Saturday, July 07, 2012

நாயக் - வங்காள மொழித் திரைப்படம் - திரைப்பார்வை

பயணத்தின் ஊடாக கதை சொல்லுவது ஓர் அருமையான உத்தி, அப்படி சொல்லப்படும் கதையாடல்கள் பெரும்பாலும் மறக்கப்பட மாட்டாது மனதில் நீண்ட காலத்திற்கு நிற்கும். பயணங்கள் குறிப்பாக , நீண்ட தூர ரயில் பயணங்கள் நிறைய சந்தர்ப்பங்களில், வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்து சுய ஆய்வு செய்து கொள்ள உதவும். சுய ஆய்வுக்குப்பின்னர் மாற்றங்கள் ஏதேனும் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை, சீர் தூக்கிப் பார்த்தலே பாரிய குழப்பங்களுக்கு கொஞ்சமேனும் தெளிவு கிடைக்கும். ஒரு ரயில் பயணத்தின் ஊடாக தன்னை சுய ஆய்வு செய்து கொள்ளும் நாயகனைப் பற்றிய கதைதான் சத்யஜித் ரேயின் வங்காள மொழித் திரைப்படமான நாயக்’கில் அரிந்தம் முகர்ஜி (உத்தம் குமார்)வழியாக சொல்லப்படுகிறது. 

திரையுலகில் உச்சத்தில் இருக்கும் அரிந்தமின் அன்றைய நாள் இரண்டு நேர் எதிர் செய்திகளுடன் ஆரம்பமாகின்றது.  ஒன்று முந்தைய நாள் இரவில் இரவு விடுதியில் கைகலப்பில் ஈடுபட்டது மற்றொன்று நாட்டின் நடிப்பிற்கான உயரிய விருதை பெற டெல்லி பயணம் செய்கின்றார் என்பது. விமானத்தில் இடம் கிடைக்காமல் , ரயிலில் பயணப்படும் அரிந்தம் சந்திக்கும் மேட்டிமை மனிதர்கள், அரிந்தமின் கர்வம், திமிர், அலட்டல்கள், பிம்பத்தை தக்க வைத்துக்கொள்ள ஏற்படும் தடுமாற்றங்கள்,  உளப்பூர்வமான பகிர்தல்கள்  என நுட்பமாக மனித மனங்களின் வானவில்லை சத்யஜித் ரே இந்த கருப்பு வெள்ளையில் தீட்டி இருக்கின்றார்.

வங்காளத் திரையுலகின் ‘மகா நாயகன்’  உத்தம் குமாரை மனதில் வைத்தே இந்தக் கதையை எழுதியதாகவும், ஒரு வேளை உத்தம் குமார் நடித்திருக்காவிடில் படத்தையே கைவிட நினைத்து இருந்ததாகவும் சத்யஜித் ரே கூறியிருக்கிறார்.  உச்சத்தில் இருக்கும் ஒருவரை நாயகனாக்கி, அவரின் வாழ்க்கையை ஒட்டியே கதையமைத்து, திரையுலகிற்கான சுய விமர்சனங்களையும் உள்ளடக்கி அன்றே திரைப்படம் எடுக்க நிஜமாகவே சத்யஜித் ரே உண்மையிலேயே தில்லானவர்தான்.

படத்தில் வரும் அத்தனை மாந்தர்களும் ஏதாவது ஒரு சுயலாபத்தை அடுத்தவரிடம் எதிர்பார்க்கின்றனர் அல்லது முன் வைக்கின்றனர். பிரபல நடிகனின் சொல்லப்படாதப் பக்கங்களை கட்டுரையாக்கினால் தன் சிறு இதழை பிரபலமாக்கிவிடலாம் என்று அரிந்தமிடம் பேச்சுக் கொடுக்கும் இளம் பத்திரிக்கையாளர் அதிதி (சர்மிளா தாகூர்),  தன்னுடைய விளம்பர நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக மனைவியை , சபலப்படும் பணக்காரரிடம் அறிமுகப்படுத்தும் கணவன், சபலத்திற்கு சமர்ப்பிக்கபட வேண்டுமென்றால், சினிமாவில் நடிக்க அரிந்தமிடம் பரிந்துரைக்க வேண்டும் என அதே கணவனிடம் கேட்கும் மனைவி,  ஒழுக்க வாதியாக குடும்பத்தினர் முன் காட்டிக்கொண்டு, சபலப்படும் பணக்காரர், அரிந்தம் சினிமாவில் நடிக்கப் போய்விட்டால் தன் நாடகங்கள் பாதிக்கப்படுமே என அச்சப்படும் நாடகக் குழு இயக்குனர், கலைஞன் சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும் என்று தன்னுடைய தொழிற் சங்கப் போராட்டத்திற்கு அரிந்தமின் ஆளுமையைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் இடதுசாரி நண்பன், உடன் பயணம் செய்யும்  உண்டு கொழுத்த ஆன்மீக வாதி, புகழின் உச்சியில் அரிந்தமை மட்டந்தட்டும் முன்னாள் உச்சநடிகர் , பின்னாளில் ஒரு சிறு கதாபாத்திரத்திற்கு அரிந்தமிடம் வந்து கெஞ்சுவது என நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான பாத்திரங்களுடன் அரிந்தமை நடமாட வைக்கிறார் சத்யஜித் ரே.

