Wednesday, June 26, 2013

புலிவால் - சிறுகதை

 கழிவறை, படுக்கையின் தலையணை மாட்டு , கால் மாட்டு , சட்டை , என் உள்ளாடைகளில் கூட கேமரா வைத்து நம்மை கண்காணித்தால் எப்படி இருக்குமோ , இணையத்தில் அப்படி ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படும்சூழலில் தமிழ்நாட்டின் பெரிய கட்சித்தலைவர்களில்  ஒருவருக்கு நான் ஐரோப்பாவில் பினாமியாக இருக்கின்றேன் என ஒரு துப்பறியும் சாம்பு பேஸ்புக்கில் நிலைத்தகவல் வைத்திருந்தார்.  நமக்கு சாதகமாக இருக்கும் விசயங்களுக்காக  ,  சிலருக்குப் பதில் சொல்லுவதை விட பதில் சொல்லாமல் இருப்பதே சுவாரசியம்.  அது வதந்தியா இல்லை உண்மையா என்பதை ,என் மின்னஞ்சல்களை வாசித்து விட்டு உங்களுக்கு கண்டிப்பாக சொல்லுகின்றேன். 
வழக்கமான வாத்தியாரின் மெயில்கள், வாழ்ந்தால் உன்னோடுதான் வாழ்வேன் என்ற அம்முவின்  கடிதங்கள் என ஒவ்வொன்றாகப் படித்து முடித்த பொழுது, அந்த மின்னஞ்சல் மேல் வந்தது. 

அன்புடன் கார்த்திக்கு, 
ஒரு தகவல் பெட்டகத்தை ரஷியாவில் இருக்கும் ஒருவரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கு தங்களை தேர்வு செய்து இருக்கின்றோம். விருப்பம் இருந்தால் பதில் அனுப்பவும் 
இப்படிக்கு 
உலகமக்களின் நலம் விரும்பி 

என ஆங்கிலத்தில் வந்து இருந்தது.  வழக்கமாக ஆப்பிரிக்க அரச வழிப் பரம்பரையினரின் கடைசி வாரிசு நான், என் சொத்துகள் பிரிட்டனில் ஒரு வங்கியின் பாதுகாப்பில் இருக்கின்றது, மீட்டு எடுக்க உங்களின் உதவி தேவை என வரும் அல்லது, நான் அன்புக்காக ஏங்குகின்றேன் , என்னை நேசிப்பாயா என கறுப்பு அழகிகளின் படங்களுடன் வரும். படங்களை மட்டும் டவுன் லோட் செய்து வைத்துக் கொள்வதுண்டு.  உட்டாலக்கடி நைஜீரியா வகை மெயில்களுக்கு மத்தியில் இது வித்தியாசமாக இருந்தது.  

எனக்கும் ரஷியாவிற்குப் போக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. "என்ன விஷயம் " என பட்டும்  படாமல் ஒரு வரியில் பதில் அனுப்பினேன். 

என்னை நெடுங்காலமாக சமூக ஊடகங்களில் கவனித்து வருவதாகவும் , என்னுடைய சமூக அக்கறை, இடது சாரி சார்பு ஆகியனவையே இந்த மின்னஞ்சலை எழுத வைத்ததாக கூறி இருந்தனர். என்னுடைய சமூக அக்கறை, போராளிக் கருத்துகள் எல்லாம் ஒரு வகையில் பாசாங்கு தான் என்றாலும்  வாய்ப்புக் கிடைத்தால் ஸ்டைலான களப் போராளியாக மாற நான் தயங்க மாட்டேன். 

கைபேசி எண்ணைக் கேட்டார்கள், கொடுத்தேன். என்னிடம் பேசினார்கள். வங்கிக்  கணக்கு எண்ணைக் கேட்டார்கள். மறுநாள் கணிசமான தொகை வரவாக இருந்தது. 

விஷயம் இதுதான். ரோம் விமான நிலைய டிரான்சிட்டில்  ஒரு  மென் கோப்புகள் அடங்கிய வன் தட்டு , அதாவது ஹார்ட் டிஸ்க்கை ஒருவரிடம் இருந்து நான் பெற்றுக் கொள்ள வேண்டும். அதை வீட்டில் பாதுகாப்பாக ஒரு வாரம்  வைத்து இருக்க வேண்டும். பின்னர் , பின்லாந்தின் தலைநகர் ஹெல்சின்கி போய் , அங்கிருந்து ஒரு  பேப்பர் கவரைப் பெற்றுக் கொண்டு , ரயிலில் ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் சென்று, அங்கு நான் ஏற்கனவே ரோம்  டிரான்சிட்டில் சந்தித்த ஆளிடம் மீண்டும் சேர்க்க வேண்டும். 

கரகாட்டக்காரன் பட ரசிகனான எனக்கு, ஜேம்ஸ் பாண்ட் பட ரேஞ்சில் ஒரு  வேலை வருகின்றது , அதுவும் ஏகப்பட்ட சம்பளத்துடன் ... ஆடித்தான் பார்ப்போமே என இருந்தது. 

