Saturday, May 25, 2013

இறந்த பின் - சிறுகதை

”கார்த்தி, அந்த அரதப் பழசான சைக்கிளை புது வீட்டிலேயும் கொண்டு வந்து வைக்கனும்னு அடம் பிடிக்கிறாருடா உன் அப்பா”

அம்மா குறிப்பிடும் மிதிவண்டி என் அப்பா வழி தாத்தாவின் உடையது. அந்த தாத்தா இறந்து இருபது வருடங்கள் ஆனாலும், அப்பா அந்த சைக்கிளை கண்ணும் கருத்துமாய் பராமரித்து வருகின்றார். ஒன்றிற்கு இரண்டு கார்கள், மூன்று மோட்டார் பைக்குகள் என வீட்டில் இருந்தாலும் அந்த சைக்கிளும் அவற்றிற்கு இணையாக வாசலில் நிற்கும்.

“பழைய பேரீச்சம்பழம், ஈயம் பித்தாள” என தெருவில் குரல் கேட்கும்பொழுதெல்லாம் அப்பாவைத் தவிர அனைவரும் நமட்டுச் சிரிப்பு சிரிப்போம்.

அந்த அசட்டையான நமுட்டு சிரிப்புகளை ஐந்தாறு வருடங்கள் கழித்து இன்னும் எட்டு மணி நேரத்தில் மீண்டும் அனுபவிக்கப் போகின்றேன். பிராங்பர்டில் விமானம் ஏறியாகிவிட்டது.  அருகில் ஓர் அமெரிக்கன். கையில் ஒருப் புத்தகம். வளைந்து நெளிந்து புத்தகத்தின் பெயரை ஒரு வழியாகப் பார்த்துவிட்டேன்.  "Energy of life" என எழுதி இருந்தது. எழுதியவர் பெயர் தெரியவில்லை. நாசாவின் இலச்சினை ஓர் ஓரத்தில் இருந்தது.

விமானம் வானில் நிலைபெற்ற பின்னர், அரைவாசிப் புன்னகையைக் கொடுத்ததற்கு முழுப்புன்னகையையும் கொடுத்தார்.

தன்னை “தனடோஸ்” என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

”நாசா,  வாழ்வியல் மேலாண்மையைப் பற்றி எல்லாம் புத்தகம் எழுதி இருக்கின்றதா?” எனக் கேட்டேன்.

மென்மையாய் சிரித்துவிட்டு, சன்னமான குரலில், “அதிரகசியமான ஆய்வைப் பற்றியப் புத்தகம் இது, இந்த விமானம் சென்னை போய் சேர்ந்துவிட்டால், அந்த ஆராய்ச்சியின் கடைசிப் பரிசோதனையும் வெற்றி “ என்றார்.

”அப்படி என்ன வகையான ஆராய்ச்சி” என்றேன்.

”நாம் அனைவரும் இறந்த பின், அந்த ஆற்றல் எங்கேப் போகின்றது ?”  என்ற அவரின் கேள்வி  வடிவேலுவின் ”மூனைத் தொட்டது யாரு” நகைச்சுவை நினைவுக்கு வந்தது. இன்னும் எட்டு மணி நேரம் பொழுது போகவேண்டுமே, பேச்சுக் கொடுத்தேன்.

“நம்பிக்கையாளராக இருந்தால், சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ போகும்,  பகுத்தறிவாளராக இருந்தால், இயற்கையோடு கலந்துவிடும்”

”நான் ஒரு விஞ்ஞானி, ஆக இயற்கையோடு கலந்துவிடுகிறது என எடுத்துக் கொள்வோம். அப்படி இருக்கையில் அந்த ஆற்றலை வழிமறித்து நமக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்ள முடியும் தானே”

”புரியவில்லையே”  சிரிக்காமல் சுவாரசியமாகக் கேட்டேன்.

“ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால் ஒரு வகையான ஆற்றலை மற்றொரு வகையான ஆற்றலாக மாற்ற முடியும் இது அடிப்படை விதி, ஆக, இறந்த ஆன்மாவை பிடித்து ஏன் வேறுவகை ஆற்றலாக மாற்றி பயன் படுத்திக் கொள்ளக்கூடாது என்பதான ஆராய்ச்சி அது”

உண்மையோ பொய்யோ , இந்த வகையான விசயங்களை எனக்கு கேட்கப் பிடிக்கும்.

“வல்லரசுகள் ஏன் போர்களில் ஈடுபடுகின்றன?”

”கனிம, எண்ணெய் வளத்திற்காக?”

”ஆம், அவற்றுடன், போரினால் அழியும் ஏகப்பட்ட உயிராற்றல்களுக்காகவும்”


புதுவகையான கான்ஸ்பிரைஸி தியரியாக இருந்தது.


“இப்பொழுதெல்லாம், போர்களில் வல்லரசுகள், புதுவகையான குண்டுகளைப் பயன்படுத்துகின்றன, அந்தக் குண்டு உடலில் பாயும்பொழுது, குண்டில் உயிராற்றல் சேகரிக்கப்பட்டுவிடும்”

நான் பதில் பேசவில்லை.