நல்ல சினிமாவின் அடையாளம், ரசிகன் தன்னை குறைந்த பட்சம் ஏதேனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்துடனோ அல்லது அது தரும் உணர்வுகளுடனோ  பொருத்திப் பார்த்துக்கொள்ள உதவுவதுதான். நாயக் திரைப்படத்தின் சிறப்பு என்னவெனில், படத்தில் வரும் அனைத்து பாத்திரங்களுடன் நம்மை தொடர்பு படுத்திப் பார்த்துக் கொள்ள முடியும். அது காய்ச்சலில் படுத்துக் கொண்டே அரிந்தமை பார்த்துக் கொண்டே இருக்கும் பதின்ம வயது பெண்ணாகட்டும்,  ரசிப்புப் பார்வையுடன் அரிந்தமை பார்க்கும்  அவளின் அம்மாவாகட்டும் , திரைத் தொழிலுக்கும் ஒழுக்கத்திற்கும் வெகுதூரம் எனப் பேசும் வயதான முதியவராகட்டும் எல்லாமே உண்மைக்கு மிக நெருக்கம்.

தனது திறமையில் இருக்கும் அசாத்திய நம்பிக்கை, கிடைத்தப் புகழை தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்கின்ற பயம்,  என்றாவது ஒருநாள் போய்விடும் என்று தெரிந்தும் மாய உலகில், சமுதாயம் கட்டமைத்திருக்கும் பிம்பத்துடன் நடித்து வாழ வேண்டிய கட்டாயம் என்ற கூறுகளுடன் அரிந்தமாகவே வாழ்ந்து இருக்கின்றார் வங்காள நடிகர் உத்தம் குமார். மேட்டிமை பணக்காரத் தோரணை என்றால் மிகைநடிப்பு என்றே தென்னிந்திய சினிமாக்கள் பார்த்துப் பழகிப் போய் இருக்கும் கண்களுக்கு உத்தம் குமாரின் நடிப்பு விருந்து.

வெற்றியும் புகழும் மண்வாசனையைப் போல கற்பூரத்தின் வாசனையைப்போல இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் உண்மையில் நிகோடினின் வாசனையும் ஆல்கஹாலும் தான் என உணரும் அரிந்தம், தான் பிறரிடம் சொல்ல விரும்பாத வாழ்க்கைப் பக்கங்களை , அந்த கைகலப்பு செய்தி கூட, மணமான பெண்ணுடன் வைத்திருந்த கள்ளத் தொடர்புதான் என்பதையும், அதிதியிடம் பகிர்ந்து கொள்ள அரிந்தமின் மனப்பாரம் இறங்குகிறது.  அதுவரை ரகசியமாக குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்த அதிதி அனைத்தையும் கிழித்துப் போட்டு விடுகிறாள். ரயில் டெல்லியை அடைய, சொற்ப நேரத்திற்கு சுயத்தை மீட்ட அரிந்தம், ரசிகர்கள் படை சூழ வரவேற்கப்பட, மீண்டும் மாய போலியான தான் ஒரு போதைப் பொருளாகப் பார்க்கப்படும் புகழுலகிற்கு மீண்டும் செல்வதுடன் படம் நிறைவடைகிறது. இயல்பு வாழ்க்கையிலும், ஒவ்வொரு பயணத்தின் போதும் செம்மைப்பட்ட மனம், பயணம் முடிந்த அடுத்த நொடியில் மீண்டும் பழைய வாழ்க்கையைத் தானே விரும்புகிறது.

பாடல்கள் இல்லாமல் கருப்பு வெள்ளையில் நிச்சயமாக இது ஒரு காவியப்படம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் ஓடும் இத்திரைப்படம் ஆங்கிலத் துணை எழுத்துக்களுடம் கீழ்க்காணும் காணொளியில் கிடைக்கின்றது. நேரம் கிடைக்கையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.


