Friday, June 21, 2013

திமுகவின் நாளைய மறுநாள்- யூகங்களும் எதிர்பார்ப்பும் - எழுதியவர் மண்டப எழுத்தாளர் "அ-ஆ

முன்னுரை 

பள்ளிக்கூடங்களில், பல சமயங்களில் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்களிடம் இருந்து காட்டடி வாங்குவார்கள். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் , செய்யும் சேட்டைகள் மற்றவர்கள் செய்வதைக் காட்டிலும் ஏகத்துக்கு ஆசிரியர்களுக்கு வெறுப்பைக் கொடுக்கும். இதற்கு காரணம் நன்றாகப் படிக்கும் மாணவர்களின் மேல் எப்பொழுதும் ஓர் எதிர்பார்ப்பும் பிம்பமும் இருந்து கொண்டே இருப்பதுதான் . அதே போல் தமிழ் நாட்டு அரசியல் சூழலில், திமுக வின் மேல் மட்டுமே அந்த எதிர்பார்ப்பு இருக்கும். கொஞ்சம் சொதப்பினாலே , ஆசிரியர்கள் ஆன மக்கள் தேர்தலில் சுளுக்கு எடுப்பார்கள். சமூக ஊடக காலங்களில் , இது அனுதினமும் நடக்க எளிதாகிறது. திமுக வை விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோர் ஒன்று முன்னாள் தீவிர திமுக அனுதாபிகள், அல்லது திமுக என்ற பேரியக்கம் என்ற ஒன்று மட்டுமே தமிழர் நலன்களை முன்னெடுக்க முடியும் என்ற சூழலில் , அதில் திமுக தடுமாறும் பொழுது எற்படும் சோர்வினாலும் ஆதங்கத்தினாலும் கடுப்படையும் சாமானியர்கள். 

திமுக தோற்றால் வடக்கில் இருந்து வரும் பத்திரிக்கைகள் கொண்டாடும் விதத்திலேயே திமுகவின் ஆளுமை எவ்வளவு முக்கியம் என உணர முடியும் . காலத்தின் தொலை தூரத்தில் திமுகவைப் பற்றிய ஒரு சாமானிய விமர்சனத்துடன் கூடிய ஏக்கப்பார்வை. தூற்றலும் போற்றலும் மண்டப எழுத்தாளருக்கே !! Over to Ghost Writer 
--
அதிமுக அரசமைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் ஊடகங்களாகட்டும், பொதுவெளிகளாகட்டும் தமிழகத்தைப் பொறுத்தமட்டிலும் அதிகம் விமர்சிக்கப்படுவதென்னவோ திமுக தான். அதிமுக அரசை விமர்சித்தால் அவதூறு வழக்கு பாயும் என்ற பயம் காரணம் என்று கருதினாலும் கூட அதற்கு மாற்றாகவா திமுகவை விமர்சிக்கிறார்கள்? கிடையாது. திமுக மீதான விமர்சனங்கள் கடந்த ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தின் பலனால் விளைபவை. 

நில அபகரிப்புகள், மின் தடை போன்ற பொதுமக்கள் பாதிக்கப்படும் விசயங்களாகட்டும் உணர்வளவில் கொதிப்பேற்படுத்தும் ஈழ விஷயமாகட்டும், மாநிலமெங்கும் பரவிய பலதரப்பட்ட அதிகார மையங்களின் ஊழல்களாகட்டும் கடந்த ஆட்சியின் தளும்புகள் இன்னும் மறையாமலிருப்பதையே மேற்சொன்ன விமர்சனங்கள் காட்டுகின்றன.

ஈழப் பிரச்சனை வாக்கரசியலில் பாதிப்பு ஏற்படுத்துமா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க விமர்சனத்தளத்தில் ஈழம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. காங்கிரஸுடன் மத்தியில் ஆட்சியிலிருந்த போது எழுந்த அலைக்கற்றை ஊழல்களும் அதனைத்தொடர்ந்து மாறன் சகோதரர்கள் முதல் தயாளு வரை நீண்ட விசாரணைகளும் திமுக மீதான வெறுப்பிற்குக் காரணம். மக்கள் நலன் பேணாத ஆட்சி என்பது மட்டுமே பிரச்சனை என்றிருந்தால் ஆட்சியை இழந்து இரு ஆண்டுகளுக்குப் பிறகும் புறக்கணிக்கப்பட வாய்ப்பில்லை. 

