Tuesday, November 05, 2013

பேஸ்புக்கும் child porn / child abuse ஆபாசப் பக்கங்களும்

அச்சு ஊடகமாக இருக்கட்டும் , ஒலி ஊடகமாக இருக்கட்டும் திரை ஊடகமாக இருக்கட்டும், கணினி , இணைய ஊடகமாக இருக்கட்டும் , மனிதனின் அடிப்படைத் தேவையான செக்ஸ் விஷயங்களுக்காகவும் அவைப் பயன்படுத்தப்படும். சமூக ஊடகங்கள் தலை எடுத்த பின்னர் அரசியல், சமூகம் பற்றிய விசயங்களைப் பேச எப்படி மக்கள் எத்தனித்தார்களோ , அந்த அளவிற்கு கலவி சம்பந்தப்பட்ட விசயங்களைப் பேசவும் ஒரு கும்பல் கிளம்பும். பிளாக்கர் வலைப்பூக்கள் , பேஸ்புக் ஆகியன விதிவிலக்குகள் அல்ல. தமிழ் ஆண்ட்டிகள் , மல்லுப் பெண்கள் என ஏகப்பட்ட பக்கங்கள் பேஸ்புக்கில் விரவி கிடக்கின்றன. பெரும்பாலனாவை படங்களுடன் லத்தீன் வரி வடிவத்தில் எழுதப்பட்டிப்பவை. (தி இந்து செய்தியாளர் ஜெயமோகன் அவற்றைப் பார்த்தால் மகிழ்வாரா என்பது வேறு விஷயம்). பெண்களைப் போகப் பொருளாகப் பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டியது  என்றாலும் , சம்மதத்துடன் கவர்ச்சியாக காட்சியளித்தவர்களின் படங்களை விரும்பிப் பார்க்கக் கூடாது  என சொல்ல முடியாது.

பாலியல் வறட்சி , பாலியல் கட்டுப்பாடுகள் நிறைந்த தமிழ்ச்சமூகச் சூழலில் , வயதுக்கு வந்தோர் கலவிப்படங்களைப் பார்ப்பதோ, அவற்றை வடிகாலாக பயன்படுத்துவதோ பெரிய குற்றமாக கருத முடியாது. பேஸ்புக் உள் நுழைவு அனுமதியை வைத்து என்னுடைய நிறைய நண்பர்கள் கிளுகிளுப்பான படங்களைப் பார்த்திருப்பது பேஸ்புக் கால வகைப்படுத்தலில் தெரிய வரும். அந்த நண்பர்களிடம் அதைப் பற்றி கேட்பது எல்லாம் கிடையாது. ஒரு வேளை தோழிகளாக இருந்தால், அவர்களின் நட்பு வட்டம் , அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய சூழலை அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ உருவாக்கக் கூடாது என, கிளுகிளுப்புப் படங்களைப் பார்க்க பேஸ்புக் உள் நுழைவைப் பயன்படுத்ததீர்கள் என அறிவுரைப்பதுண்டு.

தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் நடிகைகளை வைத்து எடுக்கப்படும் கிளுகிளுப்புப் படங்களைப் பார்ப்பது ஒரு மன இறுக்கத்தைத் தளர்த்தும் பொழுது போக்கு என்றாலும், உண்மையான காதலர்களின் நெருக்கம், தம்பதியினரின் தேனிலவு நெருக்கம் போன்றவற்றை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது என்பது என் கருத்து.

அமெரிக்க சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு இருக்கும் போர்னோகிராபிக் தளங்கள் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் ஆபாசப்படங்களை ஒரு போதும் காட்ட மாட்டார்கள். அப்படியே யாராவது தரவு ஏற்றினாலும் முதுகிற்குப் பின்னர் கைகளைக் கட்டி களித்தின்ன அனுப்பி விடுவார்கள். child porn எனத் தொடந்து தேடுபவர்கள் கூடக் கண்காணிக்கப்பட்டு , உண்மையான குரூரமானவர்களாக இருந்தால் தூக்கி உள்ளேப் போட்டு விடுவார்கள்.


எழுத்தாளர் ஜெயமோகன் அங்காடித் தெருப்படத்தில் சொன்னதைப் போல யானை இருக்கும் காட்டில் எறும்புக்கும் வாழ்க்கை இடம் உண்டு. கண்ணில் படும் அவற்றை எல்லாம் புறந்தள்ளி , அன்னப் பறவையைப் போல எது தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு.  போய்க் கொண்டிருந்த சமூக ஊடகச் சூழலில் , என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் இருந்த ஒரு பிரகஸ்பதி ஒன்று ஒரு பத்து வயது பெண் குழந்தைப் படத்திற்கு ஏதோ ஒரு கமெண்ட் போட்டு இருப்பதாகக் காட்டியது.

