Saturday, September 21, 2013

இந்தியக் குடியரசில் தமிழ்த் தேசியத் தலைமை - மண்டப எழுத்தாளர் "கிளிமூக்கு டெரரரிஸ்ட்" எழுதியக் கட்டுரை

இக்கட்டுரையை எழுதியவர்  மண்டப எழுத்தாளர் "கிளிமூக்கு டெரரரிஸ்ட்". போற்றலும் தூற்றலும் அவரையே சாரும்.

---

சமூக ஊடகங்களில் ஒரு சர்வே எடுத்தால், நாளையே தமிழகம் துண்டாகி தமிழ்த் தேசியம் அமைந்து விடுமோ என நினைக்கப்படும்  அளவிற்கு  எங்கு பார்த்தாலும் தமிழ்த்தேசியம் பேசுபவர்களின்  தலைகளாகத் தான் தென்படுகின்றன.  நியோ-தமிழ்த்தேசியம், திராவிடம், எதிர்-திராவிடம் , ஏன் சில இந்து ராச்சிய விரும்பிகளும் கூட  வட இந்தியாவின் சுதந்திர தினத்தன்று கூக்குரலிடுகிறார்கள், துக்கம்  அனுஷ்டிக்கிறார்கள், குமுறுகிறார்கள்! ஆனால்இந்தியக் குடியரசில்  தமிழ்த்தேசியம் பெற்றுத் தர வலுவான  தலைமை இருக்கின்றதா என்று பார்த்து விடுவோமே

ஒருகாலத்தில் மத்திய அரசுகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த திமுக தேசியச் சகதியில் உழலத்துவங்கி, அறிவாலயத்திலேயே தேசியக் கொடியேற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது அதிகாரம் செய்த சோகம் என்றாலும் திமுக தமிழ்தேசியத்தை அண்ணா காலத்திலேயே கைவிட்டுவிட்டது என்பது நமக்கு நினைவில் நிற்பதால் அவ்வளவாக உறுத்தவில்லை. ஆனால் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருப்பதாக அண்ணா சொன்னாரே? அந்த காரணங்கள் எல்லாம் சரிசெய்யப்பட்டுவிட்டது என திமுக நினைக்கிறதா? கருணாநிதிக்கே வெளிச்சம்!! தேசிய நீரோட்டத்தில் நீக்கமற கலந்து விட்ட பின்னர், சிற்றாறு , சிற்றோடை என்ன,  சிறுவாய்க்கால் கூட பிரித்துத் தர அனுமதிக்க மாட்டார்கள்.   திமுக அனுதாபிகள் தமிழ்த் தேசியவாதிகள் ஆக இருக்கலாம்,  ஆனால் திமுக தலைமை இந்திய ஆளுமையை ஏற்றுக்கொண்டு ஆண்டுகள் பல ஆகின்றன.

"இதைச் செய்தால் ரத்த ஆறு ஓடும். அதைச் செய்தால் இந்தியா உடையும்" என்று லியாகத் அலிகான் வசனத்தையெல்லாம் அரசியல் அறிக்கையாக வைப்பாரே தமிழ்தேசியவாதி வைகோ, அவர் எங்கே? 1991ல் இருந்து என்னன்னமோ இந்தியா செய்திருக்கிறது. ஆனால் ரத்த ஆறு அல்ல, வெந்நீர் கூட ஓடவில்லையே.  எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல தன் வாழ்நாள் சாதனையான சேதுசமுத்திரமே 'மொக்கை' திட்டம் என அறிவிக்கும் அளவிற்கு வைகோவிற்கு பாஜகவுடனும், பாஜகவின் தமிழகப் பதிப்பான அதிமுகவுடனும் குலவும் ஆசை வந்துவிட்டதுதான் காலம் செய்த சோகம். நாளை மோடி ஈழத்தைப் பற்றி வெளிப்படையாக ஒரு எதிர்மறையான கருத்தை வெளியிட்டுவிட்டால், உடனே வைகோ "ஆமா. ஈழம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது." எனச் சொல்வாரா என ஈழத்தமிழர்களே கேட்கிறார்கள். சந்தேகமே வேண்டாம் . கண்டிப்பாகச் சொல்வார் வைகோ. ஏனெனில் அவர்தான் வைகோ. ஆக வைகோ என்ற மாயப் போராளியும் தேசியத்தில் அடகு! ஆனால் திமுக போல் வெளிப்படையாக இல்லாமல் உணர்ச்சிவசப்பட்ட ஏமாற்று அடகு!

