Wednesday, May 01, 2013

நாம் தமிழர் கட்சியின் நல்லவை பத்து - எழுதியவர் “கிளிமூக்கு அரக்கன்”

வலையுலக - பேஸ்புக் பிரபலமும் , எனது மண்டப எழுத்தாளார்களில் ஒருவருமான “கிளிமூக்கு அரக்கன்” எழுதிக் கொடுத்துள “நாம் தமிழர் கட்சியின் நல்லவை பத்து” - குட்டிக்கட்டுரை 
------------------
நாம் தமிழர் கட்சி - ஃபாசிசவாதிகள், கொள்கை-கோட்பாடுகளை எடுத்துச் செல்லும் வழிமுறைகளை வகுக்காமல் உணர்ச்சி அரசியல் செய்பவர்கள் என விமர்சிக்கப்படும் சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சியின் நன்மைகளையும், சிறப்புகளையும் பத்து பத்திகளில் கூடியமட்டும் எடுத்துரைக்கும் முயற்சியே இந்தக் குட்டிக் கட்டுரை!

1) 'நாம் தமிழர் கட்சி' சீமானால் நடந்த ஒரு மிக நல்ல விசயத்தை, மாற்றத்தை கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். அதற்கு முன் புரிதலுக்காக சிறிய வரலாறு ஒன்றை நினைவுப்படுத்திவிடுகிறேன். இந்திய ராணுவத்தை ஒரு நாட்டின் முதல்வர வரவேற்கப்போகாமல் இருப்பதென்பது ஆட்சிக்கலைப்பு செய்யும் அளவிற்கு பெரிய குற்றம். இருப்பினும் அக்குற்றத்தைச் செய்து "தமிழர்களின் உயிரைக் கொன்று குவித்த இந்திய ராணுவத்தை வரவேற்கச் செல்லமாட்டேன்" என சட்டசபையிலேயே அறிவித்தவர் மு.க. பின் இதையெல்லாம் காரணங்களாகக் கொண்டு சு.சாமி, ஜெ, சந்திரசேகர் ஆகியோரால் மு.கவின் ஆட்சி கலைக்கப்பட்டபின் ராஜீவ் கொலை நிகழ்ந்தது. மு.க இந்திய ராணுவத்தை வரவேற்கச் செல்லாததும், ராஜீவ் கொலையும் அடுத்தடுத்து நடந்ததால் ஜெ, சு.சாமி ஆகியோருக்கு ராஜீவ் கொலைப்பழியை திமுகவின் மேல் போட மிகச் சிறந்த வாய்ப்பாக அது அமைந்துவிட, அதையே கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு பிரச்சாரமும் செய்தார்கள். நன்றாக கவனித்தோமானால் ஈழத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ராஜீவின் ராணுவத்தால் கொல்லப்பட்டபோது ராஜீவுக்கு எதிராக கொதிக்காத 'வெகுஜன மக்கள்', ராஜீவ் என்ற ஒற்றை ஆளை புலிகள் கொன்றதற்காக கொதித்தெழுந்து ஈழ ஆதரவுக் கட்சி என்ற ஒரே காரணத்தால் திமுகவை தேர்தலில் கடுமையாக பழி வாங்குகிறார்கள், மு.க மட்டுமே ஜெயித்து மற்ற 233பேரும் தோற்கிறார்கள்!!! இப்படி தங்கள் ஒட்டுமொத்த கோபத்தையும் திமுகவின் மேல் தீர்த்துக்கொண்டார்கள்.

இப்படியான ஒரு 'மோசமான' ஈழ உணர்வும், மனிதாபிமான உணர்வும் கொண்டிருந்த வெகுஜன தமிழக மக்கள் 2009ன் ஈழ-இனபடுகொலைகளுக்குப் பின் நன்றாகவே மாற்றமடைந்திருக்கிறார்கள். ஈழத்தில் இனப்படுகொலை நடந்திருக்கிறது, புலிகள் என்ற இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல போராளி இயக்கம் தான் என்ற அளவில் புரிதல் கொண்டு கொஞ்சம் தெளிந்திருக்கிறார்கள். தமிழக அளவில் ஏற்பட்டிருக்கும் இந்த மிகப்பெரிய மாற்றத்திற்கு, புரட்சிக்குக் காரணம் சீமான் மட்டும் தான். 2009ல் அவர் ஓட்டு அரசியல்வாதி இல்லையென்பதால், எந்த அரசியல் இயக்கத்தையும் சாராதவர் என்பதால் அவர் பேசிய பேச்சுக்களும், உணர்ச்சி பொங்க ஈழத் துயரை எடுத்துரைத்த விதமும் வெகுஜன மக்களின் மூளையில் எந்தத் தடையும் இன்றி வெள்ளம் போல் பாய்ந்து பதிந்தது என்றால் அது மிகையாகாது.

