Thursday, October 22, 2009

இந்த வார புதிய தலைமுறை வாங்கி விட்டீர்களா !!!

சுவீடனில் வழங்கப்படும் கல்விப் பற்றியும் , மேற்படிப்பு படிக்கும் வழிமுறைகளையும் உள்ளடக்கி, நான் எழுதியக் கட்டுரை ஒன்று இந்த வார “புதிய தலைமுறை” இதழில் வெளியாகி உள்ளது. படித்து, மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். என்னுடைய எழுத்து வெகுசன ஊடகம் ஒன்றில் வருவது இதுவே முதன்முறை. முதல் எழுத்தே , மற்றவர்களுக்குப் பயன் தரும் வகையில் வருவது மகிழ்ச்சியாக இருக்கின்றது.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

Thursday, October 01, 2009

செவ்வாய்கிழமையும் தமிழில் பேசிய சுவிடீஷ் ஆட்களும் - சிறுகதை

செவ்வாய் கிழமை ஆனாலே எனக்குப் பயம் வந்துவிடும். எவ்வளவு திருத்தமாக காரியங்களை கண்ணும் கருத்துமாகச் செய்ய முயற்சித்தாலும் ஏடாகூடமாகக் கொண்டு போய்விடும். வாரம் முழுவதும் நன்றாகப் பேசும் கீர்த்தனா, செவ்வாய் கிழமையன்றுதான் உப்பு சப்பில்லாத விசயங்களுக்கெல்லாம் தனது எரிச்சலைக் காட்டுவாள். அன்றைய செவ்வாய் கிழமையும் வழக்கம்போல அவள் திட்டித் தீர்க்க ஆரம்பித்தாள்.

“அம்மு, இவ்வளவு தூரம் வந்து பனியிலும் குளிரிலும் படிக்கிறது உனக்காகத்தானே, உன்கிட்ட போன்ல பேசுற இந்த கொஞ்ச நேரந்தான் ஆறுதலா இருக்கு, நீயும் இப்படி கடிஞ்சுப் பேசிட்டா நான் எங்கடா குட்டிமா போவேன்”

அலுவலகத்தில் என்ன பிரச்சினை ஏது பிரச்சினை என அவளிடம் பொறுமையாகக் கேட்டு சமாதானப் படுத்தி அவளைத் தூங்க வைத்துவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்தேன். சுவீடனில் கோடை முடியப்போகிறது என்றாலும் இன்னும் வெளிச்சம் இருந்தது. கைபேசியில் தான் நேரம் பார்க்க வேண்டும். கீர்த்தனா வாங்கிக் கொடுத்த பழைய கைக்கடிகாரம் சரியாக வேலை செய்யவில்லை. புதிதாய் வாங்கி அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாள். மணியைப் பார்த்தேன். ஏழரை காட்டியது. இருட்ட இன்னும் ஒரு மணி நேரம் இருக்கின்றது. வீட்டிற்குப்போனாலும் தனியாகத்தான் இருக்க வேண்டும். சரி, எங்க ஊரில் இருக்கும் ப்ரூன்ஸ்பார்க் காட்டிற்குப்போய் வரலாம் என்று மாற்று ஒற்றை வழிப்பாதையைத் தேர்ந்தெடுத்தேன்.

போகின்ற வழியில் கீர்த்தனாவிற்கு இனிமேல் சுவிடீஷ் கற்றுக்கொடுக்க வேண்டும், கண்ணே மணியே எனக் கொஞ்சிப்பேசுவது வழக்கமாகிப்போனதில் அசுவாரசியம் தட்டுப்படுவதாக உணர்ந்தேன்.இல்லாவிடின் கல்யாணம் பற்றி பேச ஆரம்பித்தால் சண்டையில் வந்து முடியும். அவளும் கூட, போன வாரம் “கார்த்தி, எனக்கு சுவிடீஷ் கத்துக் கொடு” எனக் கேட்டாள்.

அடிப்படை சுவிடீஷ் வாக்கியங்களை மனதில் அசைபோட்டுக்கொண்டே இடது பக்கம் இருந்த சிறுகுளத்தைத் தாண்டி வலது பக்கமாக கடந்து போகும்பொழுது தமிழில் யாரோ பேசுவது கேட்டது. இந்த ரோன்னிபே நகரத்தில் இருப்பது இரண்டே இரண்டு தமிழர்கள், ஒன்று நான், இன்னொன்று கணேசன். கணேசன் ஐரோப்பியச் சுற்றுப்பயணம் சென்றிருப்பதால் எஞ்சி இருப்பது நான் மட்டுமே!!

சுற்றுலா வந்தவர்களாக இருக்கும் நினைத்துக் கொண்டே குளத்தை ஒரு சுற்று சுற்றி வருகையில் மீண்டும் “கலக்கிட்டடா மச்சி” என்று காதில் வந்து விழுந்தது தமிழ் குரல். பக்கத்து வீட்டு கேத்ரீனா ப்ருன்ஸ்பார்க் காட்டுப்பக்கம் இரவில் போகும் பொழுது எச்சரிக்கையாக இரு என்று சொன்னது நினைவுக்கு வந்து பயத்தை மேலும் கூட்டியது.

