Friday, July 26, 2013

சாரு நிவேதிதா - ஒழுங்கின்மையின் கொண்டாட்டம்

                                   
 
முன்னுரை:- 
சாரு நிவேதிதா , வெறுமனே இந்தப் பெயரை மட்டும் எழுதி , உள்ளே ஒன்றுமே எழுதவில்லை என்றாலும் , குறைந்தது ஆயிரம் ஹிட்ஸ் அடிக்கும்.   அவரின் மேல் எவ்வளவு விமர்சனம் இருந்தாலும்  , அவர் என்ன எழுதி இருக்கின்றார் என நாளில் ஒரு முறையாவது அவரின் தளத்தைப் போய் பார்த்து விடுபவர்கள்  ஏராளம் . அவரைப் பற்றி எழுத , எனக்கு எழுத்து ஆளுமை இல்லாததால் , வழக்கத்தைப் போல என் மண்டப த்தில் எழுத ஆள் தேடிய பொழுது சிக்கியவர்கள்  'அன்னவெறி கண்ணையன்' ,   'கிளிமூக்கு டெரரிஸ்ட்' . அவரை நீண்ட காலமாக கடுமையாக விமர்சிப்பவர்கள் இவர்கள் இருவரும் . இவர்களை வைத்தே சாருவைப் பற்றி விமர்சனம் அற்ற ஒரு பார்வையை , சாருவின் கோணத்தில் இருந்து  எழுதினால் என்ன என்ற நோக்கத்தில்  எழுதப்பட்ட கட்டுரை தான் இது இந்த மண்டப எழுத்தாளர்கள் சமூக வலைத் தளங்களில், தமிழில்  தங்களுக்கே உரித்தான எழுத்து ஆளுமையுடன் அடித்து ஆடிக் கொண்டு இருக்கும் இரண்டு பிரபல வலையுலக / பேஸ்புக் /டிவிட்டர் பிரபலங்கள்.  முதன் முறையாக இணைந்து   மண்டப பெயர்களுடன் எழுதியக் கட்டுரை .   போற்றலும் தூற்றலும் மண்டப எழுத்தாளர்களுக்கே !!! 
                                   
----------                       


பிரதிகளின் விற்பனையளவில் தமிழின் முக்கியமான எழுத்தாளர். நவீன தமிழ் இலக்கியத்தில் தவிர்க்கவியலாத எழுத்துக்காரர். அச்சுப்பிரதிகளின் அழிவின் தொடக்க காலத்தில் தன்னை இணையத்திற்கு அப்டேட் செய்து கொண்டவர். அவர் வயதையொத்த மற்ற சிந்தனாவாதிகள் இன்னமும் 20 வருடங்கள் பின் தங்கியுள்ள விசயங்களில் இளைஞனாகவே இருப்பவர். இந்துத்வம், பிற்போக்குத்தனம், வறட்டுக் கொள்கைகள் என இறுக்கமான எழுத்தாளர்கள் மத்தியில் வாழ்வைக் கொண்டாடும் கொண்டாட ஊக்குவிக்கும் ஒரு கலகக் காரன். அரசியல், சினிமா, சமூகம் என எவ்விடயத்தையும் யதார்த்தத்திலிருந்து விலகாது அணுகக்கூடிய வெகுசில ஆளுமைகளில் ஒருவர் சாரு நிவேதிதா. அவரது புனைவுகள் கட்டுரைகள் எழுத்தாளுமை அதன் வெற்றி குறித்தெல்லாம் ஆய்வதல்ல இப்பதிவின் நோக்கம். மாறாக இணையத்தின் பலனாய் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையில் பல்லாண்டுகாலமாய்க் கட்டமைக்கப்பட்ட பெருஞ்சுவர் சுக்கல் சுக்கலாகிப் போயுள்ள நிலையில், வாசகனுக்கு எழுத்தோடு கூடவே விமர்சனங்களும் வாசிக்கக் கிடைக்கிறது. முரண்களும் தவறுகளும் உடனுக்குடன் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனால் போகிற போக்கில் எதனையும் எழுதிவிடவியலாத நிலை எழுத்தாளனுக்கு. இந்நிலையில் இது தனது வலைப்பக்கத்தின் மூலம் சாரு தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் கட்டுரைகள் அவர் மீது பரவலான விமர்சனங்களை கிளப்புவது குறித்த ஒரு அலசல் மட்டும்.

இதனை சாருவின் விமர்சனங்கள். சாரு மீதான விமர்சனங்கள் என இரண்டாகப் பகுக்கலாம் . முதலில் சாருவுக்கு தமிழ் சமூகம் மீதான விமர்சனங்களைக் காண்போம். எழுத்தாளனுக்கு உரிய அங்கீகாரம், மரியாதை, தமிழ்ச் சூழலில் கிடைப்பதில்லை என்பது சாரு தொடர்ச்சியாக வருந்தும் ஒரு விடயம். இதற்காய் அவர் கேரளாவையும், மேற்கத்திய நாடுகளையும் அவ்வப்போது உதாரணம் காட்டி வருந்துகிறார். இது ஒரு படைப்பாளிக்கே உரித்தான ஆற்றாமை. இது இயல்பானதும் கூட. இப்படி ஒரு கோபம் எழுந்தும் அதை மூடி மறைத்து மீசைக்குள் சிரித்துக்கொள்வதைத் தானா எதிர்பார்க்கிறோம். சாரு அவ்விதம் நடிக்காமல் தனக்கிருக்கும் கோபத்தைக் கொட்டிவிடுகிறார்.

