Saturday, December 14, 2013

வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுக தனித்து நிற்கவேண்டும், ஏன்? - கட்டுரை ( கிளிமூக்கு அரக்கன் )

எனது மண்டப எழுத்தாளர்களில் ஒருவராக இருந்த கிளிமூக்கு அரக்கன் என்பவர் எழுதிய Facebook கட்டுரை (https://www.facebook.com/kilimookku ) அவரின் அனுமதியுடன் இங்கு பதிவு செய்யப்படுகின்றது. போற்றலும் தூற்றலும் அவருக்கே !!

----
முன்குறிப்பு :- விஜயபாரதம் வாசிப்பவர்கள், ஆம் ஆத்மி ஆத்மாக்கள், மோடி மஸ்தான்கள் , பேஸ்புக்கில் ராஜராஜன் கண்ட தமிழ்த்தேசியங்களை அமைத்த ஆண்ட பரம்பரையினர் ஆகியோர் இந்தப் பதிவைத்தவிர்த்து விடலாம். கலைஞரின் கசின்ஸ் , மாற்று சிந்தனையாளர்கள் , அரசியல் பார்வையாளர்கள், கட்சி சார்பற்ற சாமானியர்கள் ஆகியோர் இந்தக் கட்டுரையைப் படிக்கலாம் 

கடுகாய் சிறுத்தாலும் காரம் குறையாமல் திராவிட இயக்க விழுதுகளை இன்னும் தாங்கிப்பிடித்துக் கொண்டு இருக்கும் ஒரே இயக்கம் திமுக என்பதை திமுகவின் விமர்சகர்களும் மறுக்க மாட்டார்கள். அத்தகைய பாரம்பரியமும் நெடும் வரலாறும் கொண்ட இயக்கம் 2006 க்குப்பின்னர் ( கவனிக்க 2009 அல்ல ) முதுகில் சுமக்கும் வேதாளங்களால் தடுமாறுவதைப் பார்க்கையில் தமிழகம் 'சதுர்வேதி மங்கல' காலங்களுக்கு மீண்டும் போய்விடுமோ என்ற அச்சம் எழுகின்றது. அறுபது ஆண்டு கால வரலாற்றில் , பாதிக்கு மேல் , அதிகாரம் எதுவும் இல்லாமல் வெறும் தொண்டர் பலத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் பீனிக்சாய் விடியலை நோக்கிப் பறந்து கொண்டிருந்த திமுக , தனது விக்கிரமாதித்த பலத்தை மறந்து அனாவசிய சுமைகளை சுமந்து சுமந்து சுயத்தை இழந்து கொண்டு இருக்கின்றது. 

திமுக தனித்து நின்று கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. சாதாரணமாக, தனித்து நின்றே வென்று இருக்க வேண்டிய 1996 ஆண்டு தேர்தலை தேவையில்லாமல் , சைக்கிளில் ஜி.கருப்பையா , ரஜினி போன்றவர்களை வைத்து திமுக ட்ரிபிள்ஸ் அடித்து ,வென்றதும் என்னமோ அவர்களால்தான் திமுக வென்றதைப்போல ஊடகங்களால் மாயப்பிம்பம் கட்டமைக்கப்பட்டது. தொலைந்துப் போய் இருக்க வேண்டிய பண்ணையார்களுக்கான வாக்குகளை திமுக மீட்டுக் கொடுத்துவிட்டது. திமுகவின் முக்கியப் பிரச்சினையே முகவரி இல்லாதவர்களுக்கு அரண்மனை கொடுத்து அவர்களாலேயே வீழ்வதுதான். 

காங்கிரசை சேர்ந்த , மணிசங்கர் அண்மையில் ஒரு கருத்தைத் தெரிவித்து இருந்தார் . அது என்னவென்றால் , காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து தங்களை மீள் ஆக்கம் செய்து கொள்ளவேண்டும் என்பதுதான் அந்தக் கருத்து. அந்தக் கருத்தை திமுகவைப் பொறுத்தவரை தனித்து நின்று தங்களை மீள் உருவாக்கம் செய்துகொள்ள வரும் பாராளுமன்றத் தேர்தல் மிகப்பெரும் வாய்ப்பு என்பதாக மொழிமாற்றிக்கொள்ளலாம்.

