Tuesday, December 17, 2013

கலைஞர் , சோ. ராமசாமி and a conspiracy theory - கட்டுரை - கிளிமூக்கு அரக்கன்

எனது மண்டப எழுத்தாளர்களில் ஒருவராக இருந்த கிளிமூக்கு அரக்கன் என்பவர் எழுதிய Facebook கட்டுரை (https://www.facebook.com/kilimookku ) அவரின் அனுமதியுடன் இங்கு பதிவு செய்யப்படுகின்றது. போற்றலும் தூற்றலும் அவருக்கே !!

-----
கலைஞர் கடைசி நேரத்தில் யு டர்ன் அடித்து வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கொடுப்பார் எனக் காத்திருப்பவர்களுக்கு என்னுடைய மற்றும்ஓர் அபத்தமான ஹைப்பொதிஸிஸ்.

அரசியலில் கலைஞரும் அரசியல்-தரகு வேலைகளில் சோ. ராமசாமியும் நீ அரிசி கொண்டு வா , நான் உமி கொண்டு வருகின்றேன் ஊதி ஊதி திங்கலாம் வகையைச் சேர்ந்தவர்கள் . அப்படிபட்டவர்கள் மீண்டும் ஜோடியாக காட்சி தருகிறார்கள் என்றால் யாரோ ஒருவர் வெல்லப்பாகும் மற்றொருவர் இடித்த அரிசியும் வைத்து இருக்கின்றனர் என பொருள். இப்படி வின் - வின் சூழல் இல்லை என்றால் ஒழிய ஒன்று சேரவே மாட்டார்கள். கலைஞரும் குடும்பத்துடன் சோ. இல்லத்திருமணத்திற்கு குடும்பத்துடன் போய் வாழ்த்தி இருந்து இருக்கமாட்டார்.

1. சோ. ராமசாமிக்கு மோடி பிரதமர் ஆக வேண்டும். ஒரு காலத்தில் இவர் அத்வானியின் ரசிகராக இருந்தாலும் , இளைய அத்வானியான மோடி போன்ற ஒருவர் காங்கிரசில் இருந்து இருந்தாலும் மூன்றாம் அணியில் இருந்து இருந்தாலும் சோ. ஆதரிப்பார்.  பிஜெபி க்கு தலைகீழாக நின்று நீர் குடித்தாலும் மெஜாரிட்டி கிடைக்காது எனும் சூழலில் ஆள் பிடிக்க தயாரானவர்தான் சோ. ( சோ. அவர்கள் , தமிழருவி மணியன் சாரைப் போல பஞ்சத்திற்கு ராஜகுரு ஆனவர் அல்ல என்பது நினைவுகூறத்தக்கது )

2. இங்குக் கிடைக்கும் 40 என்பது மிகப்பெரும் எண்ணிக்கை. பி ஜே பி - தி மு க இணையவேண்டும் இரண்டு தரப்பில் யார் ஆசைப்பட்டு இருந்தாலும் வெற்றி என்பது ஒட்டு மொத்தமாக துடைத்துக் கொண்டு போய்விடும் என இரு தரப்பிற்கும் தெரியும். தமிழகத்தைப் பொறுத்தவரை மோடிக்கான வாக்குகள் என்பது ஜெ விற்கான வாக்குகளின் ஒரு பகுதி. திமுக இருந்தால் அவை அனைத்தும் ஜெ விற்கே மீண்டும் போய்சேரும். ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணியால் அதிருப்தியாக இருந்த கூட்டத்துடன் மோடியின் மேல் இருக்கும் கோபத்தினால் விசுவாச சிறுபான்மை வாக்கு வங்கியும் ஜெ விற்குப் போய் சேரும். ஆக பி ஜே பி - தி மு க அணி என்பது கிட்டத்தட்ட 40 யையும் அம்மையாருக்கு தாரை வார்ப்பதைப் போலத்தான்.

3. பி ஜே பி - அதிமுக அமைவதை பெரும்பாலான மனுவாதிகள் விரும்பினாலும் சொற்ப இடங்களைக் கொடுத்துவிட்டு , வென்ற பின்னர், மோடியை தமிழகத்திற்கு நான் தான் அறிமுகப் படுத்தினேன் , என்னால் தான் அவர் வென்றார் என ஜெ., ராஜீவ் காலத்து கலாட்டாக்களை செய்வார் என்பதை மனுவாதிகள் அறியாதவர்கள் அல்ல.

