Monday, January 15, 2007

குரு - தமிழில் - விமர்சனம்

சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவன், தனது நம்பிக்கையாலும் , கடின உழைப்பினாலும், சாதுர்யத்தாலும், வாழ்க்கையில், வியாபரத்தில் எப்படி முன்னுக்கு வருகிறான் என்பது தான் குரு படத்தின் இரு வரிக்கதை.

வியாபாரத்தில் நஷ்டமேற்பட்டு , ஒரு கிராமத்தில் இடைநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பவரின் மகனாக தேர்வில் தோற்று துருக்கி செல்ல இளவயது குரு அனுமதி கேட்பதுடன் படம் ஆரம்பிக்கிறது.

கடின உழைப்பால் துருக்கியில் சூப்பர்வைசர் அந்தஸ்துக்கு உயரும் குரு, சுயமாக தொழில் ஆரம்பிக்கும் எண்ணத்துடன் ஊர் திரும்புகிறார். நண்பனின் மூத்த சகோதரியை , 15000 ரூபாய் வரதட்சனைக்காக திருமணம செய்து கொள்கிறார்.

குடும்பத்துடன் பம்பாய் வரும் குரு, நானாஜி என்ற பத்திரிக்கை அதிபரால் ஆதரிக்கப் படுகிறார். சோதனைகளை தனது சாதுர்யத்தால் சாதனைகளாக மாற்றி முன்னுக்கு வருகிறார்.

பிற்பாதி, நானாஜி மற்றும் அவரது இளம் பத்திரிக்கை நிருபர் ஷியாம் ஆகியோர் குருவின் நீதிக்கு புறம்பான செயல்களை பத்திரிக்கையில் எழுத ஆரம்பிக்க , குரு நீதியின் முன்னிறுத்தப் படுகிறார்.

மீண்டு வந்து பெரிய அரங்கில் தனது சக்தி குழுமத்தின் பங்குதாரர் கூட்டதில் உரையாற்றுவதுடன் படம் நிறைவு பெறுகிறது.

படத்தில் ஷியாம் மற்றும் முதுகு தண்டுவட நோயினால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் இருக்கும் மீனாட்சி இருவருக்கும் இடையிலான காதல் கிளைக் கதையாக சொல்லப் படுகிறது. சொல்லப் போனால் இந்தக் கிளைக் கதையை தனிப் படமாகவே எடுக்கலாம்.

திருபாய் அம்பானியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாக பத்திரிக்கைகளில் சொல்லப் படுகிறது. ஆதலால் படம் பார்க்கும் போது சம்பந்தப் பட்ட கதாபாத்திரங்கள் யார் யார் என இணைத்துப் பார்க்க தோனுகிறது,

தொழில்நுட்ப் விசயங்களை பொறுத்த மட்டில், மணிரத்னம் தான் ஒரு சிறந்த மேலாளர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார். ரஹ்மானின் பாடற்கள் ஏற்கனவே பெரிய அளவில் பேசப்படுகின்றன. ராஜிவ் மேனனின் ஒளிப்பதிவு குளிர்ச்சியாக உள்ளது.

"டும்டும்டும்" அழகம்பெருமாளின் திருநெல்வேலி பாஷை வசனங்கள் அழகாகவே உள்ளது.

"நீ இன்னக்கி என்னையப் பத்தி எழுதுகிட்டு இரு, நான் நாளைய என்னோட முன்னேற்றத்தை யோசிச்சுட்டு ஜெயிச்சு போய்கிட்டே இருப்பேன்"

"ஐயா நான் வியாபாரி, சலாம் போட வேண்டிய இடத்தில சலாம் போட்டு , எட்டி மிதிக்க வேண்டிய இடத்தில் எட்டி மிதிப்பேன்"

போகிற இடங்களில் எல்லாம் "எதிர்மறையான வார்த்தைகளையே கேட்கும்போதெல்லாம், நான் ஜெயிப்பேன் என்று வார்த்தையாலும் கண்களாலும் குரு சொல்லும் இடங்கள் நிச்சயம் உற்சாகத்தையும் புத்துணர்வையும் கொடுக்கும்.

படம் ஹிந்தியில் இருந்து டப் செய்யப் பட்டு இருந்தாலும், சூர்யாவின் குரல் படத்தை தூக்கி நிறுத்துகிறது. குருவாக சிறப்பாக நடித்து இருக்கும் அபிஷேக்கின் முக பாவனைகள் அனைத்தையும் குரலில் கொண்டு வந்துள்ளார். கிட்டத்தட்ட சூர்யாவே நடித்தது போல் ஒரு உணர்வு இருந்தது. "ஈகோ" இல்லாமல் டப்பிங் கொடுததமைக்காகவே சூர்யாவைப் பாராட்டலாம்.

நானாஜியாக நடித்து இருக்கும் மிதுன் சக்கரபர்த்திக்கு நாசர் குரல் கொடுத்துள்ளார். படத்தில் மாதவனும் சொந்தக் குரலில் நடித்துள்ளதால் படம் ஆரம்பித்த சிறிது நேரத்திற்குப் பின் நாம் "டப்பிங்" படம் பார்ர்கிறோம் என்ற உணர்வு மறந்து போய் விடுகிறது.

