Tuesday, October 29, 2013

ஊடக அனுபவங்கள்


அண்ணா பல்கலைகழகத்தில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர்,  அமெரிக்கப் பல்கலை கழகம் ஒன்றில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றார் என்ற இந்து ஆங்கில நாளிதழ் செய்தியும், மறுநாள்  அது தவறான தகவல்களால் எழுதப்பட்ட கட்டுரை என்று வருத்தங்களுடன் வந்த மறுப்பு செய்தியும்  கடந்த இரண்டு தினங்களாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிரப்பட்டன.
(NEWS Link: - http://www.thehindu.com/news/cities/chennai/chennai-engineering-student-doctorate-claims-false/article5278851.ece)
 பாதி உண்மையும் மீதி மிகைப்படுத்தப்பட்ட பொய்களையும் உள்ளடக்கி மாணவன் கொடுத்த தகவல்களை சரிபார்க்காமல்  தனது தளத்தில்  போட்டுக்கொண்ட அண்ணா பல்கலை கழகத்தையும் அப்படியே கட்டுரையாக்கிய செய்தியாளரையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்த பொழுது இந்த பத்தியை  எழுத முடிவு செய்தேன்.  பெரும்பாலான விசயங்கள் ஏற்கனவே பண்புடன் இணையத் தமிழ்க் குழுமத்தில் பதியப்பட்டதுதான்.

இனிப்பான வாழ்வின் நிகழ்வுகளுக்கு , தெரிந்தோ தெரியாமலோ 'கசப்பனுபவத்தை' ஊட்டுபவர்கள் இந்த 'முந்திரிக் கொட்டை' செய்தியாளர்கள்.   சென்ற வருடம்  எனக்கு  கூகுள் பரிசில் ( பெரிய தொகை ) ஒன்று வழங்கப்பட்டது.  தொடர்ந்து படிப்பில் சாதிக்கும் பெண்களுக்கும் , மாற்றுத் திறனாளிகளுக்கும் கூகுள் நிறுவனம் விண்ணப்பங்களை வரவேற்று , பரிசீலித்து தேர்வு செய்யும். ( வென்ற ஆண்டிற்கு முந்தைய ஆண்டு என்னுடைய விண்ணப்பம் நிரகாரிக்கப்பட்டது. )

விளம்பரப் பிரியன் ஆன நான்,  வழமைப் போல பேஸ்புக்கில் / வலைப் பதிவில் தம்பட்டம் அடித்து விட்டு அமைதியாகிப் போனேன். ஒரு நாள் பிரபல வார இதழ்  ஒன்றின் செய்தியாளர் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டார்,  விபரங்களைக் கேட்டறிந்தார். இதனால் கூகிளில் நிரந்தர வேலை கிடைக்குமா என்றார்? நான் வெற்றிகரமாக ஆராய்ச்சிப் படிப்பை முடித்து கூகுளிற்கு விண்ணப்பித்தால் வேலை கிடைக்க உதவும் கூறுகளில் முக்கியமான ஒன்றாக உதவியாக இருக்கும் என்றேன் , பின்பு என் பின்புலம் , நான் வந்த வழி எல்லாம் கேட்டு , கூகுள்  பரிசு பெரும் பொழுது எடுத்தப் புகைப்படம் ஏதேனும் இருக்கின்றதா எனக் கேட்டார். அடுத்த மாதம் தான் , ஜூரிச்சில் நிகழ்வு. அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் படத்தை அனுப்புகின்றேன் என்றேன்.

அடுத்த வாரம்,  இதழில் கட்டுரை  வெளி வந்தது.  இரண்டு அதிர்ச்சிகள். முதலாவது ,  படித்து முடித்தவுடன் கூகுளில் வேலை உறுதி என்பதாக இருந்தது.  சரி இதை 'பாசிடிவ்' ஆக எடுத்துக் கொள்வோம்  என வருத்தத்தை தவிர்த்து விட்டு, இதழில்  வெளியான புகைப்படத்தைப் பார்த்த பொழுது , அது சுவீடனில் நான் முதுகலைப் பட்டம் பெற்றபொழுது எடுத்த பட்டமளிப்பு படம்.

"ஏன் இப்படி செய்தீர்கள்"  என செய்தியாளரைக் கேட்ட பொழுது " படத்துடன் இருந்தால் கட்டுரை சிறப்பாக இருக்கும்" என பேஸ்புக்கில் இருந்த பட்டமளிப்பு படத்தை எடுத்தாண்டதாக சொன்னார். .  ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் அப்பாவிகளுக்குத் தெரியவாப் போகின்றது என்ற சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியாத இணையக் காலம் இது.  பெரிய வார இதழ்... எதிர்த்து எழுதி அன்றைய மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அப்படியே விட்டு விட்டேன்.