பாஸ்போர்ட் விபரங்களைக் கேட்டார்கள். அதுதான் ஏற்கனவே பணம் அனுப்பிவிட்டார்களே  இனி நம்பலாம் ... கேட்ட விபரங்களுக்கு மேலாகவே கொடுத்தேன். 

ரோமில் இருந்து இஸ்தான்புல் செல்லும் விமானம் ஒன்றிற்கு டிக்கெட் அனுப்பினார்கள்.  கூடவே துருக்கி மின் - விசாவும்  வந்தது.  செக் - இன் செய்ய வேண்டும்.  ஆனால் விமானத்தில் ஏறக் கூடாது, ஹாங்காங் செல்லும் விமான நிலைய கதவில் ஒருவரிடம் இருந்து ஒரு ஹார்ட் டிஸ்க்கை வாங்கிக் கொண்டு திரும்பி விட வேண்டும் என்பதுதான் உத்தரவு. 

மொழிப் பட ஹீரோ  பிரித்விராஜ், இன்னும் கொஞ்சம் வெளுப்பாய் இருந்து, பிரேம்லெஸ் கண்ணாடி போட்டு இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒருவரை ஹாங் காங்கிற்கு விமானம் புறப்பட இன்னும் ஒரு மணி நேரம் இருக்கையில் சந்தித்தேன். செயின் பீட்டர்ஸ்பர்க்கில் சந்திப்போம் என அவர் வைத்து  இருந்த மடிக்கணிகளில் ஒன்றை என்னிடம் கொடுத்தார்  

°வன் தட்டு என்றார்களே !!  " என்றேன் .. 

பதில் பேசவில்லை, சிரித்துக் கொண்டே கொடுத்தார். வாங்கிக் கொண்டேன். திரும்பும் பொழுது குடியேற்ற பாதுகாப்பு  அதிகாரிகள் மையமாகப் பார்த்தார்கள் ஜேம்ஸ் பாண்டுகள் பயப்படுவதில்லை. வீட்டிற்கு வந்ததும் மடிக் கணினியை திறந்துப் பார்க்க விருப்பமாக இருந்தது. கடவுச் சொல் தெரியாதே !! ஒருவேளை திறந்தால் வெடித்துகே கிடித்து தொலைந்து விடப்போகின்றது ... 

அடுத்த ஒரு வாரம் படபட ப்பாகத் தான் போனது.  கல்லூரிக்குப் போகவில்லை. ஒரு நாள், ரஷியன் மாதிரி தோற்றம் உடையவன்  வந்து, அவனது காரில் ரஷியத் தூதரகத்திற்கு அழைத்து  சென்று , ஏற்கனவே தயாராக இருந்த, ரஷிய  விசாவையும் கொடுத்தான். நடக்கும் சம்பவங்களுக்கு ரகுமான் பின்ணனி இசைக் கோர்த்தால் அட்டகாசமாக இருக்கும் வகையில் எல்லாமே ஸ்டைலாக இருந்தது-. 

ரோம் - ஹெல்சின்கி விமானம் , பின்பு ஹெல்சின்கி - பீட்டர்ஸ்பர்க் அலிக்ரொ சூப்பர் பாஸ்ட் டிரெயின். ஒரு வயதான தாத்தா , சிலக் கோ புகளை ஹெல்சின்கி ரயில் நிலையத்தில் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார். 

ரயிலில் விபோர்க் - வைனிக்கலா இடையில் சகப் பிரயாணிகள் எல்லோரிடமும் கடுமை காட்டிய ரஷிய அதிகாரிகள், என்னிடம் மட்டும் கனிவாகப் பேசினார். பீட்டர்ஸ்பர்கில் இருந்து, நூறு கிலோமீட்டர்கள் தொலைவில் ஒரு மாளிகை,  அங்கு அந்த பிரித்விராஜ் மாதிரி இருந்த ஆளை சந்தித்தேன்.  

மடிக் கணினியைக் கொடுத்தேன் அதைப் பெற்றுக் கொண்டு, அவரிடம் இருந்த ஒரு மடிக்கணினியை என்னிடம் கொடுத்தார். 

பத்திரமாக வைத்துக் கொள்ளவும், சில மாதங்களுக்குப் பின் தகவல் வரும் , அப்பொழுது வரும் உத்தரவின் படி செய்ய வேண்டியதை செய்தால் போதும். "

நான் வந்த காரில் அவர் வெளியேறினார். சில மணி நேரங்கள் காத்து இருந்தேன்.

