலைக் கண்டுபிடிக்கப்பட்டது... உயிரியல் படிமங்கள் ஏதும் இல்லாததால் குழம்பிப்போயினர் ஆராய்ச்சியாளர்கள்...
பாவம் அவர்களுக்குத் தெரியாது , அது டைனோசர் காலத்துக் கடவுளின் சிலை என்று.

---

ஒரு கலகக்கவிதை 

காகங்கள் வெள்ளையாக இருக்காது என்றவன்அடித்து துவம்சம் செய்யப்பட்டான்
காலம் அவனை புறா சின்னத்துடன் கடவுள் ஆக்கியது ... 
இன்று அவன் சந்ததி, நாய் என நினைத்து ஓநாயைக் கொஞ்சிக் கொண்டு இருக்கிறது
நாய்கள் குழந்தை ரத்தம் குடிக்காது என்று ஓரத்தில் நின்று கத்திக் கொண்டிருக்கின்றேன்... அடிக்க நெருங்குகிறார்கள்... 
கவலை இல்லை , நாளை நானும் கடவுள் ஆகிவிடுவேன்.

Monday, February 25, 2013

ரயில் பயணம் ஒன்றில் - சிறுகதை

இந்த இட்டாலோ அதிவேக தனியார் ரயில் வெனீஸ் நகரை நோக்கி கிட்டத்தட்ட முன்னூறு கிலோமீட்டர்கள் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது. வெனீஸ் நகரத்திற்கு எல்லோரும் ஜோடியாக ஊர் சுற்றப்போவார்கள். நான் வியாபர நிமித்தமாய் தனியாகப் போய் கொண்டிருக்கின்றேன்.



ஒரு வரிசையில் மூன்று இருக்கைகள், இடதுபுறத்தில் ஒற்றை இருக்கை, நடுவில் நடப்பதற்கான நல்ல அகலமான பாதை, வலது புறத்தில் இரண்டு அகலமான இருக்கைகள், இப்படியான ரயில் பெட்டியில்  எனது பயணம்.  எனக்கு வலதுபுறம் சன்னலோரத்தில் இருந்த பெரியவர் , ரோமில் தூங்க ஆரம்பித்தவர், பொலொன்யா நிலையம் வர சற்று முன்னர்தான் தான் இறங்கும் முன்னர் எழுந்தார்,  இறங்கிப் போய் விட்டார்.  நீங்கள் நினைப்பது படி நான் உடனே சன்னல் ஓரம் மாறிக்கொள்ளவில்லை. இந்த நெடும் பயணத்தில் முக்கால் வாசி தூரம் குகைப்பாதைகள் தான்.வேடிக்கைப் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. மேலும் நான் என்னிடத்திலேயே அமர்ந்து கொண்டிருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

 எந்த இனத்து  ஆணாக இருந்தாலும், ஆண்களுக்கே உரிய சபலம் , எனக்கு கொஞ்சம் அதிகமாகவே உண்டு. ரோமிற்கு வந்து இறங்கியதில் இருந்து பார்க்கும் வசீகரமான  இத்தாலிய பெண்களை எல்லாம் கண்களால் காதல் செய்து கொண்டிருக்கின்றேன்.  இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கின்றன, நேரிடைக் காதல் செய்ய வசீகரத்தைத் தேடிக்கொண்டு இருக்கின்றேன். 

