Tuesday, September 01, 2015

நானும் கடவுள் - சிறுகதை

வேகமாக அலுவலகத்தை  நோக்கிப் போய்கொண்டிருக்கையில்,

"எதிர்கால உலகம் இப்பொழுது இருப்பதைப்போல இருக்குமா, இதைவிட நன்றாக இருக்குமா அல்லது மோசமாக இருக்குமா"  ஆங்கிலத்தில் கேட்டவரை பார்த்தேன்.

வசீகரமான குரல், நல்லத்தோற்றம் கையில் சில துண்டுப்பிரசுரங்கள், கேள்வியின் தன்மை, கிறிஸ்தவ மத, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் என்று புரிந்தது.  திரைகடல் ஓடியும் திரவியம் தேட நான் செல்லும் நாடுகளில் எல்லாம் குறைந்தது ஒரு யெகோவா சாட்சியையாவது சந்தித்துவிடுவேன். அது மதப்பரப்புரை  கேள்வி என்று தெரிந்தும் ,

"இப்பொழுது இருப்பதே தொடர்ந்தால் போதும், பாதகமும் வேண்டாம், சாதகமும் வேண்டாம்" தமிழில் யோசித்ததை இரண்டி வினாடிகள் செலவளித்து மொழிப்பெயர்த்து ஆங்கிலத்தில் பதில் சொன்னேன்.

"யெகோவாவின் மேல் நம்பிக்கைக்கொண்டால், இந்த உலகம் ரட்சிக்கப்பட்டு நாமெல்லாம் பாவங்களில் இருந்து மீட்கப்படுவோம்"

"மன்னிக்கவும் , எனக்கு இறை நம்பிக்கை கிடையாது" பொய்யான கடுமையை முகத்தில் வரவழைத்துக்கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தேன்.

 யெகோவா சாட்சிகளின்  கடுமையான இறை நம்பிக்கை என்னை அடிக்கடி வியப்பிலாழ்த்தும்.  யெகோவா சாட்சிகள் ஓர் உதாரணம் மட்டுமே. கிட்டத்தட்ட எல்லா மதங்களுமே நம்பிக்கை வைத்தால் இறைவன் கரம் கொடுப்பார், மீட்பார் என்று சொல்கிறது.

"நம்பினோர் கெடுவதில்லை என்பது நான்மறை தீர்ப்பு" , "கடவுளை நம்பினோர் கைவிடப்படார்" என்ற சொல்வடைகளை ஊரில் இருக்கும்பொழுதெல்லாம் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

"கடுகளவேனும் விசுவாசம் கொண்டாலும் மலையை நகர்த்தும் காரியத்தைகூட இறைவன் செய்து கொடுப்பார்" என்று பைபிளின் மத்தேயு 17-20 சொல்கிறது.

"திண்ணமாக என் இறைவன் அருகில் இருக்கின்றான், பிரார்த்தனைகளுக்கு பதில் அளிப்பவனாக இருக்கின்றான்" போன்ற நம்பிக்கையை போதிக்கும் கருத்துகள் திருக்குர் ஆனிலும் இருக்கின்றன.

எனக்கான காரியங்கள் என்னால் , என் முயற்சிகளினால் மட்டுமே நடக்கின்றன என்பதை நம்புபவன் நான். குறைவான முயற்சிகளிலோ அல்லது முயற்சியேயின்றியோ, வேண்டுதல்களின் உதவியுடன் எப்படி காரியங்கள் நடக்கமுடியும். நீந்தத் தெரியாதவர்களுக்குத்தான் பிடித்துக்கொள்ள துடுப்பு தேவை , எனக்கெதுக்கு என்று யோசித்தபடியே அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

