Saturday, July 11, 2015

சுடுகாட்டு செல்ஃபி - திகில் சிறுகதை

"கார்த்தி, எங்கேயாவது கல்லறைக்கு ஒரு எட்டு போய்ட்டு வருவோமா"  

"எதுக்குடா கணேஷ்" 

"இப்போதைய டிரென்ட், சுடுகாட்டில இல்லாட்டி கல்லறையில போய் செல்ஃபி எடுத்து சோசியல் மீடியால போடுறதுதான்" 

என் அறைத்தோழன் கணேஷ், தீவிர சமூக ஊடக வெறியன். காட்டாற்று வெள்ளம்போல சமூக ஊடகத்தில் ஏதாவது ஒரு நிகழ்வு ஏற்பட்டால் இவன் காரண காரியமே ஆராயாமல் அதை செய்வான்.  கேள்வி கேட்டால் "இதான் நண்பா , இப்போதைய டிரென்டு" என்பது அவனது பதிலாக இருக்கும். சென்ற ஆண்டு, குளிரடிக்கிற நள்ளிரவில் குளிர்ந்த நீரை தன்மேல் ஊற்றிக்கொண்டதோடு மட்டுமல்லாமல், என் மேலேயும் ஊற்றி ஐஸ் பக்கெட் சாலெஞ் என்றான். ஒரு வாரம் காய்ச்சலடித்து கிடந்தது நான் மட்டுமே. 

"நான் வரலடா கணேஷ், எனக்கு இது தேவையில்லாத விஷப்பரிட்சையா தோணுது, எனக்கு அடுத்தவாரம் கான்பரன்ஸ் பேப்பருக்கு டெட்லைன் வேற இருக்கு, ஒரு சூப்பர் ரெபரன்ஸ் பேப்பர் புடிச்சிட்டா அதை வச்சி என் பேப்பரை முடிச்சுடுவேன், சோ டைமில்லை" 

"கான்பரன்ஸ் கீன்பரன்ஸெல்லாம் கதைவிடாத, பகுத்தறிவு பேசுற உனக்கு பேய் வந்து கடிச்சி சாப்புட்டுறும்னு பயம் கார்த்தி "

"நான் ஏன்டா நடுராத்திரி சுடுகாட்டுக்குப்போகனும்" என்ற நடிகர் வடிவேலுவின் மனக்குரல்தான் எனக்கும் கேட்டது. 

நான் என்னதான் பகுத்தறிவு பேசினாலும், கடவுளிடம் இல்லாத பயம் எனக்கு பேய்கள் மேல் உண்டு.  காரணம் மிகவும் எளிமையானது. இல்லை என்று நினைக்கும் கடவுள் வந்துவிட்டால் கூட நல்லம்சமாகத்தான் இருக்கப்போகின்றது. பேய் இல்லை என்று நினைத்து வம்பு பேசி, ஒருவேளை அது உண்மையாகவே வந்துவிட்டால் என்ன செய்வது.  அதனால் நான் வரவில்லை என்று மறுத்தேன். 

"போடா பயந்தாங்குளி, நீ வரலேன்னாலும் நான் போகப்போறேன்" 

இப்பொழுது எனக்கு அடுத்த பயம். ரோம் நகரத்தின் புறநகர்ப்பகுதியில் பெரிய ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் எங்களது வீடு.  கால்நடை தூரத்தில் எங்களது ஆய்வகமிருப்பதால் இவ்வளவு தள்ளி வீடு எடுத்திருக்கிறோம். இவனும் இரவில் கிளம்பிப்போய்விட்டால் எனக்கு தனியே இருக்க பயம். இவன் இஷ்டத்திற்கு கல்லறைக்குப்போய் அங்கு தூங்கிக்கொண்டிருக்கும் பேய்களை தட்டி எழுப்பிவிட்டு வீடுவரை கூட்டிவந்துவிட்டால் என்ன செய்வது என்ற அபத்தமான பயம் வேறு. 