சினிமா நடிகர்களைக் கொண்டாடும் நபர்களைப் பார்க்கையில் அவர் அக்கொண்டாட்டத்துக்கு தகுதியானவர் தானா என்றெண்ணிப்பார்த்து விட்டு சராசரிகளான நம்மாலேயே கூட கடந்து போகவியலாத சூழலில் ஒரு படைப்பாளனுக்கு அது கடும் கோபத்தை வரவழைப்பது இயல்புதான். நடிகன் என்பவன் யார்? நடிக்கும் கலைக்கு சொந்தக்காரன். நடிப்புக்கலை என்பது படைப்பின் குழந்தையல்லவா? படைப்பின்றி, அதாவது கதையோ காட்சியோ இன்றி "சும்மா அப்படி ஓரமா போய் நடி" எனச் சொன்னால் எவனால் நடிக்க முடியும்? இப்படி நடிப்புக்கு தாயாய் இருக்கும் படைப்புத்தொழிலைக் கற்றவன் தன்னைவிட ஒரு நடிகனுக்கு இவ்வளவு பணம், இவ்வளவு மரியாதை, இவ்வளவு மதிப்பும் கிடைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கையில்......... கடுப்பு வருமா வராதா? 

வரத்தானே செய்யும்!! ஆனால் என்ன, எல்லா எழுத்தாளர்களுக்கும் இந்தக் கடுப்பை, கோபத்தை "உள்ளதும் போயிரும்டா நொள்ளக்கண்ணா!!" என்ற பயத்தின் காரணமாக அடக்கி வாசித்து வெளிக்காட்டாமல் இருக்கிறார்கள்.  "எழுத்தாளன் என்றால் பெரிய காட்ஜில்லா" என உறுமிக் கிளம்பும் ஜெயமோகன் போன்றவர்கள் கூட சினிமா என்றால் குமரிமுத்து ரேஞ்சுக்கு 'ஈஈஈஹாஹாஹாஹா" ஆகிவிடுகிறார்கள்! சிந்து சமவெளி போன்ற சமகால காவியங்களை படைக்கவும் கூட தயாராகிவிடுகிறார்கள். என்ன செய்ய? சாருவுக்கு மூளைக்கும் வாய்க்கும் இடையிலான தூரம் குறைவென்பதால் மூளையில் தோன்றுவதெல்லாம் அவர் வாய்வழியே 'பொலபொல'வென கொட்டிவிடுகிறது! 

அவரும் கொஞ்சநாள் மிஷ்கின் என்ற 'திரையுலகச் சாரு'வுடன் இணைந்து எப்படியாவது சினிமாவில் ஃபார்ம் ஆகிவிடலாம் என்று முயற்சித்தார். புகழ்ந்தெல்லாம் கூட எழுதிப்பார்த்தார். கெட்டிக்காரன் புழுகு நாலு நாள் என்ற கணக்குப்படி மீண்டும் உண்மைகளைச் சொல்லி திட்ட ஆரம்பித்துவிட்டார். மிஷ்கினுக்கும் இவருக்கும் மேடை, இணையம் என முட்டிக்கொண்டது! என்ன செய்வது ஒரு குவாட்டர் பாட்டிலுக்குள் ஒரு குவார்ட்டர் தான் இருக்கே முடியும் என்பதுதானே விதி! அது குவாட்டரின் குற்றமல்லவே! 

மிஷ்கினிடமே குப்பை கொட்ட முடியாத சாரு எங்கே மற்ற இயக்குனர்களுடன் குப்பை கொட்ட முடியும்? ரப்பர் முதுகு எழுத்தாளர்களால் மட்டும் தானே சினிமாவில் ஓரமாய் உக்கார முடியும்! நன்கு நிமிர்ந்த முதுகை நத்தை போல சுமந்துகொண்டே இருப்பவர் இனி சினிமாவில் கரை ஒதுங்குதல் கடினம் என்றாகிவிட்டது! 

சினிமாக்காரகள் மட்டுமா? சாருவை காலியாக்கிய சாமியர்கள் எத்தனை எத்தனை? அவரிடம் இருந்தார் பின் அவரைப் இகழ்ந்தார். பின் அவர்களிடம் போனார். அவர்களையும் இகழ்ந்தார். இவரிடம் வந்தார். பின் யாரிடமுமே இனி போக முடியாத அளவிற்கு அனுபவத்தைப் பெற்றார். சடங்குகளுக்குள் அடங்காத ஒரு முற்போக்குவாதியாக இருந்தாலும் ஒரு டென்னிஸ் பந்தைப்போல 'சாரு' சாமியார்களை நோக்கி மாறி மாறி ஓடியது காலம் நிகழ்த்திய நகை முரண் தான்.