அலுவலகத்தில் எனது மேலாளரும் எனது அணியின் மற்ற உறுப்பினர்களும் நாங்கள் வெளியிடவிருக்கும் "உட்டோப்பியா" விளையாட்டு மென்பொருளுக்கான இறுதிவேலைகளில் மூழ்கியிருந்தனர்.  இன்னும் ஒரு மணிநேரத்தில் முதலாளி டேன் உல்லெர்சன் (Dan Ullrsson) வந்துவிடுவார்.  அவர்தான் இந்த மென்பொருளுக்கான மூளை. யாருக்கும் முகம் கொடுத்து பேசாத டேன், என்னிடம் கொஞ்சம் கரிசனம் காட்டுவார்.  பழைய ஏற்பாட்டில் வரும், கனவுகளுக்கு விளக்கம் சொல்லும் தீர்க்கதரிசி டேனியல் என்பதன் ஸ்வீடிஷ் பதம் டேன் என்பது எனக்குத் தெரியும்.  உல்லெருக்கான பொருள் என்னவென்று அவரிடமே ஒருநாள் , ஓர் இரவுக்கொண்டாட்டத்தில் கேட்டுவிட்டேன் ,

"ஸ்கேண்டிநேவிய நோர்ஸ் மத நம்பிக்கையில் அதிகம் விவரிக்கப்படாத, ஆனால் முக்கியத்துவம் மிகுந்த கடவுள் என்று சொல்லப்படுகிறது "  என்றார்.

"அதிகம் விவரிக்கப்படாமல் எப்படி முக்கியத்துவம் கொடுக்கப்படும்"

"சூத்ரதாரிகள் தங்களைப்பற்றிய விபரங்களை அதிகம் சொல்வதில்லை"

அன்றைய கொண்டாட்டத்தில், எங்களது பேச்சு இந்தப்பேரண்டமே கணினிக்குள் இருக்கும் விளையாட்டுப்பொருளாகவோ பாவனையாகவோ (simulation) இருக்கும் என்று திரும்பியது.  டேன் உல்லெர்சன் அன்றைக்கு போட்ட விதைதான் இன்றைக்கு முழுமையடையப்போகும் உட்டோப்பியா கணினி விளையாட்டாக  உருவாகியிருக்கிறது.

தத்ரூபமாக மனித கதாபாத்திரங்களைக் கொண்டு உட்டோப்பியன் சமுதாயத்தை உருவாக்குவதே இந்த விளையாட்டின் வெற்றி இலக்குகள். டேன் உல்லெர்சனுக்கு காட்டுகையில் வடிவமைப்பு தத்ரூபம் எல்லாம் திருப்திகரமாக இருந்தும் தனக்கு  இந்த விளையாட்டில் சிலவை குறைவதைப்போல இருக்கிறதென்றார்.

"எதை சேர்க்கலாம் டேன்" இது என் மேலாளர்.

"நம்பிக்கை என்பதை விளையாட்டில் சேர்த்தால் என்ன? " டேன் சொன்னவுடன் எனக்குப்புரிந்துவிட்டது. ஆனால் மேலாளருக்குப் புரியவில்லை.

"புரியவில்லை டேன் , தயை செய்து விளக்கவும்"

"விளையாட்டின் பாத்திரங்கள், அவர்களை விளையாட வைக்கும்  நம்மிடம் வேண்டுதல்களை வைக்கும் வாய்ப்புகள், அவர்களின் நம்பிக்கையின் அளவைப்பொறுத்து , நாம் வரங்களைக் கொடுப்பது போன்றவற்றை சேர்க்கலாம்".

"கடவுள் நம்பிக்கை என்பதைப்போலவா டேன்"  என்றேன்.

"அதேதான் கார்த்தி"

"வேண்டுதல்கள் இல்லாமல் சுயபுத்தியுடன் தனது பிரச்சினைகளைத் தீர்க்கும் வாய்ப்பையும் விளையாட்டின் பாத்திரங்களுக்கு கொடுக்கலாமே டேன்"

"வேண்டாம், நமது உட்டோப்பியன் கணினி விளையாட்டை விளையாடுபவனுக்கு கிடைக்கும் தான் கடவுளைப்போன்றவன் என்ற எண்ணத்தை அது கெடுத்துவிடும் கார்த்தி"

அன்று மாலை அவரது அறைக்கு வரசொன்னார் டேன் உல்லெர்சன்.