"கணேஷா, நாம போய் போட்டோ எடுத்து, அந்த போட்டோவில் பேய் பிசாசு தெரிஞ்சுட்டா , வேண்டாம்டா பிளீஸ்" 

"கார்த்தி, வெறும் டுபாக்கூர் போட்டோஷாப்பையெல்லாம் நம்புறீயா , நீயெல்லாம் என்ன சயின்டுஸ்டு,   , பேயும் கிடையாது பிசாசும் கிடையாதுன்னு நாம நிருபிக்கிறோம். "

"பொதச்ச பின்னாடி எரிச்ச பின்னாடி திரும்பிப்பார்க்காம போற இந்தியா மாதிரி இங்கே கிடையாது , இவனுங்க கல்லறைக்கு உரிய மரியாதை செய்றவனுங்க , நாம போய் விளையாட்டா கல்லறை மேல நின்னு போட்டோ எடுத்து பேஸ்புக்ல போட்டால், அவமரியாதை செஞ்சுட்டோம்னு எவனாவது வீடு பூந்து அடிக்கப்போறான்டா.. மோர் ஓவர்,  கல்லறை மேல நின்னுக்கிட்டு, படுத்துக்கிட்டு போஸ் கொடுத்து போட்டோ எடுக்கிறது , செத்தவங்களை நிஜமாலுமே அவமானப்படுத்துறதுதான்" 

" நோ நோ உன்னோட பயத்தை எதுக்கு சென்டிமென்ட் போட்டு மறைக்கிற, இனிமே பகுத்தறிவுன்னு எதுவும் பேசாதே , ஷேம் ஷேம் பப்பி ஷேம்" 


"இது சென்டிமென்ட் கிடையாது,  வெறுமனே இல்லைன்னு நிராகரிப்பது மட்டும் பகுத்தறிவு இல்லை, லாஜிக்கலா யோசிக்கிறதும் பகுத்தறிவுதான்.எதுக்காக அனாவசிய ரிஸ்க் எடுக்கனும்,  நாம இருக்கிற ஏரியா ஒரு காலத்துல மாபியா மீட்டிங் பாயின்ட், செத்துப்போனவங்களை இங்கே இருக்கிற கல்லறையிலத்தான் புதைச்சிருப்பானுங்க , நாம போட்டோ எடுக்கிற சமாதிக்காரன்  மாபியாக்காரனுங்களுக்கு சொந்தக்காரனா இருந்தால் என்ன பண்றது,. கல்லறைத்தோட்டம் போதை மருந்து அடிக்ட், டிரக்ஸ் வாங்குறவன் விக்கிறவன் எல்லாம் ஒன்னு கூடுற இடம்னு வேற படிச்சிருக்கேன்.. பிரச்சினையாயிடும்னு தோனுது " 

"இந்த நொரநாட்டியமெல்லாம் வேனாம், வரியா இல்லியா" 

"வரேன் ஒரு கண்டிஷன் கணேஷ், கல்லறையில இருக்கிற ஆட்களோட பேர் வராதபடி போட்டோ எடுக்கனும் சரியா " 

"ஓகே டன்"

 இங்கே தனியாக இருப்பதைவிட கல்லறைத்தோட்டத்தில் துணையுடன் இருப்பது பரவாயில்லை என்பதால் கணேஷுடன் கிளம்பினேன். 

நள்ளிரவில், தேய்பிறை வெளிச்சத்தில் நடக்கும்பொழுது நேரம் ,மற்றவர்களைக் காட்டிலும் மெதுவாக செல்லும் என்று ஐன்ஸ்டீன் அவரோட சார்பியல் கோட்பாட்டில் சொல்லியிருப்பாரோ. குறைந்த தூரத்தை கடக்க  ஏதோ பலமணிநேரம் எடுத்துக்கொண்டதைப்போல ஓர் அசதி .ஒரு வழியாக ஒரு கல்லறைத்தோட்டம் தென்பட்டது.

உள்ளே நுழைந்தோம். முதல் கல்லறை கிறிஸ்டியானோ எர்பானி. கல்லறையின் மேல் நாங்களிருவரும் சாய்ந்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்டோம். எடுத்து முடித்தவுடன் எடுத்த படத்தை ஒரு முறை சரிபார்த்துக்கொண்டேன். பேய் பிசாசு எதுவுமில்லை.  அடுத்தது பவுல் ராபின்சன் , பின்னர் யோனஸ் வில்லியம்சன் நான்கவது கல்லறையில் இருந்த  பெயரைப்பார்த்ததும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது.  ஆர்.எஸ்.சுவாமிநாதன் என்றிருந்தது. 