 நடக்கும் பாதைக்கு அந்தப் பக்கம் ஒற்றை இருக்கை இருக்கின்றது என சொன்னேன் அல்லவா, அங்கு ஒரு இத்தாலியத் தேவதை அமர்ந்து இருக்கின்றாள். காலை இறுக்கப்பிடிக்கும் லெக்கின்ஸின் மேல்,  முட்டிக்கு கொஞ்சம் மேலே வரை வரும்படி ஒரு குட்டைப்பாவாடை அணிந்து இருக்கிறாள், அதுவும் உட்காரும்பொழுது, கிட்டத்தட்ட தொடை வரை வந்துவிட்டது, என் பார்வையில் இருந்து தப்பிக்க அவளும் பலமுறை அதை இழுத்துவிட்டுக்கொண்டே இருக்கிறாள். இடுப்புக்கு மேல் நான் வர்ணிக்காதன் காரணம்,  வர்ணனைத் தரப்படாதவை சிறப்பானவை... நான் அவளைக் கவனிக்காத பொழுது என்னைப் பார் யோகம் வரும் வகையில், சீண்டல் பார்வை வேறு தந்து கொண்டிருக்கின்றாள்.  அவளது மடிக்கணினியில் ஏதோ ஒரு கிளுகிளுப்பான காட்சி வேறு ஓடிக்கொண்டிருந்தது. 

இவள் வெனீஸை சேர்ந்தவளாக இருந்தால், வார இறுதிக்கு சந்திக்க தூண்டில் போடலமா என யோசிக்கையில்,  இருக்கையை விட்டு எழுந்தாள். மடிக்கணினியை பையினுள் வைத்தாள். தனது குளிருக்கான மேலங்கியை அணிந்து கொண்டாள், எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு நகர, படோவா நகரம் நெருங்குகின்றது என அறிவிப்பு வந்தது.  

மகிழ்ச்சி பலூன் உடைந்த சோகத்தில் , அடுத்த நிமிடத்தில் வந்தடைந்த ரயில் நிலையத்தை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன். படோவா நிலையத்தில் மீண்டும் நகர ஆரம்பித்த பின்னர்  அவள் அந்த இடத்தில் மீண்டும் பழைய படி அமர்ந்து இருந்ததைக் கவனித்தேன். 

அடடா..  கழிவறைக்கு சென்று வந்திருக்கிறாள். தன் அத்தனை உடைமைகளையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு போவதற்கு,  என் மேல் இருக்கும் பயம் கூட காரணமாக இருக்கலாம், நாங்கள் இருவரும் இருக்கும் இந்த ரயில் பெட்டியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலரே இருந்தனர். வருத்தமாக இருந்தாலும், அவள் திரும்ப வந்ததே மகிழ்ச்சியாக இருந்தது. சபலங்கள் அவமானங்களைப் பொருட்படுத்துவதில்லை. 

°நீயும் வெனீஸ் நகரத்திற்குத்தான் போகிறாயா° என ஆங்கிலத்தில் கேட்டேன். சபலங்கள் அசட்டுத் தைரியங்களையும் தரும். 

இத்தாலிய உச்சரிப்பில், ஆங்கிலம் பேசினாள். இன்னும் சரியாக 45 நிமிடங்கள், நடுவில் வெனீஸ் நிலப்பகுதி ரயில் நிலையம், இதற்குள் நட்புக்கு அடிப்போட்டுவிட்டால், வார இறுதிக் கொண்டாட்டமே... 

எதிர்பார்த்ததைவிட,  நட்பாகப் பேசினாள். வெனீஸ் மெஸ்ட்ரே ரயில் நிலையம் நெருங்க, இயற்கை உந்துதல் எட்டிப்பார்க்க, கழிவறையை நோக்கி செல்லும்பொழுது,

 ”பார் , நீ யாரையும் நம்பாமல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுப்போனாய், நான் மனிதர்களை நம்புபவன் ”

என்பதை , என் கண்களில் அவளுக்குக் காட்டுவதாக நினைத்துக் கொண்டேன். 

கழிவறைகள் தான் நிஜமான போதி மரங்கள், வண்டியின் ஆட்டம் நின்றது. அவசரம் அவசரமாக கையைக் கழுவிக்கொண்டு, கழிவறைக் கதவைத் திறக்கும் முன்னர் இருந்த மைக்ரோ வினாடிகளில் என் யோசனை எல்லாம், அவள் அங்கு இருப்பாளா, என் உடைமைகள் எல்லாம் பத்திரமாக இருக்குமா, என்பதாகத்தான் இருந்தது. 
----

