Saturday, September 07, 2013

மிருகங்களும் ஆணுறையும் - சிறுகதை (எழுதியவர் கிளிமூக்கு டெரரரிஸ்ட் )

வழக்கமாக காரசாரமான அரசியல் கட்டுரைகளை எழுதித் தரும் எனது மண்டப எழுத்தாளர்களில் ஒருவரான 'கிளிமூக்கு டெரரரிஸ்ட் ' இந்த முறை அழுத்தமான ஒரு சமூகப் பொருள் கொண்ட சிறுகதையை  'மிருகங்களும் ஆணுறையும்'  என்றத் தலைப்பில்  எழுதி அனுப்பி உள்ளார். கதை கீழே ..

----
திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகியிருந்தது. மூன்று மாதங்களில் இருந்தே வருகிறவன் போகிறவனெல்லாம், "எதும் விசேசமா? எதும் விசேசமா?" எனத் தவறாமல் கேட்கிறான். இப்படிக் கேட்கும் பல உறவினர்களை இதற்கு முன்பு வாழ்க்கையிலேயே ஒருமுறையோ இருமுறையோ தான் பார்த்திருப்பான் கதிர். நமது வாழ்நாளில் சில உறவினர்கள் இருப்பார்கள். அதுவரை யாரென்றே தெரியாது, ஆனால் பாட்டி தாத்தா சாவுக்கு வந்து இதுவரைக்கும் பாட்டி தாத்தாவை அக்கறையாய் கவனித்து வந்தவர்கள் அவர்கள்தான் என்பதைப்போல சீன் போடுவார்கள். பிறகு காணாமல் போய் அடுத்த நல்லது கெட்டதில்தான் வருவார்கள். அதற்கும் பிறகு எங்காவது ஒரு நாள் நம்மைச் சந்தித்தால் குழந்தையைப் பற்றியோ, திருமணத்தைப் பற்றியோ, வேலையைப் பற்றியோ கேட்பார்கள். 

"ஏன்? எங்க குழந்தைக்கு உங்க சொத்தையெல்லாம் எழுதித்தரலாம்னு இருக்கீங்களா?",  என நேரடியாகக் கேட்டு விடலாம் என கதிருக்கு பலமுறை தோன்றும். ஆனால் உண்மைகளைக் கூட, நியாயமான கேள்விகளைக் கூட offensiveஆக எடுத்துக்கொள்ளும் நாட்டில் வாழ்கிறோம் என்பதால் அமைதியாக வந்துவிடுவான்.    தனக்கு குழந்தை பிறப்பதில் இவர்களுக்கு எல்லாம் என்ன அவ்வளவு ஆர்வம் என கதிர் பலமுறை யோசித்திருக்கிறான். வேலைக்குப் போவதற்கு முன்பு அவனிடம், "என்னப்பா படிச்சுமுடிச்சும் வேலைக்கு போகாம இருக்கியே!!?"எனக் கேட்டார்கள். வேலைக்குப் போனபின்பு அவனிடம் , "என்னப்பா வேலைக்கு போயிட்ட! நல்லா சம்பாரிக்கிற! எப்ப கல்யாணம்?" என்றார்கள்! திருமணம் செய்வதற்கு சம்பாரிப்பது ஒன்றுதான் தகுதியா? சம்பாரித்தால் அடுத்து திருமணம், திருமணமென்றால் அடுத்து குழந்தை. இப்படி 'ஹீட்'டுக்கு வரும் பெட்டை நாயை குட்டி போட வைப்பதற்காக மேட்டிங் செய்ய அழைத்துச் செல்லும் ஓனரைப் போலத்தான் இந்தியாவில் பெற்றோர்களும், நாய்களைப் போலத்தான் இளைஞர்களும் வாழ்கிறார்களோ என கதிருக்கு அடிக்கடித் தோன்றும். ஒரு சராசரி இந்தியக் குடிமகன் தன் வாழ்வின் முக்கியமான விசயங்களான படிப்பு, வேலை, திருமணம் ஆகிவற்றை பெரும்பாலும் சமூகத்தாரின் இதுபோன்ற கேள்விகளுக்குப் பயந்தே பெரும்பாலும் அவசர அவசரமாக முடிவு செய்துகொள்கிறான். 


