Tuesday, June 09, 2015

இத்தாலியில் தகவல் பாதுகாப்பு மற்றும் அகவுரிமை துறையில் முதுகலை மேற்படிப்பு - (கட்டணக்கல்வி)வினையூக்கியிடமிருந்து கல்வி சார்ந்த தகவல் வந்தால் அது இலவசக்கல்வியாக இருக்கும் என்று பதிவை படிக்க வருபவர்களுக்கு முன்பே சொல்லிவிடுகிறேன், இது இலவசக்கல்வி பற்றிய பதிவல்ல. இந்த தகவல் பதிவு கட்டணம் செலுத்தி இத்தாலியில் படிக்கும் மேற்படிப்புப் பற்றியது. 
நான் ஆராய்ச்சி மாணவனாக இருக்கும் ரோம் பல்கலைகழகத்தின் தகவல் அறிவியல் துறை , ஆங்கில பயிற்றுமொழியில் தகவல் பாதுகாப்பு பாடத்தில் ஓராண்டு மேற்படிப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 
ரோம் நகரத்தில் மூன்று அரசு பல்கலை கழகங்கள் இருக்கின்றன. அவை 1, 2, 3 என்று அழைக்கப்படும். எனது பல்கலைகழகம் யுனிரோமா - 2. தோர் வெர்கட்டா என்ற ரோம் நகரத்து பகுதியில் இருப்பதால் இடப்பெயருடன் சேர்த்து அழைக்கப்படும். 
ஓராண்டு மாஸ்டர்ஸ் படிப்பு பின்வரும் கூறுகளைக் கொண்டிருக்கும் 
• Teaching – 400 hours
• Seminars / Workshops – 300 hours
• Internship – 400 hours
• Thesis – 400 hours
• Medium of Instruction – English (Mandatory Italian Language course also will be taught)
• Internship – June – August.
• Guidance - Further Research, PhD and Job opportunities
• Selection Process – Ranking and if it is needed interviews.
கல்விக்கட்டணம் - 7 லட்சம் இந்திய ரூபாய்கள்
உறைவிட , உணவு செலவுகள் - உங்கள் வாழ்க்கை முறையை பொறுத்து 4 யில் இருந்து ஐந்து லட்சங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள். 

1. பணம் கட்டி படிக்கவேண்டுமென்றால் நான் ஐக்கிய ராச்சியம் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு போவேனே? 
ஐக்கிய ராச்சியத்தில் கல்விக்கட்டணம் இதைவிட அதிகம். படிப்பு முடிந்தவுடன் முன்னைப்போல விசா நீட்டிப்புப் பெற்று வேலை தேட அனுமதிப்பதில்லை. 

2. இத்தாலியில் ஆங்கிலப்புழக்கம் குறைவே, அன்றாட வாழ்வில் பிரச்சினை வருமே?
இதை நேரெண்ணத்துடன் பார்த்தால் புது மொழி , புதிய பண்பாட்டை கற்றுக்கொள்ளலாம். நான் இங்கு கடந்த 4 ஆண்டுகளாக வசிக்கிறேன். 

3. ஐக்கியராச்சியம் நீங்கலான ஐரோப்பாவில் பல நாடுகள் இலவசக் கல்வியைத் தருகின்றனவே, அங்கு போகாமல் நான் ஏன் இத்தாலிக்கு பணம் கட்டி படிக்க வரவேண்டும் ?
நான் மாஸ்டர்ஸ் படித்த சுவீடன் உள்ளிட்ட பல நாடுகள் ஐரோப்பியர் அல்லாதவர்களுக்கு இலவசக்கல்வியை நீக்கிவிட்டது. மேற்படிப்பு இலவசமாக இருக்கும் ஒரு சில நாடுகளிலும் கடும் போட்டி நிலவுகிறது. 

4. நீங்கள் சொல்லும் படிப்பில் சேர்வதால் என்ன லாபம்?
தகவல் பாதுகாப்பு அகவுரிமை துறை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் தற்காலத்தில் முதன்மையானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது. முழுநேர நிறுவன வேலைக்கோ , மேற்கொண்டு ஆராய்ச்சி படிப்பிற்கோ போக நல்லதொரு படிப்பு. 

5. நாங்கள் இப்படிப்பில் சேர்வதால் உங்களுக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் ?
வழக்கம்போல வெறும்புகழ் , கல்விக்கான வினையூக்கி , செல்வகுமார் என்ற பட்டமும் பல்கலை கழக பேராசிரியர்களின் பாராட்டும். நீங்கள் நன்றாக படித்து நல்ல நிலையில் தேர்ச்சி பெற்றால் எனது இத்தாலிய நிறுவனத்தில் வேலைக்கு எடுத்துக்கொளவேன். 

6. யார் யாருக்கானது ? இளங்கலையில் வெவ்வேறு காரணங்களினால் சுமாரான மதிப்பெண் எடுத்தாலும் மேற்படிப்புப்படித்து தனது கல்விநிலையை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென்று விரும்பும் பொருளாதாரத்தில் உயர்நடுத்தரவர்க்கத்தில் இருக்கும் மாணவர்கள். வேலை பார்த்து போரடித்துவிட்டது , ஓராண்டு மேற்படிப்புப் படித்து வேலை வாய்ப்பு நிலையில் தனது நிலையை உயர்த்திக் கொள்ள விரும்புபவர்கள். 

7. நான் இலங்கையை சேர்ந்தவன். உங்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் பிரச்சினையிருக்கிறதே? நான் இந்த மேற்படிப்புப் பற்றி விபரங்கள் அறிய உங்களைத் தொடர்பு கொண்டால் எனக்கு பதிலளிப்பீர்களா ?
அட, என்னங்க இது. நீரடித்து நீர் விலகுமா. சின்ன பிள்ளைகள் சண்டைகளை எல்லாம் நினைவில் வைத்துக்கொண்டிருந்தால் நான் எப்படி பெரிய மனுஷன் ஆவது. கல்வியை விரும்பும் ஈழத்து சொந்தங்களுக்கு ஒரு படி அதிகமாகவே உதவுவேன். 

8. கல்லூரி சார்பாக தொடர்பு கொள்ளலாமா ?நிச்சயமாக. கல்லூரிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கும் எங்களது பல்கலைகழகம் தயாராக இருக்கிறது. 

9. நான் எஜுகேசனல் கன்சல்டன்சி நடத்துகிறேன் , நீங்கள் விரும்பினால் நாம் ஒப்பந்தம் செய்து கொண்டு இதை தனியே நடத்துவோமா ? உங்களுக்கு நல்ல கமிஷன் தருகிறேன்.
மன்னிக்கவும். இது எனது கொள்கைகளுக்கு ஒப்பானது அல்ல. பணம் நோக்கமாக இருந்திருந்தால் சுவீடனில் இருக்கும் பொழுதே செய்து பெரும் பணக்காரன் ஆகி இருப்பேன். இந்தியாவில் எடுத்து வந்திருக்கும் மேகி நூடுல்ஸ் சாப்பிட்டு ஏழை மாணவனாக இருந்தாலும் , இடைத்தரகராவதை விட வினையூக்கியாக இருப்பதையே விரும்புகின்றேன். 

10. எப்படி உங்களை தொடர்பு கொள்வது ?

selvakumar.ramachandran@uniroma2.it 


கல்வி சார்ந்த விசயமென்பதால் கட்சி பேதம் பார்க்காமல் பகிரலாம்.