சாரு எதை மூடி மறைத்தார்? பொது இடங்களில் முத்தமிடுதல் உரிமை, அதை எவன்டா கேக்குறது என நீயாநானாவில் சீறிய சாருவின் மேல், அவ்வகையான செயல் ஒன்றும் குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது என்பது சாருவிற்கே அமையும் நகைமுரண்களில் ஒன்று  
தென் அமெரிக்காவின் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் நான்கு மாடு மேய்க்கும் சிறுவர்களால் எடுக்கப்பட்ட உலக சினிமாக்களை எல்லாம் கூட தேடிப்பார்த்து வியந்து பாராட்டுமளவிற்கு தேடல் உள்ள சாருவால் மட்டுந்தான், "எந்திரன் படத்திற்கு எனக்கு யாருமே டிக்கெட் கொடுக்கவில்லை!!" என வருந்தவும் முடியும்! 

நீயா நானா பற்றி புலம்பியிருக்கிறார். சினிமாக்கலையைப் பற்றி புலம்பியிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் 10சதவிகிதம் எழுதியிருக்கிறார் என்றால் 90சதவிகிதம் புலம்பியிருக்கிறார். இன்று இதை கிண்டல் செய்வோர் அந்த புலம்பல்களுக்கான ஆணிவேர்களை நீக்கியிருக்க வேண்டும். மனதை தொட்டு சொல்லுங்கள். நம் சமூகத்தில் எழுத்துத்தொழில் செய்பவன் பொருளாதார நெருக்கடி இல்லாமல் வாழ முடியுமா? வங்கி அக்கவுண்ட் போட்டுத்தானே பிழைப்பை ஓட்ட வேண்டியிருக்கிறது. என்ன பலருக்கு இருக்கும் வறட்டு கவுரம் சாருவுக்கு இல்லை. "அடப் போங்கடா.. என்னை இந்த லெவல்ல வச்சிருக்குறது உங்க தப்புடா?" என்ற உரிமையில் பணம் கேட்கிறார். இதில் என்ன தவறு இருக்க முடியும்? 

இதெல்லாம் அவரிடமிருந்து அந்நியப்பட்டு பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய காமடியாக இருக்கலாம். ஆனால் கொஞ்சம் சாருவின் தோள்மீது கைபோட்டு நின்று பாருங்கள், அவர் வரிகளை மட்டும் வாசித்து அப்படியே அர்த்தப்படுத்திக்கொள்ளாமல் அவர் வரிகளுனூடே வாசியுங்கள்! எழுத்தாளர்களை தம்மாத்தூண்டு விசயங்களுக்குக் கூட புலம்பும் பைத்தியக்கார நிலையில் தான் நாம் வைத்திருக்கிறோம் என்பது லேசாகவேணும் புரியும்! சாருவைப் போன்ற வளைய முடியாத, குழைய முடியாத சென்சிடிவ் எழுத்தாளர்கள் இந்த இழிநிலைக்க பலியாகி சமூகத்தின் முன் பைத்தியக்காரர்கள் ஆகிவிடுகிறார்கள். 

இப்படி சாருவைப் பற்றியும், சாருவைச் சுற்றியும் விவாதிக்க மூவாயிரம் 'ஃபுல்' பாட்டில்கள் தீரும் வரை சரக்கு உள்ளது! ஆனால் முன்னரே சொல்வதைப் போல் சாருவின் கோபத்தில், சாருவின் அபத்தத்தில், சாருவில் உளறலில், சாருவின் புலம்பலில் ஒரு சொட்டு உண்மை இருக்கிறது. பொதுவாக நம் வீடுகளுக்கு அருகே சடாமுடி தரித்த அழுக்குப் பைத்தியக்காரன் எவனாவது எதையாவது கத்திக்கொண்டே இருப்பான். பெரும்பாலும் அவ்வுளறல்களை நாம் கண்டுகொள்வதில்லை. அதில் உள்ள கெட்டவார்த்தைகளை மட்டும் கேட்டு, சிரித்தோ அல்லது ஒதுங்கியோ போய்விடுகிறோம். ஒருநாள் நின்று நிதானமாய் அந்த உளறலைக் கேட்டுப் பாருங்கள். அதில் அவன் சோகம் இருக்கும், அவன் யாரால் அப்படி ஆனான் என்ற கோபமும் இருக்கும், உண்மைகள் கொட்டிக்கிடக்கும். இப்படித்தான் சாருவும்! சாரு என்பவர் ஒழுங்கின்மையின் மொத்த வடிவம் தான். காமத்தை மறைக்கத் தெரியாத காமுகன் தான்! இடக்கரடக்கல்களில் தொலைந்துவிடாமல் நிற்கும் அம்மணாவாதிதான் தான்! அதனாலென்ன? உண்மையைத்தானே சொல்கிறார்!  

-----