இங்கு ஓரினச் சேர்க்கையாளர்களுக்குக் கூட திருமணம் நடந்து விடுகிறது. சமூகத்தின் நச்சரிப்புக்குப் பயந்து அவர்களும் வேறுவழியின்றி ஒப்புக்கொள்கிறார்கள். ராமநாதன் கதிரின் நெருங்கிய நண்பன், கல்லூரி காலத்திலேயே அவன் ஒரினச்சேர்க்கையாளன் என்பதும் அவனுக்கும் ஒரு சக தோழனுக்கும் காதல்-படுக்கை உறவு இருந்ததும் கதிருக்குத் தெரியும்! அவனது திருமணம் சென்ற ஆண்டு நடந்ததில் கதிருக்கு பயங்கர அதிர்ச்சி. 


"ஏன்டா மச்சி ஒத்துக்கிட்ட? அந்த பொண்ணு பாவமில்லையாடா?", என கதிர் கேட்டதற்கு, 


"என்னை என்னடா செய்யச் சொல்ற? நான் gayனு சொன்னா எங்க அப்பா தூக்குல தொங்கிருவாருடா. எனக்கு வேற வழியே தெரியல" என்றான் ராமநாதன்!  அன்றிலிருந்து கதிர், ராமனாதனுடன் பேசுவதை நிறுத்திவிட்டான். பிறகு ராமனாதனுக்கும் அவன் மனைவிக்கும் ஒரு ஆண்டில் விவாகரத்து ஆகிவிட்டது. 


குழந்தை பெறுவது முழுக்க முழுக்க அந்த தம்பதிகளின் விருப்பமில்லையா? நாளை குழந்தையை சரியாக வளர்ப்பதற்காக நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கப்போவது அந்த தம்பதிகள்தானே என்ற புரிதலோ எண்ணமோ இந்த சமூகத்தில் எவருக்கும் இல்லாதது கதிருக்கு வியப்பாக இருந்தது. பல உலக நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி சதவிகிதம் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நம் நாட்டிலோ அசுர வளர்ச்சியில் முன்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்றாலும் நம் மக்கள் குழந்தை பிறப்பில் இவ்வளவு வெறித்தனமாக அலைகிறார்களே என அவ்வப்போது கதிர் வியந்துகொள்வதுண்டு! பக்கத்து வீட்டுக் கிழவி நேற்று கதிரின் அம்மாவை அழைத்து பேசிக்கொண்டிருந்தாள். "ஏம்மா கல்யாணம் ஆகி ஒரு வருசம் ஆகுதே. உங்க மருமகளை டாக்டர்ட போகச் சொல்லக் கூடாதா?" என்று இலவச அட்வைஸ் கொடுத்தாள்.  கதிருக்கு ஆச்சரியம்! ஒரு தம்பதி இருக்கிறார்கள். அந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கவில்லை என்பது தெரிந்ததும் அக்கம்பக்கத்துப் பெண்களெல்லாம் எப்படி உடனடியாக பெண்ணை குறை சொல்கிறார்கள்! ஏன் அந்தக் கணவனுக்கு உடல்ரீதியான பிரச்சினை இருக்கவே இருக்காதா என்றும் யோசித்தான்! 