 கொஞ்சம் பயமாகவும் இருந்தது.  காரியம் முடிந்து விட்டதே, காரியம் செய்து விடுவார்களோ என... இல்லை இல்லை ... ரஷியாவில் கண்டிப்பாக சாக மாட்டேன் ... கார் வந்தது... ரயில் நிலையம்... ஹெல்சிங்கி ஹோட்டலுக்குப் போகும் தெருவில் யாரோ என்னை உற்றுப்பார்ப்பது போல ஓர் உணர்வு ... சுற்றி முற்றிலும் பார்த்தேன் தூரத்து கட்டிடத்தில் சன்னலின் வழியாக துப்பாக்கியில் குறி பார்த்துக் கொண்டிருந்தான்.  அதன் எதிர் கட்டிடத்தில் அவனை ஒருவன் குறி பார்த்துக் கொண்டிருந்தான். ஆக இரண்டு குழுக்கள் என்னைப் பின் தொடர்கின்றன.... ஒன்று என்னைப் பாதுகாக்க , இன்னொன்று என்னைத் தீர்த்துக் கட்ட ....  யார் முந்தப் போகின்றார்கள் எனத்  தெரியவில்லை ... சுடப்படலாம்... சுடப்பட்டும் தப்பிக்கலாம் ... சுடப்படாமலும் போகலாம்... 

உங்களின் அவசரம் புரிகின்றது. உங்களுக்கு அந்த தமிழ் நாட்டு அரசியல் தலைவருக்கு நான் பினாமியா இல்லையா என்பது தெரியவேண்டும் ஒருவேளை நான் காப்பற்றப்பட்டால் நாளை என் பேஸ்புக்கில்  கண்டிப்பாக சொல்கின்றேன்.  துப்பாக்கி வெடித்தது. 


Friday, June 21, 2013

திமுகவின் நாளைய மறுநாள்- யூகங்களும் எதிர்பார்ப்பும் - எழுதியவர் மண்டப எழுத்தாளர் "அ-ஆ

முன்னுரை 

பள்ளிக்கூடங்களில், பல சமயங்களில் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்களிடம் இருந்து காட்டடி வாங்குவார்கள். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் , செய்யும் சேட்டைகள் மற்றவர்கள் செய்வதைக் காட்டிலும் ஏகத்துக்கு ஆசிரியர்களுக்கு வெறுப்பைக் கொடுக்கும். இதற்கு காரணம் நன்றாகப் படிக்கும் மாணவர்களின் மேல் எப்பொழுதும் ஓர் எதிர்பார்ப்பும் பிம்பமும் இருந்து கொண்டே இருப்பதுதான் . அதே போல் தமிழ் நாட்டு அரசியல் சூழலில், திமுக வின் மேல் மட்டுமே அந்த எதிர்பார்ப்பு இருக்கும். கொஞ்சம் சொதப்பினாலே , ஆசிரியர்கள் ஆன மக்கள் தேர்தலில் சுளுக்கு எடுப்பார்கள். சமூக ஊடக காலங்களில் , இது அனுதினமும் நடக்க எளிதாகிறது. திமுக வை விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோர் ஒன்று முன்னாள் தீவிர திமுக அனுதாபிகள், அல்லது திமுக என்ற பேரியக்கம் என்ற ஒன்று மட்டுமே தமிழர் நலன்களை முன்னெடுக்க முடியும் என்ற சூழலில் , அதில் திமுக தடுமாறும் பொழுது எற்படும் சோர்வினாலும் ஆதங்கத்தினாலும் கடுப்படையும் சாமானியர்கள். 

திமுக தோற்றால் வடக்கில் இருந்து வரும் பத்திரிக்கைகள் கொண்டாடும் விதத்திலேயே திமுகவின் ஆளுமை எவ்வளவு முக்கியம் என உணர முடியும் . காலத்தின் தொலை தூரத்தில் திமுகவைப் பற்றிய ஒரு சாமானிய விமர்சனத்துடன் கூடிய ஏக்கப்பார்வை. தூற்றலும் போற்றலும் மண்டப எழுத்தாளருக்கே !! Over to Ghost Writer 
--
அதிமுக அரசமைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் ஊடகங்களாகட்டும், பொதுவெளிகளாகட்டும் தமிழகத்தைப் பொறுத்தமட்டிலும் அதிகம் விமர்சிக்கப்படுவதென்னவோ திமுக தான். அதிமுக அரசை விமர்சித்தால் அவதூறு வழக்கு பாயும் என்ற பயம் காரணம் என்று கருதினாலும் கூட அதற்கு மாற்றாகவா திமுகவை விமர்சிக்கிறார்கள்? கிடையாது. திமுக மீதான விமர்சனங்கள் கடந்த ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தின் பலனால் விளைபவை. 

நில அபகரிப்புகள், மின் தடை போன்ற பொதுமக்கள் பாதிக்கப்படும் விசயங்களாகட்டும் உணர்வளவில் கொதிப்பேற்படுத்தும் ஈழ விஷயமாகட்டும், மாநிலமெங்கும் பரவிய பலதரப்பட்ட அதிகார மையங்களின் ஊழல்களாகட்டும் கடந்த ஆட்சியின் தளும்புகள் இன்னும் மறையாமலிருப்பதையே மேற்சொன்ன விமர்சனங்கள் காட்டுகின்றன.