என்னுடைய ஒரே எதிர்ப்பு, அந்தக் கட்டுரையின் மின் வடிவத்தை என்னுடைய எந்த சமூக ஊடகப் பக்கத்திலும்  பகிராமல் இருந்தது தான். யாராவது அதைப் பகிர்ந்து  என்னைக் கோர்த்து விட்டாலும் போய் சத்தமில்லாமல் என் பெயரை நீக்கிவிட்டு வந்து விடுவேன்.  இந்தக் கொடுமையில், அந்தக் கட்டுரையின் பல வரிகளுடன் , சில தினசரிகளிலும் அடுத்த இரண்டு தினங்களில் வெளிவந்தது தான்.

அன்றைக்கு அந்த செய்தியாளருக்கு ஒரு சாதரணமான விஷயம். அவரைப் பொறுத்த வரை படத்துடன் இருப்பது கட்டுரைக்கு முழு வடிவம் தரும். ஆனால் தட்டுத் தடுமாறி கிடைக்கும் கிளைகளைப் பற்றி வளர்ந்து , பெரிய உயரத்தை நோக்கிப் போகையில் எதிர்காலத்தில்இதே புகைப்படம் பூதகரமாக வெளிவரக்கூடும் என்பது செய்தியாளரைப் பொருத்தவரை யோசிக்க முடியாத விஷயம்.  நொந்து கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க போய் ஆகிவிட்டது

செய்தித் தாளின் செய்திக்கும் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை அனுபவித்து இருக்கின்றேன். 8 வருடங்களுக்கு முன்னர்,  சென்னையில் மட்டும் வெளிவரும் சில ஆயிரங்கள் வெளியாகும் ஒரு மாத இதழ் ஒன்று என்னைப் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி இருந்தது. அவர்கள் மானே தேனே பொன் மானே எல்லாம் போட்டு எழுதி இருந்தாலும் , ஓர் அட்டகாசமான வரியை எழுதி இருந்தார்கள். 'இடுப்புக்குக் கீழே எதுவுமே செயல்பட முடியாத நிலையிலும்'  இவ்வளவு சாதித்து இருக்கின்றார்.  அப்பொழுது அம்மு எண் 1 உம் நானும் காதலித்துக் கொண்டு இருந்தோம்.  இடுப்புக் கீழே செயல் இழந்தவர் என்ற வாசகம்  அந்தக் காதலை முடக்க  அவர்களின் குடும்பத்தினரால் பெரிய அளவில் குறிப்பிடப்பட்டது.  அந்தக் கேள்வி இன்றைக்கு  கேட்கப்பட்டு இருந்திருந்தால் நிருபிக்க ஒரு வாய்ப்புக் கேட்டு இடுப்புக்கு கீழே செயற்படும் என உறுதிப் படுத்தி இருக்கலாம். . அன்று எதுவும் சொல்லத் தெரியவில்லை.  எதுவாக இருந்தாலும் நன்மைக்கே .. அந்த அம்மு ஆண்டி ஆகிவிட்டாள். நான் இன்னமும் யூத்.

ஒரு தடவை பெரியாரைப் பெருமையாக சொல்ல, பேட்டி எடுத்த அம்மணி  திரித்துப் போட்டு விட்டது.  சரியான புரிதல் இல்லாதவன் என என்னுடைய பெரியாரிய ஆசிரியர்கள் என்னைக் கடிந்து கொண்டார்கள்.

சில சமயங்களில் செய்தியாளர்களின்  அரசியலும் உண்டு.  என் வலைப்பதிவுக் கட்டுரை ஒன்றை வினையூக்கி என்றப் புனைப் பெயரில் ஏன் போட வில்லை என்றதற்கு , 'எடிட்டர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை   செல்வகுமார்' என்றே போட சொல்லி விட்டார்.' என்ற பதில் கிடைத்தது.

பொதுவாக , இந்த செய்தியாசிரியர்கள் மானே தேனே பொன் மானே போடுவதாக நினைத்துக் கொண்டு பாட்ஷா பட ரேஞ்சில் இருக்கும் விசயங்களை விக்ரமன் பட ரேஞ்சிற்கு இறக்கி விடுவார்கள். இன்னும் சிலர் தூர்தர்ஷனின் அந்தக் கால  செவ்வாய்க் கிழமை நாடகங்களைப் போல ஆக்கி விடுவார்கள்.

இந்த அனுபவங்களால் , சில மாதங்களுக்கு முன்னர் ,  "உன்னை பற்றி ஒரு கட்டுரை ஒன்றை எழுதட்டுமா"  எனக் கேட்ட பாரம்பரிய வார இதழ் ஒன்றின் மதிப்பிற்குரிய  முதன்மை செய்தியாளர் ஒருவருக்கு  நாசூக்காக "வேண்டாம் அண்ணே" என மறுப்பு தெரிவிக்க வேண்டியதாகிவிட்டது.  அவர் கோபித்துக் கொள்ளாமல் புரிந்து கொண்டார்.