அதேநேரம் ஆண்களில் சிலர் இதை தனிப்பட்ட வன்மத்தை தீர்த்துக் கொள்வதற்காக பயன்படுத்துவார்கள் என்பதையும் விரைவிலேயே கற்றுக்கொண்டான் கதிர். கதிரின் வீட்டருகே 38 வயதில் ஒருவன் வசிக்கிறான். பிறந்ததில் இருந்தே அவன் உருப்படியாக எதுவும் செய்திருக்கிறானா என்றால் ஒன்றுகூட இல்லை. அவனது அம்மா பலமுறை கதிரிடம் தன் தறுதலைப் பிள்ளையை நினைத்து அழுதிருக்கிறார். 38வயதாகியும் தன் அம்மாவின் பென்சனில் உண்டு வாழும் ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்தவன் அவன். ஆரம்பத்தில் இருந்தே கதிருக்கும் அவனுக்கு ஆகாது என்றாலும் சமீபத்தில் நடந்த ஒரு சிறிய வாய்த் தகராறில் அவன் பயன்படுத்திய வார்த்தைகள் கதிருக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை வரவழைத்தது.  


"கல்யாணமாகி ரெண்டு வருசமாகியும் புள்ள இல்லாத ஆண்மையில்லாத பொட்டப் பய நீ. நீயெல்லாம் என்னைய எதிர்த்துப் பேசுறியா?" என கதிரைப் பார்த்து பலர் முன்னிலையில் கேட்டுவிட்டான். கதிருக்கு சிரிப்புதான் வந்தது. அவனுக்கு 38வயதாகிறது. ஒரு பெண்ணை காதலிக்கவோ, திருமணம் செய்யவோ வக்கில்லாதவன். அவ்வளவு ஏன்? நான்கு எருமை வயதாகியும் இன்னமும் தன் வயதான தாய்க்கு பாரமாக அவளின் பென்சனில் உட்கார்ந்து திங்கும் ஐந்தறிவு ஜந்துவாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அப்படிப்பட்டவன் கதிரைப் பார்த்து ஆண்மை இல்லாதவனே, பொட்டையே அவனே இவனே எனச் சொல்வது கதிருக்கு உண்மையிலேயே ஆச்சரியமூட்டியது. ஆண்மைக்கும் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்? குழந்தை பெறுவது ஒன்றுதான் ஆண்மையா? அப்போது குழந்தையைப் பெற்று ரோட்டில் விடும் இந்தியத் தகப்பன்கள் எல்லாருமே ஆண்மையின் சின்னங்களா? என்றெல்லாம் கேள்விகள் குடைந்தாலும், குழந்தை என்னும் ஒரு தம்பதியின் தனிப்பட்ட விசயத்தை இந்த சமூகத்தில் யார் யாரெல்லாம் எப்படி எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என எண்ணுகையில் கதிர் மிகுந்த வியப்படைந்தான். பள்ளிக்கே போகாதவனெல்லாம் இங்கே பிரபல வைத்தியாராக வலம்வந்து கொண்டிருப்பதும் இதனால் தான் என்பதும் கதிருக்குப் புரிந்தது.


இப்படியெல்லாம் வளைத்து, வளைத்து ஒருவனை குழந்தை பெற வற்புறுத்தினால் சீனப்போரின் போது 30கோடி மட்டுமே இருந்த இந்திய ஜனத்தொகை ஏன் கிடுகிடுவென 100கோடி ஆகாது என கதிர் எண்ணிக்கொண்டான். உண்மையில் சொல்லவேண்டுமானால் கதிரும், அவன் மனைவியும் குழந்தையின் மேல் அலாதிப்பிரியம் கொண்டவர்கள். சில உத்தியோக நிமித்தக் காரியங்களுக்காக, லட்சியங்களுக்காக 4 அல்லது 5 வருடங்களில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என முடிவெடுத்திருந்தார்கள். ஆனால் அவர்களைச் சுற்றியுள்ள சமூகம் அவர்களை விடுவதாய் இல்லை. கதிரின் பக்கத்து வீடு, அலுவலகப் பெருசுகள், கதிர் மனைவியின் அண்டை வீட்டார், உறவினர், என அனைவருமே அவர்களின் ஜென்ம சாபல்யமே கதிர் தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவைப்பதுதான் என்பதைப்போல குழந்தையைப் பற்றி கேள்வி கேட்பதிலேயே குறியாக இருந்தார்கள். அதுமட்டுமல்லாது அப்பல்லோ மருத்துவமனை முதல் 11மணி மூலிகை வைத்தியர் வரை ரெஃபரன்ஸ் தந்தார்கள்! 