ஈழப் பிரச்சனை வாக்கரசியலில் பாதிப்பு ஏற்படுத்துமா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க விமர்சனத்தளத்தில் ஈழம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. காங்கிரஸுடன் மத்தியில் ஆட்சியிலிருந்த போது எழுந்த அலைக்கற்றை ஊழல்களும் அதனைத்தொடர்ந்து மாறன் சகோதரர்கள் முதல் தயாளு வரை நீண்ட விசாரணைகளும் திமுக மீதான வெறுப்பிற்குக் காரணம். மக்கள் நலன் பேணாத ஆட்சி என்பது மட்டுமே பிரச்சனை என்றிருந்தால் ஆட்சியை இழந்து இரு ஆண்டுகளுக்குப் பிறகும் புறக்கணிக்கப்பட வாய்ப்பில்லை. 

மூலவரும் துவாரபாலகர்களும் கோலோச்சுவது இயல்பு ஆனால் பிரகாரத்திலிருக்கும் எல்லா பூதகணங்களும் அதிகார மையங்களாய் மாறி பயமுறுத்தியதே கடந்த ஆட்சியின் மீதான பெருங்கோபத்தின் வித்து. இது கலைஞரின் 90வது அகவை. அந்திமக்காலம்., தனது ஆளுமை நீர்த்துப்போவதைக் கண்ணாரக் கண்டுகொண்டிருக்கிறார் கலைஞர். இப்போதும் கூட கலைஞரைக் கண்மூடித்தனமாய் ஆதரிப்பவர்களின் அடிமனதில் தங்கள் நம்பிக்கை சிதைந்து விடக்கூடாது; தாங்கள் இதுகாறும் ஏமாற்றப்படவில்லை என்று தங்களையே நம்பவைக்கும் உணர்வுதான் மேலோங்கியிருக்கிறது. 

சுதந்திரத்துக்குப் பின்னான தமிழக அரசியலில் தவிர்க்கவே இயலாத ஒரு சக்தியான கலைஞர் இன்று தன் மீதான விமர்சனங்களை அகற்ற பழம் பெருமைகளை மட்டுமே பேசவேண்டிய நிலையிலிருக்கிறார். 
ஈழப்போரின் இறுதியில் அவரது செயல்பாடுகள் அதிகாரம் ஆட்சியில் அவரது நேர்மை குறித்தெல்லாம் பெரிதாய் அலட்டிக்கொள்ளாத நபர்களையும் கூட உணர்வு ரீதியில் வெறுக்கச் செய்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். கட்சி அமைப்பு ரீதியில் பலமிழந்து நிற்கிறது. வாரிசுகளின் மோதல் உச்சத்திலிருந்தாலும் ஆட்சி இப்போது இல்லாததால் வெளிப்படையாக முட்டிக்கொள்ளாமல் பதட்டத்துடனே இணைந்திருக்கின்றனர். தனக்குப் பின் கட்சியை வழிநடத்தும் நபரை காலங்கடந்தும் கூட கை காட்ட இயலாத பயத்தில் தலைவர் இருக்கின்றார். ஒருவேளை அவர் தனது அரசியல் வாரிசை அறிவிக்காமலே மறைந்துவிட்டால் நிலமை இன்னும் மோசமாகக் கூடிய வாய்ப்புகளே அதிகமென்பதையும் அவர் உணர்ந்தேயிருக்கின்றார். 

இங்கு பேசப்படும் விசயங்கள் திமுக இல்லாவிடில் தமிழக மக்களை உய்விக்க வழியே இல்லை எனும் தொனியில் எழுதப்பட்டவையல்ல. மேலோட்டமாகப் பார்த்தால் திமுகவிற்கு சப்பைக் கட்டு கட்டுவதாகக் கூட தோன்றலாம் ஆனால் நல்ல கொள்ளியைத் தேடுவதே நாட்டின் ஜனநாயகம் எனும் நிலையில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக எந்தக் கட்சியையும் பிரதான இடத்தில் தமிழக வாக்காளர்கள் நிறுத்திப்பார்ப்பதில்லை. வாக்காளர்களைக் கவரக்கூடிய சினிமா நாயகனான விஜகாந்துக்கும் சரி, மாநிலமெங்கும் மக்கள் நலனுக்காய் போராட முன் நிற்கும் கொள்கைப்பிடிப்புள்ள மூத்த அரசியல் வாதியான வைகோவுக்கும் சரி 10%க்கும் குறைவாகவே எப்பேர்ப்பட்ட குழப்பமான சூழலிலும் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

நாட்டில் இவ்விரு கட்சிகளை விட ஒப்பீட்டளவில் சிறந்த இயக்கங்கள் இருக்கலாம், நேர்மையான தலைவர்கள் இருக்கலாம் ஆனால் நம் மக்களுக்கே ஒரு அளவைத்தாண்டிய நேர்மையாளர்கள் ஆட்சிபீடத்தில் அமர்வதில் விருப்பமில்லை என்று அவதானிக்கிறேன். 
வாய்ப்புக்கிடைக்கையிலெல்லாம் சிறு தவறுகள் புரிவேன், என்னளவில் ஊழல் செய்வேன், வரியை ஏய்ப்பேன் அதனை நீ கண்டு கொள்ளக்கூடாது போலவே உனது தவறுகளை நான் கணக்கில் கொள்ள மாட்டேன் எனும் ஒரு புரிதல் வாக்காளனுக்கும் அரசாள்பவனுக்கும் இடையே அருவமாக ஒப்பந்தமாகியிருக்கிறது.