திமுக கூட்டணியில் , கூட்டத்தோடு கூட்டமாக கோவிந்தா போட்ட ஆண்டிப்பண்டாரங்கள், சமணத்தையும் புத்தத்தையும் ஏற்றியதைப்போல சமத்துவத்தையும் பாஸிச மரத்தில் கழுவில் ஏற்ற தயாராகிக் கொண்டு இருக்கும் வேலையில் , வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடுவது என்பது, 'மனுக்கள் மறுபிரவேசம் செய்ய முற்பட்ட 50 களில் தேர்தலை சந்தித்த அளவிற்கு முக்கியத்துவமானது. 

வெறும் 20 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு , மற்ற தொகுதிகளில் சொத்தை சோப்ளாங்கிகளுக்கு வேலை செய்யும் திமுக தொண்டனை, 40 தொகுதிகளிலும் நமக்காக வேலை செய் என்றால் பத்து மடங்கு உற்சாகமாக வேலை செய்வான். 50களிலும் சரி 60களிலும் சரி 80 களிலும் சரி இன்றைய நுனிப்புல் மேயும் பேஸ்புக் தலைமுறைவரை திமுகவின் பலம் கலைஞர் அல்ல, கலைஞருக்காக கால் வயிறு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு ஊர் சுற்றி வேலைப்பார்க்க , அடிமட்டத்தில் இருந்து உயர்மட்டம் இருக்கும் திமுகவின் தொண்டர்கள்தான். கோலியாத்துகளை எதிர்த்து தனித்து இருக்கும் தாவிதுகளை விரும்பும் சமூக மனோபாவத்தில், திமுக தனித்து நிற்கும்பொழுது திமுகவை உள்ளூரக் காதலித்து , இன்று தூர நின்று துற்றும் பைபிளில் வரும் 'கெட்ட குமாரர்களும்' இல்லம் திரும்பும் வாய்ப்பு அதிகம். 

இவை எல்லாம் சாமானியன் ஆன எனக்கே தெரியும் பொழுது , சூத்திரனுக்கும் சூழ்ச்சி வரும் என அறியவைத்த சகலகலாவல்லவருக்கு தெரியாமலா இருக்கும். இது நாள் வரை, பூதங்கள் கேட்டதைக் கொடுக்காது போனால் , தேவதைகளாய் மாறி எதிர்ப்பக்கம் போய் வரமளித்து விடுமோ என்ற எண்ணத்தில் உள்ளதில் பகிர்ந்து அளித்து பூதங்களின் தவறுகளுக்கு தன் தலையைக் காவுக் கொடுத்து கொண்டிருப்பவர் கலைஞர். 

ஆனால் இதுவரை இருந்த தேர்தல்களைப் போல அல்லாமல் , வரும் தேர்தலில் தமிழகம் முதன் முறையாக பிரதமர் வேட்பாளரையும் முன் நிறுத்துகின்றது.. பிரதமர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தில் இருக்கும் ஜெ. ஓர் உறையினுள் மற்ற வாள்களை அனுமதிக்க மாட்டார். குறுவாள் ராகுலும், ஏற்கனவே ரத்தச்சுவைக் கண்ட கொடும் வாள் மோடியும் புரட்சித்தலைவியின் அருகினில் கூட போக முடியாது. ஆக அம்மையார் 40 உம் நமக்கே என பாளையத்துக்காரர்கள் சீமான், நெடுமாறன், தா. பாண்டியன் , சரத்குமார் போன்றவர்களின் துணையுடன் களம் இறங்குவார். எதிர்முகாம் நிலை உறுதியாக ஏற்கனவே தெரிந்து விட்டபடியால் துணிந்து வேதாளங்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் தனித்து ஆட்டத்தில் குதிக்கலாம். 

அமைதியடையாத பேய்களைப் போல, காங்கிரசும் பிஜேபியும் தனித்துவிடப்படும் பொழுது , அதிமுக Vs திமுக என்ற நேரிடைப் போட்டி வருகையில் , எதிர் மறையாக யோசித்தாலும் குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் ஆவது திமுக வெற்றிபெறும் வாய்ப்புண்டு . . இந்த எண்ணிக்கை கூட்டணியில் போட்டி போட்டு வெல்லப்போகும் தொகுதிகளின் மதிப்பைக் காட்டிலும் அதிகம். 40 களிலும் திமுகவே போட்டியிடும் பொழுது , அத்திருப்தி ஆட்களின் உள்ளடி வேலைகளும் குறையும், சொல்ல முடியாது எதிர்பார்க்கும் எண்ணிக்கையை விட அதிகமாகவே வெல்லலாம் . 