”பின்னர் அந்த ஆற்றலை, எரி சக்தியாகவோ, மின்னாற்றலாகவோ மாற்றிவிடுவோம்”

“எவ்வளவு நாட்களுக்கு ஓர் உயிராற்றல் வரும்”

“நல்ல கேள்வி, ஓர் இயந்திரத்திற்கு உயிராற்றலை ஆற்றல் மூலமாக கொடுத்துவிட்டால், முடிவிலா காலம் வரை அந்த இயந்திரம் தொடர்ந்து இயங்க, அந்த ஆற்றல் போதுமானது.  இந்த விமானம் கூட சோதனை ஓட்டமாக ஓர் ஆன்மாவின் ஆற்றலால் தான் முதன் முறையாக இயக்கப்படுகின்றது”

மல்டிலெவல் மார்க்கெட்டிங் அல்லேலூயா ஹரே கிருஷ்ணா அளவிற்கு பில்ட் அப் கொடுக்கின்றாரே என நினைத்துக் கொண்டேன்.

“யாரிடமும் சொல்லக் கூடாத ஒரு வல்லரசு ரகசியத்தை உன்னிடம் சொல்கின்றேன் , கவனமாகக் கேட்டுக்கொள்,  அடுத்தப் பத்து வருடங்களில், உலகத்தின் மக்கள் தொகையில் பாதி திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிடும், மக்களின் உயிர்கள் எல்லாம் எந்திரங்களுக்கு உயிராற்றல் மூலங்களாக மாற்றப்பட்டுவிடும்”

“ஏன் விலங்குகளின் உயிராற்றலை எடுத்துக் கொள்ளக்கூடாதா, எதற்கு சாமானிய மனிதர்களைக் கொல்ல வேண்டும்” எனக்குள் இருந்த மனிதாபிமானி விழித்துக் கொண்டான்.

“நல்ல கேள்வி, இயற்கைக்கு ஒவ்வாத ஓர் உயிரினம் எதுவென்றால், மனித இனம் மட்டுமே, மனித இனம் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும், இயற்கையின் சமனிலை பாதிக்கப்படாது...அதனால் தான் மனித உயிர்களை நாங்கள் எடுக்க முடிவு செய்தோம்”

அதன் பின்னர் நான் ஒன்றும் பேசவில்லை. சாப்பாடு வந்தது, சாப்பிட்டேன். அதன் பின்னர் அவரை நான் ஒன்றும் தொந்தரவு செய்யவில்லை. கதைக் கேட்க சுவாரசியமாகவும் திகிலாகவும் இருந்தாலும் அது எல்லாம் சாத்தியப்படுமா எனக்கு நான் கேட்டுக்கொண்ட கேள்விக்கு , சாத்தியமில்லை என மனசாட்சி சொன்னது.கட்டுக்கதைகளைப் பரப்பிவிடும் கோஷ்டியைச் சேர்ந்தவராக இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.
அவ்வப்பொழுது ஓரக்கண்ணால் பார்த்தபடி இருந்தார். சென்னை விமான நிலையத்தில் விமான தரை இறங்கியது.  விமானத்தை விட்டு வெளியேப்போகையில் தனடோஸ், விமானிகளிடம் இறுக்கமாக கைகளைக் குலுக்கி வெளியேறினார்.

--
எனது வீட்டின் புதுமனைப் புகுவிழா விற்கு வந்து இருந்த அனைவரும் கேட்டது, திருஷ்டிக்காக அந்த பழையை சைக்கிளை வைத்து இருக்கிறீர்களா என்பதுதான்.  அன்று மாலை அப்பாவிடம் அந்த சைக்கிளை யாரிடமாவது கொடுத்துவிடலாம எனக்கேட்டேன்.

“குன்றத்தூர் போகலாமா, வடபழனி போகலாமா” எனக்கேட்டார்.

“வடபழனி” என கார் சாவியை எடுத்தேன்.

“இல்லை சைக்கிளில் போகலாம் வா” எனக்கூப்பிட்டார்.

அந்த சைக்கிளில் தாத்தா இறப்பதற்கு அவருடன் கொரடாச்சேரி கிராமத் தெருக்களில் சுற்று போக சிறுவனாக இருக்கும்பொழுது ஏறியது. அதன் பின்னர் இன்றுதான் ஏறுகின்றேன்.

ஆற்காடு சாலை போக்குவரத்து நெரிசலில், என்னை பின்புறம் வைத்து சைக்கிளை எந்த சிரமமும் இன்றி அப்பா ஓட்டிக்கொண்டு வந்தார். சைக்கிளில் ஒரு மிதிக்கு கிட்டத்தட்ட நூறு மீட்டர்கள் தூரம் சர்வசாதாரணமாக ஓடியது.

“கார்த்தி, இந்த சைக்கிள் எனக்கு ஏன் முக்கியம் தெரியுமா, இந்த சைக்கிளுக்குள்ள என் அப்பாவோட உயிர் இருக்குன்னு நினைக்கிறேன், இப்போகூட நான் பெடல் பண்ணல, அவரே ஓட்டுறாருதான்னு எனக்கு ஒரு நம்பிக்கை, அவரோட ஆன்மா, இந்த சைக்கிளுக்குள்ள இருக்கு ... அந்த நம்பிக்கைக்காத்தான் இந்த சைக்கிள் வச்சிருக்கேன், உன் அம்மாவுக்குப் புரியாது, நீயாவது புரிஞ்சுக்கோ”

அப்பா சொன்ன  தாத்தா செண்டிமெண்ட் கதைக்குப் பின்னர் , அதில் இருந்த உணர்வுப் பூர்வ இழையையும் தாண்டி,  தனடோஸ் சொன்னது உண்மையாக இருக்குமோ என நம்பத் தொடங்கினேன்.