2) தங்களின் தொடர் 'கூடு விட்டு கூடு தாவும்' அரசியல் நிலைப்பாடுகளால் மக்களின் நம்பிக்கையை இழந்த வைகோவால், நெடுமாறனால் கொண்டுவர முடியாத ஒரு பெரிய மாற்றத்தை 2009ல் சீமான் என்ற இளைஞர் வெகுஜன மக்களின் மனங்களில் கொண்டு வந்தார். அதனால் என்ன நடந்தது? தமிழ்நாட்டில் ஈழ உணர்வு தலைகீழாய் மாறியது! கடும் மைனஸில் இருந்து ஓரளவு ப்ளஸ் ஆக மாறியது! தன் அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதியை புலிகளை எதிர்ப்பதற்கும், ஈழத்தை எதிர்ப்பதற்க்கும், இலங்கை ஜனாதிபதிகளுடன் நட்புறவு பேணுவதற்கும் செலவழித்த ஜெயலலிதா கூட வெகுஜன மக்களிடையே சீமானால் எழுப்பட்ட ஈழ உணர்விற்கு பயந்து ஒரே இரவில் ஈழ ஆதரவாளராய் மாறிய அதிசயம் நடந்தது!!! இலங்கை அரசுக்கு ஆதரவாகவே எப்போதும் பேசிவந்த ஜெ, இலங்கையை நட்பு நாடாக கொள்ளக் கூடாது எனப் பேசினார்! பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் இயற்றி புலிகளுக்கு தடையும் வாங்கிக் கொடுத்தவர், தனி ஈழமே தீர்வென்றார்!

3) அதுமட்டுமா? 1991ல் தனக்கு ஏற்பட்ட படுதோல்வியுடன் ஈழ அரசியலை தன் முதன்மை கொள்கைகளில் இருந்து தூரமாக ஒதுக்கிவைத்துவிட்டு எல்லா விசயங்களிலும் மத்திய அரசுடன் இணக்கமாக போக ஆரபித்திருந்தது திமுக. 2009ல் ஈழத்தமிழர்களின் திட்டமிட்ட படுகொலையில் இலங்கை ராணுவத்துக்கு முழுமூச்சில் இந்திய அரசு உதவிக்கொண்டிருந்த போதும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகாமல் தன் கைகளிலும் ரத்தக்கறையை படியவிட்டுக் கொண்டிருந்த திமுக, சீமானால் தமிழக வெகுஜன மக்களிடையே எழுந்த 'புதிய ஈழ ஆதரவு' அலைக்கு ஏற்ப மீண்டும் முழு மூச்சில் ஈழ அரசியலைக் கையில் எடுத்தது!! செத்துப்போயிருந்த டெசோ உயிர்ப்பிக்கப்பட்டது!! அமெரிக்கத் தீர்மானங்களில் கூட இந்தியாவின் ஜிகிடி தோஸ்தான இலங்கைக்கு எதிராக இந்தியாவை வாக்களிக்கவும் வைத்தது! பல நாடுகளின் தூதர்களை ஓடி ஓடி சென்று பார்த்துக்கொண்டிருக்கிறது டெசோ அமைப்பு!

இதன் தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் அதிமுகவும், திமுகவும் இணைந்து மத்திய அரசுக்கு நாடாளுமன்றத்தில் கிடுக்குப்பிடி போட்ட்ட அதிசயம் கூட நடந்தது! இப்படியாக தமிழகத்தின் பிரதான கட்சிகள் இரண்டிற்கும் "நீங்கள் ஈழத்தைப் பற்றி பேசியே ஆகவேண்டும். மத்திய அரசை நிர்ப்பந்தித்தே ஆக வேண்டும்" என்ற கடும் நெருக்கடியை மறைமுகமாகக் கொடுத்தவர் சீமான்.