4. மத்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை திமுக நம்பிக்கையான கட்சி. லாப நட்டத்தில் முன்ன பின்ன இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போகக் கூடியவர்கள்.

5. பிஜேபி தலைமையில் ஓர் அணி -- பி ஜே பி + வைக்கோ + மாம்பழம் ( கருப்பு எம் ஜி ஆர் வந்தால் லாபம் வராவிடினும் நட்டம் இல்லை)  நாகர்கோவில் , சேலம் , கோவை , விருதுநகர் என குறைந்தது நான்கு இடங்களிலாவது வெல்ல வாய்ப்பு.

6. அதிமுக - திமுக என நேரடிப் போட்டியை உருவாக்குகையில் அதிமுகவின் சனாதன - ஆண்ட பரம்பரை வாக்குகள் பிஜேபி அணிக்கு பிரிந்து விட , தனித்து நிற்கின்றோம் என இரட்டிப்பு உற்சாகத்தில் வேலைபார்க்கும் திமுக அதிக இடங்களில் கத்தியின்றி இரத்தமின்றி சுலபமாக வெல்ல வாய்ப்பு உண்டு

7. அறுவடை திமுகவிற்கு என்றாலும் பலன் பி ஜே பிக்குத்தான். நிலையான ஆட்சி நாட்டிற்கு வேண்டும் 
என , தேர்தலுக்குப் பின்னர் திமுக பிஜேபிக்கு ஆதரவு நல்கும். (கடைசி நேரத்தில் , முதல் சில மாதங்களுக்கு அத்வானி பிரதமர் ஆக்கப்பட்டு அனைத்தும் சரி கட்டப்பட்டாலும் படலாம் )

8. தமிழகத்தில் திமுக தனித்து நிற்பது என்பது பி ஜே பி மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என வேலை செய்யும் அரசாங்க 'எந்திரத்தின்' மாஸ்டர் ஸ்ட்ரோக் மூவ். திமுகவிற்கு மீள் எழுச்சி. ஆக வின் வின் .

பொதுசனம் மத்தியில் ஆளுவது காங்கிரஸ் அல்லது பிஜேபி என நினைக்கலாம் , ஆனால் நிஜத்தில் ஆள்வது அரசு அதிகாரிகளும் அவர்களை ஆளும் தேசிய / பன்னாட்டு நிறுவனங்களும் தான். அவர்களின் நலன்களை தொடர்ந்து காப்பாற்ற ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தைக் கொண்டு வர , மோடியின் மாயப்பிம்பத்தைப் பயன்படுத்தி அத்தனை விதமான வெட்டி ஓட்டல் வேலைகள் தொடங்கிவிட்டன. 'அவர்களுக்குத்' தேவையான மாற்றத்தைக் கொண்டுவர ஏற்கனவே கேஜ்ரிவாலைத் தயார்படுத்தியாகிவிட்டது. கலைஞரின் வெற்றியையும் உறுதி செய்தாகிவிட்டது. அடுத்து ஆந்திர ஜெகன் மோகன் என வேலைகள் ஜரூராகத் தான் நடக்கின்றன.

இனி பாருங்கள் , வழக்கமாக கலைஞரை வசைபாடும் நாளிதழ்கள் இனி வசையைக் குறைத்துக் கொள்ளும். சோ. ஸ்டாலின் புகழ் பாடுவார். திமுக தனித்து நிற்பது மிகப்பெரும் ராஜதந்திரத்தின் ஒரு பகுதி என்றாலும் , கலைஞர் வரம் கொடுக்கும் நிலையில் இருப்பவர். வசைபாடிய திமுகவை 'குளிப்பாட்டுவது' 67 யில் ராஜாஜி காலத்திலும் 96 யில் கடும் ஜெ எதிர்ப்பு காலத்திலும் நடந்து இருப்பதால் அவர்களுக்குப் புதிதாக ஒன்றும் இருக்காது. கலைஞரும் வரம் கொடுக்கும் வாய்ப்புகளைத் தவறவிடமாட்டார். ஆக வரும் நாட்கள் படு சுவாரசியமாக இருக்கப் போகின்றன.