-----

Tuesday, May 14, 2013

சூது கவ்வும் திரைப்படக் குறிப்புகள் - மண்டப எழுத்தாளர் “சுளாப்புளாக்கி”

1. ஒரு பெண் நினைத்தால் தோசையை எப்படி வேண்டுமானாலும் திருப்பிப் போட்டுவிடுவாள் என இரண்டே காட்சிகளில் காட்சிப்படுத்தியமை அட்டகாசம் 

2. கவர்ச்சியை நுட்பமாகவும் புகுத்தலாம் என்பதை, கனவுக்கன்னி ஷாலுவிற்கு அரைடவுசர் போலிஸ் உடையை அணிவித்து , காலுக்கோ தொடைக்கோ ஃபோகஸ் எதுவும் வைக்காமல் போகிறப்போக்கில் காட்டியது அருமை.

3. ”நிரபராதிதானே யாரு கேட்கப் போறா” ஆதங்கம், இயலாமை, அடக்குமுறையின் உண்மை நிலை என அனைத்தையும் ஒரு வரியில் வெளிப்படுத்திய வசனம் ஒன் லைனர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு ரெஃபரன்ஸ்.

3.a kednapping எனத் தவறாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பது கிண்டலடிக்கப் பட்டிருப்பதைப் போல சப்பிடப்போறோம் எனத் தவறாக தமிழில் எழுதப்பட்டிருப்பதும் கிண்டலடிக்கப் பட்டிருக்கும். Well balanced.

3.b இழப்பதற்கு ஒன்றுமில்லை என வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலான விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கும்பொழுது, உச்சக்கட்டத்துயரம் , வெடிச்சிரிப்பாக வெளிப்படும் என்பதன் திரைவடிவம் தான் - இருட்டறையில் முரட்டுக்குத்து காட்சி

4. படத்தில் ஒரே நேர்மையான நபர் அமைச்சராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் , அவரும் கடைசியில் கோமாளியாக ஆக்கப்பட்டுவிடுவது நேர்மையாக இருப்பவர்கள் அந்த நிலைக்குத் தான் தள்ளப்படுவார்கள் என எதிர்மறையாக காட்டி இருந்தாலும், நடப்பில் அதுவே நிதர்சனம். புத்திசாலித்தனம் இல்லாத நேர்மை குப்பைத் தொட்டியில் தான்.

5. பீட்ஸா படத்திற்கும் சூது கவ்வும் படத்திற்கும் கதை ஓட்ட அடிப்படையில் ஓர் ஒற்றுமை உண்டு. கற்பனையாக சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி படத்தின் இறுதிக்காட்சியில் நிஜமாகவே சந்திப்பார்.

6. வங்கி மேலாளரிடம் கடத்தலுக்கானப் பணத்தைப் பெற்றுக்கொண்டு விஜய்சேதுபதி நடந்து வரும் ஸ்டைல் , பின்னணி இசை, ரசிகர்களின் ஆராவாரம் , திரையரங்கில் ரீவைண்ட் பட்டன் இருந்திருந்தால் அதை திரும்ப ஒரு தடவை பார்த்து இருப்பேன்.

7. ”அருமைப்பிரகாசம்” நலன் இயக்கிய நடந்தது என்ன குறும்படத்தில் கருணாகரனுக்கு வைத்த பெயரை மீண்டும் அவருக்கே வைத்து பயன்படுத்திக் கொண்டது a kind of tribute to his own short film.

8. பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் கெட்டவர்கள் போல இருந்தாலும், அவரவருக்கு ஒரு நேர்மையை விசுவாசத்தை வைத்திருக்கின்றார்கள். சொல்லப்போனால் ஆட்கடத்தும் விஜய்சேதுபதியின் நேர்மைதான் கடைசியில் அனைவரையும் காக்கின்றது என்ற நீதியைக் கூட எடுத்துக் கொள்ளலாம்.

9. தமிழ்த் திரையுலகம் எப்பொழுதெல்லாம் சுணக்கம் ஆகின்றதோ அப்பொழுதெல்லாம் , ஒரு பாரதிராஜா குழுமமோ டிஎஃப்டி மாணவர்கள் குழுமமோ , பாலுமகேந்திரா - பாலா குழுமமோ வந்து மீட்டு எடுக்கும் ... இந்த முறை நாளைய இயக்குனர்களின் குழுமமாக வந்திருக்கின்றது. காதலில் முதல் சந்திப்பைக் காட்டிலும் இரண்டாவது சந்திப்பும் மிக முக்கியம். அதுபோல நலனின் அடுத்தப்படத்திற்கான ஆவலை , கண்டிப்பாக இந்த சூது அதிகமாகவே கவ்வும் என எதிர்பார்க்கலாம். 

Friday, May 10, 2013

போர்னோகிராபி பாலியல் சிக்கல்களின் வடிகால் - தடை கோரும் வாதங்கள் ஒரு பார்வை - கட்டுரை

டிவிட்டர், பேஸ்புக், வலையுலகப் பிரபலமும் எனது ஆஸ்தான மண்டப எழுத்தாளரும் ஆன கடலை புகழ் "ராசுக்குட்டி" எழுதிய போர்னோ கிராபி (பாலுணர்வுக் கிளர்ச்சியம் ) பாலியல் சிக்கல்களின் வடிகால் - தடை கோரும் வாதங்கள் ஒரு பார்வை - கட்டுரை 
----
Pornography - படங்களை இணையத்தில் பார்ப்பதை தடை செய்யக்கோரி கமலேஷ் வாஸ்வானி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மீறுவோரை பிணையில் வெளிவராத பிரிவுகளில் கைது செய்யவேண்டும் என்றும் கோரியுள்ளார். ஏற்கனவே போர்னோ கிராபி படங்களை தயாரிப்பதும் விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றம் தான். எனினும் சமீபகாலங்களில் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்படத் துவங்கியிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்களால் போர்னோகிராபி பகுப்பிற்குட்பட்ட எதையும் பார்க்கவே தடை என்ற விசயம் மிக முக்கியமான பேசுபொருளாகியிருக்கிறது.