பொதுவாக நான், பெரியவர்களின் படங்களுக்கு விருப்பம் போடுகின்றோனோ இல்லையோ , அவர்களின் குழந்தைகளின் படங்கள் பகிரப்படும் பொழுது, அதுவும் பொதுவாக எல்லோருக்கும் (public ) ஆக பகிரப்படாமல் , நண்பர்களுக்கு மட்டும் பகிரப்பட்டிருந்தால் அவர்களின் குழந்தைகளின் படங்களுக்கு விருப்பமோ பாராட்டோ தெரிவிப்பது உண்டு. பொதுவில் இருக்கும் படங்களுக்கும் விருப்பமோ பாரட்டத் தெரிவிக்கையில் , அது என்னுடைய நட்பு வட்டத்திலும் பிரதிபலிக்கும். ஆயிரக்கணக்கான ஆட்கள் இருக்கும் என் வட்டத்தில் எந்த பொந்தில் எந்தப் பாம்பு இருக்கின்றது என தெரியாது அல்லவா...

சரி, நம் நட்பு வட்டத்து மக்களில் யாரோ ஒருவரின் குழந்தை என உற்று நோக்கிப் படித்தால் மட்டமான குரூரமான ஆபாச வர்ணிப்பு. அந்தப் புகைப்படம் பகிரப்பட்டிருந்தது ஒரு பேஸ்புக் பக்கம் (page ). அந்தப் பக்கத்தில் ஐந்து வயதில் இருந்து 12 வயது வரை இருக்கும் பெண் குழந்தைகளின் படங்களைப் போட்டு வர்ணனைகள்.
பகிரப்பட்டு இருந்த படங்கள் அனைத்தும் சமூக ஊடகங்களில் , பெற்றவர்கள் பகிர்ந்து இருந்தப் படங்களாகத் தான் தெரிந்தன. தீபாவளி கொண்டாட்டப் படங்கள், பள்ளிகளில் பரிசு வாங்கும் படங்கள் , சுற்றுலாப் படங்கள் என இயல்பான நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட படங்கள் அவை.

 நான்  யூத் யூத் என அடிக்கடி சொல்லிக்கொண்டாலும்  அம்மு வெர்ஷன் 1 ஐ திருமணம் செய்து  கொண்டு இருந்தால் , இன்று ஏழு எட்டு வயதில் எனக்கு ஒரு குழந்தை இருந்து இருக்கும்.  தந்தையின் ஸ்தானத்தில் அந்தப் படங்களைப் பார்க்கையில் மனது பகீர் என இருந்தது.

 இந்த பிரகஸ்பதி என்றோ ஒரு காலத்தில் எனது வட்டத்தில் சேர்ந்து இருக்கின்றது. களை எடுக்கையில் இதைத் தவறவிட்டு இருக்கின்றேன்.
 அந்தப் பக்கத்திற்கு 1000 க்கு மேற்பட்ட மக்கள் பின் தொடர்கின்றனர்  முதல் வேலையாக  அந்த பிரகஸ்பதியை ஒட்டு மொத்தமாக தடை செய்துவிட்டு , அந்தப் பக்கத்தைப் பற்றி பேஸ்புக் நிர்வாகத்திற்கு தகவல் ஆபாசம் என்ற வகையில் புகார் அனுப்பிவிட்டு வருத்தம் தோய்ந்த மனதுடன் அமைதியாகிவிட்டேன்.

அடுத்த நாள், பேஸ்புக்கில் இருந்து ஒரு தகவல் , நீங்கள் தகவல் அனுப்பிய பக்கத்தில் ஆபாசம் என எதுவும் இல்லை ஆகையால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றது என்ற வகையில் செய்தி வந்து இருந்தது.  வருத்தம் இரு மடங்கு ஆகி விட்டது. கண்ணுக்கு எதிரே நடக்கும் குரூரத்தை புகார் செய்தும் இப்படி ஆகிவிட்டதே என இருந்தது. புகார் செய்கையில்  child abuse என்ற வகையை சேர்க்க வேண்டும் என பேஸ்புக் நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டே நாட்கள்  கடந்துப் போயின. (புகார் பெட்டியில் child abuse என்ற வகை இல்லை, ஒருவேளை வேறு விதமாக இருந்தால், விபரம் அறிந்தவர்கள் சொல்லுங்கள்)