4) இத்தனை வருடங்களாக ஈழத்தையே மைய அஜண்டாவாக வைத்திருக்கும் நெடுமாறனுக்கும், வைகோவிற்கும் இல்லாத அலை சீமானுக்கு எப்படி ஏற்பட்டது? சீமானிடம் இருந்த நேர்மை! நெடுமாறனும், வைகோவும் தங்கள் அரசியல் நன்மைக்காக பல சமரசங்களைச் செய்திருக்கிறார்கள். 1983ல் ஈழத்தை உலுக்கிய ஜூலை கலவரத்தின் போது மு.கவும்,அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்தார்கள். நெடுமாறன் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தபோது பல சமயங்களில் மு.கவுக்கு ஆதரவாக நடந்துகொண்ட நெடுமாறன், இப்போது எம்.ஜி.ஆரை ஆஹா ஓஹோவென புகழ்ந்து எழுதும் சுயநல அரசியல்களையும் செய்துகொண்டிருக்கிறார். வைகோவோ இன்னும் ஒருபடி மேலேபோய் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசியல் காய்நகர்வுகளை முன்னெடுத்த ஜெவுடன் கூட்டணியில் இருப்பதையே எப்போதும் விரும்பினார். ஒரு மேடையில் இலங்கைக்கு எதிராக முழங்கிக்கொண்டு, இன்னொரு மேடையில் இலங்கைக்கு முழு ஆதரவையும் வழங்கிக்கொண்டிருந்த ஜெவுக்கு ஆதரவாக வைகோ முழங்கிக்கொண்டிருந்ததை மக்கள் ஏற்கவில்லை. திமுகவில் இருந்து விலகியபோது இருந்த எழுச்சியும் கூட்டமும் வைகோவை விட்டு அகன்று இன்று ஒரு காமடியனாக அவர் தமிழக அரசியலில் வலம்வருவதற்கு அவர் கட்சியினரே விரும்பாத அவரின் 'சமரசங்கள்' தான் காரணம். இன்னும் சொல்லப்போனால் இறுதிவரை ஆட்சியில் இருந்த மு.கவிடமோ, ஜெவிடமோ புலிகளை நெருங்கவிடாமல் தங்கள் முக்கியத்துவம் அழிந்துவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். இதனால் புலிகள் இழந்தது ஏராளம். ஆனால் எந்தக் கட்சியையுமே சாராமல் தனி மனிதனான இருந்த சீமானுக்கு இந்த சமரசங்களும், தனி நபர் முக்கியத்துவமும் தேவைப்படவில்லை. நெஞ்சில் பட்டத்தைப் பேசினார், யாரையும் தூற்றினார்! அதனால்தான் மிகக் குறுகிய காலத்தில் வளர்ந்து நிற்கிறார். அவரிடம் இருக்கும் மக்களுக்கு அது நம்பிக்கை அளிக்கிறது.

ஆனால் ஒரு கட்டத்தில் 'காங்கிரஸ் அழிப்பு' என்ற பெயரில் ஜெவுக்கு ஆதரவளித்ததை சீமானின் மேல் நம்பிக்கை கொண்டிருந்த பெரும்பான்மையான நடுநிலை மக்கள் விரும்பவில்லை. அவர் கூட்டம் கொஞ்சம் ஏமாந்து கலைந்தது இங்கேதான். வைகோ செய்த அதே தவறை ஒருமுறை சீமான் செய்துவிட்டார். தனிப்பெரும் சக்தியாக உருவாக வேண்டுமானால் இரு பெரிய கட்சிகளையும் ஒருங்கே எதிர்த்து ஒரே நேரத்தில் காலி செய்ய வேண்டும் என்ற அரசியல் தத்துவத்தின்படி நடந்தாலேயொழிய சீமானால் தன் கூட்டத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாது. இல்லையென்றால் இன்னொரு வைகோவாக கூட ஆக வாய்ப்புண்டு! கவனமாக இருக்கவேண்டும்.

5) முக்கியமாக தமிழுணர்வு! திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தமிழ்ப்புரட்சிக்கு பின் இப்போது நாம் தமிழர் கட்சியால் ஒரு 'குட்டி' 2ஆம் தமிழ்ப்புரட்சி ஏற்பட்டிருக்கிறது. பல இளைஞர்களுக்கு கலப்பில்லாமல் தமிழ்பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகியிருக்கிறது. அதற்காக நிறைய மெனெக்கெடுவதை நாம் இணையங்களில் பார்க்க முடிகிறது. இது தமிழ்நாட்டு இளைய சமூகத்திற்கு நாம் தமிழர் கட்சியினரால் கிடைத்திருக்கும் ஆக்கபூர்வமான மாற்றம்.

6) "வந்தவன் எல்லாம் எங்களை ஏறி மிதிச்சுட்டுப் போ" என்று தேமே என இருந்த தமிழ்ச் சமுதாயம், தங்கள் ஊரில் பிற நாட்டவர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடுவதைக் கொஞ்சம் உணரத் துவங்கியிருக்கிறார்கள். ஐடி கம்பனிகளில் கூட மலையாளிகளின், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை கொஞ்சமாக எதிர்க்கத் துவங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களின் சமூக வாழ்வியலுக்கு இது நல்லதுதான். ஆனால் இந்த பிற மொழி ஆதிக்க எதிர்ப்பிற்கும், பிற மொழியினர் எதிர்ப்பு என்ற இனவெறிக்கும் நூலிழை அளவே வித்தியாசம் இருக்கிறது. மற்ற மாநிலங்களில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற பொறுப்புணர்ச்சியுடன் நாம் தமிழர்கள் செயல்பட்டால் வெகுஜன மக்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்துக் கொடுத்த இயக்கமாக நாம் தமிழர் கட்சியினரைக் கொண்டாடுவார்கள்.

