Tuesday, August 30, 2011

சரப்ஜித் சிங் - தூக்கின் வாசலில்

இந்த வருடத்திய ஆகஸ்ட் மாதம்அதிகாரப்பூர்வ உயிர்க்கொலைகளை ஆதரிக்கும் மாதம் போல் இருக்கிறது. இந்தியக் குடிமகனும் , பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட21 வருடங்களாக பாகிஸ்தானிய கடுஞ்சிறை வாசத்தை அனுபவித்து வரும் மரண தண்டனை கைதி சரப்ஜித் சிங்கிற்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடாது என்றும் உடனடியாக தூக்கில் ஏற்ற வேண்டும் பாகிஸ்தானிய வழக்கறிஞர் இராணா இலாமுதீன் காசா அந்நாட்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம் செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. ஏற்கனவே பாகிஸ்தானிய மாணவர்கள் சங்கம் சரப்ஜித் சிங்கிற்கு உடனடியாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என 2008 ஆம் ஆண்டில் இருந்து அடிக்கடி போராட்டங்கள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டுதான் சரப்ஜித்தின் தூக்கை அப்பொழுதைய பிரதமர் யூசுப் கிலானி காலவரையின்றி ஒத்தி வைத்தார். பஞ்சாப் முதல்வர் பிரதமருக்கு நேரிடை கோரிக்கை, இரு நாட்டு பேச்சுவார்த்தைகளில் இடம்பெறும் அளவிற்கு அப்படி என்ன முக்கியத்துவம் இந்த மரணதண்டனைக்கு?சுள்ளிப்பொறுக்கவும் , சாராயம் கடத்தவும் எல்லைக் கடந்த மன்ஜித் சிங்கை, 90ஆம் ஆண்டு லாகூரிலும் , முல்தானிலும் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் அதனால் ஏற்பட்ட 14 உயிர்ப்பலிகளுக்கும் காரணமான தீவிரவாதி எனச் சித்தரித்தும், இந்திய உளவுத்துறையின் கூலி எனவும் கைது செய்து மனிதாபிமான அற்ற முறையில் தனிமைச் சிறையில் அடைத்தது. உலகத்தில் இருக்கும் அனைத்து விதமான கொடூரமான சித்ரவதைகளைச் செய்தால் எந்த சாமானிய மனிதனும் செய்யாதக் குற்றத்தையும் ஒப்புக்கொள்வான். மன்ஜித் சிங்கும் ஒப்புக்கொண்டார், பாகிஸ்தானிய காவல்துறை அவருக்கு சரப்ஜித் என்ற பெயரையும் சூட்டியது.

மற்ற நாட்டுக் காவல்துறைகளுக்கு பாகிஸ்தானிய காவல்துறை சளைத்ததா என்ன? அற்புதமாக சாட்சிகளையும் சந்தர்ப்பங்களையும் ஜோடித்து , நமது ஊருக்கு இணையான தடா போன்ற தீவிரவாதக் கட்டுப்பாட்டு சட்டம் ஒன்றில் 1991 ஆம் ஆண்டு தூக்கு தண்டனையும் வாங்கிக்கொடுத்தது. வழக்கு விவாதங்கள் ஆங்கிலத்தில் நடைபெற்றன. அடிப்படை தடயவியல் சான்றுகள் சமர்ப்பிக்கப்படவில்லை. எல்லாவித ஓட்டை ஒடிசல்களைக் காரணம் காட்டி சிலக் கருணை மிகுந்த பாகிஸ்தானிய மனித உரிமை வழக்கறிஞர்களின் உதவியுடன் உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் வரைச் சென்றாலும் ஒவ்வொரு முறையும் மரண ஓலை மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக எழுதப்பட்டது. நூறுகோடி முகமுடைய இந்தியத் தேசத்திற்கு சரப்ஜித்தின் ஒருமுகம் தெரியவே இல்லை. முன்னாள் அதிபர் பர்வேஷ் முசாரஃபும் 2006 ஆம் ஆண்டு கருணை மனுவைத் தள்ளுபடி செய்தார்.சரப்ஜித் என்ற மன்ஜித்தின் முற்பிறவி பலனோ என்னவோ, இந்திய செய்தி ஊடகங்கள் மழைக்காளான்கள் போல 2000ம் ஆண்டுகளில் பெருக ஆரம்பித்தன. அவர்களுக்கு இந்த சரப்ஜித் விவகாரம் வசமாக கையில் சிக்கியது. சரப்ஜித்திற்கு எதிராக சாட்சி சொல்லிய ஒருவரை நேரிடையாகப்பேட்டி எடுத்து, அவர் காவல்துறையின் வற்புறுத்தலால் தான் சரப்ஜித்திற்கு எதிராக சாட்சி சொன்னதாகக் கூறியதை ஒளிபரப்பியது.


புது நூற்றாண்டில் இந்தியா ஊடகங்களால்தான் ஆளப்படப்போகிறது என்பதற்கு முன்னோட்டமாக சரப்ஜித்தின் விடயம் இந்திய அரசாங்கத்தின் உயர்தளம் வரை எடுத்துச் செல்லப்பட்டது. அப்பாவி சரப்ஜித்திற்கும் நம்பிக்கைக் கீற்று தெரியத் தொடங்கியது. ஏறத்தாழ இதேக் காலக்கட்டத்தில்(2005-08) பாகிஸ்தானிய மனித நேய ஆர்வலர் அன்ஸர் பர்னே எடுத்த முன்னெடுப்புகளால், வேவுப்பார்க்க வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு 35 வருடங்கள் தனிமைச் சிறையில் வாடிய காஷ்மிர் சிங் என்பவர், அதிபர் முசாரஃபால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

