ரிங் டோனும் வேறு சில பாடல்களும் - சிறுகதை
புதிதாய் வந்திருக்கும் எனது அறை நண்பர் கணேசன் ஒரு அப்பாவி, அறையில் சமைப்பதில் இருந்து பாத்திரம் கழுவி வைப்பது வரை எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறார். இருந்தாலும் அவர் வந்த இந்த இரண்டு தினங்களாக, அவரின் மேல் சொல்ல முடியாத கோபம்.
நேற்று அதிகாலை, பல்லவி அனுபல்லவி கன்னட படத்தில் வரும் இளையராஜாவின் பின்னணி இசைக்கோர்வைத் துண்டு அழைப்பு மணியாக அடித்ததும் பதறி அடித்து எழுந்தேன், ஒரு வேளை அம்மு தான் மனம் மாறி கூப்பிடுகிறாளோ என்று எனது கைபேசியைத் தேட
“சொல்லுட மச்சி, இங்கே எல்லாம் நல்லா இருக்கு, பசங்க கிட்ட செட் ஆயிட்டேன்னு” யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.
அரைத்தூக்கத்தில் கிடைத்த ஏமாற்றம் ஆத்திரமாக மாறும் முன் தலையணையில் முகம் புதைத்தேன். சுவிடீஷ் மொழி வகுப்பு செல்லுவதற்கான நேரம் கடந்தும் தூங்கிக் கொண்டிருந்த என்னை மீண்டும் எழுப்பியது ”எக்ஸ்கியூஸ் மீ கந்தசாமி” பாடல், இந்தத் தடவை பாடல் ஒலித்தது கணேசனின் மடிக்கணினியில் இருந்து ,
நானும் அம்முவும் கடைசியாக நல்லபடியாக பேசிக்கொண்டிருந்த பொழுது இந்தப் பாடலைத் தான் பாடிக்கொண்டிருந்தோம்.
“கணேசன், ஹெட் செட் போட்டு கேட்க முடியுமா, ப்ளீஸ்” திரும்ப தூங்கிப்போனேன். இப்பொழுதெல்லாம் அடிக்கடி தூங்கிப்போகின்றேன். உறக்கத்தில் மட்டுமே நான் பாதுகாப்பாய் இருப்பதாக உணர்கின்றேன். பழகும் காலத்தில் கனவில் வராதவள் இப்பொழுதெல்லாம் அடிக்கடி கனவில் வருகிறாள்.
சமீபத்தில் வந்த எந்தப் பாடலை மடிக்கணினியில் போட்டாலும் கணேசனை ஓரக்கண்ணால் பார்த்ததும் அவர் பாட்டை மாற்றிவிடுவார்.
“ஏங்க , இந்த பாட்டெல்லாம் உங்களுக்குப்பிடிக்காதா?” பாவமாய் கேட்டார்.
“நீங்க போடுற பாட்டெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும், அதனாலதான் வேண்டாம்” என சொல்லிவிட்டு வழக்கமாக மேயும் வலைப்பூக்களை வாசிக்க ஆரம்பித்தேன்.
என்னுடைய கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை, “எனது உயிரே எனது உயிரே” பீமா படப்பாடல் ஒரு வலைத்தளத்தில் ஒடிக்கொண்டிருந்தது.பீமா படம் வந்த பொழுது எனக்கு அறவே பிடிக்காத இந்தப் பாடல் அம்முவுடன் பழக ஆரம்பித்து அவள் பாடிக்காட்டிய பின் இந்தப்பாடல் சுவாசம் ஆகிப்போனது.
தூக்க மாத்திரைகளும் தீர்ந்துவிட்டன. கண்களை இறுக்கி மூடி , நூறில் இருந்து 99,98 என எண்ணிக்கொண்டே தூக்கத்தை வரவழைத்துக் கொண்டேன். எழுந்த பொழுது கணேசன் அருமையாக சாம்பார் வைத்திருந்தார்.
“ஏன் கார்த்தி, புதுபாட்டு போட்டால் டென்ஷன் ஆகுறீங்க?”
“மீனிங்லெஸ் பாட்டு எல்லாம்”
“அப்படி எல்லாம் சொல்ல முடியாதுங்க, வாரணம் ஆயிரம், சுப்ரமணியபுரம் பாட்டு வரிகள் கேட்டுப்பாருங்க”
நான் பதில் சொல்லவில்லை. இந்தப் படப்பாடல்களில் தான் என் அம்முவுடன் ஆன காதல் வளர்ந்தது, அவள் இப்போது என்னுடன் இல்லை, தயவு செய்து அவளை ஞாபகப்படுத்தும் விதத்தில் எதுவும் பேசவேண்டாம் என கத்தி சொல்ல வேண்டும் போல இருந்தது.
சாப்பிட்டு முடித்தவுடன் அம்மு போன பின் ஏற்படுத்திக் கொண்ட கடுகடு முகத்தோடு கணினியில் மின்னஞ்சல்களை வாசித்து கொண்டிருந்த பொழுது,
“கார்த்தி, இனிமேல் நான் போடுற பாட்டு எதுவும் உங்களுப்பிடிக்காமல் இருக்காது” எனச் சொல்லிவிட்டு
”நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா” என பொன்னுமனி படத்தில் இருந்து ஒரு பாட்டை ஓடவிட்டு என்னைப் பார்த்து சிரித்தார்.
”உலகே அழிஞ்சாலும் உன்னுருவம் அழியாது” வரிகள் வந்த பொழுது, பாண்டிச்சேரி பேருந்தில் முகத்திற்கு அருகில் வந்து முணுமுணுப்பாய் பாடியது எல்லாம் நேற்று நடந்ததாய் நினைவுக்கு வந்தது.
எத்தனைப் பாடல்கள் , எத்தனை வரிகள், எத்தனை உணர்வுகள். எல்லாம் புரிந்தும் என்னைவிட்டு விட்டு போன அவளைக் கத்த இயலாது. நான் கத்துவதற்கென பட்டுக்கோட்டையில் இருந்து இந்த அப்பாவி கணேசன் வந்து இருக்கின்றார்.
“கணேசன், அடுத்த வாரம் அசைன்மெண்ட் டெட்லைன் இருக்குல்ல, பலமைல் தள்ளி இங்கே படிக்க வந்துருக்கோம், பாட்டு கேட்க இல்ல"
அதற்கடுத்து என் அறையில் கணேசன் ஒரு மாதம் தான் தங்கி இருந்தார். அந்த நாட்களில் என் காதில் விழாதவாறுதான் பாட்டுக்கேட்பார்.
பின்னொரு நாள், அம்முவுடைய திருமணம் வெகு விமரிசையாக நடந்தது என்றாலும் ஒரே ஒரு குறை திருமண வரவேற்பு பாட்டுக்கச்சேரியில் பழைய கருப்பு வெள்ளை எம்.ஜி.ஆர் சிவாஜி படப்பாடல்களை மட்டுமே பாடிக்கொண்டிருந்தனர் என என்னுடைய பழைய அலுவலகத்தோழி சொல்லக்கேட்டு மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்.