சாராசரி மனிதனாக ஒருநாள் மட்டும் பொங்கி விட்டு , மறந்துப் போன சூழலில் இன்று காலையில் பேஸ் புக்கிடம் இருந்து ஒரு தகவல் , நீங்கள் செய்த  புகார் மறுபரிசீலனை செய்யப்பட்டு இருக்கின்றது  , மறுபரிசீலனையில் நீங்கள் புகார் செய்தப்பக்கம் நீக்கப் பட்டுவிட்டது என வந்து இருந்தது, புகார் மதிக்கப்பட்ட மகிழ்ச்சி , பேஸ்புக்கின் பல அடுக்கு  பரிசீலனைகள் வியப்பு ஆகியன ஒருப்பக்கம் இருக்க,  ஓர் எதிர்கால தந்தையாக நிம்மதியாக இருந்தது.


இந்தப் பக்கத்தைப் போல ஆயிரம் பக்கங்கள் இருக்கலாம். அதை விரும்பும் லட்சக்கணக்கான கொடூரமானவர்கள் இருக்கலாம். ஆனால் என்னால் இயன்றவரை அந்த எண்ணிக்கையைக் குறைத்து உள்ளேன்.  ஓர் இரவு அமர்ந்து இது போன்றப் பக்கங்களைத் தேடி புகார் செய்ய வேண்டும் என முடிவு செய்து உள்ளேன். உங்கள் கண்களுக்குத் தட்டுப்பட்டால் புகார் செய்யுங்கள்.  நம் குழந்தைகளின் படங்களும் பகிரப்படலாம். பகிரப்படுவதைக் காட்டிலும் குழந்தை பாலியல் வன்முறையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் இந்த சூழலை நமது குழந்தைகளின் படங்கள் பயன்படுத்தப்படும் தடுத்து நிறுத்துவது நமது கடமையும் கூட.

சில விசயங்கள் கவனத்திற்கு

1. குழந்தைகளின் படங்களைப் பகிர்கையில் பொதுவில் (public ) பகிராதீர்.
2. பெண் குழந்தைகளின் படங்களைப் பகிர்வதை தவிர்ப்பது நல்லது
3. வடிகாலுக்காக , பாலியல் கலவிப் படங்களைப் பார்க்கையில் 'நடிப்புப்' படங்களை மட்டும் பாருங்கள்.  காதலர்கள் , தம்பதியினர் தெரிந்தோ தெரியாமலோ எடுத்தப் படங்களைப் பார்க்காதீர்கள். ஆர்வக் கோளாறில் அவற்றை நண்பர்களுடன் பகிராதீர்கள்.

4. பாலியல் உணர்ச்சிகளின் வடிகாலிற்கு அதிகப்பட்சம் குமுதம் நடுப்பக்கம் அளவில் வைத்துக் கொள்வது நல்லது.  கட்டுப்பாடற்ற வகையில் கலவிப் படங்களைப் பார்ப்பது , அவரவர்க்கான நேரம் வருகையில் , சலிப்போ , அவ நம்பிக்கையோ , தாழ்வு மனப்பான்மையோ ஏற்படலாம். அற்புதமான வாழ்க்கையில், இந்த மாதிரியான ' தாழ்வு மனப்பான்மை' கட்டத்தில் வன்முறை உள்ளே நுழையும்.

5. அவரவர் அரசியல் என அரசியல் தளங்களில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் , அடுத்த கட்சிக்காரர்களை ஏசுவதுடன் மட்டும் கடமை முடிந்து விட்டது என நில்லாமல் , அவரவர் கட்சி ஆட்களின் முகப்புப் பக்கங்களில் இருக்கு மேலதிக விருப்பப் பக்கங்களையும் ஒரு எட்டு எட்டிப் பாருங்கள் , ஏதேனும் குழந்தை ஆபாச தளத்தொடுப்புகள் இருந்தால் கவனத்தில் கொண்டு , தெரிந்தவராக இருந்தால் ஆலோசனை கொடுங்கள். தெரியாதவராக இருந்தால் முற்றிலும் தடை செய்வது நல்லது

இவற்றைத் தவிர குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச்  விசயங்களைப் பூடகமாக சொல்லித் தாருங்கள்.  தமிழ்த் தேசியமோ திராவிடத் தேசியமோ , இந்தியத் தேசியமோ , வளமான குழந்தைப் பிராயம் வளமான எதிர்கால சமுதாயம்.