"கார்த்தி நீ சொன்ன -சுயபுத்தி- அற்புதமான யோசனை. ஆனால் சுயபுத்தி முழுமையடையும்பொழுது விளையாட்டமைப்பை விட்டு பாத்திரங்கள் வெளியே வந்துவிடும்"

"உண்மையாகவே புரியவில்லை"

"தீவிரமான கிறிஸ்தவர்களைப் பார்த்திருக்கிறாயா? அவர்களின் பல பிரச்சினைகள் பிரார்த்தனைகள் மூலம் தீர்ந்தன என்று சொல்வார்கள், சொல்வதோடு மட்டுமல்லாமல் கிறிஸ்தவமே உண்மை மற்றவையெல்லாம் பொய் என்றும் சொல்வார்கள்"

"ஆமாம்"

"இஸ்லாமியர்களும் அப்படித்தான், ஏக இறைவன் மேல் நிபந்தனையற்ற நம்பிக்கை வைக்கும்பொழுது அவர்களின் பிரச்சினைகள் தீர்ந்தன என்றும் ஏக இறைவனே எல்லாம் மற்றவை எல்லாம் பொய் என்றும் சொல்வார்கள்"

"ஆமாம்"

"ஏன், உன் மதத்தில் மலைக்குப்போனால் பிரச்சினை தீரும், தலைமுடி எடுத்தால் பிரச்சினை தீரும் , பசுமாட்டிற்கு தீவனம் போட்டால் சரியாகும் என்று சொல்வார்களே "

"ஆமாம்"

"எல்லோரும் தத்தமது கடவுள்தான் உண்மை, ஏனைய கடவுள் எல்லாம் பொய் என்று சொல்வதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் கார்த்தி?"

"எல்லா கடவுள்களுமே பொய்"

"இல்லை கார்த்தி, எல்லா கடவுள்களுமே உண்மை. எல்லா நம்பிக்கைகளுமே உண்மை, எல்லா மத நூல்களுமே கடவுள்களால் வழங்கப்பட்டவைதான், நம்பிக்கையான பிரார்த்தனைகள் பிரச்சினைகளைத் தீர்க்கும்"

"அது எப்படி சாத்தியம் டேன்"

"நமது உட்டோப்பியன் கணினி விளையாட்டைப்போன்றதுதான் நமது உலகமும். கற்பனைக்குப் புலப்படாத பெரிய கணினியில் ஆடப்படும் விளையாட்டு, இந்த ஆட்டத்தை இயக்குபவர்கள்தான் பூமியில் சொல்லப்படும் அனைத்து கடவுள்களும்"

"சுயபுத்தியுடன் பகுத்தறிந்து , தன்மேல் நம்பிக்கை வைத்து நடப்பதினால் பிரயோசனமேயில்லையா டேன்"

"ஏன் இல்லை,  மந்தையில் இருக்கும் ஆடுகள் தங்களை ஆடுகள் என உணரும்பொழுது மந்தையை நடத்தும் மேய்ப்பாளனாக மாறும், நானே  ஒரு மேய்ப்பாளன்தான்" டேன் உல்லெர்சன் சொல்லிமுடிக்கும்பொழுது அவருக்கும் எனக்குமிடையில் ஒரு கண்ணாடி திரை இருப்பதைப்போல ஓர் உணர்வு.

இது எந்தவிதமான பரிமாணம். திரைக்குள் நான் இருக்கிறேன். என்னருகில் இருந்தாலும் திரைக்குவெளியே டேன் உல்லெர்சன் இருக்கிறார்.

"எல்லா கடவுள்களுமே சுயபுத்தியுடையவர்கள் மற்றும் பகுத்தறிவாளர்கள்.
சுயபுத்தியுடையவர்கள் கடவுள்களாகி விளையாடி வரம் கொடுக்கும் பாக்கியத்தை அடைவர், என்ன புரிந்ததா கார்த்தி"

"புரிந்தது டேன், நானும் ஒரு கடவுள்" திரையை கிழித்துக்கொண்டு வெளியே வந்து டேனுக்கு அருகில் வந்தமர்ந்தேன்.  சில ஒளியாண்டுகள் தொலைவில்  அமர்ந்திருந்த மற்ற கடவுள்கள் என்னைப்பார்த்து சிரித்து வரவேற்றனர்.