"கணேஷ், என்னமோ தப்பா படுது, இட்டாலியன் கத்தோலிக்க கல்லறையில எப்படிடா சுவாமிநாதன், வேண்டாம்டா போயிடுவோம்" 

"கார்த்தி, பயப்படாதே. செகன்ட் வேர்ட் வார் அப்போ, நிறைய பிரிட்டீஷ் இன்டியன் சோல்ஜர்ஸ் பாசிஸ்டுகளை எதிர்த்து சண்டை போட்டாங்க , அதுல செத்தவங்களை நிறைய இடத்தில் பொதச்சி மரியாதை செஞ்சாங்க , பவுல் ராபின்சன், யோனஸ் வில்லியம்சன் கூடத்தான் இத்தாலியன் நேம்ஸ் கிடையாது .. கூல் கூல் நண்பா" 

சுவாமிநாதன் கல்லறையில் ஏறி நின்று எடுக்கும்பொழுது என் காலணிகளை கழட்டிக்கொண்டேன். பயம் தானாகவே மரியாதை கொடுக்க வைத்தது. 

வந்த வழியே வீடுவந்து சேர்ந்தோம்.  நிபந்தனையின் படி கல்லறையில் பெயர் தெரிந்த படங்களை கணேஷ் முற்றிலுமாக அழித்துவிட்டு எஞ்சியப்படங்களை மட்டும் சமூக ஊடகங்களில் தரவேற்றினான். இத்தாலிய விடியற்காலை, இந்தியாவில் பரபரப்பான நேரமென்பதால் விருப்பங்களும் கருத்துகளும் பகிர்வுகளும் அள்ளின. கணேஷ் நிம்மதியாக தூங்கினான். 

என்னால் தூங்க இயலவில்லை. ஆங்கிலேய, அமெரிக்க , இந்தியப் பெயர்கள் எப்படி கல்லறையில்.. எனக்கு இரண்டாம் உலகப்போர் போர்வீரர் கல்லறைத்தோட்டத்தைப்பற்றி வரலாற்று சுவாரசியம் தொற்றிக்கொண்டது.  முற்றிலும் விடிந்ததும் , முந்தைய நள்ளிரவு நடந்த அதே பாதையில் கல்லறைத்தோட்டத்தை தேடிப்போனேன். 10 - 12 கிலோமீட்டர்கள் நடந்தும் என்னால் அந்த கல்லறைத் தோட்டத்தை கண்டே பிடிக்கமுடியவில்லை.  பாதை மாறி வந்துவிட்டோமா .. இல்லையே சரியான பாதைதான் என்று எனக்குள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, ஒரு கார் வந்து என்னருகில் நின்றது. 

"இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் கார்த்தி"  என்று ஆங்கிலத்தில் கேட்டார் என் பேராசிரியர். 

"ஒன்றுமில்லை, ஆராய்ச்சித்தாள் வேலை நகரவில்லை, ஒரு மாற்றத்திற்காக இங்கு நடந்து வந்தேன்" 

"சரி , வண்டியில் ஏறு"

வண்டியில் ஏறிய பின்னர்

"இங்கே அருகில் ஏதேனும் கல்லறைத்தோட்டமிருக்கிறதா ? குறிப்பாக இரண்டாம் உலகப்போரில் மறைந்த பிரிட்டீஷ் அமெரிக்க வீரர்களின் கல்லறைத்தோட்டம்"  


"35 ஆண்டுகளாக இங்கிருக்கிறேன். இந்த சாலையில் கல்லறை எதுவும் கிடையாதே. நிச்சயமாக போர்வீரர்களின் கல்லறை இங்கு கிடையவே கிடையாது... அது சரி, உனது கருத்தரங்க ஆராய்ச்சித்தாளுக்கான நல்லதொரு தரவை காலையில் கண்டுபிடித்துவிட்டேன் உனக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறேன் , படித்துப்பார்"

எனது நினைவுகள் அந்த இல்லாத கல்லறைத்தோட்டத்தின் மேலேயே இருந்தபோதும் அனிச்சையாக எனது திறன்பேசியில் கணக்கைத் திறந்து பேராசிரியரின் மின்னஞ்சலில் இணைப்பை வாசிக்க ஆரம்பித்தேன்.  அந்த ஆராய்ச்சித்தாளின் ஆசிரியர்களின் பெயர் வரிசைக் கிரமமாக கிறிஸ்டியானோ எர்பானி, பவுல் ராபின்சன், யோனஸ் வில்லியம்சன் , ஆர்.எஸ்.சுவாமிநாதன். 
***********************************************************************************************************************