திமுக தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும் கூட அதன் தலைவரின் ராஜரீக செயல்பாடுகள் கூட்டணியை சுமூகமாக இட்டுச் செல்லக்கூடியவை.திமுக ஆட்சியினை மக்கள் வெறுக்க மூன்றாண்டுகள் சுமாராக எடுத்துக்கொள்கிறது, ஆனால் அசூர தனிப்பெரும்பான்மையுடன் அமையும் அதிமுகவின் ஆட்சியை மக்கள் வெறுக்க சில மாதங்கள் போதுமானது என்பதுதான் திமுகவின் சாதகமான அம்சம். விதிவிலக்காக இம்முறை மட்டும் அதிமுகவை வெறுப்பதோடு மக்கள் திமுகவின் கடந்த ஆட்சியின் வடுக்களையும் மறவாதிருக்கின்றனர்.

இனிவரும் காலங்களில் அதாவது நாடாளுமன்றத்தேர்தலின் சமயத்தில் திமுகவின் மீது வாக்காளர்கள் பார்வை திரும்பும் நேரம்; அவர்களுக்கு திமுகவின் கடந்த ஆட்சியின் கசப்புகள் மறந்திருக்கக்கூடும். இல்லாவிடிலும் கூட அது பொழுதில் திமுகவை எதிர்ப்பதென்பது மறைமுகமாக மூன்றாண்டு ஆட்சியிலிருக்கும் அதிமுக அரசை ஆதரிப்பதாகிவிடும் என்பதாலேயே திமுக மீது மக்களின் பார்வை விழப்போவது உறுதி. திமுகவின் தலைவர் கலைஞர் தனக்குப் பின் கட்சியை நிர்வகிக்கப்போகும் நபரை முன்னிறுத்தவேண்டிய சரியான தருமாயிருக்கலாம். 

இன்றைய தேதியில் கட்சியின் பலமட்ட உறுப்பினர்கள், தொண்டர்கள், ஏன் பொதுமக்கள் மத்தியிலும் கூட திமுகவின் அடுத்த தலைமைக்கான விருப்பத்தேர்வாக இருப்பவர் மு.க ஸ்டாலின். எதிர்ப்புகள் இல்லாமலில்லை. ஆனால் அவை சமாளிக்கக் கூடியவையே. அதுவும் ஆட்சியிலில்லாத சமயத்தில் உட்கட்சிப் பூசல் பெரிய அளவில் வளர வாய்ப்பில்லை. எனவே முக ஸ்டாலின் தலைமையேற்கும் பட்சத்தில் திமுக அமைப்பு ரீதியில், மக்கள் மனநிலையின் அடிப்படையில் அடையக்கூடிய லாபங்கள் அதிகம்.

ஸ்டாலினின் தலைமைக்கீழ் செயல்படுவதை விரும்பாமல் அல்லது அவரை மீறி முடிவெடுக்கவும் வெளிப்படையாக கருத்துச் சொல்லவும் கூடிய தலைவருக்கு நெருக்கமான மூத்த கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் சொற்பமே. ஸ்டாலின் தலைமையை எதிர்க்கும் கோஷ்டிகள் உள்ளிருந்து எதிர்க்கவியலாது. அவர்கள் வெளியேறுவதென்பது கட்சிக்கு பெரிய இழப்பாகவுமிராது. மக்கள் மன்றத்தில் பழைய கசப்புகளுக்கு காரணம் காட்டக்கூட இவை உதவலாம்.

கொள்கை ரீதியிலும், இன்றைய தமிழகத்தின் தேவையான மாநில நலன்கள் என்ற கோணத்திலும் போராடும் இயக்கங்கள் மத்தியில் வலுவான எதிரிகளற்ற திமுகவுக்கு புதிய தலைமை என்பது முந்தைய தவறுகள் குறித்த விமர்சனங்களை துடைத்தெறிய நல்லதொரு வாய்ப்பாக இருக்கும். புதிய தலைமையானது திராவிட இயக்கங்கள் மீதான களங்கங்களை அகற்றும் வண்ணம் செயல்படுவதொன்றே திராவிட முன்னேற்றக்கழகம் எனும் பேரியக்கம் மீள ஒரே வழி
--

Tuesday, June 18, 2013

பேஸ்புக் - கருத்து வணிகர்கள் - கருத்துச் சண்டைக்காரர்கள் - கருத்துப் பூசாரிகள் - கருத்துத் தொண்டர்கள்


தமிழில் , சமூக ஊடகங்களில் குறிப்பாக பேஸ்புக்கில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்பவர்களில் இருக்கும் முக்கியமான நான்கு பிரிவினர் 

1. கருத்து வணிகர்கள்


 தமிழ் வலைப்பதிவுகளில் தீவிரமாக இயங்கிய / இயங்கிக் கொண்டு இருக்கும் நபர்கள் இன்னொரு புரமொஷனால் தளமாகக் கருதி இங்குப பதிவுகளுக்குச் சுட்டிக் கொடுத்து, பின்னர் நேரடியாகவே இங்குப் பதிய ஆரம்பித்தவர்கள் , இவர்களின் தகவல் பரிமாற்றம் , தரமானதாகவும் , தரவுகளுடனும் இருக்கும். ப
ெரும்பாலும் இவர்களை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். இவர்களும் ஹிட்ஸ் கவுண்டரில் பேஸ் புக்கினால் எக்ஸ்ட்ரா 25 ஹிட்ஸ் தேறுச்சு என போய்க் கொண்டே இருப்பார்கள்.

