Sunday, February 01, 2015

முடிக்கப்படாத கதை - சிறுகதை

"ஆர் யூ எ கோஸ்ட் ரைட்டர்" வீட்டின் கதவைத் தட்டியவர், நான் கதவைத் திறந்தவுடன் ஒரு வணக்கம் கூட வைக்காமல் பேச்சைத் தொடர்ந்தார்.

"மை நேம் ஈஸ் கார்த்தி, உங்களின் பழையவீட்டில் தேடினேன், இந்த வீட்டிற்கு ஷிப்ட் ஆயிட்டதா சொன்னாங்க"

"ஆமாம், வீடுமாறிட்டேன், சொல்லுங்க என்ன விசயம்"

"எனக்கொரு அட்டகாசமான அமானுஷ்யக் கதை வேண்டும், எழுதித் தரமுடியுமா "

எனது பெயரும் கார்த்தி என்றாலும் மண்டப எழுத்தாளனாக, அடுத்தவர்களுக்கு காசுக்கு , அவர்களின் பெயரில் எழுதிக்கொடுப்பதனால் Ghost Writer என்றே என் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பேன்.  ஒருவேளை அதை பேய்க்கதை எழுத்தாளன் என்று தவறாகப் புரிந்து கொண்டு பேய்க்கதை எழுதச் சொல்கின்றாரா என்ற ஐயம்

"ரெடி கேஷ்,  இரண்டு பக்கங்கள் வேண்டும் 10,000 தருகின்றேன்" என்றதும் உடனடியாக நீங்கியது.

"எந்த மாதிரியான அமானுஷ்யக்கதை  வேண்டும், சினிமாவுக்கா, ஷார்ட் பிலிமிற்கா"

"முடிவில்லாமல் பாதி மட்டுமே எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதையின் மறுபாதியை நீங்கள் எழுதிக்கொடுங்கள். உங்களைத் தவிர வேறுயாராலும் இதன் மறுபாதியை எழுத முடியாது. இதை சினிமாவா, ஷார்ட் பிலிமா , பத்திரிக்கையில் பப்ளிஷ் பண்ணுவதா , நாங்க பாத்துக்குவோம், யூ டோண்ட் வொர்ரி "

அவர் கொடுத்த தாளை இரண்டாக மடித்து எனது சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன். யாரோ ஒருவர் எழுதியக் கதைக்கு இரண்டாம் பகுதி எல்லாம் எழுத எனக்கு விருப்பமில்லை. நானே ஒருகதையை எழுதப்போகின்றேன். கதைக்குள் கதையாக கார்த்தி கொடுத்த கதையை சொருகிவிடலாம் என்று முடிவு செய்தேன்.

அரசியல் கட்டுரைகள்,  திரைக்கதை வசனங்களில் உதவி, மேடைப்பேச்சுகள் , சாமியார்களுக்கு வார இதழ் கட்டுரைகள் தயாரித்துக்கொடுப்பது என்று எழுத்தின் பயணத்தை மாற்றிவிட்டதால் சிறுகதைகள் எழுதி தசாப்தங்கள் ஆகிவிட்டன.  சிறுகதைகளிலேயே பேய்க்கதை எழுதுவதுதான் சிரமம்.  குறுகிய வட்டத்திற்குள் எழுதியாக வேண்டும். ஒரு நல்ல பேய்க்கதை ரசிகனால் , இரண்டாவது வரியிலேயே யார் பேய் , என்ன முடிவு என்பதைக் கண்டுபிடித்துவிடமுடியும். ஆனால் அவனை கடைசி வரி வரைப் படிக்க வைத்து முடிவை சொல்வதில்தான் பேய்க்கதை எழுத்தாளனின் கைவண்ணம் இருக்கின்றது.  இழந்த அந்த கைவண்ணத்தைப் பெற , நான் எழுதியிருந்த முப்பத்து சொச்ச பழையப் பேய்க்கதைகளை கணினியில் மீண்டும் வாசித்தேன்.  தாளில் எழுதியிருந்த சிறுகதைகள் எல்லாம் பழைய வீட்டின் பரணில் கிடக்கின்றது.  அடுத்த வாரம் போய் எடுக்க வேண்டும்.