பாலுணர்வுக் கிளர்ச்சியம் என்பதன் தொடக்கம் என்று தேடப்புகுகையில், 28000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாலியல் உறவை சித்தரிக்கும் ஓவியம் ஆஸ்திரேலியாவின் அர்ன்ஹாம் எனும் குகையில் கண்டறியபட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட பாலியல் கிளர்ச்சியங்களில் இது மிகப்பழமையானதாக அறியப்படுகிறது. காலக்கோட்டை துல்லியமாய்க் கண்டறிய இயலாத 40000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்களும் உலகில் உள்ளன. இந்தியாவை பொறுத்தமட்டில் கிபி 9 மற்றும் 10ம் நூற்றாண்டில் சண்டேளா அரசுக்காலத்தில் அமைக்கப்பட்ட இன்றைய மத்தியப்பிரதேசத்திலுள்ள கஜூராஹோ சிற்பங்கள் மிக முக்கிய மற்றும் பழமையான இந்திய பாலுணர்வுக் கிளர்ச்சியங்கள் எனலாம்.

தமிழகக் கோவில்களின் சுற்றுப்பிரகாரங்களிலும் உடலுறவை விளக்கும் சிற்பங்களைக் காணவியலும். ஆக பாலுணர்வு கிளர்ச்சியம் என்பது அன்றன்றைய நாகரீகங்களுக்கும் சமூக அமைப்பிற்கும் ஏற்ப பாலியல் புரிதலுக்காகவும், பாலியல் வடிகாலுக்காகவும் பரவலாக பயன்பட்டிருக்கின்றன என்பது மறுக்கவியலாதது.

டெல்லியில் மாணவி வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதற்கு சற்று முன்னர் குற்றவாளிகள் போர்னோ படங்களைப் பார்த்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்தது இந்த வாதத்துக்கு வலு சேர்ப்பதாக போர்னோவைத் தடை செய்யக் கோருவோர் கூறுகின்றனர்.

இணையத்தின் பயன்பாடு உச்சத்திலிருக்கும் இந்தக் காலகட்டத்தில் போர்னோவை தடை செய்வது இந்தியாவில் எந்தளவுக்குச் சாத்தியம் என்பது ஒரு புறமிருக்க, பாலியல் வன்புணர்வுகளைத் தடுக்கும் முகமாகத்தான் இந்நடவடிக்கையில் அரசு இறங்குமாயின் அதிலுள்ள முரண்களைக் கருதவேண்டியது அவசியமாகிறது.

போர்னோ பார்ப்பது என்பது அதனை அடுத்த கட்டமான பாலியல் வன்புணர்வுக்கு இட்டுச் செல்கிறது என்பதை வாதத்திற்காக எடுத்துக்கொண்டாலும், போர்னோ பார்ப்பவர்களில் எத்தனை சதவீதத்தினர் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று பார்க்க வேண்டாமா? போர்னோகிராபியின் விபரீத வளர்ச்சிக்குக் காரணமான தொழில் நுட்பமும் பதின்ம வயதினருக்கும் பிரத்யேக மொபைல் போன் எனும் நிலையும் அவர்தம் பாலியல் வடிகாலாகப் பயன்படும் சதவீதமே யதார்த்தத்தில் அதிகம் என்பேன்.

மனிதவிலங்கின் இயல்பான வேட்கையான பாலியல் இச்சையைத் தீர்க்க இந்த குறைந்த பட்ச வடிகாலும் இல்லாத பட்சத்தில் இத்தடையே அவர்களை வன்புணர்வுக்கு பெருவாரியாக இட்டுச் செல்ல இருக்கும் வாய்ப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறதல்லவா?

ஆக, மனரீதியான பிரச்சனைகளின் பொருட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவோர் தவிர ஏனையோரை இவ்விதம் செய்யத்தூண்டுவது எது? இதில் பாலியல் கிளர்ச்சியத்தைத் தாண்டியும் மதுவின் பங்கு எத்தனை விழுக்காடு அதிகமாயிருக்கிறது? இந்நிலையில் அரசே மது விற்பனையை ஊக்குவித்தும் பல மாநிலங்களில் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தியும் இப்பிரச்சனைக்கு மறைமுகமாய் காரணியாக விளங்குவது வசதியாய் மறைக்கப்படுகிறதா?

நாடு முழுக்க எழும் கொந்தளிப்பை அடக்க இது போல ஒரு நடவடிக்கையை பேருக்கு எடுப்பது என்பது எவ்விதத்தில் பிரச்சனைகளுக்குத் தீர்வாகும்?

வடமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கட்டுமானப்பணிகளுக்கும் இன்னபிற கூலி வேலைகளுக்கும் வந்து தங்கியிருக்கும் இளைஞர்கள் தங்கள் பாலியல் வேட்கைக்கு வடிகால் இன்றி கோவை அருகே ஒரு கிராமத்தில் கன்றுக்குட்டியை புணர்ந்து அதைக் கொன்ற சம்பவம் நடந்தது கடந்த ஆண்டில். இதை போர்னோவுடன் பொருத்திப்பார்ப்பது சாத்தியம் தான். ஆனால் ஒரு போர்னோ விடியோ படத்துடனும் சுய இன்பத்துடனும் முடிய வேண்டிய பாலியல் இச்சையை வன்புணர்வுக்கு இட்டுச் செல்வது எது. அதிலும் உச்சமாக இயற்கைக்கு முரணான இது போன்ற புணர்ச்சிகளில் ஈடுபடத் தூண்டுவதன் காரணியை ஆராய வேண்டாவா?

பாலுறவு வேட்கைக்கு வடிகாலற்ற ராணுவத்திலும், சிறைகளிலும் நடைபெறும் ஓரினச் சேர்க்கை உள்ளிட்ட விசயங்கள் வெளியே பரவலாக அறியப்படுவதில்லை. வடிகால் இல்லாது போய்விடின் தான் இது போன்ற குற்றங்கள் பரவலாகும் என்பது யதார்த்தம்.

பீகாரில் கடந்தாண்டில் மட்டும் 870க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் நடை பெற்றுள்ளன. அந்த மாநிலத்தில் 85%க்கும் மேலான மக்களுக்கு வீடுகளில் கழிப்பறை கிடையாது. மேற்சொன்ன சம்பவங்களில் பெரும்பாலானவை கழிப்பறை இல்லாத பெண்களும் குழந்தைகளும் ஊருக்கு ஒதுக்குப்புறங்களுக்கு அகால வேளைகளில் செல்லும்போது நடைபெற்றவை. இந்தியாவில் 50 கோடி பேருக்கு அடிப்படை சுகாதார வசதிகளே கிடையாது என்கிறது ஒரு அறிக்கை.

உண்மையிலேயே பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது தான் நோக்கமாயின் அரசு போர்னோ கிராபியை தடை செய்வது அத்துணை முக்கியமான ஒன்றல்ல. மாறாக அரசிடமே உள்ள குறைபாடுகளைக் களைய முன்வரவேண்டும். மதுவிற்பனையை தடைசெய்யவோ குறைந்தபட்சம் முறைப்படுத்தவோ முயலவேண்டும். பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க ஆவன செய்ய வேண்டும் அதை விடுத்து ஊடகங்களுக்கு தீனியைப் போட்டு ஏதோ பெரு நடவடிக்கை எடுத்தாற்போல் தோற்ற மாயையை ஏற்படுத்த பாலுணர்வுக் கிளர்ச்சியத்துக்கு தடை என்பதாக நடிக்கக் கூடாது. உண்மையில், போர்னோ கிராபியையும் இவர்கள் தடை செய்ய மாட்டார்கள் என்பதுதான் கொடுமை. இவர்களுக்குத் தேவை ஊர்வாயை மூடல்; தற்காலிகமாகவேணும்.

Wednesday, May 01, 2013

நாம் தமிழர் கட்சியின் நல்லவை பத்து - எழுதியவர் “கிளிமூக்கு அரக்கன்”

வலையுலக - பேஸ்புக் பிரபலமும் , எனது மண்டப எழுத்தாளார்களில் ஒருவருமான “கிளிமூக்கு அரக்கன்” எழுதிக் கொடுத்துள “நாம் தமிழர் கட்சியின் நல்லவை பத்து” - குட்டிக்கட்டுரை 
------------------
நாம் தமிழர் கட்சி - ஃபாசிசவாதிகள், கொள்கை-கோட்பாடுகளை எடுத்துச் செல்லும் வழிமுறைகளை வகுக்காமல் உணர்ச்சி அரசியல் செய்பவர்கள் என விமர்சிக்கப்படும் சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சியின் நன்மைகளையும், சிறப்புகளையும் பத்து பத்திகளில் கூடியமட்டும் எடுத்துரைக்கும் முயற்சியே இந்தக் குட்டிக் கட்டுரை!

1) 'நாம் தமிழர் கட்சி' சீமானால் நடந்த ஒரு மிக நல்ல விசயத்தை, மாற்றத்தை கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். அதற்கு முன் புரிதலுக்காக சிறிய வரலாறு ஒன்றை நினைவுப்படுத்திவிடுகிறேன். இந்திய ராணுவத்தை ஒரு நாட்டின் முதல்வர வரவேற்கப்போகாமல் இருப்பதென்பது ஆட்சிக்கலைப்பு செய்யும் அளவிற்கு பெரிய குற்றம். இருப்பினும் அக்குற்றத்தைச் செய்து "தமிழர்களின் உயிரைக் கொன்று குவித்த இந்திய ராணுவத்தை வரவேற்கச் செல்லமாட்டேன்" என சட்டசபையிலேயே அறிவித்தவர் மு.க. பின் இதையெல்லாம் காரணங்களாகக் கொண்டு சு.சாமி, ஜெ, சந்திரசேகர் ஆகியோரால் மு.கவின் ஆட்சி கலைக்கப்பட்டபின் ராஜீவ் கொலை நிகழ்ந்தது. மு.க இந்திய ராணுவத்தை வரவேற்கச் செல்லாததும், ராஜீவ் கொலையும் அடுத்தடுத்து நடந்ததால் ஜெ, சு.சாமி ஆகியோருக்கு ராஜீவ் கொலைப்பழியை திமுகவின் மேல் போட மிகச் சிறந்த வாய்ப்பாக அது அமைந்துவிட, அதையே கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு பிரச்சாரமும் செய்தார்கள். நன்றாக கவனித்தோமானால் ஈழத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ராஜீவின் ராணுவத்தால் கொல்லப்பட்டபோது ராஜீவுக்கு எதிராக கொதிக்காத 'வெகுஜன மக்கள்', ராஜீவ் என்ற ஒற்றை ஆளை புலிகள் கொன்றதற்காக கொதித்தெழுந்து ஈழ ஆதரவுக் கட்சி என்ற ஒரே காரணத்தால் திமுகவை தேர்தலில் கடுமையாக பழி வாங்குகிறார்கள், மு.க மட்டுமே ஜெயித்து மற்ற 233பேரும் தோற்கிறார்கள்!!! இப்படி தங்கள் ஒட்டுமொத்த கோபத்தையும் திமுகவின் மேல் தீர்த்துக்கொண்டார்கள்.