திருமணமாகி இன்னமும் குழந்தை பெற்றுக் கொள்ளாத கதிரின் வயதையொத்த அலுவலக நண்பர்கள் இரண்டு பேருடன் இதுபற்றி பேச்சு எழுந்தபோது அவர்களும் இதேபோல் இந்திய சமூகத்தின் ஸ்டீரியோடைப் கேள்விகளால் 'கொடூரமாக' பாதிக்கப்பட்டிருப்பதை பகிர்ந்துகொண்டார்கள். ஆனால் கதிரைப் போலவே அந்த இருவரும் கூட இதுபோன்ற கேள்விகளை வெகு சீரியசாக எடுத்துக்கொண்டு வருந்தவில்லை. இப்படி இருக்கிறார்களே என திகைக்கவே செய்தார்கள்!   எனினும் இப்படிக் கேள்வி கேட்பவர்களையெல்லாம் அழைத்து அசிங்கப்படுத்தவும், இனி யாரிடமும் அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்க முடியாதபடி செய்யவும் மூவரும் ஒரு திட்டமிட்டார்கள்.  இதனால் ஒட்டுமொத்தமாக உறவே பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கும் வந்துவிட்டார்கள். 


அதன்படி மூவரும், அடுத்தவருக்குக் குழந்தை பிறப்பதைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவே பூமியில் அவதாரம் எடுத்த அவர்களின் உறவினர்களையும், அண்டை வீட்டாரையும் ஒரு get togetherக்கு அழைத்தார்கள். திட்டமிட்டபடி அனைவரும் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் கதிர் பேசத் தொடங்கினான். 


"நீங்கள் அனைவருமே எங்களுக்கு குழந்தை பிறக்காததைப் பற்றி மிகுந்த வருத்தத்தில் உள்ளவர்கள் எனத் தெரியும். அதனால் தான் ஒரு உண்மையைச் சொல்வதற்காக உங்களை எல்லாம் அழைத்திருக்கிறோம்." என்றான் 


கூட்டத்தில் சிறிய சலசலப்பு. 


"நாங்கள் உங்கள் அறிவுரைப்படி நீங்கள் ரெஃபர் செய்த டாக்டர்களிடம் எல்லாம் எங்களை பரிசோதித்துக் கொண்டோம். அனைவரும் எங்களுக்கு குழந்தை பிறக்காது என திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்" என வருத்தமாக அறிவித்தான்.


கூட்டத்தில் அனைவரின் முகத்திலும் கேள்விக்குறி. 


"ஆம். காண்டம் உபயோகப்படுத்துகிறவர்களுக்கு குழந்தை பிறக்காது என அனைத்து டாக்டர்களுமே கைவிரித்துவிட்டார்கள்" என்றான்.


இப்போது கூட்டத்தில் ஆச்சரியமும், சிலரின் முகத்தில் கோபமும் இருந்தது. 


மேலும், "அது மட்டுமல்லாது சில டாக்டர்கள் எங்களை வாழ்த்திவிட்டு இன்னொரு விசயமும் சொன்னார்கள். இந்தியாவில் காண்டம் உபயோகிக்கும் பழக்கமோ, பிள்ளை பெறுதல் பற்றிய சுயகருத்தோ இல்லாததால்தான் கிருமிக்கும், மனிதனுக்கும் யார் அதிகமாக, விரைவாகப் பெருகுவது என்ற போட்டி ஏற்பட்டு கிருமி போல மனிதன் எண்ணிக்கையில் பெருகியிருக்கிறான்", என்று சொல்லிவிட்டு கூட்டத்தைப் பார்த்தான். கூட்டம் ஓரிரு நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்திருந்துவிட்டு கலைந்துசெல்லத் தொடங்கியது. 

-----