ஒரே ஒரு முறை மட்டும் செய்தியாளர் ஒருவரின்  முந்திரிக்கொட்டை தனத்தால் நல்லதும் நடந்து இருக்கின்றது.  தனிப்பட்ட விசயமாக செய்த  அரசியல் சம்பந்தப் பட்ட ஒன்று எதிர்பாராத விதமாக பெரும் 'நற்பலனை'  எனக்கும் , ஆளவந்தான் படத்தில் வருவதைப் போல டாஸ் மாறி விழுந்த ஒருவருக்கும்  தொடர்ந்து அளித்துக் கொண்டு இருக்கின்றது.

அந்த செய்தியில் வந்த மாணவனைப் பற்றி யோசிக்கையில் என்னுடைய மற்றொரு அனுபவம் நினைவுக்கு வந்தது. 2004 ஆம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றிய - இந்திய தொழில் மேம்பாட்டு மாநாடு ஒன்று புது தில்லியில் நடந்தது. ஐரோப்பிய ஆணையத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த என் நண்பரின் சிபாரிசு மூலமாக , மாற்று திறனாளிகளுக்கான உயர் படிப்பு என்ற தலைப்பில் பேச , அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு அவர்கள் அழைத்து இருந்தனர் . ஒரு வாரம் மாநாடு , சந்தித்த நபர்கள் எல்லாம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய ஆளுமைகள்,  நிறுவன முதலாளிகள்.  என்னுடைய சக்கர நாற்காலி எப்பொழுதும் சிறப்பு ஈர்ப்பு என்பதால், அனைவரும் என்னுடன் வலிய வந்து பேசினார்கள்.   "ஐரோப்பா வா, உனக்கு நான் வேலை தருகின்றேன்"  என இரண்டாவது மிடக்கு வைன் கொடுத்த பின்னர் ஒருவர் சொல்ல, போதையில் மற்றொருவர் அதை ஆமோதிக்க , புது உலகத்தில் இருந்தேன்.

மெட்ராஸ் வந்த பின்னர், அலுவலக நண்பர்களிடம் அதைப் பற்றி தம்பட்டம் அடிக்க,  என்னுடைய மேலதிகாரி ஒருவர் தனியாக அழைத்தார்.

"பொதுவாக , வெளிநாட்டு கருத்தரங்கங்களில் , இரவு உணவு நிகழ்வுகளிலோ  , அதன் பின்னர் மதுபான கொண்டாட்டங்களின் பொழுதோ முக்கியமானவர்கள் , நாம் எதை சொன்னாலும் பாராட்டு மழை மட்டுமே பொழிவார்கள். எங்கள் ஊரில் வெள்ளைக் காகங்கள் இருக்கின்றன என்றாலும்   'வாவ்.. தட்  இஸ் எ வோண்டர்புல் திங் "  என்பார்கள்.  கொண்டாட்ட நிகழ்வுகளில் பரிமாறப்படும் விசயங்களை அப்படியே மூளைக்கு எடுத்துக் கொண்டு நம்புவது முட்டாள் தனமானது..  நீ வேண்டுமானால் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து பார்,, மெட்ராசில் வெயில் எப்படி இருக்கின்றது என்ற பதிலைத் தவிர உனக்குத் தேவையானது எதுவம் வராது"

என்னுடைய பலமே என்னுடைய வழிகாட்டிகள் , வசிஷ்டர்களாக அமைந்து விடுவதுதான்.  அவர் சொல்படியே , வேலைக் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினால் மெட்ராஸ் வெயிலைப் பற்றி  கேட்டார்கள்  வசிட்டர் வாக்கின் படி . ஓரிரவில் கிடைக்கும் விசயங்கள்  ஓரிரவிலேயே காணாமல் போகும் என்பதைப் புரிந்து கொண்டு தகுதிகளை முடிந்தவரை அதிகப்படுத்திக் கொண்டு தட்டுத் தடுமாறி மேலே வந்து கொண்டு இருக்கின்றேன்.

யாராவது ஒரு வசிட்டர் , அந்த மாணவனை உலுக்கி நிதர்சனத்தைப் போதித்து இருந்தால் ஒரு நாளில் ஹீரோவாகவும் மறுநாள் ஜீரோவாகவும் ஆக்கப்படாமல் இருந்து இருக்கலாம்.  நோண்டி நொங்கு எடுக்காமல் , தளைத் தட்டி , அந்த மாணவனை  மடை மாற்றலாம் . ஆர்வக் கோளாறுகளுக்கு தேவை நல்ல வழிகாட்டிகள்.