இப்படியான ஒரு 'மோசமான' ஈழ உணர்வும், மனிதாபிமான உணர்வும் கொண்டிருந்த வெகுஜன தமிழக மக்கள் 2009ன் ஈழ-இனபடுகொலைகளுக்குப் பின் நன்றாகவே மாற்றமடைந்திருக்கிறார்கள். ஈழத்தில் இனப்படுகொலை நடந்திருக்கிறது, புலிகள் என்ற இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல போராளி இயக்கம் தான் என்ற அளவில் புரிதல் கொண்டு கொஞ்சம் தெளிந்திருக்கிறார்கள். தமிழக அளவில் ஏற்பட்டிருக்கும் இந்த மிகப்பெரிய மாற்றத்திற்கு, புரட்சிக்குக் காரணம் சீமான் மட்டும் தான். 2009ல் அவர் ஓட்டு அரசியல்வாதி இல்லையென்பதால், எந்த அரசியல் இயக்கத்தையும் சாராதவர் என்பதால் அவர் பேசிய பேச்சுக்களும், உணர்ச்சி பொங்க ஈழத் துயரை எடுத்துரைத்த விதமும் வெகுஜன மக்களின் மூளையில் எந்தத் தடையும் இன்றி வெள்ளம் போல் பாய்ந்து பதிந்தது என்றால் அது மிகையாகாது.

2) தங்களின் தொடர் 'கூடு விட்டு கூடு தாவும்' அரசியல் நிலைப்பாடுகளால் மக்களின் நம்பிக்கையை இழந்த வைகோவால், நெடுமாறனால் கொண்டுவர முடியாத ஒரு பெரிய மாற்றத்தை 2009ல் சீமான் என்ற இளைஞர் வெகுஜன மக்களின் மனங்களில் கொண்டு வந்தார். அதனால் என்ன நடந்தது? தமிழ்நாட்டில் ஈழ உணர்வு தலைகீழாய் மாறியது! கடும் மைனஸில் இருந்து ஓரளவு ப்ளஸ் ஆக மாறியது! தன் அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதியை புலிகளை எதிர்ப்பதற்கும், ஈழத்தை எதிர்ப்பதற்க்கும், இலங்கை ஜனாதிபதிகளுடன் நட்புறவு பேணுவதற்கும் செலவழித்த ஜெயலலிதா கூட வெகுஜன மக்களிடையே சீமானால் எழுப்பட்ட ஈழ உணர்விற்கு பயந்து ஒரே இரவில் ஈழ ஆதரவாளராய் மாறிய அதிசயம் நடந்தது!!! இலங்கை அரசுக்கு ஆதரவாகவே எப்போதும் பேசிவந்த ஜெ, இலங்கையை நட்பு நாடாக கொள்ளக் கூடாது எனப் பேசினார்! பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் இயற்றி புலிகளுக்கு தடையும் வாங்கிக் கொடுத்தவர், தனி ஈழமே தீர்வென்றார்!

3) அதுமட்டுமா? 1991ல் தனக்கு ஏற்பட்ட படுதோல்வியுடன் ஈழ அரசியலை தன் முதன்மை கொள்கைகளில் இருந்து தூரமாக ஒதுக்கிவைத்துவிட்டு எல்லா விசயங்களிலும் மத்திய அரசுடன் இணக்கமாக போக ஆரபித்திருந்தது திமுக. 2009ல் ஈழத்தமிழர்களின் திட்டமிட்ட படுகொலையில் இலங்கை ராணுவத்துக்கு முழுமூச்சில் இந்திய அரசு உதவிக்கொண்டிருந்த போதும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகாமல் தன் கைகளிலும் ரத்தக்கறையை படியவிட்டுக் கொண்டிருந்த திமுக, சீமானால் தமிழக வெகுஜன மக்களிடையே எழுந்த 'புதிய ஈழ ஆதரவு' அலைக்கு ஏற்ப மீண்டும் முழு மூச்சில் ஈழ அரசியலைக் கையில் எடுத்தது!! செத்துப்போயிருந்த டெசோ உயிர்ப்பிக்கப்பட்டது!! அமெரிக்கத் தீர்மானங்களில் கூட இந்தியாவின் ஜிகிடி தோஸ்தான இலங்கைக்கு எதிராக இந்தியாவை வாக்களிக்கவும் வைத்தது! பல நாடுகளின் தூதர்களை ஓடி ஓடி சென்று பார்த்துக்கொண்டிருக்கிறது டெசோ அமைப்பு!

