Friday, December 27, 2013

டி. ராஜேந்தர் - திரையுலக தாவீது (எழுதியவர் கிளிமூக்கு அரக்கன்)

எனது மண்டப எழுத்தாளர்களில் ஒருவராக இருந்த கிளிமூக்கு அரக்கன் என்பவர் எழுதிய Facebook கட்டுரை (https://www.facebook.com/kilimookku ) அவரின் அனுமதியுடன் இங்கு பதிவு செய்யப்படுகின்றது. போற்றலும் தூற்றலும் அவருக்கே !!


----
திரைத்துறையில் இருப்பவர்கள் பெரும்பாலும் , ஆளும் அதிகார மையத்தை பகைத்துக் கொள்ளவிரும்பவே மாட்டார்கள். எம் ஜி ஆரைத் திகட்ட திகட்ட குளிப்பாட்டியவர்கள், இன்று அதிகாரத்திற்கு கலைஞர் வந்தாலும் சரி, ஜெ. வந்தாலும் சரி ஆளுயர மாலையை போட்டு மயக்கிவிடலாம் என காத்துக் கொண்டிருப்பவர்கள். விதிவிலக்குகள் இல்லையா என நீங்கள் கேட்கலாம். அந்த விதிவிலக்குகளுக்கு சிறந்த உதாரணம் டி. ராஜேந்தர். 

கலைஞர் அவர்கள், 'நம்பியாராக' மட்டும் காட்டப்பட்ட எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலங்களில் துணிந்து திமுகவை திரைப்படங்களில் பாலில் சர்க்கரையாகக் காட்டியவர். 
தன் இசைக்கு அசைய வேண்டும் என விரும்பிய எம்.ஜி. ஆரின் 80 களில் திமுகவிற்காக முன் நின்ற சொற்ப திரைத்துறையாளர்களில் ஒருவர் டி.ஆர். 
 திமுகவின் வனவாசக் காலங்களில் கலைஞருடன் நின்ற லக்‌ஷ்மனர்களில் ஒருவர் டி.ஆர். 

எம் ஜி. ஆர் காலத்திற்குப்பின்னர் ஜெ. முதல்வராக இருந்தபொழுது அவரை எதிர்த்து அரசியல். இடையில் பூங்கா நகர் சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றிய காலக் கட்டத்திற்குப்பின்னர் கலைஞரை எதிர்த்து அரசியல். அதிகாரத்தில் இல்லாதவர்களை எதிர்த்து அரசியல் செய்வது என்பது எளிது. ஆனால் எம் ஜி. ஆர்., ஜெ., கலைஞர் என அதிகாரத்துடன் மோதும் தாவீதாகவே டி. ஆர் இருந்து இருக்கின்றார். இப்பொழுது கூட ஜெ. அவர்களைச் சந்தித்து கட்சியை இணைத்து சுலபமாக சிலப்பல விசயங்களை கைகூட வைத்து இருந்து இருக்கலாம். ஆனால் அதிகாரத்தை எதிர்த்து அரசியல் செய்ய , துணிந்து மீண்டும்  அதிகாரத்தில் இல்லாத திமுகவிடம் வந்து இருக்கின்றார். 

தன்னைத்தவிர அவர் கட்சியில் வேறு யாரும் இல்லை என , டி.ஆர் அவர்களின் தனிபலத்தைப் பற்றி கேலி செய்பவர்களுக்கு ஒரு தகவல் 1991 ஆம் ஆண்டு ஜெ. வை எதிர்த்து பர்கூரில் , தனது தாயக மறுமலர்ச்சி கழகம் சார்பில் போட்டியிட்டு 29 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாமிடம் வந்தவர். திமுக வை விட்டு வைகோ பிரிந்தபின்னர், திமுகவிற்கு பலம் சேர்க்க மீண்டும் கட்சியில் இணைந்து இக்கட்டான சூழல்களில் ராபின் சிங்கைப் போல கைக்கொடுப்பவர் டி. ஆர். 

.கலைஞரிடம் ஒரு பிரச்சினை என்னவென்றால் தெரிந்தோ தெரியாமலோ சிலப்பல சமயங்களில் தில்லானா மோகனம்பாள் பட வைத்தி போன்றவர்கள் ஏற்றிவிட நம்பியாராக மாறிவிடுவார். பொன்னை வைக்க வேண்டிய இடத்தில் பூவையும் பூ வைக்க வேண்டிய இடத்தில் கசப்பையும் மாற்றிவைத்துவிட்டு விசுவாச உள்ளங்களை விலக வைத்துவிடுவார். கோபித்துக் கொண்டு போகின்ற சிலர் திரும்புகின்றனர். சிலர் கசப்புடன் திரும்பாமலேயே இருந்துவிடுகின்றனர். டி. ஆர் இன்று மீண்டும் திமுகவிற்கு திரும்பி இருக்கும் சூழலில் பத்தோடு பதினொன்றாக மேடைப்பேச்சாளராக மட்டும் பயன்படுத்தாமல் டெல்டா மாவட்டங்களில் , ஏதேனும் ஒரு பாராளுமன்றத் தொகுதியில் டி. ஆரை நிற்கவைக்க வேண்டும். 

டி. ஆரைப் பற்றிய பதிவு என்றால், அவரைப்பற்றிய கிண்டல் இல்லாமல் முடிப்பதா... முலாயம்சிங் யாதவோ மாயாவதியோ பிரதமராக  பேச, மோதி அவர்கள் எதிர்க்கட்சித்தலைவராக அவர்களுக்கு  பதில் அளிக்க, இடையில் டி. ஆர் புகுந்து இந்தியில் அவர் பாணியில் பேச அட்டகாசமாக இருக்கப்போகின்றது அமையப்போகும் பாராளுமன்றம்.