டாக்டர் ராமதாஸ் , திருமாவளவன்  இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக தமிழ்த் தேசியம் பேசிய பொழுது நம்பிக்கை நட்சத்திரங்களாகத் தெரிந்தார்கள். இப்பொழுது தத்தமது சமுதாய முன்னேற்ற முன்னெடுப்புகளில் மும்முரமாக இருப்பதால் தமிழ்த்தேசியத்தைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என ஒதுக்கி வைத்து இருக்கின்றார்கள்.  ஆக இவர்களுக்கு விதிவிலக்கு கொடுத்து விடுவோம்.

இயக்குநர் சீமான்,   கருணாநிதி வைகோ மறந்த தமிழ்த்தேசிய எண்ணங்களை ,உணச்சிவசப்படக் கூடிய  இன்றைய  இளைஞர்களின் மனதில் பதித்தவர்.  ஆனால் கட்சி ஆரம்பித்த இந்த ஆண்டுகளில் எங்கு ஆரம்பித்தாரோ அங்கேயே நின்று கொண்டு இருக்கின்றார். சீமானின் தொண்டர்கள் மூன்று வகைப்படுவர்  கலைஞர் வைகோ மேல் நியாயமான கோபம் ஆதங்கம் கொண்ட  தீர்க்கமான  திராவிட இயக்க ஆட்கள், இவர்கள் கட்சியில் சிறுபான்மை தான். இரண்டாம் வகை ஆட்கள்    'தமிழ்' 'ஈழம்' , 'புலி' என்று சொன்னாலே உணர்ச்சி வசப்பட்டு ஒன்பது பக்கத்திற்கு எழுதிப் பேசித் தீர்க்கும் , எள் என்றால் 'எரி' எண்ணெய்யில் கூட வேகத் துணியும்  உணர்ச்சிமயமானவர்கள்.  பெரும்பான்மையான முன்றாம் வகை ஆட்கள்  வருங்கால ஜாதிக்கட்சித் தலைவர்கள்.

ஆக இலங்கையில் அரசியல் கட்சி நடத்தும் தமிழர்கள் இந்தியாவில் தனித் தமிழகம்  வாங்கிவிடுவோம் எனச் சொல்வது எவ்வளவு பெரிய காமடியோ அதே போன்ற காமடிதான் இந்தியாவிலே இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு 'ஓட்டரசியல் கட்சி' நடத்தும்  நாம் தமிழர்  கட்சியை தமிழ்தேசியகட்சி எனச் சொல்வதும்!  நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் , தமிழகத்தின் 'டக்ளஸ்' அண்ணனாக  சீமான் மாறிவிடுவாரோ என நினைக்கத் தோன்றுகின்றது.

 பல வகையான கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதைப் போலவே ,  சில உதிரி தமிழ்க்கட்சிகள்  அங்கிங்கு எனாதபடி எங்கும்   எனஅத்தனை   லெட்டர் பேடுகளில் இருக்கின்றன.   இவைகள் ஐபிஎல் அணிகளைப் போல தங்களுக்குள் மோதிக் கொண்டாலும், தங்களுக்கும் இலங்கையில் உருவாகும் ஐபில் அணிகளுக்கும் சேர்த்து 'ரா' ங்கான ஒரே பாஸ் தான் என்பதை மறந்தவர்கள் அல்லது தெரியாதவர்கள்.

பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல்கள் நேரடியாக நியமிக்கப் பட்டார்கள். இந்தியக் குடியரசில் ஒவ்வொரு மாநிலங்களிலும் முதல்வர் என்ற பெயரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர் அவ்வளவே வித்தியாசம்.

ஆக, அப்படி இப்படி எழுதி கடைசியில் நினைவுக்கு வருவது ஒரே ஆளுமைதான். இறந்து கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆனாலும் இன்றும் சிலருக்கு சிம்ம சொப்பனமாக திகழும் பெரியார் தான் அந்த ஆளுமை

 பெரியாருக்குத்தான் எத்தனை போராட்டக் களங்கள்? பார்ப்பனீய எதிர்ப்புக்கும் அவர்தான். பெண்ணியத்திற்கும் அவர்தான். மொழிப்போருக்கும் அவர்தான். மத்திய அரசு எதிர்ப்புக்கும் அவர்தான். ஆத்திகர்களின் உரிமைக்கான கோவில் நுழைவுப்போராட்டத்திற்கும் அவர்தான். திராவிட தேசியமாக இருந்து பின்னர் கன்னட, தெலுங்க, மலையாளிகளின் தேசிய வெறியை, மொழிவெறியைக் கண்டு அதை தமிழ்தேசியமாக சுருக்கிக் கொண்டு இலக்கை நிர்ணயித்ததற்கும் பெரியார் தான். மொத்தத்தில் எல்லாவற்றுக்குமே பெரியார் தான். காமராசர் காலத்தில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரத்தையெல்லாம் இணைத்து பெரிய மாகாணமாக ஆக்க முயற்சித்த மத்திய அரசின் கொள்கையை ஏற்கக் கூடாது என்றும், அதனால் தமிழர்களின் உரிமை கெடும் என்றும் காமராசருக்கு அறிவுறுத்தியவர் பெரியார்தான்.  94 வயதில் சாகும் வரை மூத்திரச் சட்டியை சுமந்துகொண்டு திரிந்து தான் முடிவு செய்த எல்லாவற்றுமாக போராடிய பெரியாரை எதுவுமே செய்யாத இளைஞர்கள் சொல்கிறார்கள் "பெரியார் இதைச் செய்யவில்லை" "பெரியார் அதைச் செய்யவில்லை"என்று. ஒரு ஆயுளில் ஒரு மனிதன் என்ன செய்யமுடியுமோ அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாகச் செய்துவிட்டார் பெரியார். ஆனால் உண்மைதான். இன்னும் ஒரு 20வருடம் பெரியார் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழ்தேசியத்தையும் வாங்கிக்கொடுத்திருப்பார். தமிழகத்தில் தோன்றிய ஒரே ஒரு உருப்படியான தமிழ்தேசியவாதி பெரியார் மட்டுந்தான்.

சரி. இனி யார் தான் தமிழ்த் தேசியத் தலைமை.  ஒன்றுமே ஆகாமல்,  போலிகள் எல்லாம் வயோதிகத்தால் செத்தொழிந்தபின் யாராவது எங்காவது பிறந்து வளர்ந்து இருப்பார் . ஆணோ பெண்ணோ அவர்
, பெரியாரை மனதில் வரித்து,  வாக்கு அரசியலை ஒதுக்கி தமிழ் இயக்கமாக மாற்றவேண்டும் . தமிழர்களிடம் ஓட்டு கேட்கக் கூடாது   உயிரையும் கேட்க கூடாது மாறாக ஆளுமையைக் கேட்கவேண்டும் .. அறிவைக் கேட்கவேண்டும் ..  ஊடறுத்து காரியங்களை சாதிக்கும் வல்லமையைக் கேட்கவேண்டும் .  யூதர்களுக்கு கிடைத்ததைப் போல அன்று அப்போது கிடைக்கும் தமிழ்த்தேசியம்.  அதுவரை ஜெய் ஹிந்த்.