இதன் தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் அதிமுகவும், திமுகவும் இணைந்து மத்திய அரசுக்கு நாடாளுமன்றத்தில் கிடுக்குப்பிடி போட்ட்ட அதிசயம் கூட நடந்தது! இப்படியாக தமிழகத்தின் பிரதான கட்சிகள் இரண்டிற்கும் "நீங்கள் ஈழத்தைப் பற்றி பேசியே ஆகவேண்டும். மத்திய அரசை நிர்ப்பந்தித்தே ஆக வேண்டும்" என்ற கடும் நெருக்கடியை மறைமுகமாகக் கொடுத்தவர் சீமான்.

4) இத்தனை வருடங்களாக ஈழத்தையே மைய அஜண்டாவாக வைத்திருக்கும் நெடுமாறனுக்கும், வைகோவிற்கும் இல்லாத அலை சீமானுக்கு எப்படி ஏற்பட்டது? சீமானிடம் இருந்த நேர்மை! நெடுமாறனும், வைகோவும் தங்கள் அரசியல் நன்மைக்காக பல சமரசங்களைச் செய்திருக்கிறார்கள். 1983ல் ஈழத்தை உலுக்கிய ஜூலை கலவரத்தின் போது மு.கவும்,அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்தார்கள். நெடுமாறன் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தபோது பல சமயங்களில் மு.கவுக்கு ஆதரவாக நடந்துகொண்ட நெடுமாறன், இப்போது எம்.ஜி.ஆரை ஆஹா ஓஹோவென புகழ்ந்து எழுதும் சுயநல அரசியல்களையும் செய்துகொண்டிருக்கிறார். வைகோவோ இன்னும் ஒருபடி மேலேபோய் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசியல் காய்நகர்வுகளை முன்னெடுத்த ஜெவுடன் கூட்டணியில் இருப்பதையே எப்போதும் விரும்பினார். ஒரு மேடையில் இலங்கைக்கு எதிராக முழங்கிக்கொண்டு, இன்னொரு மேடையில் இலங்கைக்கு முழு ஆதரவையும் வழங்கிக்கொண்டிருந்த ஜெவுக்கு ஆதரவாக வைகோ முழங்கிக்கொண்டிருந்ததை மக்கள் ஏற்கவில்லை. திமுகவில் இருந்து விலகியபோது இருந்த எழுச்சியும் கூட்டமும் வைகோவை விட்டு அகன்று இன்று ஒரு காமடியனாக அவர் தமிழக அரசியலில் வலம்வருவதற்கு அவர் கட்சியினரே விரும்பாத அவரின் 'சமரசங்கள்' தான் காரணம். இன்னும் சொல்லப்போனால் இறுதிவரை ஆட்சியில் இருந்த மு.கவிடமோ, ஜெவிடமோ புலிகளை நெருங்கவிடாமல் தங்கள் முக்கியத்துவம் அழிந்துவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். இதனால் புலிகள் இழந்தது ஏராளம். ஆனால் எந்தக் கட்சியையுமே சாராமல் தனி மனிதனான இருந்த சீமானுக்கு இந்த சமரசங்களும், தனி நபர் முக்கியத்துவமும் தேவைப்படவில்லை. நெஞ்சில் பட்டத்தைப் பேசினார், யாரையும் தூற்றினார்! அதனால்தான் மிகக் குறுகிய காலத்தில் வளர்ந்து நிற்கிறார். அவரிடம் இருக்கும் மக்களுக்கு அது நம்பிக்கை அளிக்கிறது.

ஆனால் ஒரு கட்டத்தில் 'காங்கிரஸ் அழிப்பு' என்ற பெயரில் ஜெவுக்கு ஆதரவளித்ததை சீமானின் மேல் நம்பிக்கை கொண்டிருந்த பெரும்பான்மையான நடுநிலை மக்கள் விரும்பவில்லை. அவர் கூட்டம் கொஞ்சம் ஏமாந்து கலைந்தது இங்கேதான். வைகோ செய்த அதே தவறை ஒருமுறை சீமான் செய்துவிட்டார். தனிப்பெரும் சக்தியாக உருவாக வேண்டுமானால் இரு பெரிய கட்சிகளையும் ஒருங்கே எதிர்த்து ஒரே நேரத்தில் காலி செய்ய வேண்டும் என்ற அரசியல் தத்துவத்தின்படி நடந்தாலேயொழிய சீமானால் தன் கூட்டத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாது. இல்லையென்றால் இன்னொரு வைகோவாக கூட ஆக வாய்ப்புண்டு! கவனமாக இருக்கவேண்டும்.

5) முக்கியமாக தமிழுணர்வு! திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தமிழ்ப்புரட்சிக்கு பின் இப்போது நாம் தமிழர் கட்சியால் ஒரு 'குட்டி' 2ஆம் தமிழ்ப்புரட்சி ஏற்பட்டிருக்கிறது. பல இளைஞர்களுக்கு கலப்பில்லாமல் தமிழ்பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகியிருக்கிறது. அதற்காக நிறைய மெனெக்கெடுவதை நாம் இணையங்களில் பார்க்க முடிகிறது. இது தமிழ்நாட்டு இளைய சமூகத்திற்கு நாம் தமிழர் கட்சியினரால் கிடைத்திருக்கும் ஆக்கபூர்வமான மாற்றம்.