2. 
கருத்துச் சண்டைக்காரர்கள் 


ஆர்குட் பிரபலமாக இருந்தக் காலக் கட்டத்தில், ஆர்குட் குழுமங்களில் மட்டும் தீவிரமாக அரசியலோ சாதிப் பிரதாபங்களையோ கடலையையோ பேசியவர்கள் , 
தமிழ்த் தேசியம் , திராவிடம், 
அதித் தீவிர கம்யூனிசம், அதித் தீவிர வலது சாரித் தத்துவங்கள்  பேசுபவர்களுடன், ஆண்ட பரம்பரை வீரப்பரம்பரை மூன்றாம் புலிகேசி எனப் பின்னொட்டு போட்டுக் கொள்பவர்கள் , கலைஞரையோ, ஜெ வையோ கேப்டனையோ கிண்டலடித்து சில கெக்கே பெக்க சிரிப்புத் தகவல் பரிமாறுபவர்கள் ஆகியோர் பெரும்பாலும் ஆர்குட்டில் இருந்து வந்தவர்கள். இந்த 
நபர்களின்  இழைகளில் ஒன்று வன்முறை அல்லது விசில் சத்தம் மட்டுமே இருக்கும் 


3. 
கருத்துப் பூசாரிகள்லாரியில் ஏற்றினா
ல்  நாலு பேர் குறைவார்கள் என்ற வகையில் வாசகர் வட்டத்தைக் கொண்டிருந்த இலக்கிய ஆளுமைகள். 

எங்குமே கிடைத்திராத அதிரடி உடனடி கைத்தட்டல்களையும் விசில்களையும் இனிக்க இனிக்க வாங்கிக் கொண்டாலும்  , மொன்னைஸ் வென்னைஸ் என , இது சாமானியர்களுக்கான ஊடகம் என்பதை மறந்து , இன்ன பிற இலக்கியம் அறியாத , சமூக ஊடக பயன்பாட்டாளர்களை ஏசுபவர்கள்.  இந்தப் பூசாரிகள் தாங்கள், பூசாரி என்பதை மறந்து, வகை இரண்டு ஆக மாறி , கெக்கே பிக்கேத்தனமாக சண்டை எல்லாம் போடுவார்கள்.4.

கருத்துத் தொண்டர்கள்

4. a. 

ஸ்மார்ட் போன் யுவன்   யுவதிகள் மனதில் தோன்றியதை அடித்து , கொஞ்சம் கொஞ்சமாக நூல் பிடித்து, பிரபலங்களை பின் தொடர்ந்து , பிரபலங்கள் பதில் சொல்லும் குட்டிப் பிரபலங்களைப் பின் தொடர்ந்து கருத்துகளை மட்டும் வாசிப்பவர்கள். அவர்கள் தீர்க்கமாக நம்பும் விசயங்கள் பகடி செய்யப்பட்டால் , நேரம் இருந்தால் கொஞ்சமாகப் பொங்கி விட்டு மீண்டும் வாசிக்க ஆரம்பித்து விடுவார்கள் அல்லது பிரபலங்களின் தகவல்களை 
அல்லது "என்ன கையைப் பிடிச்சி இழுத்திய" , "ஆத்தா நான் பாசாயிட்டன் வகையிற பக்கங்களில் இருந்து 108 வது தடவையாக ரிசேர் செய்து கொண்டு இருப்பார்கள் 
4.b. 
சிறு நகரங்களில் கவனித்து இருக்கலாம் , காலங்காத்தாலேயே  லைப்ரரி வந்து, தினத்தந்தி, தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் எல்லாம் படிச்சிட்டு, சண் , ஜெயா , தூர்தர்ஷன் , இங்கிலிஷ் நியுஸ் எல்லாம் பார்த்துட்டு  , டீக்கடையில் ஒண்ணுமே தெரியாத மாதிரி , அரசியல் பேசுபவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்  அவர்களைப் போல இவர்களும் எல்லாம் கவனித்துக் கொண்டு , ஆனால் யாருக்கும் சங்கடம் வராமல் அமைதியாக இருப்பார்கள் 