ஆனது ஆகட்டும் என தமிழில் பேச்சுக் குரல்கள் கேட்கும் திசையை நோக்கி கவனமாக செல்ல, சிலஅடிகள் தூரத்தில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தமிழில் பேசிக்கொண்டிருந்த ஆறேழு பேர்கள் யாருக்கும் தமிழருக்கான நிறமோ உயரமோ இல்லை. சுவிடீஷ் வெள்ளை நிறத்துடன் பொன்னிற கூந்தலுடன், பூனைக் கண் பார்வைகளோடு என்னை அனைவரும் ஒரு சேர திரும்ப்பிப்பார்த்தனர். அங்கே நாலைந்து பீர் போத்தல்கள், இந்திரா சவுந்தர்ராஜனின் துளசிமாடம் புத்தகத்துடன் தமிழ் நாட்டார் தெய்வங்கள் படம் போட்டிருந்த பெயரில்லாத புத்தகங்கள் கிடந்தன.

அதில் இருந்த ஒரு பெண் “செல்லம், வாடா, உனக்காகத் தான் நாங்கள் எல்லாம் காத்திருக்கின்றோம்” என்று அழகான தமிழ் உச்சரிப்புடன் சொல்ல, உதறல் எடுத்து ஓடத் தயாரானேன். நான் ஓடப்போவதைத் தடுத்து நிறுத்திய ஒருவன், அவனது ஒளிவீசும் பூனைக் கண்களால் சில வினாடிகள் என் கண்களை ஊடுறுவிப் பார்த்து விட்டு “சரிப் போய்த் தொலை” என அவனும் தமிழில் பேசி என்னை விரட்டினான்.

நடந்தது உண்மையா அல்லது பிரமையா எனப் புரியாமலே 5 நிமிடத்திலேயே வீட்டிற்கு வந்து சேர்ந்து, கதவைத் திறக்கும்பொழுது, பக்கத்துவிட்டு கேத்ரீனா என்னுடைய சுவிடீஷ் படிப்புப் பற்றி பேச ஆரம்பித்தாள். அவளிடம் என்னுடைய பயத்தைக் காட்டிக்கொள்ளாமல் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தபின், “கார்த்தி, நீ சுவிடீஷ் ஆட்கள் மாதிரியே சரளமாகப் பேசுவது ஆச்சரியமாக இருக்கின்றது” என சுவிடீஷில் சொல்லிவிட்டு எனது தோளைத் தட்டிக்கொடுத்துவிட்டுப் போனாள்.

கணேசன் முன்பு தனக்காக வாங்கி வைத்திருந்த பெரிய போர்வையை எடுத்து நான் இழுத்துப்போர்த்திக் கொண்டபோதிலும் என் உடம்பு வெடவெட என நடுங்க ஆரம்பித்தது. ஒரு மணி நேரமாக திகில் நடுக்கத்துடன் இருந்தபோது கீர்த்தனா கைபேசியில் அழைத்தாள்.

“சாரிடா கார்த்தி, ஆபிஸ்ல டென்ஷன், நான் வேற யார்கிட்ட என் கோபத்தைக் காட்ட முடியும், உனக்கு ஒரு அழகான வாட்ச் வாங்கி இருக்கேன், நாளைக்கு கொரியர் பண்ணிடட்டுமா?”

“தக் ச மிக்கெத் அம்மு, யாக் எல்ஸ்கார் தெய்க்”

“டேய், சுவிடீஷ் போதும், சுவிடீஷ் எல்லாம் நாளைக்கு கத்துக் கொடுக்கலாம், இப்போ ரொமான்ஸ் டைம்”

அவள் சொல்லுவது புரிகிறது, ஆனால் என்னக் கொடுமை, தொண்டை வரை வரும் தமிழ், வாயில் வராமல் சுவிடீஷில் அல்லவா அவளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கேன்.


”கார்த்தி, பிளீஸ் விளையாட்டு போதும், அட்லீஸ்ட் இங்கிலீஷ்லயாவது பேசு, உன் இங்கிலீஷை கிண்டலடிக்க மாட்டேன்”

அய்யோ கீர்த்தனாவிற்கு என் நிலைமைப் புரியவில்லையே! எனக்கு தமிழும் வரவில்லை, ஆங்கிலமும் வரவில்லை. சுவிடீஷ் மட்டுமே பேச வருகின்றதே!!! அந்த சுவிடீஷ் காரன் என் கண்களை ஊடுருவிப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அரை மணி நேரமாக அந்தப் பக்கம் என்னைத் தமிழில் பேசக் கெஞ்சிக் கொண்டிருக்கும் கீர்த்தனாவிற்கு நான் அழுதபடியே சுவிடீஷில் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.