ஒரு வேளை ஜெ. ஒட்டு மொத்தமாக 40 களிலும் வென்றாலும் பெரிய லாபம் இருக்கின்றது. 40 யை வைத்துக் கொண்டு கண்டிப்பாக முன்றாம் அணியில் ஜெ. பிரதமர் ஆவார். பிரதமர் ஆனவர் மீண்டும் முதலமைச்சர் ஆக திரும்ப மாட்டார். சுயத்தைப் பரிசோதித்த திமுக 2016 சட்டமன்றத் தேர்தலில் அட்டகாசமாக ஏதேனும் ஓர் அதிமுக டம்மி முதல்வர் வேட்பாளரை எதிர்த்து அனாயசமாக வெல்லும் வாய்ப்பும் அதிகம். 

80 களிலும் ஆரம்ப 90 களிலும் மக்களவையில் ஓர் உறுப்பினர் கூட இல்லாமல் , திமுக இருந்த காலங்கள் உண்டு. அக்காலக் கட்டத்திலும் ஈழப்பிரச்சினை ஆகட்டும் , தமிழக நலன் சார்ந்த விசயங்கள் ஆகட்டும் சார்ஜா டெண்டுல்கரைப் போல சூறாவளி ஆட்டங்கள் திமுக ஆடியதுண்டு. ஆக மக்கள் பிரச்சினையை தீர்த்து வைக்க , மக்களவை உறுப்பினர்கள் இல்லாமலேயே திமுகவினால் முடியும். இது திமுக தோற்றுப் போக வேண்டும் என எழுதிய பத்தி அல்ல. திமுக தோற்றாலும் பலத்தைக் காட்டி தேர்தலாக இருக்கவேண்டும் என எழுதப்படுவது. கிரிக்கெட்டில் பெரிய இலக்குகளைத் துரத்தி தோற்றுப்போனாலும் தோற்ற அணி மதிக்கப்படும். அத்தகையத் துரத்தலை திமுக செய்யவேண்டும். 

லெனினிற்குப் பின்னர் ஸ்டாலின் பலம் வாய்ந்த தலைவராக தனித்து உருவேடுத்தலைப் போல, திமுகவின் ஸ்டாலின் விசுவரூபம் எடுக்க இந்த பாராளுமன்றத் தேர்தலை லிட்மஸ் டெஸ்டாக பார்ப்பது திமுகவின் வரலாற்றுக் கடமை. தனித்து நிற்கவேண்டும் என்பது தூரத்தில் நின்று திமுகவின் தவறுகளை உள்செரித்துக் கொண்டு, இன்னமும் திமுகவைக் காதலித்துக் கொண்டு இருக்கும் கிளிமூக்கு அரக்கனின் விருப்பம் மட்டுமல்ல.. நாடி நரம்பு ரத்தம் என அணு அணுவாக திராவிட எண்ணங்கள் கொண்டு இருக்கும் ஒவ்வொரு திமுக தொண்டனின் விருப்பமும் கூட. இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமை குலையாமல் இருக்க, மதவாத சக்திகள், ஊழல் எதிர்ப்பு என்ற பெயரில் மனுவாத ஆத்மிக்கள் தலையெடுக்காமல் இருக்க பலம் பொருந்திய திமுக தமிழகத்திற்கு மட்டுமல்ல , ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் அவசியம். நகைச்சுவையாக சொல்ல வேண்டுமானால் , திமுக சத்ரியன் படத்தில் நடிகர் திலகன் சொல்லுவதைப்போல பழைய பன்னீர்செல்வமாக திரும்பவேண்டும். 

பின்குறிப்பு :- பொதுக்குழுவில் திமுக பிஜேபி அல்லது காங்கிரசுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என முடிவு செய்யலாம். வெற்றி கூட பெறலாம். ராஜாஜியுடன் கூட்டணி வைத்தபோழுதும் இந்திராவுடன் கூட்டணி வைத்தபோழுதும் வாஜ்பாயுடன் கூட்டணி வைத்த பொழுதும் சகித்துக் கொண்டு வேலை பார்த்த  மன நிலையில்தான் வரும் தேர்தலில் தொண்டர்கள் வேலை செய்வார்கள். அப்படியாகும் பட்சத்தில் திமுக நிற்கும் இடங்களில் திமுகவிற்கு வாக்கு அளியுங்கள். மீதி இடங்களில் அதிமுகவிற்கு வாக்கு அளியுங்கள் என்பது என் பரப்புரையாக இருக்கும்.

On December 15th, DMK General Council decided NOT to have any alliance with either Congress or BJP. It is a good news for DMK cadres.