மூலவரும் துவாரபாலகர்களும் கோலோச்சுவது இயல்பு ஆனால் பிரகாரத்திலிருக்கும் எல்லா பூதகணங்களும் அதிகார மையங்களாய் மாறி பயமுறுத்தியதே கடந்த ஆட்சியின் மீதான பெருங்கோபத்தின் வித்து. இது கலைஞரின் 90வது அகவை. அந்திமக்காலம்., தனது ஆளுமை நீர்த்துப்போவதைக் கண்ணாரக் கண்டுகொண்டிருக்கிறார் கலைஞர். இப்போதும் கூட கலைஞரைக் கண்மூடித்தனமாய் ஆதரிப்பவர்களின் அடிமனதில் தங்கள் நம்பிக்கை சிதைந்து விடக்கூடாது; தாங்கள் இதுகாறும் ஏமாற்றப்படவில்லை என்று தங்களையே நம்பவைக்கும் உணர்வுதான் மேலோங்கியிருக்கிறது. 

சுதந்திரத்துக்குப் பின்னான தமிழக அரசியலில் தவிர்க்கவே இயலாத ஒரு சக்தியான கலைஞர் இன்று தன் மீதான விமர்சனங்களை அகற்ற பழம் பெருமைகளை மட்டுமே பேசவேண்டிய நிலையிலிருக்கிறார். 
ஈழப்போரின் இறுதியில் அவரது செயல்பாடுகள் அதிகாரம் ஆட்சியில் அவரது நேர்மை குறித்தெல்லாம் பெரிதாய் அலட்டிக்கொள்ளாத நபர்களையும் கூட உணர்வு ரீதியில் வெறுக்கச் செய்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். கட்சி அமைப்பு ரீதியில் பலமிழந்து நிற்கிறது. வாரிசுகளின் மோதல் உச்சத்திலிருந்தாலும் ஆட்சி இப்போது இல்லாததால் வெளிப்படையாக முட்டிக்கொள்ளாமல் பதட்டத்துடனே இணைந்திருக்கின்றனர். தனக்குப் பின் கட்சியை வழிநடத்தும் நபரை காலங்கடந்தும் கூட கை காட்ட இயலாத பயத்தில் தலைவர் இருக்கின்றார். ஒருவேளை அவர் தனது அரசியல் வாரிசை அறிவிக்காமலே மறைந்துவிட்டால் நிலமை இன்னும் மோசமாகக் கூடிய வாய்ப்புகளே அதிகமென்பதையும் அவர் உணர்ந்தேயிருக்கின்றார். 

இங்கு பேசப்படும் விசயங்கள் திமுக இல்லாவிடில் தமிழக மக்களை உய்விக்க வழியே இல்லை எனும் தொனியில் எழுதப்பட்டவையல்ல. மேலோட்டமாகப் பார்த்தால் திமுகவிற்கு சப்பைக் கட்டு கட்டுவதாகக் கூட தோன்றலாம் ஆனால் நல்ல கொள்ளியைத் தேடுவதே நாட்டின் ஜனநாயகம் எனும் நிலையில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக எந்தக் கட்சியையும் பிரதான இடத்தில் தமிழக வாக்காளர்கள் நிறுத்திப்பார்ப்பதில்லை. வாக்காளர்களைக் கவரக்கூடிய சினிமா நாயகனான விஜகாந்துக்கும் சரி, மாநிலமெங்கும் மக்கள் நலனுக்காய் போராட முன் நிற்கும் கொள்கைப்பிடிப்புள்ள மூத்த அரசியல் வாதியான வைகோவுக்கும் சரி 10%க்கும் குறைவாகவே எப்பேர்ப்பட்ட குழப்பமான சூழலிலும் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

நாட்டில் இவ்விரு கட்சிகளை விட ஒப்பீட்டளவில் சிறந்த இயக்கங்கள் இருக்கலாம், நேர்மையான தலைவர்கள் இருக்கலாம் ஆனால் நம் மக்களுக்கே ஒரு அளவைத்தாண்டிய நேர்மையாளர்கள் ஆட்சிபீடத்தில் அமர்வதில் விருப்பமில்லை என்று அவதானிக்கிறேன். 
வாய்ப்புக்கிடைக்கையிலெல்லாம் சிறு தவறுகள் புரிவேன், என்னளவில் ஊழல் செய்வேன், வரியை ஏய்ப்பேன் அதனை நீ கண்டு கொள்ளக்கூடாது போலவே உனது தவறுகளை நான் கணக்கில் கொள்ள மாட்டேன் எனும் ஒரு புரிதல் வாக்காளனுக்கும் அரசாள்பவனுக்கும் இடையே அருவமாக ஒப்பந்தமாகியிருக்கிறது.