4.c 
இவர்கள் கருத்துப் பூசாரிகளை விட , கொஞ்சம் டெஞ்சரஸ் பெல்லோஸ். எங்கடா சண்டை நடக்கும் என வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். சண்டை ஆரம்பிச்ச உடனே , சோத்து மூட்டையைக் கட்டிக் கொண்டுப் போய் எந்த இழையில் சண்டை நடக்குதோ அங்கனப் போய் , எங்க லைக் கம்மியா விழுகுதோ அங்கோ போட்டு, வெயிட் ஏத்தி, வெறி ஏத்தி குஜால் ஆ இருப்பாங்க ... இந்தக் க்ரூப் , தங்களுக்குள்ள அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு , ஒரு நெட்வொர்க் வச்சிருக்கும். சண்டை கள விபரங்களை பகிர்ந்து கொண்டே இருப்பார்கள். காலங் காலமாய் சண்டைகளை வேடிக்கைப் பார்த்தே பழகியவர்கள் என்பதால், யார் பேக்கரியை யார் வைத்து இருக்கிறார்கள். எப்படி ஒருத்தருக்கு கொண்டை ஸ்டைல் மாறுகிறது , பூனைக் குட்டி எப்படி வெளியே  வரும் என இவர்களுக்குத் தெரியும்  

ஆனால் ஒன்று மட்டும் உண்மை , இங்கு யாரும் தீண்டத் தகாதவர்கள் கிடையாது. பல நேரங்களில் பூசாரிகள் தாம் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்
--
தற்பெருமை

நான் இன்னமும் யாரையும் இளக்காரமாக பேச ஆரம்பிக்கவும் இல்லை , இலக்கியமும் 

படைக்க வில்லை ஆக இலக்கிய ஆளுமைக்குள் வர முடியாது. இன்றையப் பொழுதுகளை 

விட ஆர்குட் காலங்களில் அதீத பயந்த சுபாவத்துடன் இருப்பேன் , ஆக அந்தக் குழுமங்கள் 

பக்கமே போக மாட்டேன். வலைப்பதிவர் எனச் சொல்லிக் கொண்டாலும், நூறு ஹிட்ஸ் 

அடிப்பதற்குள் , புரமொஷனால் ஆக்டிவிடிஸ் நாலு டீ குடிக்க வைத்துவிடும். ஆக நானும்  4 

ஆவது வகையைச் சேர்ந்தவன் தான்... சம் டைம்ஸ் 4.a   எல்லாத்தையும் படிச்சுட்டு, 

கொஞ்சமாப் பொங்கிவிட்டு வருவேன். நேத்து கூட ஒரு லிபரல் கிட்ட பொங்கி அவரு 

என்னோட கமெண்ட்டை டெலிட் பண்ணிட்டனால ரொம்ப சோகமா வேற இருந்தேன்.  நிறைய 

நேரங்களில் 4.c  :) :)
---
வகைகளுக்குப் பெயர் சூட்டியவர் - Dr. மணி மு. மணிவண்ணன்  http://kural.blogspot.it/

Thursday, June 13, 2013

இது ஒரு ஸ்பாம் கதை - சிறுகதை

”கார்த்தி, சின்னப் பிரச்சினை” என அதிகாலையிலேயே  என் நண்பர் அப்பாவி கணேசன் எழுப்பினார்.

அப்பாவி கணேசன் பிரச்சினை என்றாலே அது ஒரு சின்னப் பிரச்சினையாகத்தான் இருக்கும். சின்னப் பிரச்சினை என்றால் கண்டிப்பாக ஒரு மொன்னையான பிரச்சினையாகத்தான் இருக்கும் என எரிச்சலுடன் எழுந்தேன்.

“பேஸ்புக்ல, 16 வயசுப் பெண் தற்கொலைப் பண்ணிக்கிற வீடியோன்னு ஒன்னு வந்துச்சு”

“யோவ், அதை எல்லாம் ஏன் பார்க்கிறீர்... அது ஸ்பாம்... நீங்க கிளிக் செஞ்சீங்கன்னா, உங்க பிரண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்கிறவங்களுக்கு எல்லாம் அது போகும்”

“ அது தெரியும் கார்த்தி, இது ஸ்பாம் மாதிரி இல்லை, வீடியோவே இருந்துச்சு, அந்தப் பொண்ணு நிஜமாவே தற்கொலைப் பண்ணிக்குது”

“அப்போ , ஏதாவது சினிமா டிரெயிலர் ஆ இருக்கும்,படுத்துத் தூங்குங்க கணேசன்”

”கார்த்தி, கொஞ்சம் சீரியஸா கேளு ... அந்தப் பொண்ணு தற்கொலை பண்ணிக்கிற ரூம்ல என் போட்டோ மாட்டி இருக்கு, திரும்பத் திரும்ப வீடியோவைப் பார்த்துட்டேன், அதுல என் போட்டோ இருக்குது, ரொம்பப் பயமா இருக்கு”

“கணேசன்,  அந்த வீடியோ லிங்கை எனக்கு அனுப்புங்க, மதியானம் பார்க்குறேன்”