இந்தியப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சரப்ஜித்தின் பொது மன்னிப்பு மற்றும் விடுதலை தொடர்பாக கேள்விகளும் விளக்கங்களும் கோரப்பட, அப்பொழுதைய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் இதுத் தொடர்பாக பாகிஸ்தானிய உயரதிகரிகளிடம் பேசி மனிதாபிமான அடிப்படையில் சரப்ஜித்தை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அன்றைய பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் ஊடக ஆலோசகர் ஹர்சரன் சிங் பெயின்ஸ் ஒரு படி மேலே சென்று, “ஒரு வேளை சரப்ஜித் குற்றவாளியாக இருந்தாலும் கூட இந்திய துணைக்கண்டத்தின் அமைதிக்காக பாகிஸ்தான் அவரைப் பெருந்தன்மையாக மன்னித்துவிடவேண்டும்” எனப் பாகிஸ்தானைக் கேட்டுக்கொண்டார். சரப்ஜித்தின் குடும்பத்தினர் பாகிஸ்தான் சென்று சரப்ஜித்தைப் பார்க்க பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதி வழங்கியது.

மின்மினிப் பூச்சியாக இருக்கும் இந்திய பாகிஸ்தானிய உறவில் மீண்டும் ஒரு துளிர்ப்பு ஏற்பட்டது. காஷ்மிர் சிங்கை முன்மாதிரியாகக் கொண்டு சரப்ஜித் விடுதலைச் செய்யப்படுவார் என எதிர்பார்த்துக்கொண்டிருந்ததை உறுதி செய்யும் வகையில் பிரதமர் கிலானியும் மரணதண்டனையை காலவரையின்றி ஒத்திப்போட வைத்தார்.
வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் கசாப் பம்பாயை கசாப்பு கடையாக்க, வருங்கால மரணதண்டனைக் கைதியால் தன் மரணதண்டனை நிர்ணயிக்கப்படும் என சரப்ஜித் எதிர்பார்த்து இருக்க மாட்டார். ஏற்கனவே விடுதலை ஆன காஷ்மிர் சிங் , இந்திய எல்லையை அடைந்தவுடன், “ஆமாம் , நான் இந்திய உளவு ஆள்தான்” எனப் பெருமையடித்துக்கொள்ள, அவருக்கு ஏற்கனவே உதவி செய்து இருந்த அன்ஸர் பர்னே மிகப்பெரும் தர்மசங்கடத்துக்கு ஆளானார். ஏற்கனவே ஒரு முறை சூடுபட்டுக்கொண்டதால், அன்ஸரும் சரப்ஜித்திற்கு உதவ முன்வரவில்லை.

சொர்க்கத்தின் எல்லையான வாகாவை சில வாரங்களில் கடந்து இரண்டு மகள்களையும் மனைவியையும் பார்க்கலாம் என எண்ணிக்கொண்டிருந்த சரப்ஜித் மீண்டும் நரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். மரணதண்டனையை உடனடியாக நிறைவேற்றவேண்டும் எனத் தொடர்போராட்டங்கள் நடைபெற்றன. கசாப் கடல் கடந்து மாட்டிக்கொண்ட தருணத்தில் இருந்து நித்ய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில் தான் சரப்ஜித் வாழ்ந்து வருகின்றார். உலகத்திலேயே கொடுமையானது தனது உயிர் பழிக்குப்பழி என்ற வகையில் துருப்புச்சீட்டாக இருக்கிறது என்பதை உணரப்படும்பொழுதுதான்.

இந்தியாவின் வாதத்தின் படி அவர் எல்லையோரப் பாமரன் மன்ஜித்தாக இருந்துவிட்டுப் போகட்டும் அல்லது பாகிஸ்தானிய நீதிமன்ற தீர்ப்பின்படி தன்னாட்டு மக்களைக் கொன்ற தீவிரவாதி சரப்ஜித்தாக இருந்துவிட்டுப்போகட்டும்.எப்படி இருந்தாலும் இந்த 21 வருடங்களில் மரணத்தையும் விட கொடுமையான துன்பங்களையும் சித்ரவதைகளையும் ஒரு உண்மையான தீவிரவாதி அனுபவிப்பதைக்காட்டிலும் அதிகமாகவே சரப்ஜித் அனுபவித்துவிட்டார். கால் லிட்டர் சாரயத்திற்கு 21 வருடங்கள், மேலதிகமாக மரணதண்டனை என்பது மிகக் கொடுமையானதுதான். செய்த குற்றத்திற்கே இரு தண்டனைகள் நியாயம் ஆகது என்ற நிலையில் செய்யாத குற்றத்திற்கு இரண்டு கடும் தண்டனைகளை அனுபவிக்க வைப்பது மனிதத் தன்மையாகாது.

இயற்கையால் அளிக்கப்பட்ட உயிர் இயற்கையாக மட்டுமே பிரிதல் வேண்டும். வலுக்கட்டாயமாக எடுக்க தனக்கே உரிமை இல்லாத பொழுது, எந்தவொரு தனி மனிதனுக்கோ அரசாங்காத்திற்கோ கிடையாது. பாகிஸ்தானிய அரசாங்கம் பெருந்தன்மையாக இளமையின் பசுமையை சிறையில் தொலைத்த சரப்ஜித் சிங்கை மன்னித்து விடுதலை செய்து எஞ்சியுள்ள காலத்திலாவது குடும்பத்தினருடன் வாழ வழிவகை செய்யவேண்டும். இதற்கு வலு சேர்க்கும் விதமாக இந்திய ஊடகங்களும் தங்களால் ஆன முன்னெடுப்புகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல், தனக்கு ஒரு குடம் மாமியாருக்கு ஒரு குடம் என பாரபட்சம் இல்லாமல் ஒட்டுமொத்த மரணதண்டனைக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும்.