திமுக தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும் கூட அதன் தலைவரின் ராஜரீக செயல்பாடுகள் கூட்டணியை சுமூகமாக இட்டுச் செல்லக்கூடியவை.திமுக ஆட்சியினை மக்கள் வெறுக்க மூன்றாண்டுகள் சுமாராக எடுத்துக்கொள்கிறது, ஆனால் அசூர தனிப்பெரும்பான்மையுடன் அமையும் அதிமுகவின் ஆட்சியை மக்கள் வெறுக்க சில மாதங்கள் போதுமானது என்பதுதான் திமுகவின் சாதகமான அம்சம். விதிவிலக்காக இம்முறை மட்டும் அதிமுகவை வெறுப்பதோடு மக்கள் திமுகவின் கடந்த ஆட்சியின் வடுக்களையும் மறவாதிருக்கின்றனர்.

இனிவரும் காலங்களில் அதாவது நாடாளுமன்றத்தேர்தலின் சமயத்தில் திமுகவின் மீது வாக்காளர்கள் பார்வை திரும்பும் நேரம்; அவர்களுக்கு திமுகவின் கடந்த ஆட்சியின் கசப்புகள் மறந்திருக்கக்கூடும். இல்லாவிடிலும் கூட அது பொழுதில் திமுகவை எதிர்ப்பதென்பது மறைமுகமாக மூன்றாண்டு ஆட்சியிலிருக்கும் அதிமுக அரசை ஆதரிப்பதாகிவிடும் என்பதாலேயே திமுக மீது மக்களின் பார்வை விழப்போவது உறுதி. திமுகவின் தலைவர் கலைஞர் தனக்குப் பின் கட்சியை நிர்வகிக்கப்போகும் நபரை முன்னிறுத்தவேண்டிய சரியான தருமாயிருக்கலாம். 

இன்றைய தேதியில் கட்சியின் பலமட்ட உறுப்பினர்கள், தொண்டர்கள், ஏன் பொதுமக்கள் மத்தியிலும் கூட திமுகவின் அடுத்த தலைமைக்கான விருப்பத்தேர்வாக இருப்பவர் மு.க ஸ்டாலின். எதிர்ப்புகள் இல்லாமலில்லை. ஆனால் அவை சமாளிக்கக் கூடியவையே. அதுவும் ஆட்சியிலில்லாத சமயத்தில் உட்கட்சிப் பூசல் பெரிய அளவில் வளர வாய்ப்பில்லை. எனவே முக ஸ்டாலின் தலைமையேற்கும் பட்சத்தில் திமுக அமைப்பு ரீதியில், மக்கள் மனநிலையின் அடிப்படையில் அடையக்கூடிய லாபங்கள் அதிகம்.

ஸ்டாலினின் தலைமைக்கீழ் செயல்படுவதை விரும்பாமல் அல்லது அவரை மீறி முடிவெடுக்கவும் வெளிப்படையாக கருத்துச் சொல்லவும் கூடிய தலைவருக்கு நெருக்கமான மூத்த கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் சொற்பமே. ஸ்டாலின் தலைமையை எதிர்க்கும் கோஷ்டிகள் உள்ளிருந்து எதிர்க்கவியலாது. அவர்கள் வெளியேறுவதென்பது கட்சிக்கு பெரிய இழப்பாகவுமிராது. மக்கள் மன்றத்தில் பழைய கசப்புகளுக்கு காரணம் காட்டக்கூட இவை உதவலாம்.

கொள்கை ரீதியிலும், இன்றைய தமிழகத்தின் தேவையான மாநில நலன்கள் என்ற கோணத்திலும் போராடும் இயக்கங்கள் மத்தியில் வலுவான எதிரிகளற்ற திமுகவுக்கு புதிய தலைமை என்பது முந்தைய தவறுகள் குறித்த விமர்சனங்களை துடைத்தெறிய நல்லதொரு வாய்ப்பாக இருக்கும். புதிய தலைமையானது திராவிட இயக்கங்கள் மீதான களங்கங்களை அகற்றும் வண்ணம் செயல்படுவதொன்றே திராவிட முன்னேற்றக்கழகம் எனும் பேரியக்கம் மீள ஒரே வழி
--