7) ஜெ அரசு தமிழுக்கெதிரான பல நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. நூலக ஒழிப்பு, ஆராய்ச்சிக்கூட ஒழிப்பு, டி.என்.பி.எஸ்சியில் தமிழின் முக்கியத்துவம் ஒழிப்பு போன்ற பல நடவடிக்கைகளை ஒருபக்க ஈழ ஆதரவு முகமுடி அணிந்துகொண்டு செய்து வருகிறது. தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கலை வேறு எந்த கட்சியினரையும் விட நாம் தமிழர் கட்சியினர் கையிலெடுத்து முழுமூச்சாகப் போராடித் தீர்த்தால் பிரிந்துக்கிடக்கும் தமிழுணர்வாளர்கள் ஏகபோகமாக நாம் தமிழர் கட்சியினரின் மேல் நம்பிக்கை கொள்வார்கள்.

8) தமிழர்கள் எந்த காலத்திலுமே தமிழர்களாக வாழ்ந்ததே கிடையாது. கள்ளராக, பறையராக, சாணாராக, தேவராக, படையாட்சியாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் 'நாம் தமிழர்' என்ற பெயரே மிகவும் ஆக்கபூர்வமான தமிழர் ஒருங்கிணைப்புப் பணிக்கு அச்சாரமாக இருக்கிறது. எனினும் சாதியினால் தமிழர்களைக் கணக்கெடுக்கும் கலாச்சாரம் ஆபத்தில் தான் முடியும். மொழியால் பார்ப்பனர்கள் தமிழர்கள், அருந்ததியர்கள் தெலுங்கர்கள் என்ற இக்கட்டான விசயங்களையெல்லாம் கணக்கில் கொண்டு 'நாம் தமிழர் கட்சி' கவனத்தில் கொள்ளவேண்டும்.

9)தமிழர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தமிழின வரலாறு குறித்த பிரச்சாரங்களால் ஒருவித பெருமை ஏற்பட்டிருக்கிறது. இந்திய பெருநாட்டில் தாழ்வுமனப்பான்மை புகட்டப்பட்டு தலைகுனிந்திருந்த தமிழர்கள் தலைநிமிர வரலாற்றுப் பெருமைகள் உதவும்தான். ஆனால் வரலாற்றுப் பெருமைகளில் நிகழ்கால இழிவுகளை மறந்துவிடக் கூடாது. அவற்றைக் களைய ஆவண செய்யவேண்டும். அதே நேரம் வரலாற்றுப் பெருமை என்ற பெயரில் கற்பனைவளம் மிகுந்த கட்டுக்கதைகளையும் ஆதாரமின்றி எடுத்துவைத்தல் உலகோர் மத்தியில் தமிழர்க்கு இழிவையே தேடித்தரும்.

10) எல்லாவற்றுக்கும் மேலாக நாம் தமிழர் கட்சியின் முக்கியமான களமாக இணையம் இருக்கிறது. ஈழம் சம்பந்தப்பட்ட பல நல்ல கருத்துக்களை இணையத்தில் வைக்கிறார்கள். அதே நேரம் திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சியினருக்கு எதிராக 'சண்டை'யிடுவதில் இருக்கும் ஆர்வம் நடப்பு தமிழக அவலங்களுக்கெதிராக இல்லை என்பது வருத்தமான உண்மை. அதே நேரம் துரோகிகளை களைக்க எதிரிகளோடு கைக்கோர்க்கிறேன் என்ற மகா அவலமான, சுய'கொள்ளி' செயலும் ஊக்குவிக்கப்படுகிறது. சு.சாமி போல், சோ போல் இணையத்தில் உலவும் ஏராளமான எதிரிகள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தமிழர்களுக்கும் அடிதடியை ஊக்குவித்து குளிர்காய்ந்துகொள்கிறார்கள். இதை நடக்கவிடாமல் கண்காணித்துக்கொள்வதே தமிழர் நலனுக்கும், இயக்க நலனுக்கும் நல்லது.
-----
பல பயங்கரவாத, தீவிரவாத, பக்கவாத செயல்களில் ஈடுபட்டுவிட்டு இப்போது ருவாண்டாவின் ஒரு பழைய ஓட்டலில் தங்கி அரசியல் பணியில் ஈடுபட்டிருக்கும் 'கிளி மூக்கு அரக்கன்' ஆன எனது கருத்துக்களை பொறுமையாக படித்ததற்கு நன்றி. மாற்றம் தேவைப்படும் இச்சூழலில் நாம் தமிழர் கட்சியினர் கவனமாகவும், தெளிவாகவும், நாகரீகமாகவும், தைரியமாகவும் செயல்பட்டால் 2016ல் கணிசமான வெற்றிகள் நிச்சயம். அவர்களுக்கு இந்த கிளிமூக்கு அரக்கன் வாழ்த்துக்கள்.