அதன் பின்னர்  எனக்குத் தூக்கம் வரவில்லை.  எனக்கும் அடிக்கடி இந்த மாதிரி ஸ்பாம் வீடியோக்கள் ,  பாருங்கள் பாருங்கள் டீன் ஏஜ் பெண், திறந்து காட்டுகின்றாள் என அடிக்கடி பேஸ்புக் டைம்லைனில் மேல் எழும்பும்.  யாஹூ காலத்தில் இருந்து பார்க்க வேண்டியதை எல்லாம் மெய்யாகவும் மெய்நிகராகவும் எதார்த்தமாகவும் பதார்த்தமாகவும் பார்த்துவிட்டதால், வெற்று ஆர்வம் கூட வந்தது இல்லை. கடைசியாக வீடியோ சாட்டில், நான் பார்த்தது காத்தரீனாவைத்தான், மால்மோவில் இருந்தபொழுது நிஜத்தில் அறிமுகமானவள், பின்னர் நான் ஸ்டாக்ஹோல்ம் வந்தபின் அடிக்கடி வீடியோ காதல் எங்களுக்குள் நடக்கும். கல்யாணம் செய்து கொள்ள வேண்டினாள், காதலுக்கும் காமத்திற்கும் இடையில் கல்யாணம் அவசியமில்லை என்ற மறுநாளில் இருந்து அவளைக் காணவில்லை.

“கார்த்தி, கார்த்தி” எனத் திரும்ப என்னை உலுக்கினார்.

“யோவ் , என்னய்யா.. இப்போ”

“கார்த்தி, யார் பார்க்கிறாங்களோ , அவங்களுக்கு எல்லாம் அந்தப் பொண்ணோட ரூம்ல, அவங்க அவங்க போட்டோ வருது”

“கணேசன், இது சிம்பிள் ட்ரிக் ஆ இருக்கும்,  பேஸ்புக் போட்டோஸ்ல எதுனாச்சும் ஒன்னை  ஆட்டோமெடிக் ஆ எடுத்துட்டு, அந்த வீடியோல சேர்க்கிற மாதிரி அப்ளிகேஷன் எழுதி இருப்பானுங்க... நோ வொர்ரீஸ்”

“அட , ஆமாம் கார்த்தி, எல்லோருக்கும் அவங்க புரபைல் போட்டோஸ் தான் வருது... கார்த்தினா கார்த்திதான்... பிரில்லியண்ட் பாய்”

நல்லத்தூக்கம் தூங்கி எழுந்து, சாயங்காலம், கணேசன் எனக்கு அனுப்பி இருந்த அந்த வீடியோவை ஓடவிட்டேன். ஒரு பெண்ணின் கைகள் தெரிந்தது. மணிக்கட்டை அறுத்துக் கொள்கின்றாள். ரத்தம் சொட்டு சொட்டாக பொங்கி வழிகின்றது. மறுகையால், வெப்காம் பொசிஷன் சரி செய்யப்படுகின்றது. சுவற்றில், எனது படம் இருக்கின்றது... இருங்கள் இருங்கள்... அது என் பேஸ்புக் புரபைல் போட்டோ இல்லை. அது மால்மோவில் எடுத்தது. அந்தப் படத்தை எடுத்தவள் காத்தரீனா.  அந்தப் படத்தை இதுவரை எங்குமே இணையத்தில் ஏற்றியதில்லையே....

வெப்காம் மீண்டும் சரி செய்யப்படுகின்றது .. அந்தப் பெண்,,,, அது காத்தரீனா....

-----

Monday, June 03, 2013

கலைஞருக்கு ஒரு கடிதமும் , அவரின் படம் போட்ட ஆஸ்திரிய நாட்டு தபால் தலையும்

அன்புடன் கலைஞர் அவர்களுக்கு,
அடுத்தப் பதினைந்து வருடங்களில் , நான் மிகப்பெரும் அரசியல் ஆளுமையாகி, தமிழகக் குடியரசின் தலைவரான உங்களைக் கடுமையாக விமர்சனம் செய்யும் காலத்திலும், தாங்கள் அடியேனுக்கும் நேரம் ஒதுக்கி, நெஞ்சில் குத்தும் பாலகன் எனக் கட்டுரை வரைய என் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தங்களது பிறந்தநாளை ஒட்டி பண்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன். 
இப்படிக்கு 
வினையூக்கி செல்வா

--
மேற்கண்ட கடிதத்திற்கான தபால் தலை கீழே 


Austrian Postage Stamps of Kalaingar M. Karunanidhi / கலைஞரின் பிறந்த நாளன்று , "என்னுடைய முன்னெடுப்பில்" ஆஸ்திரிய நாட்டு தபால் தலைகள் ( 90 Euro cents )... ஆஸ்திரிய உள்நாட்டு வெளிநாட்டு அஞ்சல்களில் இதை அதிகாரப் பூர்வமாக பயன் படுத்தலாம். நல்லவற்றை சீர் தூக்கி , அல்லவற்றை விலக்கி , தமிழும் மனிதாபிமானமும் கலந்த பெரும்பான்மையான திமுக பற்றாளர்களுக்கும் கலைஞர் மு. கருணாநிதிக்கும் இந்த தபால் தலைகள் சமர்ப்பணம்.