Thursday, July 05, 2012

வினையூக்கி நெடுங்கதை போட்டி முடிவு

சிலத் தொடக்கங்கள், எப்படி வெவ்வெறு மக்களால் வெவ்வேறு விதமாக கற்பனை செய்யப்படும் என்பதை அறியும் ஆவலில்
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் அறிவிக்கப்பட்ட 'கீர்த்தனா என் தோழி , என் காதலி என் மனைவி ' நெடுங்கதை போட்டிக்கு ரிஷ்வன் அவர்களும், தமிழ் சித்திரம் - ருக்மணி ராம்குமார் அவர்களும் சிரத்தையாக நெடுங்கதையை தொடராக எழுதி சமர்ப்பித்தனர். இரண்டுமே 'எனக்குப்' படிக்க சுவாரசியமாக இருந்ததால் இரண்டையுமே நான் முதல் பரிசுக்கு தேர்வு செய்து, தலா 2500 இந்திய ரூபாய் பரிசுக்கு அறிவிக்கின்றேன்.

ரிஷ்வன் எழுதியத் தொடரை வாசிக்க இங்கே சொடுக்கவும் -
http://www.rishvan.com/2012/04/blog-post.html

ருக்மணி ராம்குமார் எழுதியத் தொடரை வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://tamil-chithiram.blogspot.in/search?updated-max=2012-04-30T01:34:00-07:00&max-results=1

ரிஷ்வனுக்கும் ருக்மணிக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும். 

Tuesday, July 03, 2012

புலி நண்பர் - சிறுகதை


ஸ்டாக்ஹோல்ம் செல்வதற்கான விமானம் 86 வது நுழைவாயிலில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால், மெதுவாக நானும் என் மனைவி அம்முவும் கைக்கோர்த்துக் கொண்டு ஒன்று இரண்டு மூன்று. என ஒவ்வொன்றாக ,  கடந்தபடி 70 வது நுழைவாயில் வரை வந்தாகிவிட்டது. கண்ணாடி சுவர்களின் வழியாக குழந்தைகளும் , இளைஞர்களும் , நடுத்தர வயது மக்களும், விமானம் வந்து நிற்பதை அது புறப்படுதை வியப்பாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். விமானங்களில் எத்தனை முறை பறந்தாலும், விமானங்கள் தரையில் ஓடும்பொழுதும் தலைக்கு மேலேப் பறக்கும் பொழுதும் தலைசாய்த்து பார்ப்பதும் ஒரு சுவாரசியந்தான். அவர்களுடன் அம்முவும் சேர்ந்து கொண்டது மனநிலையை மேலும் ரம்மியமாக்கியது. 

 குட்டிநகரமே இந்த ஜூரிச் விமானநிலையத்தில் இருப்பதைப் போன்ற ஒரு பிரம்மாண்டம். ஈரோ - ரூபாய் மதிப்பு மாற்றம் நினைவிற்கு வந்ததால் ஆடைகள் விற்கும் பகுதியைத் தவிர்த்து அம்மு சுவிட்சர்லாந்து கேட்ட சாக்லேட்டுகளையும் சில வாழ்த்து அட்டைகளையும் வாங்கிக் கொண்டு, மேலும் சில நுழைவாயில்கள் கடந்து , ஒரு காப்பிக்கடைக்கு எதிரே விலைப்பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, 

”என்ன சாப்பிடுறீங்க” என்பதை ஈழத்துத் தமிழ் உச்சரிப்பில் ஒருவர் கடையினுள் இருந்து கேட்டார். வலிகள் வேதனைகளுடன் தமிழையும் போகும் இடமெல்லாம் கொண்டு சென்றவர்கள் ஈழத்தவர்கள்.  என்னைப்பொறுத்தவரை சுந்தரத் தமிழ் , ஈழத்துத் தமிழ்தான்.

நாங்கள் கேட்ட காப்பிச்சினோவை அவர் கொடுக்கும்பொழுது கையில் புலிப் படத்தைப் பச்சைக் குத்தி இருந்ததைப் பார்த்த அம்மு என்னை இடுப்பில் குத்தினாள். ஆண் குழந்தை பிறந்தால் திலீபன் எனவும் பெண் குழந்தை பிறந்தால் இசைப்பிரியா எனவும்  பெயர் வைக்க இப்பொழுதே நான் முடிவு செய்து வைத்துள்ள அளவுக்கு புலிகளைப் பிடிக்கும் என்பது அம்முவிற்குத் தெரியும். இருந்தாலும் அம்முவிற்கு இதில் இருக்கும் நுட்பமான உணர்வுகள் புரியாது, அவளைப் பொறுத்தமட்டில் ஐரோப்பிய பாஸ்போர்ட் கிடைக்கும் வரை, இந்திய இறையாண்மைக்கு எதிராக எதுவும் செய்யக்கூடாது.  