6) "வந்தவன் எல்லாம் எங்களை ஏறி மிதிச்சுட்டுப் போ" என்று தேமே என இருந்த தமிழ்ச் சமுதாயம், தங்கள் ஊரில் பிற நாட்டவர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடுவதைக் கொஞ்சம் உணரத் துவங்கியிருக்கிறார்கள். ஐடி கம்பனிகளில் கூட மலையாளிகளின், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை கொஞ்சமாக எதிர்க்கத் துவங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களின் சமூக வாழ்வியலுக்கு இது நல்லதுதான். ஆனால் இந்த பிற மொழி ஆதிக்க எதிர்ப்பிற்கும், பிற மொழியினர் எதிர்ப்பு என்ற இனவெறிக்கும் நூலிழை அளவே வித்தியாசம் இருக்கிறது. மற்ற மாநிலங்களில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற பொறுப்புணர்ச்சியுடன் நாம் தமிழர்கள் செயல்பட்டால் வெகுஜன மக்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்துக் கொடுத்த இயக்கமாக நாம் தமிழர் கட்சியினரைக் கொண்டாடுவார்கள்.

7) ஜெ அரசு தமிழுக்கெதிரான பல நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. நூலக ஒழிப்பு, ஆராய்ச்சிக்கூட ஒழிப்பு, டி.என்.பி.எஸ்சியில் தமிழின் முக்கியத்துவம் ஒழிப்பு போன்ற பல நடவடிக்கைகளை ஒருபக்க ஈழ ஆதரவு முகமுடி அணிந்துகொண்டு செய்து வருகிறது. தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கலை வேறு எந்த கட்சியினரையும் விட நாம் தமிழர் கட்சியினர் கையிலெடுத்து முழுமூச்சாகப் போராடித் தீர்த்தால் பிரிந்துக்கிடக்கும் தமிழுணர்வாளர்கள் ஏகபோகமாக நாம் தமிழர் கட்சியினரின் மேல் நம்பிக்கை கொள்வார்கள்.

8) தமிழர்கள் எந்த காலத்திலுமே தமிழர்களாக வாழ்ந்ததே கிடையாது. கள்ளராக, பறையராக, சாணாராக, தேவராக, படையாட்சியாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் 'நாம் தமிழர்' என்ற பெயரே மிகவும் ஆக்கபூர்வமான தமிழர் ஒருங்கிணைப்புப் பணிக்கு அச்சாரமாக இருக்கிறது. எனினும் சாதியினால் தமிழர்களைக் கணக்கெடுக்கும் கலாச்சாரம் ஆபத்தில் தான் முடியும். மொழியால் பார்ப்பனர்கள் தமிழர்கள், அருந்ததியர்கள் தெலுங்கர்கள் என்ற இக்கட்டான விசயங்களையெல்லாம் கணக்கில் கொண்டு 'நாம் தமிழர் கட்சி' கவனத்தில் கொள்ளவேண்டும்.

9)தமிழர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தமிழின வரலாறு குறித்த பிரச்சாரங்களால் ஒருவித பெருமை ஏற்பட்டிருக்கிறது. இந்திய பெருநாட்டில் தாழ்வுமனப்பான்மை புகட்டப்பட்டு தலைகுனிந்திருந்த தமிழர்கள் தலைநிமிர வரலாற்றுப் பெருமைகள் உதவும்தான். ஆனால் வரலாற்றுப் பெருமைகளில் நிகழ்கால இழிவுகளை மறந்துவிடக் கூடாது. அவற்றைக் களைய ஆவண செய்யவேண்டும். அதே நேரம் வரலாற்றுப் பெருமை என்ற பெயரில் கற்பனைவளம் மிகுந்த கட்டுக்கதைகளையும் ஆதாரமின்றி எடுத்துவைத்தல் உலகோர் மத்தியில் தமிழர்க்கு இழிவையே தேடித்தரும்.

10) எல்லாவற்றுக்கும் மேலாக நாம் தமிழர் கட்சியின் முக்கியமான களமாக இணையம் இருக்கிறது. ஈழம் சம்பந்தப்பட்ட பல நல்ல கருத்துக்களை இணையத்தில் வைக்கிறார்கள். அதே நேரம் திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சியினருக்கு எதிராக 'சண்டை'யிடுவதில் இருக்கும் ஆர்வம் நடப்பு தமிழக அவலங்களுக்கெதிராக இல்லை என்பது வருத்தமான உண்மை. அதே நேரம் துரோகிகளை களைக்க எதிரிகளோடு கைக்கோர்க்கிறேன் என்ற மகா அவலமான, சுய'கொள்ளி' செயலும் ஊக்குவிக்கப்படுகிறது. சு.சாமி போல், சோ போல் இணையத்தில் உலவும் ஏராளமான எதிரிகள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தமிழர்களுக்கும் அடிதடியை ஊக்குவித்து குளிர்காய்ந்துகொள்கிறார்கள். இதை நடக்கவிடாமல் கண்காணித்துக்கொள்வதே தமிழர் நலனுக்கும், இயக்க நலனுக்கும் நல்லது.
-----
பல பயங்கரவாத, தீவிரவாத, பக்கவாத செயல்களில் ஈடுபட்டுவிட்டு இப்போது ருவாண்டாவின் ஒரு பழைய ஓட்டலில் தங்கி அரசியல் பணியில் ஈடுபட்டிருக்கும் 'கிளி மூக்கு அரக்கன்' ஆன எனது கருத்துக்களை பொறுமையாக படித்ததற்கு நன்றி. மாற்றம் தேவைப்படும் இச்சூழலில் நாம் தமிழர் கட்சியினர் கவனமாகவும், தெளிவாகவும், நாகரீகமாகவும், தைரியமாகவும் செயல்பட்டால் 2016ல் கணிசமான வெற்றிகள் நிச்சயம். அவர்களுக்கு இந்த கிளிமூக்கு அரக்கன் வாழ்த்துக்கள்.