பத்து ஈரோக்கள் - சிறுகதை


விமானநிலையங்களில் காணக்கிடைக்கும் முத்தங்கள் கிளர்ச்சியைத் தராது. ஒவ்வொரு செக்-இன்னிற்கு முன்னாலும் குட்டியாகவோ நீண்டோ, வழியனுப்பு முத்தங்கள் கொடுக்கப்பட்டு பெறப்பட்டுக் கொண்டிருந்தன. விடியற்காலையில், எழுந்தபொழுது இருந்த சோம்பல், விமானநிலையத்தை அடைந்ததும் காணாமல் போனது.. சோம்பல் இல்லாவிட்டாலும் அம்மு நிறைய சோகமாகவே இருந்தாள். அம்முவை வழியனுப்ப நான் வந்திருக்கின்றேன்.

சில வருடங்களுக்கு முன்னர், முதல் முத்தத்தை வெட்கப்பட்டுக்கொண்டே கொடுத்ததைப்போல, முப்பதாயிரத்து முன்னூற்று சொச்சத்து முத்தத்தையும் வெட்கம் கலந்து கன்னத்தை தடவியபடி கொடுத்துக் கொண்டிருந்தாள். வெள்ளைக்கார ஜோடிகள் கொடுத்துக் கொண்டிருப்பதை எல்லாம் கவனிக்காது, இருபது அடி தூரத்தில் இருந்து, சுடிதார் அணிந்து இருந்த நடுத்தர வயது அம்மணி, எங்களையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார். முத்தங்கள் கொடுக்கும்பொழுது நான் கண்களை மூடுவதில்லை, ஓரக்கண்ணால் அம்முவையோ, பொதுவிடங்களில் முத்தம் கொடுத்தால், சுற்றத்தையும் கவனித்துக் கொண்டே இருப்பது உண்டு.

அந்த சுடிதார் அணிந்து இருந்த அம்மணி வங்காளதேசத்தவராகக் கூட இருக்கலாம். ரோம் நகரத்தில் ஏகப்பட்ட வங்காளாதேசத்தினர் வசிக்கின்றனர். வங்காளதேசமோ, பாகிஸ்தானோ, உத்திரப்பிரதேசமோ, என்னைப் பொருத்தவரை எல்லோருமே வட இந்தியர்கள். நான் கவனித்ததை அந்த அம்மணி கவனித்தது, தாவணிக்கனவுகளில் பாக்யராஜ் காசுப்போட்டு, தங்கைகளை திசைத்திருப்புவதைப்போல , தன் குழந்தைகளை வேறுப்பக்கம் திருப்பிக்கொண்டார்.

“கார்த்தி, இந்தாடா இனிமேல் எனக்கு ஈரோக்கள் தேவைப்படாது, தேவைன்னாலும் நான் கார்ட்லேந்து எடுத்துக்கிறேன்” என அவளிடம் இருந்த சில பத்து ஈரோத்தாள்களைத் திணித்தாள்.

“இல்லை அம்மு, ஆம்ஸ்டர்டாம் ல பிளைட் மாறுறப்ப தேவைப்படும்” சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது

நெடிய ஆப்பிரிக்க கறுப்பு மனிதன், தனது சுமைகளைத் தள்ளிக்கொண்டபடி, வருத்தம் தோய்ந்த முகத்துடன் எங்களை அணுகி

”எனது பணப்பையைத் தொலைத்துவிட்டேன், ஊருக்குப்போக பயணச்சீட்டு எடுக்க 174 ஈரோக்கள் தேவைப்படுகின்றது, ஏனையவர்களின் உதவிகளினால் 164 ஈரோக்கள்  கிடைத்துவிட்டது, இன்னும் பத்து ஈரோக்கள் இருந்தால் பயணச்சீட்டு எடுத்துவிடுவேன்” சொன்னது

திருச்சி பேருந்து நிலையத்தில் , “அண்ணே, ஊருக்குப்போற வச்சிருந்த காசைத் தொலைச்சிட்டேன், பத்து ரூவா கொடுங்கண்ணே” எனக் கேட்பதுப் போலவே இருந்தது.