எனது அமானுஷ்யக்கதைகளில், வருபவை யாரையும் கொல்லாது. வரும் பேய்களோ பிசாசுகளோ அமானுஷ்யங்களோ எல்லாம் வாழும் காலத்தில் நல்லவர்களாக இருந்தவை. கதைகளில் ரத்தமோ குரூரமோ செக்ஸோ இருக்காது.  மனிதன் - அமானுஷ்யம் சந்திப்பு , அல்லது அதற்கு முந்தைய வினாடிக்குண்டான திகில் இதுதான் என் அமானுஷ்யக்கதைகளின் மையப்பொருள்.

1. கதையைச் சொல்லிக்கொண்டிருப்பவன் ஒரு பேய். அவன் மனிதர்களை சந்திக்கின்றான்.
2. கதையைசொல்லிக்கொண்டிருப்பவன் ஒரு மனிதன், ஆனால் அவன் ஒரு பேயை சந்திக்கின்றான்.
3. கதையைச் சொல்லிக்கொண்டிருப்பவன் ஒரு பேய், அவன் பேயை சந்திக்கின்றான்.
4. கதையை சொல்லிக்கொண்டிருப்பவன் ஒரு மனிதன், அவன் சந்திக்கும் மனிதனை பேய் என்று தவறாக நினைத்துக் கொள்கின்றான்.

இந்த நான்கு வடிவங்களையே சுற்றி சுற்றி வெவ்வேறு கதைகளாக எழுதியிருக்கின்றேன்.  இந்த நான்கு வடிவத்திற்கும் அப்பாற்பட்டு ஒரு பேய்க்கதை எழுதவேண்டும்.  பேய்கள் இறந்து மனிதர்களாகப் பிறக்கினறன அல்லது பிறக்காத மனிதர்களே பேய்கள் ஹைக்கூ வரியை நீட்டி முழக்கி சிறுகதையாக  எழுதலாமா ? வேண்டாம் யாராவது ஒரு  மேற்கத்திய எழுத்தாளர் இதைப்போல எழுதியிருக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு .  நான் நகல் எடுத்துவிட்டேன் என்று புரளி கிளம்பலாம். இணையம் இல்லாத 1980 கள் என்றால் பிரச்சினையில்லை.  மொழிப்பெயர்த்தோ நகல் எடுத்தோ பெரிய எழுத்தாளராகிவிடலாம்.  2015 யில் சொடுக்குப்போடும் நேரத்தில் ஆதி அந்தம் தோண்டி எடுத்துவிடுவார்கள்.  எனக்கு நேரடிப்பிரச்சினை எதுவுமில்லை என்றாலும் கூட,  யார் பெயரில் வெளிவருதோ அவர்களுக்கு தர்மசங்கடங்களை உருவாக்கிவிடக்கூடாது என்ற நல்லெண்ணம் உண்டு. சமயங்களில் நான் எழுதியதே எனக்கு மறந்துப் போய்விடுகின்றது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஒரு சாமியாருக்கு எழுதிக் கொடுத்தது, மீண்டும் வரிக்குவரி மாறாமல் மனதில் தோன்ற , இன்னொரு சாமியாருக்கு எழுதிவிட்டேன். நல்லவேளை மின்னஞ்சல் செய்யும் முன்னர் மூளையில் பொறித்தட்டியதால் தப்பித்தேன்.

நல்லெண்ணத்தை விட்டுவிட்டு பய எண்ணத்தைக் கொண்டால்தான் பேய்க்கதை எழுதமுடியும்.
பயங்கொண்டு யோசித்தும் பேய்க்கதைக்கு கரு கிட்டாதபொழுது இயல்பாக நடந்த சம்பவத்தில் பேயேற்றி பேய்க்கதையாக மாற்றுவது எளிது.   இதுவரை நீங்கள் வாசித்ததை அப்படியே தட்டச்சினேன். அச்செடுத்து தாளில் ஒரு முறை வாசித்தேன். பாதிக்கதை தயாராகிவிட்டது. 5000 ரூபாய் அளவிற்கு நன்றாகவே வந்திருக்கின்றது. அச்செடுத்தத் தாள்களை மேசையின் மேல் வைத்துவிட்டு  பாதி உண்மையும் பாதி கற்பனையும் கலந்த கதைகளே சிறந்த கதைகளுக்கு எடுத்துக்காட்டு என்ற என் சிறுகதை இலக்கணப்படி மறுபாதிக்கு கற்பனை செய்ய ஆரம்பித்தேன்.  இனி வருவது என் கற்பனை.