 நாங்கள். எவ்வளவு வற்புறுத்தியும் அந்த புலி நண்பர் காசு வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார்.

”தினமும் ஒரு தமிழனையாவது சந்தித்துவிடுவேன்... ஒரு சின்ன திருப்தி அவர்களுக்கு காப்பியோ அல்லது அவர்கள் விரும்பும் ஏதோ ஒன்றைத் தந்து தமிழில் கதைப்பது”

“நடிகர்களைப் பார்த்து இருக்கிறீர்களா” இது அம்மு, அவளின் அடுத்த கேள்வி சூரியாவைப் பார்த்து இருக்கிறீர்களா என்பதுதான்..

”நிறைய நடிகர் நடிகைகள் வருவாங்க, அவர்களை எல்லாம் கண்டுக்க மாட்டேன்... நான் பேச விரும்புவது சாமானிய மனிதர்களிடந்தான்”

“தலைவர் உயிரோட இருக்காரா?” எந்த ஈழத்தமிழரை ஐரோப்பாவில் சந்தித்தாலும் நான் மறக்காமல் கேட்கும் கேள்வி இதுதான்.

“தெரியாது, ஆனால் உங்கட இந்தியா, தலைவரை அந்தமான் தீவுகளில் எங்கேயாவது பாதுகாப்பாக வைத்திருக்குமோ என உள்மனது அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கு”

ஏற்கனவே எனக்குத் தெரிந்து இருந்த விசயங்கள் என்றாலும் புலிகளின் ஈழத்து அரசாங்கத்தின் ஒழுக்கம், நேர்மை , நிர்வாகம் என அவர் தொடர்ந்து பேசியதைக் கேட்க சுவாரசியமாகத்தான் இருந்தது.

“எத்தனை வருஷமா இந்தக் கடை இங்கு வச்சிருக்கீங்க”

“இது என் கடை இல்லை தம்பி, நான் இங்க வேலைப் பார்க்கிறேன், 20 வருஷமா இங்கடதான் வேலை செய்யுறேன் !! “

ஸ்டாக்ஹோல்ம் விமானத்திற்கு அழைப்பு வர, மின்னஞ்சல் முகவரிகளைப் பரிமாறிக்கொண்டு விடைபெற்றோம்.

விமானஇருக்கையில் சன்னலின் வெளியே வேடிக்கைப் பார்த்தபடி

“என்னதான் டைகர்ஸோட டிசிப்ளினோ, ஹானஸ்டியோ ... எதிக்ஸோ ... முதலாளியை ஏமாத்திவிட்டு வர்றவன் போறவனுக்கு எல்லாம் காப்பி கொடுக்கிற எத்திக்ஸ்.. ஒரு நாளைக்கு 10 பிராங்க்னு வச்சிக்கிட்டா ஒரு மாசத்துக்கு 250 பிராங்க், 20 வருஷத்துக்கு எத்தனை பிராங்க்
முதலாளியை அந்த ஆளு ஏமாத்திருக்காரு, கடைத் தேங்கா வழிப்பிள்ளையார்தான் ஞாபகத்துக்கு வருது, .. இதுல எதுக்குமே யூஸ் இல்லாத தமிழ் ஃபீலிங்ஸ் வேற !!!” அம்மு பொரிந்து தள்ளினாள்.

நான் பதில் பேசவில்லை. அவர் எனக்கு மின்னஞ்சல் எழுதிக் கொடுத்து இருந்த தாளைத் திருப்பிப் பார்த்தேன். அது நாங்கள் குடித்த காப்பிக்கான பில்.  காப்பி தயாராகும் இடைவெளியில், அம்முவின் கவனம் கண்ணாடி சுவருக்கு அப்பால் இருந்த விமானங்களின் மேல் அலைபாய்ந்து கொண்டிருந்த பொழுது புலி நண்பர் எங்களுக்கான காசை அவரின் பாக்கெட்டில் இருந்து எடுத்து கல்லாவில் போட்டதையும் , அதற்கான பில்லை அச்சிட்டதையும் ஏற்கனவே நான் கவனித்து இருந்தேன். அம்மு சொன்ன அதே கணக்குதான் ஆனால் புலி நண்பர் தன்னிடம் இருந்து கொடுத்து கொண்டே இருக்கிறார், வெறும் தமிழ் உணர்வுக்காக !!!