“கார்த்தி, பாவம்டா, காசு கொடுக்கலாண்டா, பத்து ஈரோதானே”

“இல்லடா அம்மாடி, எனக்கு என்னமோ நம்பிக்கை வரல, திருச்சியா இருந்துருச்ச்சுன்னா, நானே டிக்கெட் எடுத்துக் கொடுத்து ஊருக்கு அனுப்பி இருப்பேன், இங்க எல்லாத்தையும் 70 ஆல் பெருக்கிப் பார்க்க வேண்டியதாக இருக்கு”

“ஒரு வேளை நிஜமாகவே தேவைப்படுறவரா இருந்துச்சுன்னா, பெரிய உதவியத்தானே இருக்கும், பத்து பேர் ஏமாத்துனாலும், ரெண்டு பேருக்காவது நிச்சயம் உதவி தேவைப்படும்”

நாங்கள் எங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த கறுப்பன், சோகமாக நாங்கள் தரமாட்டோம் போல என்பதாக மெல்ல நகர, ஒரு நிமிடம் என்னையும் அம்முவையும் அந்த ஆளின் நிலையில் வைத்துப் பார்த்தேன். காசு இல்லாமல் தெரியாத ஊரில் சிக்கிக் கொண்டால்... ஒரு பத்து ஈரோத்தாளுடன் சில சில்லறைகளையும் சேர்த்து, அந்த கறுப்பனின் கையில் கொடுத்தேன். வாயினால் நன்றி சொல்வதைவிட , அவன் கண்களில் நன்றி சொன்ன விதம் நிஜமாக உதவித் தேவைப்படுபவன் போல இருந்தது.

அவன் டிராலியைத் தள்ளிக் கொண்டே சனக்கூட்டத்தில் மறைந்துப் போனான், விமானத்திற்கு நேரம் ஆக, அம்முவும் பாதுகாப்பு சோதனைகள் நடக்கும் இடத்திற்கு வழியனுப்பிவிட்டு, இந்த ஆப்பிரிக்கன் வேறு எங்கேயாவது தென்படுகின்றானா என டெர்மினல் ஒன்றில் இருந்து டெர்மினல் 3 வரை அலசிப்பார்த்துவிட்டேன். அவனைப் பார்க்க முடியவில்லை. பயணச்சீட்டு எடுத்து செக் இன் செய்து இருப்பானோ.... ஒரு பத்து ஈரோக்களுக்கு இவ்வளவு யோசிக்க வேண்டியதில்லை என என்னை நான் சமாதனப்படுத்திக் கொண்டு,
சட்டையில் எஞ்சி இருந்த அம்முவின் வாசத்தோடு , வீடு திரும்ப, பேருந்தில் ஏறியபொழுது , தூரத்தில் அந்த கறுப்பன்,. டிராலி இல்லாமல் , ஹாயாக சுமைகளின் மேல் அமர்ந்து கால் மேல் போட்டுக்கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான்.

மறுநாள், அம்மு ஊருக்குப் பத்திரமாகப் போய் சேர்ந்தவுடன் போன் செய்து முதலில் கேட்டது

“அந்த கறுப்பன், பத்திரமா ஊருக்குப் போய் இருப்பான்ல... ”

“ம்ம்ம்... “ நான் வெறும் ம்ம் மட்டும் சொன்னால் கடுமையான மனநிலையில் இருக்கின்றேன் என்பதை அம்மு புரிந்து கொள்வாள்.

“உனக்கு எப்போதும் சந்தேகம் தான்..... ஏமாத்துனாக் கூட ஒன்னும் பெரிய விசயம் இல்லை... பாவம் ரோம்ல விக்கிற விலைவாசில, அதிகப்பட்சம் ஒரு வேளை சாப்பாடு சாப்பிடப்போறான் ... போயிட்டுப்போறான் விடு கார்த்தி ”

சில வினாடிகள் மௌனத்திற்குப்பின்னர்  “ஐ லவ் யூ அம்மு” என்றேன்.