கதவைத் தட்டி மீதிக் கதையை பேய்க்கதையாக  எழுத கேட்டவனுக்கு ஓர் அமானுஷ்ய அடையாளம் கொடுத்துதான் கதையை முடிக்கவேண்டும். அவன் பேய் என்று முடித்தால் படித்துபடித்து சலித்துப்போன முடிவாக இருக்கும். வேற்றுக்கிரகவாசி, ஏலியன் என்று முடிக்கலாம். ஆனால் அதற்கு ஏன், எதற்கு , எப்படி என்றெல்லாம் விளக்கவேண்டும்.

ஆரம்பம் சுமாராக இருந்தாலும் முடிவு சிறப்பாக இருக்கவேண்டும் என்று யோசித்ததில் நான் எழுதி முடிக்காமல் வைத்திருந்த கதையின் கதாப்பாத்திரம், அந்தப் பாதிக்கதையை எடுத்துக்கொண்டு என்னை சந்திக்க வருகின்றது என்ற இழைத் தட்டியது. நீ தான் என்னை உருவாக்கினாய்,  எத்தனை முறைக் கேட்பது.  இன்றாவது எனக்கொரு முடிவைச் சொல் என்று வீட்டின் கதவை வந்து தட்டியது. கதைகளை பாதியில் விடாதீர்கள். கதாப்பத்திரங்கள் துரத்தி வந்து முடிவைக் கேட்கும்.

கற்பனை முடிவு கிடைத்ததும் கதையின் கடைசிப்பகுதியை எழுதி முடித்தேன்.  மறுநாள்  , கதை முடிக்கச் சொல்லிக் கேட்ட கார்த்தி வந்தார். அச்செடுத்தத் தாள்களை அவரிடம் கொடுத்துவிட்டு,

"கார்த்தி, உங்க பர்ஸ்ட் ஆப் கதையை நான் படிக்கல, ஆனால் படிக்க வேண்டிய அவசியமுமில்லை  எங்க வேண்டுமானாலும் ஜாயின் பண்ணிக்கோங்க, கரெக்ட்டா பிட் ஆகும், அருமையான அமானுஷ்யக் கதையா பினிஷ் ஆகும் " என்றேன்.

"தாங்க்யூ, நாளைக்கு காசு கொண்டுவரேன்" என்றபடி பிரித்துப் பார்க்காமலேயே அச்சுத்தாள்களுடன் கார்த்தி  சென்றார்.

எனது மேசைக்கு வந்தேன். கதையின் முடிவுப்பகுதியின் தாள் மேசையின் மேலேயே இருந்தது. கார்த்தியிடம் முடிவில்லாமல் முதற்பாதியை மட்டும் தான் கொடுத்திருக்கின்றேன். சரி நாளை பணம் கொண்டு வரும்பொழுது  முடிவுப்பகுதியைக் கொடுத்துவிடலாம் .

கார்த்தி கொடுத்த அந்த முதற்பாதி கதை என்னவாக இருக்கும் என்று ஒரு சின்ன ஆர்வம் ஏற்பட்டது. நேற்றுப்போட்டிருந்த சட்டைப்பையில் இருந்தத் தாளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.  அப்படியே வரிக்கு வரி நான் இப்பொழுது எழுதிக் கொடுத்தக் கதை.  முடிவுப் பகுதி மட்டுமில்லை. கதவு தட்டப்பட்டது.  கதவு உடைபடுவதைப்போல தட்டும் வேகம் அதிகப்பட்டது... முடிவுப்பகுதியை எடுத்துக் கொண்டு கதவை நோக்கி நடந்தேன்.