மணிரத்னத்தின் முந்தையப் படங்களின் "ஹேங் ஓவர்" இதிலும் உள்ளது,

1. திருமணத்திற்கு முந்தையக் காதல் (தோல்வி)
2.இரட்டைக் குழந்தைகள்
3. தளபதி, ராக்கம்மா கையைத் தட்டு பாடலின் தூண்கள் கொண்ட மண்டபம்
4. காதற் காட்சிகள்
5. திருமலை நாயக்கர் மஹால்

குறை என்று சொல்லப் போனால், மணி வழக்கம் போல "மேலோட்டமான" அணுகுமுறையை யே இந்தப் படத்திலும் கையாண்டுள்ளார். எது தவறு எது சரி என்று சொல்லாமலேயே படம் முடிகிறது.

உயிரே படத்தில் பாடற்வரிகள், தமிழில் தெளிவாக இருந்தன, ஆனால் இந்தப் படத்தில், இசையில் தமிழ் வார்த்தைகளை உள்வாங்க கடினமாக இருந்தது.

குஜாராத்தி கெட்டப்புடன் "இலஞ்சி கிராமம் , திருநெல்வேலி மாவட்டம்" என்று காட்டுவதை தவிர்த்து இருக்கலாம்.

நிறைகள் நிறைய உண்டு, அபிஷேக் நடிப்பு, தெரிந்தக் கதை என்றாலும் ஓரளவுக்கு சுவாரசியமாகவே எடுத்து சென்றமை, கதை ஓட்டத்துடன் கூடிய "பெல்லி" நடனம், பழைய 50-60 களின் செட்டிங், எல்லாவற்றுக்காகவும் பார்க்கலாம்.

தடைகளை தாண்டி வெற்றி பெற்ற்வனி(ரி)ன் கதை , வெற்றிக்காக வெறியுடன் இருப்பவர்களுக்கு,


குருநாத் தேசிகன் - அபிஷேக் பச்சன் , குரல் - சூர்யா
சுஜாதா - ஐஸ்வர்யாராய் , குரல் ரோஹினி(???டைட்டிலில் பெயர் அப்படித்தான் போட்டார்கள்)
நானாஜி - மிதுன் சக்கரபர்த்தி , குரல் நாசர்
ஷ்யாம் - மாதவன்
மீனாட்சி - வித்யாபாலன் , குரல்,தீபா வெங்கட்(???)

Monday, January 01, 2007

நல்ல நாள் - குட்டிக்கதை

கடந்த வாரம் ஒரு நல்ல காரியம் சம்பந்தமாக எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் அந்த நல்ல காரியத்தை நாளை செய்வதாக கூறினார். நான் வேண்டாம், இன்றே செய்து விடுங்கள் இன்று புதன் கிழமை நல்ல நாள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்றேன். அவரும் சரி என்று அந்த விசயத்தை செய்ய கிளம்பினார். அவர் சென்றவுடன் என் அருகில் இருந்த நபர், என் ந்ண்பர் கேட்டார் உனக்கு நாள், கிழமை இதிலெல்லாம் நம்பிக்கை உண்டா என்று, நல்லவருக்கு எல்லா நாளும் நல்ல நாளே... நன்றே செய்.. நன்றும் இன்றே செய் என்பதற்காக அவரிடம் அப்படிக் கூறினேன் என்றேன். ஒரு வேளை அவர் நாளை வந்து இதைப் பத்தி கேட்டிருந்தால் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் என்றும், வெள்ளி அன்று வந்து இருந்தால் வெள்ளி எல்லாருக்கும் புனிதமான நாள் என்றும், சனி அன்று வந்து இருந்தால் வெங்கடாசலபதி க்கு உகந்த நாள் நல்ல காரியத்தை உடனே தொடங்குங்கள் என்று சொல்லி இருப்பேன் என்றேன். என் நண்பரும் என்னை மடக்கும் விதமாக ஞாயிறு என்றால் ... நான் சொன்னேன் ஞாயிறு அன்று விடுமுறை நாள் எந்த ஒரு காரியத்தையும் ஆழ்ந்து வேறு எந்த அலுவல்களின் தொந்தரவு இல்லாமல் செய்ய முடியும். நானே தொடர்ந்து திங்கள் கிழமை வாரத்தின் முதற் நாள், நல்ல காரியத்துடன் தொடங்கலாம் என்றிருப்பேன் என்றேன். செவ்வாய் பொதுவாக யாருக்கும் ஆகாது என்பார்கள், அன்று நல்ல காரியத்தைப் பற்றி விவாதிக்க வந்து இருந்தால் என்ன செய்வாய் என்று புத்திசாலித் தனமாக் மடக்கினார். ஒரு அறிவியல் பூர்வமான உண்மை செவ்வாய் கிழமை தான் வார நாட்களிலேயே " The Most Productive Day". ஆகையால் உடனே நல்ல காரியத்தை முடித்து விடுங்கள் என்று இருப்பேன் என்றேன். செய்யும் காரியம் மட்டுமே முக்கியம் நாள், கிழமை அல்ல என்று முடித்தேன், அவரும் என் வாத திறமையை மெச்சி அவர் வேலைப் பார்க்க கிளம்பினார்.
அவர் சென்றவுடன் நான் அன்றைய நாளிதழை எடுத்து எனக்கான ராசிப் பலனைப் பார்க்கலானேன்.