Tuesday, October 08, 2013

இந்திய உள் நாட்டு கிரிக்கெட் அணிகளின் டெஸ்ட் அங்கீகாரமும் ஈழத்துக் கிரிக்கெட் அணியும் - கட்டுரை

பன்னாட்டு கிரிக்கெட் மன்றத்தின் (ICC) விதிகளின் படி, அதன் துணை / இணை உறுப்பினராக , ஒரு நாட்டைச் சார்ந்த கிரிக்கெட் வாரியமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை . கிரிக்கெட்டிற்காக ஒருங்கிணைந்த நாடுகளின் கூட்டு வாரியமாகவோ கிரிக்கெட் கட்டுமானம் சரியாக அமைந்து, புவியியல் அமைப்பைச் சார்ந்து இருக்கும் வாரியமாகக் கூட இருக்கலாம். (may be from a country, or countries associated for cricket purposes, or a geographical area where cricket is firmly established and organised.) இந்த வாரியங்களின் சார்பில் அணிகள் , ஐசிசி நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும். எடுத்துக்காட்டாக , மேற்கிந்திய தீவுகள் அணி கரிபியன் நாடுகள் மற்றும் ஒரு தென்னமெரிக்க நாடு ஆகியனவற்றை உள்ளடக்கிய அணியாகும். பிரிட்டன் , இங்கிலாந்து , ஸ்காட்லாண்டு மற்றும் ஐயர்லாந்து என மூன்று அணிகளைக் கொண்டுள்ளது. இதில் அயர்லாந்து கிரிக்கெட் அணி, யூகே வின் வடக்கு அயர்லாந்து மற்றும் ஐயர்லாந்து குடியரசு சேர்ந்தது ஆகும். சமீபத்தில் கூட, உச்ச நீதி மன்றத்தில், இந்தியக் கிரிக்கெட் அணி, இந்திய நாட்டிற்கானது அல்ல, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அணி என தெளிவுப்படுத்தப்பட்டது.

பண பலம் இருந்தாலும் சமயங்களில் பன்னாட்டு கிரிக்கெட் மன்றத்தைக் கட்டுக்குள் வைக்க , இந்தியக் கிரிக்கெட் வாரியம் தடுமாறும்.. தேவைப்பட்டதை நிறைவேற்றிக்கொள்ள பண பலத்துடன் 'லாபி' யும் தேவை. ஆக இதனை செயற்படுத்த , இந்தியக் கிரிக்கெட் வாரியம் தமிழ்நாடு, மும்பை, கர்நாடகா போன்ற பலமான அணிகளின் அமைப்புகளை , பன்னாட்டு கிரிக்கெட் மன்றத்தின் துணை / இணை உறுப்பினர்களாக விண்ணப்பிக்க ஊக்குவிக்க வேண்டும். கிரிக்கெட் கட்டுமான வசதிகள், உள்ளூர் போட்டிகள் நடக்கும் புவியியல் சார்ந்த நிலப்பகுதிகளின் அமைப்புகள் உறுப்பினர் ஆக முடியும் என்ற விதியை இந்திய வாரியம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இன்று ஆரம்பித்தால் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியக் குடியரசில் இருக்கும் கிரிக்கெட் அணிகள் பன்னாட்டு கிரிக்கெட் மன்றத்தில் முழு உறுப்பினர் தகுதியை அடைய முடியும். அப்படி அடையும் பட்சத்தில் தமிழ் நாடு அணி டெஸ்ட் ஆடும் நிகழ்வை யோசித்துப் பார்த்தாலே மனம் மகிழ்கிறது சோப்ளாங்கி இலங்கை அணி எல்லாம் டெஸ்ட் போட்டிகள் ஆடும் பொழுது , இந்திய உள்ளூர் அணிகள் ஆடுவதில் என்ன குறை ...

சில வருடங்கள் முன்பு வரை, உள்ளூர் அணிகள் , பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்பது , அது பற்றிய எண்ணங்களை இப்படி முன் நிறுத்துவது என்பது கூட, 'தேசத்துரோக' அளவில் எண்ணப்படலாம். ஆனால் கால ஓட்டத்தில், ஐபிஎல் போட்டிகளுக்குப் பின்னர் 'தனது நிலம் சார்ந்த' அணி என்ற எண்ணம் இப்பொழுது எல்லாம் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. ஆக , தமிழ்நாடு , மும்பை போன்ற அணிகள் முழு உறுப்பினர் ஆகி, டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்று, கிரிக்கெட் ஆடும்பொழுது, கிரிக்கெட்டின் தரம் கண்டிப்பாக உயரும். ஒரு பங்களாதேஷ் - இலங்கை கிரிக்கெட் போட்டியை விட ஒரு ஜிம்பாப்வே - இலங்கை கிரிக்கெட் போட்டியை விட , நிச்சயம் தமிழ்நாடு - இங்கிலாந்து , மும்பை - ஆஸ்திரெலியா டெஸ்ட் ஆட்டங்கள் கண்டிப்பாக சுவாரசியமாக இருக்கும்.

சரி, நமது வழமையான தமிழ்த்தேசிய அரசியலுக்கு வருவோம். சமீபத்தில் ஈழம் கால்பந்து அணி , அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கு இடையில் ஆன கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தது. விளையாட்டு என்பதைக் காட்டிலும் அது ஒரு அடையாள அரசியல் போராட்டம். தமிழ்ச் சூழலில் கிரிக்கெட் ஒரு முக்கியமானதொரு ஆட்டம் என்பதால். ஐரோப்பிய வாழ் புலம் பெயர் ஈழத் தமிழர்கள் கிரிக்கெட்டிற்காக ', குறைந்த பட்சம் 15,000 மக்கள் தொகை கொண்ட நிலப்பகுதி சார்ந்த அமைப்பு உறுப்பினர் ஆகலாம் என்ற கிரிக்கெட் வாரியத்தின் விதி முறையை உள்வாங்கி , ஈழம் கிரிக்கெட் அணியை உருவாக்கலாம். தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட விசயங்களுக்காக வாரி இறைக்கும் புலம் பெயர் தமிழர்களுக்கு ஒரு கிரிக்கெட் அமைப்பை உருவாக்குவதில் பெரிய சிரமம் ஒன்றும் இருக்காது. முதல் பத்து பதினைந்து வருடங்கள் கட்டமைப்பில் கவனம் செலுத்தி , இந்திய உள் நாட்டு அணிகள் டெஸ்ட் அங்கீகாரம் பெறுவதைப்போல , ஈழம் அணியும் பெறலாம். பொருளாதார வளமும் தமிழ்த் தேசிய எண்ணங்களும் இருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் சிந்திக்கலாம்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உலகளாவிய வல்லமையை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் , இந்திய தேசிய வாதிகளும், உள் நாட்டு அணிகளும் டெஸ்ட் ஆடும் அங்கீகாரத்தைப் பெற முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும். மேற்சொன்ன முன்னெடுப்புகள் எல்லாம் நிகழந்தால், தமிழ் நாடு - ஈழம் அணிகளுக்கு இடையில் ஆன டெஸ்ட் போட்டிகள் ஸ்விட்சர்லாந்திலோ நோர்வேயிலோ ஏதாவது ஒரு கோடையில் நடக்கும் காலம் 
  வெகு தொலைவில்  இல்லை.